பெங்களூரிலும் வண்ணாரப்பேட்டை இருக்கிறது. பெயரே சொல்லிவிடுவது போல தமிழர்களின் பேட்டை. ஆடி மாதம் முழுக்கவும் ‘கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா...’ மாதிரியான பாடல்கள்தான். பெரிய சர்ச் ஒன்றும் உண்டு. அங்கேயும் ‘தேவன் உம்மை மகிமை செய்கிறார்..அல்லேலூயா’ என்று தமிழில்தான் பிரார்த்தனை நடைபெறும். தெருக்களும் சாலைகளும் நெரிசல் மிகுந்து கச்சடவாக இருந்தாலும் இந்த வழியில் செல்வதில் அலாதியான இன்பம் உண்டு. காது குளிர தமிழைக் கேட்கலாம். இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு முன்பாக இந்த ஊருக்கு வந்து முக்கால்வாசி கன்னடக்காரர்கள் ஆகிவிட்ட தமிழர்கள். ஆனாலும் தமிழ்தான் பேசுகிறார்கள். தமிழ் விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். முக்கியமான விஷயம் - தமிழ் படங்களையும் பார்க்கிறார்கள்.
இதே பகுதியில் மிலிட்டரிக்காரர்களுக்கான பெரிய வளாகங்களும் உண்டு. பெரும்பாலானவை குடியிருப்புகள். அப்படியான வளாகத்தையொட்டி ராஜகால்வாய் ஒன்றும் ஓடுகிறது. பெங்களூரு ஏரிகளின் நகரம் அல்லவா? ஒவ்வொரு ஏரி நிரம்பியதும் நீர் வழிந்தோட பெரிய கால்வாய் இருக்கும். அந்தக் கால்வாய்களுக்கு ராஜகால்வாய் என்று பெயர். ஒரு காலத்தில் ராஜ கால்வாய்களில் மீன் கூட பிடிப்பார்களாம். இப்பொழுது சிறுநீர் கூட கழிக்க முடியாது. அப்படியொரு நாற்றம். சாக்கடை நீர்தான் ஓடுகிறது. ராஜகால்வாயை மேவி கட்டிடங்களைக் கட்டிவிட்டார்கள் என்று அவ்வப்பொழுது சண்டையெல்லாம் போட்டுக் கொள்வார்கள். கரன்சி பரிமாறிய பிறகு கப்சிப். சரி, அது இந்தக் கட்டுரைக்கு சம்பந்தமில்லாத விவகாரம்.
மிலிட்டரி வளாகத்துக்கும் ராஜகால்வாய்க்கும் இடைப்பட்ட குறுகிய சாலையில்தான் எனது நகர்வலம் நடைபெறும். இரண்டு பைக்குகள் ஒரே சமயத்தில் செல்லலாம். இரண்டு மகிழ்வுந்துகள் எதிரெதிரே வந்தால் பலவீனமானவன் பின்னால் சென்றே தீர வேண்டும். இல்லையென்றால் பலவானிடம் திட்டும் குத்தும் வாங்க வேண்டியிருக்கும்.
இப்பொழுது அந்தப் பகுதி குறித்து உத்தேசமான ஐடியா உங்களுக்கு வந்திருக்குமே. இனி சம்பவத்தை விளக்குகிறேன்.
திங்கட்கிழமையன்று பெங்களூரிலிருந்து கோபி செல்வதாகத் திட்டம் வைத்திருந்தேன். செவ்வாய்க்கிழமையன்று ஆயுத பூஜை என்பதால் கைவசமிருக்கும் ஏகே 47, ஏகே 56, சில பல வெடிகுண்டுகளுக்கு பூஜை போட்டு அதையெல்லாம் ஃபேஸ்புக்கில் படமாகப் போட்டு லைக் வாங்குவதாக உத்தேசமிருந்தது. அலுவலகத்தில் பெட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பிய ஏழு மணிக்கெல்லாம் அரையிருட்டாகிவிட்டது. மேற்சொன்ன குறுகிய சாலையில் செல்லும் போது ஓர் ஆயா- அறுபது வயதிருக்கும்- ‘தேவிடியா பையா’ என்று திட்டிக் கொண்டிருந்தது. தன்னந்தனியாக நின்று திட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் சற்று பயமாகத்தான் இருந்தது. ஆனால் என்னைத் திட்டவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வெகு நேரமாகவில்லை. மிலிட்டரி வளாகத்திற்குள்ளிருந்து சாலையில் கிளைபரப்பியிருந்த ஒரு மரத்தைப் பார்த்துதான் ஆயா திட்டிக் கொண்டிருந்தது. அந்த ஆயாவால் வசை பாடப்பட்ட மரம் வேகமாக அசைந்து கொண்டிருந்தது. எனக்குத்தான் கெட்ட புத்தியல்லவா? அதுவும் சினிமாவைப் பார்த்துப் பார்த்து கெட்டுப் போன புத்தி. யாரோ கசமுசா செய்து கொண்டிருப்பதை அந்த ஆயா பார்த்துவிட்டது என்றுதான் ஒரு கணம் நினைக்கத் தோன்றியது. மரமும் அப்படித்தான் அசைந்தது. ஆனால் அதுவுமில்லை.
எவனோ ஒருவன் மரத்தின் கிளையில் ஒளிந்திருக்கிறான். அவன் ஒளிந்திருப்பதை சுவர் மறைத்திருக்கிறது. ஆயா வரவும் கையை நீட்டி கழுத்தில் இருப்பதைப் பறித்துவிட்டான். அதனால்தான் தே.. பையன் என்ற பட்டம். வண்டியை நிறுத்திவிட்டேன். அந்த ஆயா கத்தவும், வண்டியை நான் நிறுத்தவும் சுதாரித்துக் கொண்ட இன்னும் சிலரும் அங்கே கூடவும் ‘கோத்தியா? கோத்தியா?’ என்றார்கள். மரம் அசைவதற்கு கசமுசா என்ற அர்த்தம் மட்டுமில்லை, குரங்காகக் கூட இருக்கலாம் என்று உணர்ந்து கொண்ட தருணம் அது. குரங்கு இல்லையென்றும் சுவருக்கு அந்தப் பக்கமாகத் திருடன் இருக்கிறான் என்றும் விளக்கி சம்பவத்தை அந்த ஆயா மற்றவர்களுக்குப் புரிய வைப்பதற்குள் எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகம் விழித்துக் கொண்டது. மிலிட்டரி வளாகத்தின் சுவர் ஏழு அடி உயரம்தான் இருக்கக் கூடும். சட்டையை முழங்கை வரைக்கும் இழுத்துவிட்டு கால் வைப்பதற்கு தோதான இடத்தில் காலை மெட்டி ஒரு உந்து உந்தினேன். எப்படியும் அவன் அங்கேதான் இருப்பான் என்று உள்மனம் சொன்னது. ஹிந்தியில் திருடனை சோர் என்பார்கள் என்று தெரியும். எட்டிப் பார்த்து ‘சோர்..சோர்’ ‘பக்கடோ..பக்கடோ’ என்றால் எப்படியும் நான்கைந்து பச்சை சட்டை மிலிட்டரிக்காரர்கள் ஓடி வந்து அமுக்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஒரு திருடனைப் பிடித்த பலவானாக இந்த உலகம் என்னையும் மெச்சும்.
எல்லாம் ஒரு வினாடிதான். சுவர் மீது கையை வைக்கவும் பெயர்ந்து கிடந்த நுனி தனியாகக் கழண்டு வரவும் நான்கடி உயரத்திலிருந்து டம்மென்று விழுந்தேன். ‘எப்போ விழுந்தாலும் பின்பக்கமாக மட்டும் அடிபடக் கூடாது’ என்ற ஞாபகம் வந்தது. தலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். அடிபடவில்லை. திருடனைப் பிடிக்க இவ்வளவு துணிச்சலாக முயன்ற தைரியசாலியைத் தூக்கிவிட ஒரு காக்கா குருவி கூட கை கொடுக்கவில்லை என்பதுதான் துக்கம். அதுவும் ஜீன்ஸ் அணிந்த மகராசியொருத்தி ஆக்டிவா வண்டியில் காலை ஊன்றி பந்தாவாக நின்று கொண்டிருந்தாள். அவளாவது தூக்கி விட்டிருக்கலாம். அந்தக் கூட்டத்திலேயே அவளை மட்டும்தான் எதிர்பார்த்தேன். ம்ஹூம். எழுந்து பின்பக்கமாக அப்பியிருந்த மண்ணைத் தட்டிவிட்டுக் கொண்டேன். வலது கையின் முட்டி பெயர்ந்திருந்தது. ஆனால் இந்த இடத்தில் சுணங்கிவிடக் கூடாது. இளக்காரமாகப் போய்விடும். நல்லவேளையாக அங்கேயிருந்தவர்கள் சுணங்கவும் விடவில்லை. மிலிட்டரி வளாகத்தின் பாதுகாவலர்களிடம் சொல்லச் சொல்லி அந்த ஆயாவை விரட்டிக் கொண்டிருந்தார்கள்.
‘நானே கூட்டிட்டுப் போறேன்’ என்று சொல்லிவிட்டு முட்டியைப் பார்த்தேன். ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. வண்டியைக் கிளப்பி ‘வாங்க போகலாம்’ என்று பைக்கை முறுக்கிய போது அந்த ஆயாவும் ஏறிக் கொண்டது. சற்றே முன்பாகச் சென்று வலது பக்கமாகத் திரும்பினால் அந்த பாதுகாவலர்கள் இருப்பார்கள். விவரத்தைச் சொல்ல எனக்கு ஹிந்தி அறிவு இல்லை. நான் சொல்வதைப் புரிந்து கொள்கிற திறமை அவர்களிடம் இல்லை. எனது மொழியறிவில் சலித்துப் போன ஆயாவே ஹிந்தியில் பேசத் தொடங்கியது. ‘சோர் ஹை...செயின் ஹை...அந்தர் ஹை’ என்று அது சொல்லச் சொல்ல புரிந்து கொண்ட இரண்டு மூன்று மிலிட்டரிக்காரர்கள் ஓடினார்கள். சம்பவத்தின் நேரடி சாட்சி என்பதால் நானும் அவர்களோடு உள்ளே ஓடினேன். அவர்களின் ஆஜானுபாகுவான உருவமும் ஷுவும் அந்த மிடுக்கும் - அவர்கள் ஓடினால் அர்த்தமிருக்கிறது. இரும்படிக்கிற பக்கம் போனால் எலிப்புழுக்கையும் இரும்புத்தூளாகிவிட வேண்டும் என்பதால் அதே ஆர்மிக்காரனின் தோற்றமே எனக்கும் இருப்பதாக நினைத்துத்தான் ஓடிக் கொண்டிருந்தேன். என்னுடைய பிரச்சினையெல்லாம் முட்டியைப் பெயர்த்த அந்தக் கிராதகன் சிக்கினால் இரண்டு குத்தாவது குத்திவிட வேண்டும்.
இப்படியும் அப்படியும் ஓடினார்கள். ஒன்றிரண்டு நிமிடங்களில் திரும்ப வந்து இல்லையென்றார்கள். ‘உதர்சே ஜங்கிள் ஹே...அந்தர் ஹே ஜாராவோ ஹே’ என்றான். மொழிபெயர்ப்பு இல்லாமலே புரிந்துவிட்டது. திருடன் பக்கத்தில் இருக்கும் காட்டுக்குள் ஓடிவிட்டானாம். சுள்ளென்றிருந்தது. ‘அடப்பாவிகளா...உங்க ஏரியாவுக்குள்ளேயே வந்து அடிச்சிருக்கான்..சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்..ஓடுங்க...சுடுங்க’ என்றெல்லாம் சொல்ல விரும்பினேன். எதற்கு வம்பு என்று அமைதியாகிவிட்டேன். பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு முட்டியைக் காட்டினேன். ‘ப்ச்’ என்றார்கள். அதோடு சரி. கவனத்தை அந்த ஆயாவிடம் திருப்பினார்கள். ஏதோ கேட்டார்கள். அந்த ஆயா பதில் சொன்னது. சிரித்தபடியே அனுப்பி வைத்தார்கள்.
ஆயாவும் வளாகத்தைவிட்டு நடக்கத் தொடங்கியது. ஆசுவாசமாக ‘எவ்வளவு பவுன்?’ என்றேன். அந்த ஆயா சலனமேயில்லாமல் ‘பவுனு இல்ல தம்பி..கவ்ரிங்குதான்...’என்றது. பாவிக்கிழவி. அதனால்தான் மிலிட்டரிக்காரர்கள் சிரித்திருக்கிறார்கள். கண்டபடி கோபம் தலைக்கேறியது. திருட்டு திருட்டுதான். திருடனைப் பிடிக்க வேண்டும்தான். ஆனால் இதை முன்பே சொல்லியிருந்தால் இவ்வளவு பதறியிருக்க மாட்டேன். திருடனைப் பிடிப்பதைவிட ஒரு கிழவியின் நகை போகிறதே என்றுதான் அவ்வளவு சேட்டையெல்லாம் செய்தேன். முட்டி பெயர்ந்ததுதான் மிச்சம்.
‘போனா போய்ட்டு போறான்...நீ இவ்வளவு அலைஞ்சியே...நல்லா இரு’ என்று சொல்லிவிட்டுக் கிழவி சென்றது. கிழவி வாழ்த்தியிருக்கிறது. வாழ்த்து யாருக்கு வேண்டும்? நான் செய்த சேட்டைகளின் காரணமாக சிக்கினால் சிதைத்துவிடுவார்கள் என்று கவரிங் செயினைத் திருடிக் கொண்டு உயிரைப் பிடித்தடியே காட்டுக்குள் வெறித்தனமாக ஓடித் தப்பிய அவன் என்ன சாபமெல்லாம் விட்டானோ? வாழ்த்துக்கும் சாபத்துக்கும் கணக்கு நேராகிவிட்டது. இன்று காலை அதே வழியில் வந்த போது ஆர்மிக்காரர்கள் சுவர் ஓரமாக இருந்த மரத்தைக் கத்தரித்துவிட்டிருக்கிறார்கள். ஏதோ அவர்களால் முடிந்தது. இன்னமும் முட்டியில் காயம் அப்படியேதான் இருக்கிறது.
10 எதிர் சப்தங்கள்:
ஆயாவும் வளாகத்தைவிட்டு நடக்கத் தொடங்கியது. ஆசுவாசமாக ‘எவ்வளவு பவுன்?’ என்றேன். அந்த ஆயா சலனமேயில்லாமல் ‘பவுனு இல்ல தம்பி..கவ்ரிங்குதான்...’என்றது. பாவிக்கிழவி. அதனால்தான் மிலிட்டரிக்காரர்கள் சிரித்திருக்கிறார்கள்.....
:) :) :)
ஆக்க்ஷன் சூறாவளி அண்ணன் மணிகண்டன் வாழ்க! வாழ்க!
//யாரோ கசமுசா செய்து கொண்டிருப்பதை//
பா(ஸ்)சு மணிகண்டா! கசகசா கேள்விப் பட்டுருக்கேன். அதென்ன கசமுசா?
//உதர்சே ஜங்கிள் ஹே...அந்தர் ஹே ஜாராவோ ஹே’ என்றான்//
தொர என்ன மா இந்தி பேசுது.இதைத் தான் "ஒரு தமிழன் இந்தியனாக மாறிய தருணம்" ன்னு சொல்லுவாங்களோ.
அடுத்த சினிமா ஹீரோ தயாராகிக் கொண்டிருக்கின்றார் பெங்களூரில் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்கா? வீடியோ ஆதாரம் அனுப்புனாதான் நம்புவோம். குறைந்த பட்சம் "முட்டி" குளோஸ்அப் போட்டோ. :) :) :)
ஜீன்ஸ் அணிந்த மகராசியொருத்தி சாட்சி இருக்குல்ல ணம்ம அந்நன் ஸர்ஜிக்கல் ஸ்டிரைக் பந்நினதுக்கு?
a good adventure...
//சர்சிக்கல் ஸ்ட்ரைக்கில் வன்னாரப்பேட்டையே ஆடிப் போய் உள்ளது. எங்கும் இதே பேச்சு.// பெங்களூர் தினத்தந்தியில் வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
அதுவும் ஜீன்ஸ் அணிந்த மகராசியொருத்தி ஆக்டிவா வண்டியில் காலை ஊன்றி பந்தாவாக நின்று கொண்டிருந்தாள்.
" அவளாவது தூக்கி விட்டிருக்கலாம் ".
அந்தக் கூட்டத்திலேயே அவளை மட்டும்தான் எதிர்பார்த்தேன்.
ivvalavu ranagalthilum kilukiluppu # vadivelu
செவ்வாய்க்கிழமையன்று ஆயுத பூஜை என்பதால் கைவசமிருக்கும் ஏகே 47, ஏகே 56, சில பல வெடிகுண்டுகளுக்கு பூஜை போட்டு அதையெல்லாம் ஃபேஸ்புக்கில் படமாகப் போட்டு லைக் வாங்குவதாக உத்தேசமிருந்தது.
# Ragalaiyana writing, mani rocks
sundar g chennai
Post a Comment