Oct 19, 2016

முளைக்கும் காமம்

பக்கத்து வீட்டுப்பையன் ஒரு புகார் வாசித்திருக்கிறான். ‘ஆண்ட்டி...மகி அவன்கிட்ட இருக்கிற புக்ல ஃபோட்டோவை காட்டினான்..நான் பாக்கல...ஆனா இந்தப் பையன் ரெண்டு மூணு தடவை பார்த்துட்டான்’ என்று அவன் தனது தம்பியைச் சுட்டிக்காட்டிச் சொல்லியிருக்கிறான். நான் வாங்கித் தந்த புத்தகம்தான். குட்டி என்சைக்ளோபீடியா. நடுவில் ஒரு பக்கத்தில் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகள் பற்றிய பாடம் உண்டு. அதில் ஆணும் பெண்ணும் நிர்வாணமாக இருக்கும்படியான படத்தை வரைந்து வைத்திருக்கிறார்கள். அதைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டவன் அவனையொத்த வயதுடையவர்களிடமெல்லாம் காட்டியிருக்கிறான். வேணிக்கு கடுங்கோபம். இந்த வயதிலேயே பையனுக்கு இதெல்லாம் அவசியமில்லாத வேலை என்றாள். 

பையன்களை அழைத்துப் படத்தைக் காட்டியிருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்ட போது சந்தோஷமாகத்தான் இருந்தது. இது இயற்கை. கோபப்பட என்ன இருக்கிறது? பதினெட்டு வயதுதான் பாலியல் உணர்வுகளுக்குத் தோதான வயது என்றெல்லாம் நம்ப வேண்டியதில்லை. உடல் ரீதியாகவும் சரி; மன ரீதியாகவும் சரி- இரண்டு அல்லது மூன்று வயதிலிருந்தே குழந்தைகளின் பாலியல் உணர்வுகள் மெல்ல வெளிப்படத் தொடங்குகின்றன. ஆண் பெண் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்கள்; யாருமில்லாத சமயங்களில் தமது நிர்வாணத்தை ரசிக்கிறார்கள். தமது உறுப்புகளைத் தொட்டுப் பார்ப்பதன் வழியாக வெளியில் சொல்லத் தெரியாத உணர்ச்சிவசப்படுதலை உணர்கிறார்கள். இவை அத்தனையும் இயற்கை. தடுக்க வேண்டிய அவசியமில்லை. அந்தந்த வயதில் அந்தந்த வளர்ச்சியை இயல்பாகவே அடைந்துவிட வேண்டும்.

ஆறு வயதுக் குழந்தை ஆண் அல்லது பெண்ணின் நிர்வாணப்படங்களைப் பார்க்கும் போது அதில் ஏதோ குறுகுறுப்பை உணர்கிறது என்றால் குழந்தையின் தவறு என்று எதுவுமில்லை. அதில் ஏதோ வித்தியாசமாக இருப்பதை அது புரிந்து கொள்ளத் தொடங்குகிறது என்றுதான் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகள் புரிந்து கொள்ளத் தொடங்குவதைச் சரியான வகையில் புரிய வைப்பதுதான் நம்முடைய வேலையே தவிர தடுப்பது இல்லை. 

நாம் படித்திருக்கிறோம். நிறையப் பேசுகிறோம். ஆனாலும் குழந்தைகளோடு படம் பார்க்கும் போது டிவி சேனலை நாசூக்காக மாற்றுகிறவர்களாகத்தான் இருக்கிறோம். தியேட்டராக இருந்தால் குழந்தையின் கவனத்தை திசை மாற்றுகிறவர்களாகத்தான் இருக்கிறோம். பாலியல் சம்பந்தமாக பேசுவதும், விவாதிப்பதும், வெளிப்படையாக புரிந்து கொள்வதும் தடை செய்யப்பட்ட செயல்பாடுகள் என்று நம் ஜீனிலேயே பதிந்து கிடக்கும் போலிருக்கிறது.

குழந்தைகளுக்கு பாலியல் சம்பந்தமாகச் சொல்லித் தரச் சொன்னால் ‘இதை எப்படிங்க சொல்லித் தர்றது?’ என்று நெளிகிறவர்கள்தான் அதிகம். பாலியல் என்றாலே உடலுறவு மட்டும்தான் என்றில்லை.  உறுப்புகள், அதன் வளர்ச்சி, ஆண் பெண் வேறுபாடுகள் என்று நிறைய இருக்கின்றன. இவற்றையெல்லாம் அம்மாவும் அப்பாவும் குழந்தைகளிடம் பேசுவதில் தவறேதுமில்லை. ஆசிரியர்களும் பேசலாம். குழந்தைகளிடம் இயற்கையாகவே கூச்சமிருக்கும். இதையெல்லாம் பெற்றவர்களிடமும் ஆசிரியர்களிடமும் இயல்பாகப் பேச மாட்டார்கள். ஆனால் மெல்ல மெல்ல கூச்சத்தை உடைப்பது பெரிய காரியமில்லை. இப்படி கூச்சத்தை உடைத்து குழந்தைகளிடம் விரிவாகப் பேசுவது அவசியமா என்று யாராவது கேட்கக் கூடும்.அவசியம்தான். 

சினிமாவில் ஆரம்பித்து புத்தகங்கள் வரை நம்மைச் சுற்றிலும் பாலியல் தூண்டல்கள் மிகுந்து கிடக்கின்றன. எல்லாவற்றிலும் குழந்தையின் மனதைக் கிளறி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரையும் குறையுமாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு இவையெல்லாம் மிக மோசமான மனநிலை கொந்தளிப்புகளை உருவாக்கக் கூடியவை. இந்தச் சூழலில் காமம் பற்றி குழந்தைகளுக்குத் தெளிவு கிடைக்க வேண்டுமெனில் பேசுவதில் தவறேயில்லை. 

முந்தைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் நமக்கு பாலியல் சம்பந்தமான விஷயங்கள் எப்பொழுது புரியத் தொடங்கின என்பதை யோசித்துப் பார்த்தால் நம்மில் தொண்ணூற்றொன்பது சதவீதம் பேருக்கு பாலியல் புரிதல்கள் முறைப்படியாகச் சொல்லித் தரப்படவே இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும். பெரும்பாலானவை சக வயது நண்பர்களிடமிருந்து கிசுகிசுப்பாகக் கற்றுக் கொண்டவைதான். இன்றைக்கும் கூட இந்த சூழலில் பெரிய வித்தியாசமில்லை. விவரம் தெரியாத பருவத்தில் மீசை முளைத்து மார்பகம் வளரத் தொடங்கும் போது அரைகுறையான புரிதல்களுடன்தான் ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் பார்க்கத் தொடங்குகிறார்கள். 

ஏழு வயதில் எனக்குத் தெரியாத கெட்ட வார்த்தையே இல்லை. குழாயடியில் நானும் சரவணனும் சட்டையைப் பிடித்துக் கொள்வோம். அடித்துக் கொண்டதில்லை. ஆனால் சலித்துப் போகுமளவுக்கு பச்சை மஞ்சள் சிவப்பாகப் பேசிக் கொள்வோம். ஒருவேளை இந்தச் சொற்களைப் பேசுவதற்காகவே நாங்கள் இருவரும் சண்டைப் பிடித்துக் கொண்டிருந்தோம் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறை சட்டையைப் பிடிக்கும் போது புதுப்புது சொற்களோடு தொடங்கி பழைய சொற்களில் வந்து முடிப்பது வாடிக்கையாகிருந்தது. அது ஒருவகையிலான எக்ஸைட்மெண்ட். சிறைச்சாலை என்ற படம் வெளியான சமயம் பள்ளி நண்பனொருவன் ‘தபுவை பார்த்தியாடா? அவளுக்குத் தேங்காய் மூடியைக் கமுத்தி வெச்ச மாதிரி இருந்துச்சுல்ல?’ என்றான். அது ஒரு பாடல் காட்சி. நீரோடையில் படுத்திருக்கும் போது அப்படித்தான் தெரியும். ஆனால் அது வரைக்கும் அதை அப்படியான கோணத்தில் பார்க்க வேண்டும் என்று தெரியவே தெரியாது. அதன் பிறகு அத்தனை பெண்களையும் அப்படித்தான் பார்க்கத் தோன்றியது. பாலியல் புரிதல்கள் அத்தனையும் இப்படியான mouth to mouth புரிதல்கள்தான்.

இன்றைக்கும் பெண்ணொருத்தி உயரத்தை அடையும் போது ‘அவ எப்படி மேலே போறான்னு தெரியாதா?’ என்று மட்டமாகக் கருதும் புத்தியிலிருந்து முழுமையாக வெளி வர முடியாததற்கு இத்தகைய அரைகுரையான புரிதல்கள்தான் காரணம் என்று நினைக்கிறேன். அடுத்த தலைமுறையாவது சக மனுஷன், சக மனுஷி என்று கருதுகிற பக்குவத்தை அடைய வேண்டுமானால் உடலியல் குறித்தும் பாலியல் குறித்தும் தெளிவாகப் புரிய வைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

குழந்தை இதைப் பேசக் கூடாது; பார்க்கக் கூடாது என்றெல்லாம் தடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. வீட்டில் தடுத்துவிடலாம்தான். வெளியில் என்ன செய்ய முடியும்? கடந்த மாதத்தில் ‘அப்பா ஒருத்தன் வெறும் ஜட்டியோட படுத்திருக்கான்..அந்த ஃபோட்டோவை மாட்டி வெச்சிருக்காங்கப்பா’ என்றான். குழப்பமாக இருந்தது. அடுத்த நாள் அலுவலகத்திற்குச் செல்லும் போது பார்த்தால் அவன் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஜாக்கி ஜட்டிக்காரன் விளம்பரப் பலகையை வைத்திருக்கிறான். அப்பட்டமான படம் அது. தொப்புள் தெரியும்படியான விளம்பரப் பதாகைகள் இப்பொழுது மிகச் சாதாரணம். இவற்றையெல்லாம் தடுக்கவா முடியும்?

புரிய வைப்பது மட்டும்தான் ஒரே உபாயம். 

நம்முடைய குழந்தை பாலியல் படங்களைப் பார்க்க கூடாது, காமம் பற்றிப் பேசக் கூடாது, கெட்டவார்த்தையைக் கேட்கக் கூடாது என்றெல்லாம் நினைத்து அவனை/அவளை புனிதப்பசுவாகக் கருதிக் கொண்டிருந்தால் மடத்தனத்தைச் செய்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். இந்த உலகம் மாபெரும் திறந்தவெளி. நாம் எதையெல்லாம் குழந்தை செய்யக் கூடாது என்று நினைக்கிறோமோ அதையெல்லாம் செய்து கொண்டிருப்பார்கள். ஒரே பிரச்சினை- நம்மிடம் தெரியாமல் மறைத்துவிடுவார்கள். அவ்வளவுதான். ஆறாம் வகுப்புக் குழந்தைக்கு மொபைல் ஃபோன் சாதாரணமாகக் கிடைக்கிறது. youtube இல் படம் பார்க்கத் தெரிகிற அந்தக் குழந்தைக்கு youporn இல் படம் பார்க்க எவ்வளவு நேரமாகும்? 

பாலியலும் காமமும் கொலைக் குற்றமில்லை. அது ஒவ்வோர் உயிரின் இயல்பு. அதைப் பற்றிய தெளிவு இருக்கிறதா என்பது பற்றித்தான் கவலைப்பட வேண்டுமே தவிர அதைத் தெரிந்து கொண்டார்கள் என்பதற்காகவோ அது குறித்துப் பேசுகிறார்கள் என்பதற்காகவோ கவலைப்பட வேண்டியதில்லை. ஆமென்!

6 எதிர் சப்தங்கள்:

VENTURER said...

https://www.youtube.com/watch?v=6KrqX_1U1So

Check out this link

சேக்காளி said...

//இன்றைக்கும் பெண்ணொருத்தி உயரத்தை அடையும் போது ‘அவ எப்படி மேலே போறான்னு தெரியாதா?//
பெண்ணென்றால் பேயும் இறங்கும்.
என்று இந்த பதிவை படிக்கும் கொஞ்ச நேரத்திற்கு முன்பு அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் நினைத்தேன்.அப்புறம் ஒண்ணுஞ் செய்ய முடியாதுடா ன்னு எனக்கு நானே சமாதானமாகி விட்டேன்.
வேற வழி

ABELIA said...

நல்லதொரு பகிர்வு. எல்லாமே இப்பொழுது சர்வசாதாரணமாக கிடைக்கிற காலம் இது. நாம் தான் குழந்தைகளுக்கு சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.

அருமையான கருத்துள்ள பதிவு.

வெட்டி ஆபீசர் said...

மிகவும் அவசியமான பதிவு...என்னதான் படித்திருந்தாலும் வெளிநாட்டு கம்பனிகளில் வேலை பார்த்தாலும், பல நூறு விஷயங்களில் இன்னும் கட்டுப்பெட்டியாகத்தான் இருக்கிறோம்..

We have not broken the taboo in many such important things in life, its like we had been institutionalized..

கமல் குருதிப்புனல் படத்தில் கவுதமியை முத்தமிட முயலும்போது அவர் மகன் பார்த்துவிட்டு கண்ணை பொத்திக்கொள்ளுவான் அதற்கு சொல்லுவார் "இதுல கண்ண பொத்திக்குறதுக்கு ஒண்ணுமே இல்ல உங்க அம்மாவை அப்பா முத்தம் கொடுக்கிறேன்...அவ்ளோதான்னு..."

இந்த மாதிரியான புரிதல் குழந்தைகளுக்கு ரொம்ப அவசியமான ஒன்று...கணவன் மனைவியோ இல்லை ஒருத்தர ஒருத்தர் புடிச்சவங்களோ அன்பை .பரிமாறிக்கிற ஒரு விஷயம் ஒரு இயல்பான ஒரு விஷயம்னு...

Vinoth Subramanian said...

An open post with clear thoughts.

Unknown said...

mouth to mouth - you mean 'word of mouth'