Oct 14, 2016

பெரிய ஆள்

'நான் யாரு தெரியுமா?’- இப்படித்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். ஃபார்ச்சூன் கார் மீது பின்னால் வந்த பைக் ஒன்று மோதிவிட்டது. சிங்கத்தோடு மோதிய சிறுநரி திணறிக் கொண்டிருந்தது. வண்டிக்கு பெரிய பாதிப்பில்லை. ஆனால் அந்த சிங்கம் விடுவதாக இல்லை. அதே ஏரியாவாசி. தனது கித்தாப்பைக் காட்டிக் கொண்டிருந்தார். எதுவும் பேசாமல் கிளம்பி வந்துவிட்டேன். ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பு என்றால் பஞ்சாயத்துக்குச் சென்றிருப்பேன். இப்பொழுது சாத்தியமில்லை. முதலில் ஒழுங்காக கன்னடம் பேசிப் பழக வேண்டும். முன்பெல்லாம் தமிழிலேயே பேசுவேன். பெரிய பிரச்சினை ஆகாது. இப்பொழுது பயமாக இருக்கிறது. அலுவலகத்திலேயே கூட படித்த பண்பானவர்கள் என்று நினைக்கிற கன்னடக்காரர்கள் கூட சாடை பேசுகிறார்கள். இந்த வம்பே வேண்டாம் என்று கோயமுத்தூர் வந்துவிடலாம்தான். எங்குதான் பிரச்சினையில்லை? கந்துவட்டி, ரியல் எஸ்டேட், பொம்பளை விவகாரத்தில் வெட்டுக் குத்துப்பட்டு செத்தாலும் கூட காவி, பச்சை என்று பிரியாணி அண்டாவைத் தூக்குகிறார்கள். எல்லா ஊரும் ஒரே மாதிரிதான். 

தன்னை பெரிய ஆள் என்று காட்டிக் கொள்வதில் ஒரு அலாதி இன்பம். எல்லோருக்கும்தான். எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் அளந்துவிடுவதில் அளப்பரிய சந்தோஷம். 

கொஞ்ச நாட்களுக்கு முன்பாக பிரபல கவிஞர் ஒருவர் அழைத்திருந்தார். யாரோ ஒருவருக்கு கல்வி உதவி கோரி பேசினார். விசாரித்துப் பார்த்த வரைக்கும் சரியான உதவிதான். கஷ்டப்படுகிற குடும்பம். செய்தாகிவிட்டது. அவர் திரும்பவும் அழைத்த போது செல்ஃபோனில் பெயர் வராமல் வெறும் எண் மட்டும்தான் வந்தது. அவருடைய எண்ணை சேமித்து வைத்திருக்கிறேன். ஆனால் என்னுடையது டப்பா செல்போன். ஒரு முறை அணைத்து வைத்தால் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு வெறும் எண் மட்டும்தான் தெரியும். பெயர் வராது. யாரையாவது அழைக்கலாம் என்றாலும் கூட தேடியெடுக்க முடியாது. ஐநூறோ ஆயிரமோ விலை குறைவாக இருக்கிறது என்று சின்ன கஞ்சப்பயல் கார்த்திகேயன் இதை ஆர்டர் போட்டுவிட்டான். தம்பிதான். என்னைப் போலத்தானே இருப்பான்?

இந்தக் கதையைக் கவிஞருக்குச் சொல்லமுடியுமா? ‘யாருங்க பேசறீங்க?’ என்று கேட்டுவிட்டேன். அது அவருக்கு பெருத்த அவமானமாகிவிட்டது போலிருக்கிறது. மறுமுனையில் சில வினாடிகள்  மயான அமைதி. இரண்டு முறை நானாகவே ‘ஹலோ..ஹலோ’ என்றேன். என்ன யோசித்தாரோ தெரியவில்லை. தான் முக்கியமான இடத்தில் இருப்பதாகவும் பிறகு அழைப்பதாகவும் சொன்னார். அதோடு சரி. அவரும் அழைக்கவில்லை. நானும் அழைக்கவில்லை. தொடர்பு துண்டித்துவிட்டது.  தான் ஏற்கனவே ஒரு முறை அழைத்துப் பேசியிருந்தும் தன்னுடைய எண்ணைச் சேமித்து வைக்காமல் ‘யார்’ என்று கேட்டுவிட்டான் என்கிற கடுப்பு அவருக்கு. அது சரிதான். பெரிய பெரிய ஆட்களோடு பழகுகிற மனிதர். ஒரு சில்வண்டு யார் என்று கேட்டால் கடுப்பாகத்தானே செய்யும்?

தன்னை பெரிய ஆள் என்று எல்லோருமே நம்பிக் கொள்வதில்தான் பிரச்சினையே ஆரம்பமாகிறது. அதுதான் ஈகோவின் அடிநாதமும் கூட. எதனால் ஈகோ முட்டுகிறது என்று யோசித்துப் பார்த்தால் இந்தப் புள்ளியில்தான் வந்து நிற்போம். கணவன் மனைவி சண்டையில் ஆரம்பித்து தெருவில் எவனையோ சண்டைக்கு இழுப்பது வரைக்கும் இதுதானே சிக்கல்? ‘இவன்கிட்ட போய் நான் சமாதானத்துக்குப் போவதா?’ என்றோ ‘அவ எனக்கே அட்வைஸ் பண்ணுறா...அவ்வளவு பெரிய ஆளா?’ என்ற எல்லாக் கேள்விகளுக்கும் தொடக்கப்புள்ளி யார் பெரிய ஆள் என்பதுதான். 

இரண்டு பேர் ஒன்றாக நடக்க முடியாத அளவுக்கு குறுகலான சாலையைக் கொண்ட குடிசைப் பகுதிக்குள் சிக்கி ‘எங்க ஏரியாவுக்கு வந்து என்கிட்டயேவா?’ என்று வம்பில் மாட்டிய அனுபவத்தையெல்லாம் சேகரித்து வைத்திருக்கிறேன். ஓரமாக வைத்திருந்த குடத்தின் மீது பைக்கை விட்டுவிட்டேன். அது வளைந்து நெளிந்துவிட்டது. அடிக்க வந்துவிட்டார். சரண்டர் ஆகிவிடுவதைத் தவிர வேறு வழியே இல்லை. ‘அண்ணே தெரியாம செஞ்சுட்டேன்..உங்களை மாதிரி பெரியவங்க மனசு வெச்சு மன்னிச்சுடுங்க’ என்ற பம்மிவிடுவதுதான் எனக்குத் தெரிந்த ஒரே உபாயம். ‘நானும்தான் பெரிய ஆளு’ என்று சொன்னால் சிக்கிக் கொண்ட மாதிரிதான். பெரிய ஆள் என்று நிரூபித்தால் மட்டும்தான் தப்பிக்கவே முடியும். எப்படி நிரூபிப்பது? 

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் யாரும் செளக்கியம்தான்.

எங்கே அதிகாரமும் கொட்டிக் கிடக்கிறதோ அவர்கள் தமக்கு வாய்ப்பிருக்கும் இடங்களிலெல்லாம் தங்களின் அதிகாரத்தின் சாட்டையைச் சுழற்றுகிறார்கள். தனக்கு கீழாக இருப்பவனின் கழுத்தின் மீது காலை வைத்து தனது கெத்தைக் காட்டுகிறார்கள். அரசு மருத்துவமனையில் கடை நிலை ஊழியன் கூட அங்கே சிகிச்சைக்கு வருகிற ஏழைகளிடம் எகிறி விளையாடுவதைப் பார்க்க முடியும். சாதாரண கான்ஸ்டபிள் கூட சாதாரண தள்ளுவண்டிக்காரனிடம் தனது அத்தனை திமிர்த்தனத்தையும் காட்டுவார். இது இயல்புதான். பலமுள்ளவன் பலவீனமானவனை நசுக்குவதும் பலமிருந்தாலும் இல்லாவிட்டாலும் தன்னை பலவானாகக் காட்டிக் கொள்வதும் ஜீனிலேயே ஊறிய அம்சம். ஒவ்வொரு உயிரிடமும் இருக்கிறது.

பெரிய ஆள் என்பதே பிரமைதானே? உள்ளூரில் எம்.எல்.ஏ பெரிய ஆள் என்று நினைத்தால் அவன் மாவட்ட செயலாளரிடம் பம்முகிறான். மா.செ பெரிய ஆள் என்று நினைத்தால் அவன் முதலமைச்சரின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுகிறான். சினிமாவில் இயக்குநர் பெரிய ஆள் என்று நினைத்தால் அந்த ஆள் தயாரிப்பாளரிடம் பம்முகிறான். தயாரிப்பாளர் பெரிய ஆள் என்று நம்பினால் ஃபைனான்சியர் வந்தால் எழுந்து நிற்கிறான். அலுவலகத்தில் மேனேஜர் பெரிய ஆள் என்று நினைத்தால் அவன் அவனுக்கு மேலாக இருப்பவனிடம் வழிகிறான். பிரதமர்தான் பெரிய ஆள் என்று நம்பி அமத்தாவிடமும் ஆயாவிடமும் பேசினால் ‘அவன் ஆரு சாமி?’என்கிறார்கள். 

அப்படியென்றால் யார்தான் பெரிய ஆளு? நாமாகச் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.

எங்கள் ஊரில் ஒரு ஆளைக் கைது செய்திருக்கிறார்கள். ‘ஒண்ணுக்கு அடிக்க ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு வந்தேன்...நாலஞ்சு தீவிரவாதிகள் துரத்திட்டு வந்து பைக்கைக் கொளுத்திட்டாங்க’ என்று போலீஸூக்கு ஃபோன் செய்தாராம். அந்த ராசாவை அழைத்து வந்து காவல் நிலையத்துக்குள் வைத்து அடித்து துவம்சம் செய்யவும் தானேதான் வண்டிக்குத் தீ வைத்தேன் என்று ஒத்துக் கொண்டாராம். 

‘எதுக்குடா இந்த பொழப்பு?’ என்று கேட்டிருக்கிறார்கள். 

‘உள்ளூருக்குள் கெத்தாக சுற்ற வேண்டாமா? துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரரை எனக்கு பந்தோபஸ்துக்கு அனுப்புங்கன்னு கேட்டுட்டே இருந்தேன்ல’ என்றாராம். சிக்கிக் கொண்டவரை வெகு நாட்களாக கவனித்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பார்கள். கூட்டங்கள் நடத்துவார்கள். அவர்களாகவே பேண்டு வாத்தியக் குழுவை வைத்து வரும் போதும் போகும் அடித்து அலப்பறை செய்வார்கள். கடந்து சில வாரங்களாக எப்பொழுதும் அந்த நபரின் கார் காவல் நிலையத்திலேயே நின்று கொண்டிருந்தது. பெரிய ஆள் போலிருக்கிறது என்று நம்பியிருந்தேன். கடைசியில் சோலியை முடித்து குந்த வைத்து அமரச் சொல்லியிருக்கிறார்கள். மகிழ்ச்சி.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாகக் கூட வெட்டி பந்தா பார்ட்டிகளின் எண்ணிக்கை இவ்வளவு இருந்திருக்க வாய்ப்பில்லை. கருமாந்திரம்! இப்பொழுது வெகுவாக பெருகிப் போய்விட்டது. இருக்குதோ இல்லையோ- கடனை வாங்கியாவது நடை உடை பாவனையில் அலும்பு செய்து கொண்டிருக்கிறார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றிவிடுவதில் அவ்வளவு ஆர்வம். மேய்க்கிறது எருமை, இதில் என்ன பெருமை என்றெல்லாம் கேட்க முடியாது. எருமை மேய்த்து பால் ஊற்றியவர்களெல்லாம்தான் இன்றைக்கு பெரும்புள்ளிகள். 

ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘நீ பண்ணுற பந்தாவெல்லாம் பத்தாது...இன்னும் பண்ணோணும்’ என்றார். நிறையப் பேசிவிட்டு ‘எல்லாம் உன்ர நல்லதுக்குத்தான் சொல்லுறேன்’என்று நல்லவனாகப் பேசி முடித்துவிட்டார். யோசித்துப் பார்த்தால் சரி என்றுதான் படுகிறது. இனிமேல் அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். அப்பல்லோ வரைக்கும் சென்றுவிட்டு வந்து மீதத்தை எழுதுகிறேன். வெயிட் ப்ளீஸ்!

4 எதிர் சப்தங்கள்:

viswa said...

வரைக்கும் என்றால் உள்ளே விட மாட்டார்கள் என்று தெரியும்தானே

விஸ்வநாதன்

Avargal Unmaigal said...

உங்களுக்கு சாதாரண காய்ச்சல் என்றால்தான் அப்போலோவில் அட்மிட் பண்ணுவார்கள் அதன் பின் லண்டனில் இருந்து டாக்டரை கூப்பிட்டி பார்க்க சொல்லி உங்களுக்கு சுவாசத்தில் பிரச்சனை என்பார்கள் அதற்கெல்லாம் நீங்கள் ரெடி என்றால் அப்போலோவிற்கு போங்கள்...உங்களுக்கு அங்கே ஏதாவது நேர்ந்தால் உங்கள் டிரெஸ்ட்டை அடுத்தாக யார் நிர்வாகிப்பது என்று உயில் எழுதிவிடுங்கள் இல்லையென்றால் வதந்திகள் பரவும்

சேக்காளி said...

//அப்பல்லோ வரைக்கும் சென்றுவிட்டு வந்து மீதத்தை எழுதுகிறேன்//
சென்னை யிலேயே அஞ்சாறு இருக்காமாம்.எந்த அப்பல்லோ வுக்கு ன்னு முடிவு பண்ணிட்டு போங்க.அலைச்சல் கொறையும்.

சேக்காளி said...

'நான் யாரு தெரியுமா?’ ன்னு ஆரம்பிச்சு அப்பல்லோ வுல முடிச்சிருக்கீரே.
நீரு (குசும்புல)பெரிய ஆளு தாம்யா.