Oct 21, 2016

போனால் போகட்டும்

‘மொசப்புடிக்கிற நாயை மூஞ்சிய பார்த்தாலே தெரியும்’ ‘பொழைக்கிற புள்ளைய பேல உட்டுப் பார்த்தா தெரியாதா?’ என்பதெல்லாம் கொங்குநாட்டுச் சொலவடைகள். ஒருவனைப் பார்த்தாலே எடை போட்டுவிட முடியும் என்பதற்காகச் சொல்வார்கள். இப்பொழுதுதான் கார்போரேட் கலாச்சாரம் ஆயிற்றே? யாரைப் பார்த்தும் எடை போட முடிவதில்லை. அதுவும் பெங்களூர் மாதிரியான ஊரில் பட்டியில் அடைத்த செம்மறி ஆடுகள் மாதிரி ஒரே மாதிரிதான். முக்கால்வாசிப் பேர் லூயி பிலிப் சட்டையும் பேண்ட்டுமாகத்தான் திரிகிறார்கள். வழ வழவென்று மழித்துக் கொள்கிறார்கள். சற்றே தூக்கலாக பர்ஸை வைத்துக் கொள்கிறார்கள். இவை தவிர கழுத்தில் ஒரு ஐடி கார்டையும் போட்டுக் கொள்கிறார்கள்.

நான் மட்டும் விதிவிலக்கா என்ன? ஒரு பயல் கண்டுபிடிக்க முடியாது. பார்ப்பதற்கு நவநாகரிகமானவன் மாதிரியே தெரிவேன். அப்படித்தான் நேற்று ஒருவன் ஏமாந்துவிட்டான். 

வாசுதேவ் அடிகாஸில் ஒரு காபி குடித்துவிட்டு பர்ஸை பேண்ட் பைக்குள் வைத்திருந்தேன். வக்காரோலி, எனக்கே தெரியாமல் உருவி எடுத்திருக்கிறான். சட்டையும் பேண்ட்டும்தான் பளபளவென்று அணிந்திருப்பேனே தவிர பர்ஸ் ஒரு புராதன சின்னம். 2006 ஆம் ஆண்டில் ஹைதராபாத் மெஹதிப்பட்டணத்தில் வாங்கியது. எண்பது ரூபாய் போட்டிருந்த அந்த பர்ஸை சாலையோரக் கடைக்கார பாயிடம் ஓரியாட்டம் நடத்தி எழுபது ரூபாய்க்கு வாங்கியிருந்தேன். பதினோரு வருடங்கள் ஆகிவிட்டது- எப்படி இருக்கும் என்று நீங்களே ஒரு கணம் யோசித்துப் பார்த்துக் கொள்ளலாம். எங்கள் அம்மாவுக்கு பர்ஸை பார்க்கும் போதெல்லாம் காதில் புகை வரும். ‘உம் பர்ஸை பார்த்தா சோறு எறங்குமாடா?’ என்பார். பிச்சைக்காரன்வாசி என்ற அவரது வழக்கமான வசனம் வந்து விழுவதற்குள் அறைக்குள் சென்றிருப்பேன். பிய்ந்து பிசிறடித்து அதுவொரு அநேக விசித்திர வஸ்து. அவர் பேசினால் பேசிவிட்டுப் போகட்டும். 

பர்ஸ் என்றால் பணம் வைப்பதற்கு மட்டுமே என்று அர்த்தமில்லை. இருக்கன்குடி மாரியம்மனுக்கு மாலையாகப் அணிவித்திருந்த வேப்பிலைகள் நான்கு, சில்க்கூர் பாலாஜி கோவிலில் கொடுத்த கயிறு ஒன்று, கோபி தர்க்காவில் வாங்கிய மந்திரித்த கயிறு ஒன்று, மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருநீறு பொட்டலம் என்று வகை தொகையில்லாமல் திணித்து வைக்கப்பட்டிருந்த பேழை அது. எதற்காகவாவது பயப்படும் போது எடுத்து கண்களில் ஒத்திக் கொள்வேன். மனிதர்களை நம்புவதைவிடவும் கடவுளை நம்புகிற விஷயங்கள் என்று நிறைய இருக்கின்றன. மருத்துவத்துக்காக அனுப்புகிற ஒவ்வொரு காசோலையிலும் கொஞ்சம் திருநீறு தூவி அனுப்புகிற அரைச் சாமியாராக மாறி கொஞ்ச நாட்களாகிவிட்டது. அதைவிடுங்கள்.

என்னுடைய விநோத பர்ஸில் அம்மா அப்பா மனைவி மற்றும் மகனின் நிழற்படங்களும் உண்டு. ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டையின் பிரதி ஒவ்வொன்றிருக்கும். இவை தவிர வேறு எதுவுமே இருக்காது. அதனால்தான் பர்ஸ் காணாமல் போய்விட்டது என்றவுடன் என்னைவிடவும் அடுத்தவர்கள் அதிகமாகப் பதறினார்கள். அவர்களுக்கு பர்ஸ் என்றால் வேறொரு பிம்பம். ‘கார்டை எல்லாம் ப்ளாக் பண்ணுங்க’ என்றார்கள். என்னிடம் கிரெடிட் கார்டும் இல்லை டெபிட் கார்டும் இல்லை. ஐசிஐசிஐ டெபிட் ஒன்று என் பெயரில் இருக்கிறது. அதையும் மனைவியிடம் கொடுத்து வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் காலையில் நூறு ரூபாயை எனது விநோத பர்ஸில் வைத்துவிடுவாள். அடிகாஸில் காபி பதினெட்டு ரூபாய். வறுத்த கடலைக்காரரிடம் ஒரு பொட்டலம் வாங்கினால் ஐந்து ரூபாய். எப்பொழுதாவது பேல் பூரி ஒன்று அமுக்குவேன். இவ்வளவுதான் ஒரு நாளைக்கான எனது செலவு. தின்றது போக மிச்சத்தை பர்ஸில் போட்டு வைத்துவிட்டால் அடுத்த நாள் சில்லரையை வழித்து எடுத்துக் கொண்டு மீண்டும் வேறொரு நூறு ரூபாய்த் தாளை வைத்திருப்பாள். வண்டிக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டிய தினத்தில் மட்டும் இருநூறு ரூபாய் வாங்கிக் கொள்வேன். பணத்துக்கும் எனக்குமான உறவு இதுதான் என்று சொன்னால் முக்கால்வாசிப் பேர் நம்புவதேயில்லை. கதைவிடுகிறான் என்று கூடச் சொல்லக் கூடும்.

உண்மையிலேயே சம்பளப் பணத்தை தம்பியிடமும் வங்கி அட்டையை மனைவியிடமும் கொடுத்துவிட்டு இதைப் பற்றி எந்த அலட்டலும் இல்லாதிருப்பது அவ்வளவு சுதந்திரமானது. அனுபவித்துப் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் ‘ச்சே நமக்குன்னு ஆயிரம் ரூபாய் கூட இல்லையா’ எனத் தோன்றியதுண்டு. இப்பொழுது பழகிவிட்டது.

பேழை தொலைந்ததை அழைத்துச் சொன்ன போது வேணிதான் நம்பவேயில்லை. அதையெல்லாம் யாரும் திருடியிருக்க மாட்டார்கள் என்பது அவளது அசைக்க முடியாத நம்பிக்கை. ‘இல்லை இல்லை என் பர்ஸையும் அடிக்கிறதுக்கு ஆள் இருக்கு’ என்று பெருமையடித்துக் கொள்ள வேண்டும் என்பது ஆழ்மன ஆசை. ஃபோனில் சொன்ன போது ‘எதற்கும் சாயந்திரம் வீட்டில் தேடிப் பார்க்கலாம்’ என்றாள். நேற்று மாலை தேடாத இடமில்லை. சந்து பொந்து விடாமல் தேடிப் பார்த்துவிட்டோம். ‘அதை எவன் திருடினான்? மடச் சாம்பிராணி’ என்றுதான் திரும்பத் திரும்ப வீட்டிலிருந்தவர்கள் கேட்டார்கள். 

நேற்று காபி வாங்குகிற இடத்தில் வரிசையில் நின்றிருந்த போது ஒருவன் உரசினான். முகத்தைச் சரியாகப் பார்க்கவில்லை. அவன் உரசியதை உணர்ந்தாலும் திருடிவிட்டான் என்று தோன்றவேயில்லை. யாரிடமோ ஃபோனில் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு வந்து பார்த்த போதுதான் என்னவோ குறைகிறதே என்று தோன்றியது. அவன் திருடினானா இல்லை ‘இந்தக் கஞ்சப்பயல் ஐநூறு ரூபாயாவது வைக்கிறானா?’ என்று வயிறெரிந்து ஒருவேளை அதுவாகவே எட்டிக் குதித்துத் தற்கொலை செய்து கொண்டதா என்றும் தெரியவில்லை. ஆனால் என்னிடமிருந்து தப்பித்துவிட்டது என்பது மட்டும் நேற்றிரவு உறுதியாகிவிட்டது.

போனால் போகட்டும். 

திருடர்களைத் திருத்துவதற்கு என்னை மாதிரியான ஆட்களால்தான் முடியும். நோட்டம் பார்த்து, கேமிராவுக்குத் தப்பி என்று பல தகிடுதத்தங்களைச் செய்துதான் அவன் அடித்திருக்க வேண்டும். பணம் இல்லாவிட்டாலும் கூட ஏதாவது கார்டு இருக்கும் என்று அவன் நம்பியிருப்பதற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு. எடுத்துப் பார்த்த போது எழுபது ரூபாய் பணம் இருந்திருக்கும். முதலில் தென்பட்ட சாமி கயிறுகளை எடுத்து கீழே வீசியிருப்பான். வேப்பிலைகளை எடுத்து நுகர்ந்து பார்த்திருப்பான். இந்துவாக இருந்தால் திருநீறு பூசியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அந்தக் கணத்தில் மீனாட்சி அவனை ரட்சித்திருக்கக் கூடும். பிறகு பர்ஸின் ஒவ்வொரு பகுதிகளாக அவன் கைவிட்டுப் பார்த்திருக்கக் கூடும். இந்தப் பகுதியில் கைவிட்டால் ஓட்டை வழியாக அடுத்த பகுதிக்கு விரல்கள் வந்த போது அவன் நொந்திருக்கக் கூடும். பர்ஸின் எந்தவொரு பகுதியிலிருந்தும் ஓட்டைகள் வழியாக வேறு எந்தப் பகுதிக்கும் சென்றுவிட முடிகிறது என்பதை அவனது விரல்கள் உணர்ந்த தருணத்தில் திருட்டு மீது அதிகபட்ச காழ்ப்புணர்வு எழும்பியிருக்கக் கூடும்.

எனக்கு இதையெல்லாம் நினைத்துப் பார்த்த போது சிரிப்பு தாங்க முடியவில்லை. உள்ளூரக் கொண்டாட்டமாகவும் இருந்தது. ஒருவகையில் ஸேடிஸ மனநிலைதான்.

சிரித்துவிட்டு யோசித்த போது ஒரேயொரு கவலைதான் எனக்கு. எப்படியும் கெட்ட வார்த்தையில் திட்டியிருப்பான். அது பிரச்சினையில்லை. சாபம் விட்டிருப்பான். அதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. இன்று காலையில் தலைக்குக் குளித்து திருநீறு வைத்து ஆஞ்சநேயரிடம் வேண்டிவிட்டு வந்திருக்கிறேன். ஆயிரத்தெட்டு தடவை ஜெய் ஆஞ்சநேயா என்றால் சாபம் பீடிக்காதாம். எப்படியும் ஆயிரத்தெட்டு பேருக்குக் குறைவில்லாமல் இந்தக் கட்டுரையை வாசிப்பார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு ‘ஜெய் ஆஞ்சநேயா’வைக் கடன் வாங்கிக் கொள்கிறேன். தப்பித்துவிடலாம்.

17 எதிர் சப்தங்கள்:

பாலு said...

அடிகாஸ் போவதை ஒரு வாரத்துக்கு நிறுத்திவிடுங்க. கோபத்தில வந்து கும்மி எடுத்துறப் போறாரு.

கொமுரு said...

நானும் நான்கு ஜெய் ஆஞ்சநேய போட்டுவிட்டேன்
கணக்கில் வைத்துக்கொள்ளவும்

சிங்கை நாதன்/SingaiNathan said...

ஜெய் ஆஞ்சநேயா !

Thirumalai Kandasami said...

எல்லாம் நன்மைக்கே

Vinoth Subramanian said...

It's really strange and great that you don't keep your debit card and identity cards in your wallet. Read twice. Nice!!!

MARUTHAPPAN said...

ஜெய் ஆஞ்சநேயா

ALHABSHIEST said...

// எடுத்துப் பார்த்த போது எழுபது ரூபாய் பணம் இருந்திருக்கும்.......
பர்ஸின் எந்தவொரு பகுதியிலிருந்தும் ஓட்டைகள் வழியாக வேறு எந்தப் பகுதிக்கும் சென்றுவிட முடிகிறது என்பதை அவனது விரல்கள் உணர்ந்த தருணத்தில்//
ஒருத்தன குலத் தொழிலை விட்டுட்டு வேற தொழிலுக்கு போக வச்ச பாவம் உம்மை சும்மா விடாது.

ALHABSHIEST said...

நாளை காலைக்குள் 'நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்', என்ற அந்த ப்ராஜக்டை சமர்பிக்க வேண்டும்.இன்னும் அதைப் பற்றிய ஒரு புள்ளி கூட உதிக்கவில்லை மூளைக்குள்.
என்ன செய்வதென யோசித்தவாறே வந்தவனை "வாசுதேவ் அடிகாஸ்" காபி குடித்து விட்டு போ என அழைத்தது.காபி குடித்தால் கொஞ்சம் உற்சாகமாகவாவது இருக்குமே என அங்கே சென்று காபி குடித்து விட்டு வெளியே வந்தான். வந்தவன் காலில் பட்டு மூன்றடி தூரம் தள்ளிச் சென்று நின்றது மணிகண்டனிடமிருந்து களவாடப்பட்டிருந்த பர்ஸ்.பர்ஸ் என தெரிந்ததும் உள்ளே ஏதாவது இருக்குமா என்று ஆராந்தவனுக்கு,
//பர்ஸின் எந்தவொரு பகுதியிலிருந்தும் ஓட்டைகள் வழியாக வேறு எந்தப் பகுதிக்கும் சென்றுவிட முடிகிறது//
என்பதை அவனது விரல்கள் உணர்ந்தியது.அந்த நொடி ப்ராஜக்ட் பற்றிய கவலை அவனை விட்டு பறந்தோடியது.

Asok said...

ஏதோ நாலு டம்மி அட்டையாவது வெச்சுக்கலாம்ல! பாவம்ய அவன்..தொழிலுக்கு மருவாதை வேணும்ல? ஜெய் ஆஞ்சநேயா !

Ponchandar said...

ஜெய்... ஆஞ்சநேயா ! ! . . . . . விலாசம் ஏதாவது இருந்ததா உங்கள் பர்ஸில்.... எதுக்கும் ஜாக்கிரதையாக இருக்கவும்..

Paramasivam said...

ஜெய் ஆஞ்சநேயா. தங்களுக்கு அனுப்புகிறேன்.

corpbank said...

காலையில் படித்தேன்
கொஞ்சம் சிரித்தேன்
டிவிட்டரிலும் பகிந்தேன்
இந்த நாள் இனிய நாள்

Anonymous said...

Another ஜெய் ஆஞ்சநேயா!
Great write-up, Great read!
Had a good laugh too..
Thanks for sharing
Saba

Shankar said...

I am surprised that you can put a nice post on the loss of your purse also.

In fact it takes a different mindset to view things from a perspective of another detached person.
Your sense of humour is standing by you. This way you dont get hurt and your failure / fall gets smothered.
Have a great day.
I am sure you will not replace your wallet for quite some time.
Regards
HAPPY Deepavali

Shankar

Jaypon , Canada said...

Ha..ha Jai Anjaneya * 1000. What a funny way of narration.

உஷா அன்பரசு said...

ஜெய் ஆஞ்சநேயா!

சேக்காளி said...

Blogger Ponchandar said...
ஜெய்... ஆஞ்சநேயா ! ! . . . . . விலாசம் ஏதாவது இருந்ததா உங்கள் பர்ஸில்.... எதுக்கும் ஜாக்கிரதையாக இருக்கவும்.
ரிவீட்டு. ச்ச்சேய்ய்ய் ரிபீட்டு.