Sep 7, 2016

ஆகஸ்ட்’ 2016

ஆகஸ்ட் மாதத்திற்கான நிசப்தம் அறக்கட்டளையின் வரவு செலவுக் கணக்கு விவரம் இது-

 

வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட கடலூர் குடும்பங்களுக்கு ஆடு, மாடு, தையல் எந்திரங்கள், மரம் வெட்டும் எந்திரங்கள் உள்ளிட்ட வாழ்வாதாரத் தேவைகளுக்கான பொருட்களை கிட்டத்தட்ட முந்நூறு குடும்பங்களுக்கு வழங்கியிருந்தோம். அதில் சில குடும்பங்கள் மட்டும் விடுபட்டு போயிருந்தன. கடலூர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த சக்தி சரவணன் ‘பத்து, பதினைந்து குடும்பங்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கின்றன. தொடர்ந்து உதவி கோருகிறார்கள். உதவலாமா?’ என்று கேட்டிருந்தார். ஆனந்தகுமார் ஏஜன்ஸிஸ் பெயரில் இருக்கும் எண்பத்தைந்தாயிரம் ரூபாய் அதற்காக வழங்கப்பட்ட காசோலை.

கவிஸ்ரீ என்கிற பெண்ணின் தந்தை சரவணன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கடைநிலைப் பணியாளராக இருக்கிறார். குழந்தைக்கு ஐந்து வயதாகிறது. பிறப்பிலிருந்தே காது கேட்கும் திறன் இல்லை. அந்தப் பெண்ணுக்கு காது கேட்கும் கருவி வாங்குவதற்காக சில ஆயிரம் ரூபாய்களைப் வரைக்கும் புரட்டி வைத்திருந்தார். இன்னமும் அவருக்கு பணத்திற்கான தேவை இருந்தது. Magnetic piece, பேட்டரி உள்ளிட்டவைகளை வாங்குவதற்காக வரிசை எண் 29ல் இருக்கும் பதின்மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய்க்கான காசோலை Advanced Bionics India Pvt Ltd என்ற பெயரில் வழங்கப்பட்டது. பொருட்களை வாங்கிக் கொண்டார்கள். குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

ஒவ்வொரு மாதமும் போலவே வைபவ் கிருஷ்ணாவின் பராமரிப்புச் செலவுக்காக இரண்டாயிரம் வழங்கப்பட்டிருக்கிறது.

கச்சூர் என்கிற ஊரில் உள்ள இருளர் குடியிருப்பில் இயங்கும் அங்கன்வாடியில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை. அதை மேம்படுத்துவதற்காக Fiat Chrysler என்னும் நிறுவனத்தின் ஊழியர்கள் சார்பில் இருபத்து நான்காயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் முப்பத்து மூன்றாயிரம் ரூபாய் கணக்கிட்டிருந்தார்கள். மீதம் தேவையாக இருந்த ஒன்பதாயிரம் ரூபாய்க்கான காசோலை ஸ்ரீ நகோடா எலெக்ட்ரிக்கல்ஸ் பெயரில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் கடையிலிருந்துதான் கட்டிட வேலைக்குத் தேவையான சிமெண்ட் மூட்டைகளை வாங்கினார்கள். 


க்ரீன் நெட் மார்க்கெட்டிங் நிறுவனத்திலிருந்து கிட்டத்தட்ட முந்நூறு மரக்கன்றுகளுக்குத் தேவையான நெகிழி வலை வாங்கப்பட்டது. கெட்டிச்செவியூர் உள்ளிட்ட கடுமையாக வறட்சி பாதித்த பகுதிகளில் நடப்பட்டிருக்கும் செடிகளுக்கான வலை இது. மரத்தை நட்டு ஒரு வண்டி ஏற்பாடு செய்து நீர் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். வலை மட்டும் நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஓரிரு மாதங்களாக கவனித்த வரையில் மிகச் சிறப்பாக மரங்களைப் பராமரித்து வருகிறார்கள். அந்த நம்பிக்கையில் முந்நூறு மரக்கன்றுகளைக் காப்பதற்கு உதவி வழங்கப்பட்டிருக்கிறது.





இந்த மாத இறுதிக்குள் 2014-15க்கான வரவு செலவுக் கணக்கை சமர்பித்து பயன்படுத்தப்படாத தொகையின் குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை வருமான வரித்துறையின் அனுமதி பெற்று நிலையான வைப்பு நிதியாக மாற்ற வேண்டியது அவசியம். இது வரி விதிப்பிலிருந்து தப்பிப்பதற்கான உபாயம். வெகு சிலரிடமிருந்துதான் PAN எண்ணும் உள்ளூர் முகவரியும் கிடைத்திருக்கிறது. மாரிமுத்து என்ற பெயரில் மட்டுமே சில லட்சங்கள் வந்திருக்கிறது. அவர் யார் என்று தெரியவில்லை. இப்படி நிறைய பாக்கி இருக்கிறது. விவரங்களை அனுப்பாதவர்கள் அனுப்பி வைத்து உதவவும்.

இன்றைய தேதியில் (செப்டம்பர் 07) அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் ரூ.25,17,940 (இருபத்தைந்து லட்சத்து பதினேழாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது ரூபாய்) இருக்கிறது. உதவி கோரும் விண்ணப்பங்கள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. எல்லோருக்கும் உதவ முடியவில்லை என்றாலும் முடிந்தவரையில் அத்தனை உதவிகள் குறித்தும் விசாரித்து பதில் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். பதில் அனுப்பாமல் தவறிவிடும் சமயங்களில் சிலர் தொடர்ந்து ஞாபகமூட்டுகிறார்கள். பலர் அப்படியே விட்டுவிடுகிறார்கள். அப்படியே விட்டுவிடுகிறவர்கள் தவறாகப் பேசுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது. அப்படியான சில சொற்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. ஆனால் எதுவும் செய்வதற்கில்லை. அவர்களிடம் மானசீகமாக மன்னிப்புக் கோரிக் கொள்கிறேன். வேண்டுமென்று தவிர்ப்பதில்லை. ஆனால் தனிப்பட்ட மனிதர்களுக்கான உதவி என்பதை வெகுவாகக் குறைக்க வேண்டியிருக்கிறது. எல்லா வகையிலும் வடிகட்டும் போது பலரிடம் வசவு வாங்க வேண்டியிருப்பதை தவிர்க்க முடிவதில்லை. அத்தகைய வசவுகளை மனப்பூர்வமாகவே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். வாழ்த்து மட்டுமே வேண்டுமென்றால் இதையெல்லாம் செய்யவே கூடாது. 

வரவு செலவுக் கணக்கு, செய்யப்படும் உதவிகள் உள்ளிட்டவற்றில் ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்விகள் இருப்பின் தொடர்பு கொள்ளவும் vaamanikandan@gmail.com. ஆலோசனைகள் அல்லது கருத்துக்கள் இருப்பினும் மின்னஞ்சலிடவும்.

0 எதிர் சப்தங்கள்: