Oct 2, 2016

முதல்வர் எப்படி இருக்கிறார்?

நெருங்கிய உறவுகளை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு வெளியில் தவித்துக் கொண்டிருந்த அனுபவம் கிட்டத்தட்ட நம் ஒவ்வொருவருக்குமே இருக்கக் கூடும். எனக்கு மிகச் சமீபத்தில் கூட வாய்த்தது. அப்பா உள்ளே இருந்தார். யாரையுமே உள்ளே விடக் கூடாது என்றிருந்தது. அப்பாவிடம் அருகில் நின்று அழுதார்கள். எதையாவது பேசினார்கள். நோய்க்கிருமி தொற்றிக் கொள்ளக் கூடும் என்றும் பயந்தேன். யார் உள்ளே வந்தாலும் சில வினாடிகளில் வெளியே அழைத்துச் சென்றுவிட்டேன். பல உறவினர்களுக்கும் என் மீது வருத்தம். பார்க்கும் வரைக்கும் பார்த்துவிட்டு அம்மா என்னிடம் வந்து ‘அவங்க அப்பாவை பார்க்கலாம்ன்னு வர்றாங்க....மனசுல கொஞ்சமாச்சும் பாசமில்லைன்னா அழுக மாட்டாங்க...அதைத் தடுக்கிறது நமக்கு உரிமை இல்லை.....ரொம்ப தடுக்காத’ என்றார். யோசித்துப் பார்த்தால் அம்மா சொன்னது சரிதான். அப்பா மீது எனக்கு அதிகமான உரிமை இருந்தாலும் அவர் மீது உண்மையான அன்போடு வந்து போகிற நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இருக்கிறது. 

மருத்துவரிடம் ‘இன்ஃபெக்‌ஷன் ஆகிடுமா?’ என்றேன்.

‘அப்பாவுக்கும் யாரையாவது பார்க்கலாம்ன்னு ஆசையா இருக்கும்..ரொம்பத் தடுக்க வேண்டாம்...பார்த்துக்கலாம் விடுங்க..’ என்றார். அதன் பிறகு யாரையும் பெரிதாகத் தடுக்கவில்லை.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்று புரிந்திருக்கும். அதேதான். 

கடந்த ஒரு வாரமாக முதல்வர் குறித்து இப்படித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் தனது கண்ணசைவில் வைத்திருந்தவரை இன்று யாருமே பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை என்று புரிந்து கொள்ளும் போது எதையெல்லாமோ மனம் ஓட்டிக் கொண்டிருக்கிறது. அப்பா தனக்காக மனப்பூர்வமாக அழுகிற மனிதர்களென அதிகபட்சமாக இருநூறு பேர்களைச் சம்பாதித்திருக்கக் கூடும். ஜெயலலிதாவுக்கு அப்படி இல்லை. கோடிக்கணக்கான தொண்டர்கள். அதில் எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல், பதவியை விரும்பாமல் எம்.ஜி.ஆர், இரட்டை இலை, ஜெயலலிதா என்று மட்டும் அபிமானம் கொண்டவர்கள் லட்சக்கணக்கில் இருப்பார்கள். இப்பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் எதைப் பற்றியும் சிரத்தை காட்டாமல் அவரது உடல்நிலை குறித்தான தகவல்கள் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ‘நன்றாக இருக்கிறார். கண்காணிப்பில் இருக்கிறார்’ என்ற டெம்ப்ளேட்டையே திரும்பத் திரும்ப வெளியிடுகிறார்கள்.

உடல்நலக் குறைபாடுகள் இல்லாமல் மனிதர்கள் இருக்க சாத்தியமில்லைதான். ஒவ்வொரு பிரச்சினைகளையும் அப்பட்டமாக வெளியில் சொல்ல வேண்டும் என்று கோருகிற உரிமையும் யாருக்கும் இல்லை. ஆனால் கோடாவது காட்ட வேண்டும். நிழற்படங்களைக் காட்ட வேண்டியதில்லை. வாட்ஸப் ஆடியோ, வீடியோ என்றெல்லாம் கூட முதல்வரை அலைகழிக்க வேண்டியதில்லை. ஆனால் ஏன் இவ்வளவு நாள் மருத்துவமனைவாசம் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டிய கடமை அரசுக்கு இல்லையா? அப்பல்லோவிலிருந்து ‘காய்ச்சல் மற்றும் நீர் பற்றாக்குறை’ என்று வந்த முதல் அறிக்கையை நம்பியதில் தவறில்லை. ஆனால் வெறும் காய்ச்சலுக்கும் நீர் பற்றாக்குறைக்கும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனையில் இத்தனை நாட்கள் தங்க வைப்பார்களா என்று அம்புலிமாமா கதை படிக்கிற சிறுவனுக்குக் கூட கேள்வி எழாதா?

ஜெயலலிதாவை மட்டும் நம்பித்தானே வாக்களித்திருக்கிறார்கள்? அவரைத் தவிர வேறு எந்த முகமாக இருந்தாலும் ஐந்து எம்.எல்.ஏக்களை பெற்றிருக்க முடியுமா? கட்சி, ஆட்சி என இரண்டிலும் ஒற்றை முகமாக இருந்த ஜெயலலிதா இப்பொழுது எப்படி இருக்கிறார் என்பதை சற்றேனும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதில்லையா? அவர் மீதான அன்பு பெருகும் மக்களுக்கு இந்த அரசாங்கம் ஏன் பதிலைச் சொல்லாமல் மூடி மறைக்கிறது? 

கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வதந்தி. தமிழ்நாட்டில் யாரிடம் பேசினாலும் இது குறித்துத்தான் பேசுகிறார்கள். ‘அப்படியாமா இப்படியாமா’ என்று ஒவ்வொருவரிடம் ஒரு கதை இருக்கிறது. உண்மையிலேயே உடல் நிலை சரியில்லை; தேர்தல் நாடகம்; சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு என்று அவரவர் விரும்புகிற கதையைச் சொல்கிறார்கள். இதில் எந்தக் கதை உண்மை, எது பொய் என்று யாருக்குமே தெரியாது என்பதுதான் தமிழகத்தின் துரதிர்ஷ்டம். 

‘அந்தம்மா பாவம்....கஸ்டடி மாதிரி வெச்சிருக்காங்க’ என்று யாராவது சொல்லும் போதுதான் உண்மையிலேயே குழப்பமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. ஒருவேளை முதல்வருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து அதே சமயம் தெளிவான சிந்தனையோடு இருக்கிறாராயேனால் யாரும் அனுமதிக்கப்படாத அறையில் படுத்திருப்பது எவ்வளவு கொடுமை? கடந்த நாற்பதாண்டுகளாக ஒவ்வோர் அமைச்சரும் கட்டுண்டு கிடந்தார்கள். ஒவ்வோர் எம்.எல்.ஏவும் கூனிக் குறுகினார்கள். எம்.ஜி.ஆர் காலத்திலேயே அமைச்சராக இருந்த பெருங்கிழம் எஸ்.டி.சோமசுந்தரம் நாற்பது வயதே ஆன புது முதலமைச்சரின் வண்டியில் தோள் துண்டை கோர்த்து தொங்கிக் கொண்டே பயணித்தார். எம்.ஜி.ஆரின் ஒட்டுமொத்த ரசிகர் மன்றத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இராம.வீரப்பன் ஜெயலலிதாவிடம் பம்மினார். நெடுஞ்செழியன் குறுகினார். அரங்கநாயகம் நெளிந்தார். முத்துச்சாமி காலில் விழுந்தார். கிட்டத்தட்ட அத்தனை பேரையும் நடுங்கச் செய்தவர் மருத்துவச் சிறையில் இருக்கிறார் என்பதை மனம் நம்பவே மறுக்கிறது. அப்படியெதுவும் இருக்கக் கூடாது என்றுதான் மனமும் விரும்புகிறது.

முதலமைச்சரின் உடல்நலக் குறைபாடு என்னவாக இருப்பினும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஜெயலலிதாவின் மீது எளிய பெண்களுக்கும் சாமானிய மனிதர்களுக்கும் அன்பு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆயிரம் புதிர்க்கேள்விகள் அவரைச் சுற்றி வட்டமிட்டாலும் ‘நம்ம வீட்டுப் பெண்’ என்கிற எண்ணத்தோடுதான் நிறைய மக்கள் இருக்கிறார்கள். நம் வீட்டுப் பெண்ணொருத்தி என்ன பிரச்சினை என்றே தெரியாமல் மருத்துவமனையில் கிடத்தப்பட்டிருக்கும் போது எப்படியெல்லாம் வருந்துவோமோ அதற்கு சற்றும் குறைச்சலில்லாத வருத்தத்துடனும் இழையோடும் கோபத்தோடும் இருக்கிற மனிதர்களைச் சந்திக்க முடிகிறது. ஊரில் இருக்கிறேன். மிகச் சாதாரண மனிதர்களின் எண்ணம் இன்றைய தினம் வரைக்கும் ஜெயலலிதாவின் மீதான அன்பாகத்தான் இருக்கிறது. அந்த அன்பு அடுத்தவர்களின் மீதான கோபமாக மாறிவிடுவதற்குள் அரசு இயந்திரம் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

4 எதிர் சப்தங்கள்:

ABELIA said...

நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

சேக்காளி said...

//கிட்டத்தட்ட அத்தனை பேரையும் நடுங்கச் செய்தவர்//
அவுங்கள புடிக்காட்டியும் அவுங்க கிட்ட புடிச்சது இதுதான்.
அறையோ ,சிறையோ எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து நலம் பெற்று வர வேண்டும்.

அன்பே சிவம் said...

தேவையற்ற வதந்திகளை போக்க கேள்விகள் வலுப்பெறுமுன் தேவை உண்மை நிலை குறித்த அறிவிப்பு

Unknown said...

'முத்துச்சாமி காலில் விழுந்தார்.' - I don't think he ever fell at her feet.