Oct 14, 2016

கூத்தாடி

யாராவது சினிமாக்காரர்களை கூத்தாடிகள் என்று சொன்னால் சுள்ளென்றிருக்கும். ரஜினி, கமல், விஜய், அஜீத்தையெல்லாம் கூத்தாடிகள் என்று சொல்வதற்கு அர்த்தமேயில்லை. கழைக் கூத்தாடிகளுக்கு  சொந்த ஊரென்று எதுவுமில்லை. தங்குவதற்கென்று வீடு இல்லை. நிரந்தரமான மொழியும் இல்லை. படிக்கவெல்லாம்...ம்ஹூம்..வாய்ப்பே இல்லை. 

ஊர் ஊராகத் திரிகிற நாடோடிகள் அஞ்சுக்கும் பத்துக்கும் கூத்தாடுவது, ஊசிமணி விற்பது, சொற்ப வருமானத்தில் ஆங்காங்கே நாட்களைக் கடத்துவது பிறகு இன்னொரு ஊருக்குச் செல்வது என்று அவலமான வாழ்க்கை. பிறப்பு இறப்பு சான்றிதழ் கிடையாது, ரேசன் கிடையாது, வாக்காளர் பட்டியலில் பெயர் கிடையாது. இப்படி எதுவுமே கிடையாது.

கழைக்கூத்தாடிகள், நரிக்குறவர்கள், லம்பாடிகள் குறித்தெல்லாம் நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால் பெரிதாக அலட்டிக் கொண்டிருக்க மாட்டோம். சமீபத்தில்தான் ஒரு காலனிக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. 

இப்பொழுது கொஞ்சமே கொஞ்சம் பரவாயில்லை. இன்னமும் பல்லாயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் இப்படி அலைந்து திரிந்தாலும் அவலமான வாழ்க்கை முறையிலிருந்து சில குடும்பங்கள் தப்பியிருக்கின்றன. அரசாங்கம் அவர்களுக்கென இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறது. அங்கே வீடுகள் கட்டியிருக்கிறார்கள். ஒரே காலனியிலேயே சில குடும்பங்கள் இன்னமும் கூத்தாடினாலும் மற்றவர்கள் வேறு வேலைகளைச் செய்கிறார்கள். பெரும்பாலும் கட்டிடங்களுக்கு கான்கீரிட் போடுகிற வேலைக்குச் செல்கிறார்கள். அவர்களின் வேகத்துக்கு மற்றவர்களால் ஈடு கொடுக்க முடியாது என்று சொன்னார்கள்.

அது உண்மைதான். காலங்காலமாக கூத்தாடி, கயிற்றில் நடந்து, இடுப்பை வளைத்து, பம்பரமாகச் சுழன்று- வேகமும் சுறுசுறுப்பும் ஜீனிலேயே கலந்திருக்கிறது.

கடந்த வாரம் கரட்டுப்பாளையம் என்ற பஞ்சாயத்தில் எம்.ஜி.ஆர் காலனிக்கு அழைத்திருந்தார்கள். இரவு ஒன்பது மணிக்கு மேலாகச் சென்றிருந்தோம். ஆயுத பூஜை கொண்டாடிக் கொண்டிருந்தவர்கள் கூட்டமாக வந்து சுற்றிலும் அமர்ந்து கொண்டார்கள். எங்களுக்கு நாற்காலிகள் போட்டிருந்தார்கள். அவர்கள் கீழேயே அமர்ந்து கொள்வதாகச் சொன்னார்கள். நிறையப் பேசினோம். வாழ்க்கை முறை, தேவைகள் என நிறையச் சொன்னார்கள். தீராத கதைகள் அவை.

காலனிக்குச் செல்ல காரணமிருக்கிறது. 

இப்பொழுது காலனியிலிருந்து நிறையக் குழந்தைகள் படிக்கச் செல்கிறார்கள். அத்தனை பேரும் கரட்டுப்பாளையம் மற்றும் காசிபாளையம் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். இருவர் மட்டும் கல்லூரிக்குச் சென்றிருக்கிறார்கள். படிக்கிறார்களோ இல்லையோ இந்தக் குழந்தைகள் ஜிம்னாஸ்ட்டிக்கில் பட்டையைக் கிளப்புகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, காலனியைச் சேர்ந்த பெரும்பாலான பெற்றோர் தமது குழந்தைகள் ஜிம்னாஸ்டிக் செய்ய அனுமதிப்பதில்லை. கூட்டத்தில் கேட்ட போது கை கால் முறிந்துவிடக் கூடும் என்று பயப்படுவதாகச் சொன்னார்கள். அது மேம்போக்கான காரணமாகத் தெரிந்தது. அவர்களிடம் பேசிய போது அது உண்மையான காரணமாகத் தெரியவில்லை. காலங்காலமாக ஜிம்னாஸ்டிக் செய்து வந்தவர்கள் அவர்கள். கை கால் முறிந்துவிடும் என்று பயப்பட வாய்ப்பேயில்லை. இதுவரை தாம் செய்து வந்த இதையெல்லாம் விட்டுவிட்டு நமது குழந்தைகளாவது வேறு வேலைகளுக்குச் செல்லட்டும் என்கிற பரிதாபமான ஆசையின் காரணமாகத் தடுக்கிறார்கள் என்று புரிந்தது.

கழைக் கூத்தாடிகளின் குழந்தைகள் ஜிம்னாஸ்ட்டிக்கில் கொடி கட்டுகிறார்கள் என்பதற்காகவே தமிழக அளவில் அமைக்கப்பட்டுள்ள ஏழு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையங்களில் ஒன்றைக் கரட்டுப்பாளையத்திலும் அமைத்திருக்கிறார்கள். பயிற்சி மையம் என்றால் நகரங்களில் இருக்கக் கூடிய பயிற்சி மையங்கள் மாதிரியானவை இல்லை. சில விரிப்புகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அதைத் திறந்த வெளியில் போட்டு பயிற்சி செய்கிறார்கள். பயிற்றுவிப்பதற்காக பெண் கோச் ஒருவரையும் நியமித்திருக்கிறார்கள். அவருக்கு அரசாங்கம் சம்பளம் கொடுத்துவிடுகிறது. வருடம் இருபது குழந்தைகளை பயிற்றுவிக்க வேண்டும் என அவருக்கு இலக்கு நிர்ணயிக்கப்படிருக்கிறது. ‘இப்போவெல்லாம் குழந்தைகள் வர்றதே இல்ல சார்’ என்பது அவரது குற்றச்சாட்டாக இருந்தது.

இந்த மாதம் டெல்லியில் நடைபெறவிருக்கும் அகில இந்திய போட்டிக்கு ஐந்து மாணவர்கள் பேர் தேர்வாகியிருக்கிறார்கள். அதற்கான பயணச் செலவுகளுக்கு பணம் தேவை என்று நண்பர் கார்த்திகேயனை அணுகியிருக்கிறார்கள். அவர் ஆசிரியர் அரசு.தாமஸ் வழியாக பேசவும், மூன்று பேரும் நேரிலேயே சென்றுவிடலாம் என்று முடிவு செய்தோம். பணம் புரட்ட முடியவில்லையென்றால் பயணத்தை ரத்து செய்துவிட முடிவு செய்திருப்பதாகச் சொன்னார்கள்.


ஒரு மாணவருக்கு ஆறாயிரம் வீதம் ஐந்து பேருக்கு முப்பதாயிரம் ரூபாய் நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து, உணவு, ஷூ உள்ளிட்ட தேவைகளை இது பூர்த்தி செய்யும். ஊர் பொதுமக்கள் முன்னிலையிலேயேதான் இந்தக் காசோலையை வழஙக் வேண்டும் என்று நினைத்திருந்தேன். அப்பொழுதுதான் அவர்களுக்கு நம் மீது நம்பிக்கை வரும்.

 (காலனியின் தலைவரிடம் காசோலையை கோச் வழங்குகிறார்)

கூட்டத்தில் சிலர் வேகமாக பேசினார்கள். கடந்த ஆண்டு ஒரு குழந்தைக்கு பயிற்சியின் போது கால் முறிந்துவிட்டதாகச் சொன்னார்கள். அரசாங்கம் பத்தாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறது. மீதத்தை பெற்றோர் கடன் வாங்கி செலவு செய்ததாகச் சொன்னார்கள். எல்லோருக்கும் அடிபடுவதில்லை என்றாலும் இருபதில் ஒருவருக்கு அடிபடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இப்படியான கூடுதல் செலவு, வலி, சிரமம் என பெற்றோர்கள் தயங்கினார்கள். காலனி மக்களின் முன்னிலையில் ஒரு  உறுதி மொழி கொடுத்திருக்கிறேன். நிசப்தம் அறக்கட்டளையை நடத்தும் வரைக்கும் ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் அடிபடும் எந்தக் கழைக் கூத்தாடி குழந்தைக்குமான மருத்துவச் செலவை நாம் ஏற்றுக் கொள்வது என்பது முதல் உறுதி மொழி. 

இத்தகைய உறுதிமொழி பெற்றோர்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையிருக்கிறது. தமது குழந்தைகளைத் துணிந்து பயிற்சிக்கு அனுப்பக் கூடும்.

இரண்டாவது உறுதி மொழி- இருபது குழந்தைகளில் மிகச் சிறப்பான இரண்டு குழந்தைகளுக்கு நிசப்தம் அறக்கட்டளை வழியாக முழுமையான ஸ்பான்ஸர்ஷிப் எடுத்துக் கொள்ளலாம். தேசிய, தெற்காசிய, ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் வகையில் அவர்களைத் தயார்படுத்துவது கோச்சின் பொறுப்பு. அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அரசு பயிற்சியாளரால் முடியாதபட்சத்தில் அல்லது வேறு சில நுட்பங்களை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் தேவையிருப்பின் ஜிம்னாஸ்டிக்கில் வேறு சிறந்த பயிற்சியாளர்களிடம் பேசி இந்த இரு குழந்தைகளை அவரிடம் பயிற்சிக்கும் அனுப்பி வைத்தும் உதவலாம்.

நம்பிக்கை இருக்கிறது. 

இரண்டு பேர்கள் மட்டுமே என்பதால் பெரிய அளவில் செலவு பிடிக்காது. இப்படிச் செய்யும் போது பிற குழந்தைகளுக்கும் ஆர்வம் உண்டாகக் கூடும். அப்படியான ஆர்வத்தில் ஒழுங்காகப் பயிற்சி பெறுவார்கள். அப்படி ஒரேயொரு குழந்தை மேலே வந்துவிட்டாலும் அது மிகப்பெரிய சாதனை அல்லவா? இதுவரை வீடே இல்லாத இனமாக இருந்த கூட்டத்திலிருந்து ஒரு குழந்தை மிக முக்கியமான விளையாட்டுப் போட்டிகளுக்குச் செல்லுகிற ஊக்கத்தை உருவாக்க முடிவதைத் தவிர நம்மால் விளையாட்டுக்கும் அந்தக் குழுவுக்கும் வேறு என்ன பங்களிப்பைச் செய்துவிட முடியும்?

டெல்லி விளையாட்டுப் போட்டிகள் முடிந்து வந்த பிறகு இரண்டு சிறந்த குழந்தைகளைத் தேர்ந்தெடுத்துத் தரச் சொல்லியிருக்கிறேன். என்ன உதவிகள் எல்லாம் தேவைப்படுகின்றன என்று ஒவ்வொன்றையும் செய்து தரலாம்.



இன்னொரு அம்சமும் அந்தக் காலனியில் கவர்ந்தது. 

ஆலம் விதை என்று குட்டியாக ஒரு நூலகம் அமைத்திருக்கிறார்கள். ஆயுள் காப்பீட்டுக்கழக முகவர்கள் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். வெகு சில புத்தகங்களை மட்டும் வைத்திருக்கிறார்கள். தினசரி குழுவாக அமர்ந்து படிக்கிறார்கள். மூத்த மாணவர்கள் இளைய மாணவர்களுக்கு தனிப்பயிற்சி நடத்துகிறார்கள். மனதுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அவர்களின் நூலகத்துக்கு புத்தகங்களை வாங்கித் தரும் திட்டமிருக்கிறது. யதேச்சையாக பிரபு ராஜேந்திரனிடம் பேசிக் கொண்டிருந்தேன். இரண்டாயிரம் ரூபாய்க்கான புத்தகங்களை வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார். அகிலா அலெக்ஸாண்டர் பத்தாயிரம் ரூபாயை அனுப்பி வைத்திருக்கிறார். அந்தத் தொகையை நூல்கள் வாங்கித் தந்துவிடலாம்.

(ஆலம் விதை நூலகம்)

இத்தகைய பணிகளைச் செய்யும் போதுதான் நீண்ட கால நோக்கில் சரியான பாதையில் செல்வதான ஒரு சந்தோஷமும் திருப்தியும் உண்டாகிறது. ஒரு மாணவனையாவது ஒலிம்பிக் அனுப்பிவிடுவது என்பது பெரிய லட்சியம்தான். ஆனால் அடையவே முடியாத லட்சியம் இல்லை. செய்து காட்டுவோம்!

14 எதிர் சப்தங்கள்:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

யாரும் செய்யாத புதிய முயற்சி. நிச்சயம் பலன் அளிக்கும்

Dineshkumar Ponnusamy said...

// கழைக் கூத்தாடிகள் ?? // => கலைக் கூத்தாடிகள். நல்ல முயற்சி, படிப்பிற்கு மட்டுமின்றி விளையாட்டை ஊக்குவிக்கவும் நிசப்தம் உதவுவது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள்.

Vaa.Manikandan said...

அன்பு தினேஷ்,

இந்த மாதிரியான திருத்தம் சொல்வதற்கு முன்பாக தயவு செய்து ஒரு முறை கூகிளில் தேடிப் பாருங்கள். உறுதியாகத் தவறு என்று தெரிந்தால் திருத்தம் சொல்லுங்கள்.

நன்றி.

Balaji said...

Great initiative, All the best !!

Palanivel said...

இதுவரை வீடே இல்லாத இனமாக இருந்த கூட்டத்திலிருந்து ஒரு குழந்தை மிக முக்கியமான விளையாட்டுப் போட்டிகளுக்குச் செல்லுகிற ஊக்கத்தை உருவாக்க முடிவதைத் தவிர நம்மால் விளையாட்டுக்கும் அந்தக் குழுவுக்கும் வேறு என்ன பங்களிப்பைச் செய்துவிட முடியும்?

anand said...

Dear Sir,
Hope, they will achieve soon. keep rocking..

Aravind said...

super sir! அடுத்த தீப்பா கர்மாக்கர் தயார் பண்ணுரிங்க!

viswa said...

எங்கேயோ போயிட்டீங்க!

விஸ்வநாதன்

சேக்காளி said...

வாசிக்கும் போது சந்தோசமா இருக்கு மணி.

Rajesh said...

Really good work

Jaypon , Canada said...

Best wishes. Noble attempt.

Unknown said...

good work ji

ilavalhariharan said...

உண்மையில் விளையாட்டுத்துறைக்கு நிசப்தத்தின் பங்களிப்பாக நிச்சயம் இது அமையும் மணி...அடிப்படை வசதிகளுக்காக எத்தனையோ விளையாட்டு வீரர்கள் ஏங்கி தங்கள் பயிற்சியைப் பாதியில் கைவிடுகின்றனர். தஙக் முயற்சி சிறந்தது.பாராட்டுகள்.

வெட்டி ஆபீசர் said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

அப்புறம்...இன்னோர் விஷயம்...அந்த பளபள சட்டை சூப்பர்...! கண்ணுலயே நிக்குது...இருங்க என் ப்ரெண்ட்ஸ் எல்லோருக்கும் சொல்லிட்டு வந்துடறேன்...