Sep 4, 2016

மூன்றாம் நதி - விமர்சனங்கள்

நகரமயமாக்கலின் காரணமாக விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை படம்பிடித்துக் காட்டும் கதை. பெருநகரங்களில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வு கண்ணுக்குப் புலப்படாத ஒன்றுதான். என்றோ தங்கள் வாழ்வில் விடியல் வந்துவிடும் என்ற எண்ணத்தில் வாழ்கையை வாழ்ந்து முடித்துவிடும் அவர்களின் நிலையை தெள்ளத்தெளிவாக காட்டி இருக்கிறார். அமாவாசையும், அருக்கானியும் கதை முடிந்த பின்னும் நம் மனதிலேயே தங்கிவிடுகிறார்கள்.

கதாநாயகி பவானியின் கதாபாத்திரத்தை பற்றி சொல்லும்போது கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதியும், அமுதநதியும் போன்று மூன்றாம் நதி என்று கூறுகிறார்.

ஆசிரியர் காட்டும் பவானி போன்று நம்மை சுற்றி பல மூன்றாம் நதிகள் அன்றாடம் வாழ்ந்து மறைந்து கொண்டிருக்கிறார்கள்.முதல் அத்தியாயத்திலேயே பவானியின் கணவனின் மரணத்துடன் ஆரம்பிக்கிறது. அதைப் பற்றிக் கூறும்போது “தீக்கு எல்லாமே ஒன்றுதான். காய்ந்த சருகின் மீது எறிந்தாலும் அதே வேகந்தான். மனிதன் மீது எரிந்தாலும் அதே பாய்ச்சல்தான்”.

எதிர்பாராமல் ஏற்பட்ட மரணத்தில் அதிர்ந்து போய் இருக்கும் பவானியிடம் காவல்துறையினர் கேட்கும் கேள்வியில் அவளின் நிலையை அழகாக உணர்த்தி இருக்கிறார். 

‘உம் புருஷந்தானா?’- பவானி பதில் எதுவும் சொல்லவில்லை. அந்தக் கேள்வி துளி சந்தேகத்தைக் கூட எழுப்பியது. யாரோ ஒரு பொடியன் வந்து உன் கணவன் தீக்கு இரையாகி கொண்டிருக்கிறான் என்று கூறிய கூற்றை நம்பி ஓடிச் சென்று பார்க்கும் போது உருவமே தெரியாமல் எரிந்து கொண்டிருப்பவன் கணவன் தானா என்ற சந்தேகம் வருவதை அந்த இடத்தில் அருமையாக சொல்லி இருக்கிறார். 

இயற்கைப் பொய்த்து போனதால் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயரும் அமாவாசை போன்றவர்களின் மனநிலையை அவன் முருகேசன் என்னும் தன் நண்பனை தேடும் சம்பவத்தில் வெளிப்படுத்துகிறார். அதோடு மடிவாலாவில் இறங்கியபின் பெங்களூருவைப் பற்றி அவனது எண்ணங்களை சொன்னவிதம் ரசிக்க வைக்கிறது. “டவுனுக்கான அடையாளம் எதுவும் தெரியவில்லை. நிறைய காலியிடங்களாகக் கிடந்தன. பெங்களூரு சின்ன ஊர்தான் என்று அமாவாசை முடிவு செய்து கொண்டான்.”

நண்பனைத் தேடி அவன் கிடைக்காமல் போனபின்னர் அந்நகரம் அவர்களுக்கென்று ஒரு வேலையை தந்து தன்னுள் இழுத்துக் கொள்கிறது. அதன்பின் முதல் இழப்பாக அருக்காணியின் இழப்பை சந்திக்கும் அமாவாசை மெல்லமெல்ல நகரத்து மனிதனாக மாறத் தொடங்குகிறான். அமாவாசை அருக்காணியின் மகளான பவானி நகரத்தின் வளர்ச்சியுடன் அவளும் வளரத் தொடங்குகிறாள். வருனுடனான அவளது அனுபவம் காதலுக்கும்,காமத்திற்க்குமான வித்யாசத்தையும் வாழ்க்கைப் பாடத்தையும் அவளுக்கு உணர வைக்கிறது.

ஒரு நகரத்தின் வளர்ச்சியில் அந்நகரத்தின் அடையாளங்கள் அழிந்து போகத் தொடங்குவதை பானி பூரியின் வரவால் பெங்களூருவின் வெல்லம் கரைக்கப்பட்ட சாம்பார் அருகி வருகின்றது என்று கூற்றில் உணர்த்துகிறார். கணினி துறையில் நுழைந்தவர்களின் வாழ்க்கை முறையை மிக அழகானதொரு வரியில் சொல்லி இருக்கிறார். “ஓசூருக்கு அந்தப் பக்கம் வேறு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஓசூரைத் தாண்டியதும் இன்னொரு வாழ்க்கையை வாழத் தொடங்கியிருந்தார்கள்.”

பவானியின் வாழ்வில் அடுத்தடுத்த சம்பவங்கள் அவளுக்கு வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்த மிகத் தெளிந்த மனதுடன் சிந்திக்கத் தொடங்குகிறாள். நகரம் வளர்ச்சி அடையும் போது அதற்கான தேவைகளும் பெருக, அந்த தேவைகளை நிவர்த்தி செய்ய புதிதாக தொழில்களும் அதற்கான போட்டிகளும் தகராறுகளும் உருவாகின்றன. நீரினால் ஒவ்வொரு காலகட்டத்திலும் பலப் போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. இன்றும் நகரம் வளர வளர நீரின் தேவை பல மடங்காகின்றது. நீருக்காக ஏற்படும் போராட்டத்தின் முடிவில் லிங்கப்பாவிற்கும், பால்காரருக்கும் நடக்கும் மரணத்துடன் முடித்திருக்கிறார்.

“தண்ணீர் என்பது இருபக்கமும் வெட்டக் கூடிய ஆயுதமாக மாறியிருந்தது. அதன் கூர்மையை யாராலும் அனுமானிக்க முடிவதில்லை. இல்லாத போதுதான் ஒன்றின் அருமை தெரியும் என்பது தண்ணீருக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது.நகரம் தண்ணீருக்காகத் தவித்தக் கொண்டிருக்கிறது. அதன் தாகதுக்குப் பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரும் அதனோடு மனிதர்களின் ரத்தமும் தேவைப்படுகிறது”. ஒரு போராட்டத்தின் முடிவை ரத்தம் தோய்ந்த வரிகளில் எடுத்துரைத்திருக்கிறார்.

லிங்கப்பாவின் மரணத்தில் பவானியின் எண்ணங்களையும் சொன்ன விதம் அருமை. “தான் முப்பதாண்டு காலம் வாழ்ந்த இந்த ஊர் தனக்கு எதைக் கொடுத்திருக்கிறது என்று நினைத்தாள். எதுவுமே மிச்சமில்லை”. பவானி லிங்கப்பாவின் இறப்பில் மீண்டும் ஆரம்ப புள்ளியிலேயே வந்து நிற்கிறாள். ஆனால் ஒரே ஒரு மாற்றம் இப்போது அவள் கையில் நான்கு மாத மகள் பவித்ரா. இப்பெருநகரம் மீண்டுமொரு பவானியை உருவாக்கி விட்டது. 

“என்றும் மூன்றாம் நதிகள் நகரங்களின் மண்ணுக்கடியில் ஓடிக் கொண்டுதான் இருக்கும். அவற்றோடு தான் நகரம் தன் அசுர கரங்களை விரிக்கிறது” என்பதை சொல்லும் இந்நாவல் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று.

சுதா ரவி.

                                                        ***

வா.மணிகண்டன் எழுதிய "மூன்றாம் நதி" என்ற குட்டி நாவலை படித்தேன். இந்த நாவலை படித்து முடித்த பிறகு வைரமுத்து எழுதிய "மூன்றாம் உலகப்போர்" என்ற நாவல் நினைவுக்கு வந்தது. இரண்டு நாவலும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது. அடுத்த உலகப்போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்கிறது மூன்றாம் உலகப்போர். கண்ணுக்கு தெரியாத ஒரு போர் உள்ளுரிலே நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் மக்கள் கடிவாளம் கட்டிய குதிரையைப் போல பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.தண்ணீரை மையமாக வைத்துதான் இந்த மூன்றாம் நதி நாவலும் எழுதப்பட்டு இருக்கிறது.

வேலை தேடி சொந்த ஊரை விட்டு வரும் அம்மாவாசையும் அறுக்காணியும் காலப்போக்கில் எப்படி தொலைந்து போகிறார்கள். அம்மாவாசையின் மகளாக வரும் பவானி நாவலின் மிக முக்கியமான கதாபாத்திரம். நிசப்தம் வலைத்தளத்தை தினமும் வாசிப்பதனால் பவானி பற்றி தெரிந்து வைத்திருந்தேன். பவானியுடன் நிறைய பேசியிருக்கிறார் என்று தெரிகிறது. புத்தகத்தை வாசிக்கும் பொது பவானி நம்முடன் நேரடியாக பேசுவது போலவே இருக்கிறது. பவானி, கடைசியில் கூட்டிலிருந்து தவறி விழுந்த பறவை குஞ்சைப் போல அவள் செய்வதறியாமல் தவிக்கிறாள். பவானியின் கதையை கேட்டு தவித்துதான் போனேன் நானும்.

கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகம். இந்த நாவலின் அடுத்த பகுதி இன்னும் நிறைய பக்கங்களுடன் வரவேண்டும் என்பது என் விருப்பம். வாழ்த்துக்கள் மணிகண்டன்.

தங்க.சத்தியமூர்த்தி

2 எதிர் சப்தங்கள்:

https://couponsrani.in/ said...

THALAIVA GREAT

premkumar said...

படிக்க வேண்டிய நாவல்.