Sep 6, 2016

பெங்களூரில் காவிரி

நேற்று ஊரிலிருந்து கிளம்பி வந்து கொண்டிருந்த போதே நண்பர் அழைத்து ‘பெங்களூருக்கு பஸ் எல்லாம் போகுதுங்களா?’ என்றார். கிட்டத்தட்ட கிருஷ்ணகிரியை நெருங்கியிருந்தோம். எதற்காக இப்படி கேட்கிறார் என்று தெரியவில்லை. சத்தியமங்கலம், தாளவாடி வழியாக கர்நாடகாவுக்குள் செல்லும் பேருந்துகளை எல்லாம் நிறுத்தி வைத்திருப்பதாகச் சொன்னார். ஓசூர் வழியாக கர்நாடகாவுக்குள் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. கர்நாடகாவுக்குள் இருந்தும் வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. 

வருடம் ஒரு முறையாவது இப்படியொரு பதற்றம் உருவாகிறது. கிட்டத்தட்ட ஒன்றேகால் நூற்றாண்டு காலமாகத் தொடரும் பிரச்சினை. 1894 ஆம் ஆண்டிலேயே ஒப்பந்தமெல்லாம் போட்டிருக்கிறார்கள். இருந்தாலும் கையெழுத்து, கடிதப் போக்குவரத்து, பச்சைத் துண்டு போராட்டம், அணையில் குதித்துத் தற்கொலை, பஸ் எரிப்பு என்று விதவிதமான பரிமாணங்களை எடுத்துக் கொண்டேயிருக்கிறது.

தொண்ணூறுகளில் காவிரிப் போராட்டம் தலையெடுத்த போது கோபியில் வசித்தவர்களுக்கு அதன் ஆழ அகலங்கள் தெரிந்திருக்கும். தஞ்சை வாசிகளுக்கும் தெரிந்திருக்கக் கூடும். போலீஸ் தடியடிகளிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு பயந்து ரத்தம் தெறிக்க ஓடியவர்களையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தோட்டமும் காடும் சல்லிசாகக் கிடைக்கிறது என தாளவாடி மலையைத் தாண்டிச் சென்று கன்னட தேசத்தில் பயிர் செய்தவர்கள் அறுவடைச் சமயத்தில் அத்தனையையும் விட்டுவிட்டு ‘தப்பித்தால் போதும்’ என்று இரண்டு மூன்று துணிமணிகளை வாரியெடுத்துக் கொண்டு வந்த கதையெல்லாம் இன்னமும் பண்ணாரி காட்டு காற்றில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன. 

ட்ராக்டர்கள் எரிக்கப்பட்டன். கால்நடைகள் சூறையாடப்பட்டன. வீடுகளையும் வாகனங்களையும் அடித்து நொறுக்கியிருந்தார்கள். எந்நூறு கிலோமீட்டர் உடைய காவிரியில் இருபத்தேழாயிரம் கோடி கன அடி நீரைத் தமிழ்நாட்டுக்கு கொடுத்துவிடச் சொல்லி காவிரி ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பாக வந்த தீர்ப்பு இது. நாற்பத்து இரண்டாயிரம் கன அடி நீர் கர்நாடகத்துக்கு. இவை போக கொஞ்சம் கேரளத்துக்கும், சொற்பமாக புதுச்சேரிக்கும் பங்கு உண்டு. ‘நாட்டாமைத் தீர்ப்பை மாத்திச் சொல்லு’ என்று ஆளாளுக்கு மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். மீண்டும் விசாரணை செய்து, முடிவுக்கு வந்து தீர்ப்பெழுதும் போது அநேகமாக நம்முடைய அடுத்த தலைமுறை வேடிக்கை பார்க்கிற பருவத்துக்கு வந்துவிடக் கூடும். 

காவிரியில் இருந்துதான் பெங்களூருவாசிகளுக்குத் தண்ணீர் தருகிறார்கள். வாய்ப்பிருக்கும் இடங்களிலெல்லாம் கால்வாய் வெட்டி ஆங்காங்கே குளம் குட்டைகளை நிரப்பி நிலத்தடி நீரைப் பெருகச் செய்து கொண்டிருக்கிறார்கள். மாண்டியாவுக்கும் இன்னபிற மாவட்டங்களுக்கும் விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அத்தனையும் தாண்டி இருபத்தேழாயிரம் கோடி கன அடி நீரைத் தரச் சொன்னால் ‘நாங்க எங்கய்யா போவது?’ என்று கர்நாடகம் கொந்தளிக்கிறது. ‘நீங்க என்னமோ செஞ்சுட்டு போங்க...காவிரியை நம்பித்தானே முப்பது லட்சம் ஏக்கர் இருக்கிறது? தர முடியாதுன்னா நாங்க என்னய்யா செய்வோம்?’ என்று தமிழகம் கர்ஜிக்கிறது. எந்தக் காலத்தில் முடிவுக்கு வரும் என்று தெரியாத பிரச்சினை இது.

உச்ச நீதிமன்றம் ‘அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்..அடுத்த பத்து நாட்களுக்கு வினாடிக்கு பதினைந்தாயிரம் கன அடி என்ற அளவில் தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடட்டும் மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்’ என்று அறிவுரை செய்யவும்தான் பிரச்சினை பெரிதாகியிருக்கிறது. 

பெங்களூரில் இதுவரை பெரிய அளவில் பிரச்சினை உருவாகவில்லை. இன்று காலையிலிருந்து சாலையில் தமிழக வாகனங்கள் எதுவுமே கண்ணில்படவில்லை. வீட்டிலிருந்து தமிழக-கர்நாடக எல்லை எட்டிப்பிடித்த மாதிரிதான். சென்றிருந்தேன். இரு நாடுகளின் எல்லையில் பதற்றத்தின் போது இராணுவத்தைக் குவிப்பதைப் போல இரு மாநில போலீஸார் குவிக்கப்பட்டிருந்தார்கள். கன்னட பதிவு எண் கொண்ட ஈருருளியில் சென்றிருந்தேன். தமிழகத்திலிருந்து வந்த பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு வண்டியைத் திருப்பிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பக்கமாக கன்னட தேசத்தின் கொடி (சிவப்பு-மஞ்சள்) துண்டு அணிந்திருந்த போராளிகள் கத்திக் கொண்டிருந்தார்கள். ஜெயலலிதா, கருணாநிதி, மோடி, சித்தராமைய்யா என்று எல்லோரும் வசவை வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தார்கள். 

இரண்டு நாட்கள் இப்படித்தான் கத்துவார்கள். ‘தண்ணீர் தர முடியாது’ என்று சொல்கிற மாதிரி சொல்லிவிட்டு தமிழகத்துக்குத் தண்ணீரைத் திறந்துவிடுகிற வித்தையை கர்நாடக அரசியல்வாதிகள் கற்று வைத்திருக்கிறார்கள். ‘எங்களுக்குத் தண்ணீர் தரலைன்னா நடக்கிறதே வேற’ என்று வசனம் பேசிவிட்டு கர்நாடகம் எப்படியும் தண்ணீர் தந்துவிடும் என்கிற நம்பிக்கையைத் தமிழக அரசியல்வாதிகள் வைத்திருக்கிறார்கள். ஓட்டுப் பொறுக்கி அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று எடுத்துக் கொள்ளலாம்தான்.

அத்திபள்ளி தாண்டிய பிறகு அது பற்றிய எந்தச் சலனமும் இல்லை. நகரம் தனது வழக்கமான ஓட்டத்தில் வெறியெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு ஆளாளுக்கு பிழைப்பைப் பார்க்க ஓடிக் கொண்டிருந்தார்கள். ‘வெற்றிவேல்’ என்று தமிழில் எழுதப்பட்டிருந்த வாகனத்தில் சிவப்பு மஞ்சள் கொடியைக் கட்டிக் கொண்டு ஓட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் தப்பிக்கும் நேக்குத் தெரிந்திருக்கிறது. சேலம் பேருந்திலிருந்து இறங்கி கர்நாடக எல்லைக்குள் வந்த ஒரு இளைஞன் எலெக்ட்ரானிக் சிட்டி வரைக்கும் இடம் கேட்டான். பைக்கில் தனியாகத் திரும்புவதைவிடவும் யாரையாவது ஏற்றிக் கொள்வது உசிதம். ஏதாவது பேசிக் கொண்டே போகலாம். ஏற்றிக் கொண்டேன். அப்பா விவசாயி. பையன் ஐடியில் இருக்கிறான். ‘விவசாயம் பார்க்கலையா?’ என்றேன். என்ன பதில் சொல்லியிருப்பான் என்று தெரியும்தானே? கடந்த வாரம்தான் மூட்டை மூட்டையாக தக்காளியைக் கொண்டு வந்து வீதியில் கொட்டினார்களாம். ‘மார்கெட் கொண்டு போகிற செலவு கூட கட்டுபடியாகாத விலை’. எந்த அப்பன்காரனுக்குத்தான் மகனும் தனக்கான கஷ்டத்தை அனுபவிக்கட்டும் என்று நினைப்பான்?

எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வெறும் விவசாயத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கும் அத்தனை விவசாயிகளிடமும் இந்தப் புலம்பல் இருக்கிறது. ஹைடெக் பொறியியல் கல்லூரி என்று பெரும்பரப்பிலான கல்லூரியை நடத்தியபடியே நகரத்தலைவராகக் கொழித்து பிறகு அமைச்சரான கருப்பணன் மாதிரியானவர்களால்தான் ‘விவசாயிகள் கந்துவட்டியில் சம்பாதிக்கிறார்கள்’ என வாய் கூசாமல் சொல்ல முடிகிறது. 

நமக்கு எதுக்கு அரசியல்?

பயோகான் நிறுவனத்தைத் தாண்டி வந்து கொண்டிருந்த போது எதிரில் ஒரு ஸ்கார்ப்பியோ வண்டியில் கன்னட வேதிக அமைப்பினர் படுவேகமாக வந்தார்கள். வீட்டில் நிற்கும் கார் ஞாபகம் வந்தது. தமிழ்நாட்டு பதிவு எண் வண்டி அது. எலெக்ட்ரானிக் சிட்டியில் அந்தப் பையனை இறக்கிவிட்டு வந்து பதிவு எண் வெளியில் தெரியாதபடிக்கு மூடி வைத்துவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினேன். நாளைக்கு முதல் வேலையாக வீட்டில் கன்னட கொடி ஒன்றை நட்டு வைக்க வேண்டும்.

4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//நாளைக்கு முதல் வேலையாக வீட்டில் கன்னட கொடி ஒன்றை நட்டு வைக்க வேண்டும்//
எங்க மணி நாளை முதல் கன்னடி காரு வா ஆவப் போறாராம்.

ஓஜஸ் said...

நாளைக்கு முதல் வேலையாக வீட்டில் கன்னட கொடி ஒன்றை நட்டு வைக்க வேண்டும்.// Finishing எப்பவும் போல சூப்பர்

Trade said...

Well said...

Dineshkumar Ponnusamy said...

ஈருருளி-> Bicycle, விசையுந்து -> Motor Bike?

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுத்தா அத நாம ஒழுங்கா பயன்படுத்தாம் வீணடிக்கறதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருக்கு சகோ.. அது உண்மையும் கூட, தமிழகத்துல எனக்குத் தெரிஞ்சு தண்ணீர சேமிக்கர வழி இருக்க மாதிரி தெரியல..