Sep 20, 2016

போர்

ஆளாளுக்கு உசுப்பேற்றுவதைப் பார்த்தால் ரத்தம் பார்க்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது. பாகிஸ்தானை அடித்து துவம்சம் செய்வோம் என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள். மோடியும் அமைச்சர்களை அழைத்து வைத்து குசுகுசுவென்று பேசிவிட்டு கையோடு பிரணாப்முகர்ஜியையும் பார்த்துப் பேசிவிட்டு வந்திருக்கிறார். ராணுவத்துக்கு அனுமதி வழங்கிவிட்டதாகவும் அடுத்ததாக டாங்கியை எடுத்துக் கொண்டு பாகிஸ்தானின் எல்லைக் கோட்டைத் தாண்டுவதா, கமாண்டோக்களை வைத்து தீவிரவாதிகளின் கதையை முடிப்பதா, பிரமோஸ் ஏவுகணையை வீசி சோலியை முடிக்கலாமா என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பதாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். சில கட்டுரைகளில் போர் வந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று எழுதியிருக்கிறார்கள்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் வந்தால் அதுவொன்றும் அவ்வளவு சாமானியமானதாக இருக்காது. சரிக்குச் சரி மல்லுக்கு நிற்பார்கள். இருதரப்புக்குமே பாதிப்பு உண்டு. மியான்மாருக்குள் ராத்திரியோடு ராத்திரியாக புகுந்து அடித்துவிட்டு வந்தது போல் பாகிஸ்தானுக்குள் போய்விட்டு வர முடியுமா என்ன? இந்தியாவைக் கொட்டுவதற்காக சீனாவுக்கு பாகிஸ்தான் தேவை. அதனால் சீனாவும் பாகிஸ்தானை விட்டுக் கொடுக்காது. ‘உலக அரங்கிலிருந்து பாகிஸ்தானை ஓரங்கட்டுவோம்’ என்பதெல்லாம் லேசுப்பட்ட காரியமாகத் தெரியவில்லை. நமக்கு நான்கு பேர் ஆதரவாக இருந்தால் அவனுக்கும் இரண்டு பேராவது தேறுவார்கள்.

இந்திய ராணுவவீரர்கள் மீதான தாக்குதலை பாகிஸ்தானிய ஊடகங்கள் எப்படி எழுதியிருக்கின்றன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் தொகுத்திருக்கிறார்கள். ஆர்வம் மேலிட Dawn, Tribune, Pakobserver உள்ளிட்ட சில பாகிஸ்தானிய செய்தித்தாள்களை ஆன்லைனில் மேய்ந்து கொண்டிருந்த போது காஷ்மீரில் சமீபத்தில் எழுந்த போராட்டங்களை திசை திருப்புவதற்காக இந்தியா கடும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், காஷ்மீரில் உணர்வெழுச்சியாக நடைபெற்ற போராட்டங்களைக் கூட பாகிஸ்தான் தூண்டிவிடுகிற தீவிரவாதம் என்று முத்திரை குத்தி சர்வதேச அரங்கில் இந்தியா விளையாடத் தொடங்கியிருப்பதாகவும் மாய்ந்து மாய்ந்து எழுதி வைத்திருக்கிறார்கள். எந்தவொரு அசாதாரண சூழலையும் சமாளிக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராக இருப்பதாக அந்நாட்டு ராணுவத் தளபதிகள் மீசைகளை முறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். சீனா போன்ற நண்பர்களின் உதவிகளை பாகிஸ்தான் கோர வேண்டும் என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானும், இந்தியாவும் கைகோர்த்து பாகிஸ்தானைக் காலி செய்யத் துடிக்கின்றன என்பது அவர்கள் வாதம். 'நாங்க ரொம்ப நல்லவங்க...எங்களை பார்த்து ஏன் கை நீட்டுறீங்க’ என்று அவர்கள் சொல்வதையும் நம்புவதற்கு ஆட்கள் இல்லாமலா போய்விடுவார்கள்?

அவரவருக்கு அவரவர் பார்வை.

கார்கில் போரின் போதே கூட அணு ஆயுதத்தை எடுக்கிற சூழலுக்குச் சென்றுவிட்டதாகவும் கடைசி நேரத்தில் திட்டம் கைவிடப்பட்டது என்பதையெல்லாம் படிக்கும் போது மனசுக்குள் இருள் வந்து அப்பிக் கொள்கிறது. இனியெல்லாம் அப்படி ஏதேனும் விவகாரம் நடந்து கை நீண்டால் கதை முடிந்தது என்று அர்த்தம். எனக்கு ஒரு கண் போனாலும் சரி அவனுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்ற கதையாகிவிடும். பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கொட்டி இந்தியாவும் பாகிஸ்தானும் தயாரித்து வைத்திருக்கிற ஏவுகணைகளும் அணு ஆயுதங்களும் இரு தேசங்களையும் கசகசத்து போய்விடச் செய்துவிடும். ‘பாகிஸ்தான் மீது போர் வேண்டும்’ என உசுப்பேற்றுகிறவர்கள் போர் என்பது வீடியோகேம் அளவுக்கு உல்லாசமாக இருக்கும் என்று நம்பிக் கொண்டிருக்காமல் இருக்க வேண்டும் என ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்ளலாம். 

கை வைத்தால் இருவருக்குமே பெரும்பாதிப்பு இருக்கும் என்பது இந்தியாவுக்கும் தெரியும். பாகிஸ்தானுக்கும் தெரியும். துணிந்து இறங்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

பெங்களூரில் மாலை வேளைகளில் எம்.ஜி.சாலையில் இருக்கும் தோசைக்கடையில் ‘வெரைட்டி தோசை’யைத் தேடிச் செல்வதுண்டு. கடை என்றால் தள்ளுவண்டி. மூன்று தோசைக்கல் காய்ந்து கொண்டிருக்கும். காளான், காலிப்ளவர், தக்காளி, வெள்ளரி என்று விதவிதமான பொருட்களை துண்டு செய்து வைத்திருப்பார்கள். சீனியர் ஒருவர். அவருக்கு உதவிகரமாக இளம்வயதுப் பையன். இரண்டு பேர்தான். என்ன தோசை வேண்டும் என்று கேட்கிறோமோ அதற்கேற்ப கத்தரித்து வைக்கப்பட்டிருக்கும் பொருளைத் தூவி மசாலாவை ஊற்றி கரண்டியொன்றினால் நசுக்கி முறுவல் ஆனவுடன் தருவார்கள். சுவையாகத்தான் இருக்கும். அந்தக் கடைக்கு வந்து போகும் ஒரு தாத்தாவுடன் அறிமுகமுண்டு.

இந்திய ராணுவத்தில் பணியில் இருந்திருக்கிறார். ஓய்வு பெற்ற பிறகு அல்சூருக்கு குடி வந்துவிட்டார். ஒரே மகன். வெளிநாட்டில் இருக்கிறான். இங்கு தாத்தாவும் பாட்டியும் மட்டும்தான். தோசை உண்டுவிட்டு பார்சல் ஒன்று கட்டி பாட்டிக்கு எடுத்துச் செல்வார். நேற்று வந்திருந்தார். ‘நியூஸ் பார்த்தியா? பெட்ரோல் டேங்க் மேல வீசியிருக்கானுக...டெண்ட்டுக்குள்ள படுத்திருந்தவங்க அப்படியே கருகிப் போயிருக்காங்க’ என்றார். எப்படித் தாக்குதல் நடந்தது என்று அதுவரை நுணுக்கமாக கவனித்திருக்கவில்லை. அவர் சொன்ன பிறகுதான் தெரியும். எரியும் போது என்னவெல்லாம் நினைத்திருப்பார்கள். ஒரு வினாடியேனும் குடும்பத்தினரின் முகங்கள் நினைவுக்கு வந்திருக்கும் அல்லவா? இறந்த வீரர்களுக்கு மகனோ அல்லது மகளோ இருக்கக் கூடும். அப்பா உயிரோடு கொழுந்துவிட்டு எரிந்தார் என்பதைக் கேள்விப்படும் போது அதை எப்படி எதிர்கொள்வார்கள்? இறந்து போன இராணுவ வீரர்களின் தாய்க்கு தாக்குதலின் விவரம் தெரியும் போது எப்படி நடுங்கிப் போவாள்? 
                                                

காஷ்மீரிலும் அஸ்ஸாமிலும் எல்லையில் வெளியிலிருந்து விழக் கூடிய முதல் அடிக்கு இராணுவ வீரன்தான் பலியாகிறான். நாளையே போர் என்று அறிவித்தாலும் அவன்தான் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஓடுவான்.

இதே தாத்தா ஒரு முறை பெங்களூரின் ராணுவ முகாம் வழியாக அழைத்துச் சென்றார். வண்ணாரப்பேட்டை முகாமுக்கு முன்பாக பெருங்கூட்டம் இருந்தது. முக்கால்வாசிப்பையன்கள் வடக்கத்திக்காரர்கள். இளம்பருவம். பதினெட்டு பத்தொன்பது வயது இருக்கும். அடுத்த நாள் ராணுவத்துக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று முந்தின நாளே ரயிலில் வந்து பையோடு படுத்திருந்தார்கள். இரவு முழுவதும் குளிரிலும், கொசுக்கடியிலும் அங்கேயே படுத்துக் கிடப்பார்கள். ஒவ்வொருவருக்கும் தாத்தா கை கொடுத்து வாழ்த்துச் சொன்னார். ‘உனக்கெல்லாம் மிலிட்டரிங்கிறது ஒரு வேலை. இல்லையா?’ என்றார் என்னிடம். அவரிடம் அப்படித்தான் சொல்லியிருந்தேன்.  ‘இங்க இருக்கிறவன்ல நூத்துல தொண்ணூறு பேருக்கு அது கனவு. செத்தாலும் நாட்டுக்காக சாவேன்னு சொல்லுவாங்க’ என்றார். கேட்டுப்பார்க்கச் சொன்னார். நான் கேட்கவில்லை.

இராணுவத்தினர் யாராவது செத்துப் போனதாகக் கேள்விப்படும் போதெல்லாம் அந்த இளைஞர்களின் முகம்தான் நினைவுக்கு வருகிறது. அதே சமயம் ஆத்மார்த்தமாக ஒரு சல்யூட் அடிக்கவும் தோன்றுகிறது.

6 எதிர் சப்தங்கள்:

Jaypon , Canada said...

Tears rolling down my cheeks. Salute to my Bharath and soldiers.

kailash said...

Government is preparing for Kargil like war , but they will wait , ground is being prepared and war will start 1 year before election . This govt has failed in external affairs policies totally due to National Security Advisor Ajit Dovals wrong policies and micro management of Modi who wants to control every thing instead of giving free hand to ministers int his case Sushma has been reduced to a minister who takes action on passport issues of citizens instead of focusing on foreign policy . External Affairs minister has to work on foreign policy , her hands are tied so she is replying to passport queries . We have already lost Nepals friendship and spending lot of time in internal conflicts raised by right outfits . Readers might be angry if i say this more people in army join it for employment opportunity and not based on patriotism , less percentage of people alone join for patriotic purpose . Every one joins the army by very well knowing that they are taking risk . This doesn't mean we are under estimating their sacrifices . We are losing many lives of our soldiers due to the egos of our leaders . Instead of listening to the people of kashmir we are handling it through weapons and losing our men in army . We are giving scope to Jihadis from Pakistan.Instead of strengthening our border and positioning our guns toward pakistan we are asking the army to turn their weapons against our people.

கானகம் said...


நீங்கள் பார்த்ததைப்போல,சில இளைஞர்களில் கிட்டத்தட்ட 60 பேர் பணியில் இணைய வந்திருப்பதாக கூறியிருந்தேன் அல்லவா..இன்று மாலையில் இறுதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று கொண்டிருந்தது.அதில் ஹிந்தியில் கூறுவது புரியாமல் சில இளைஞர்கள் நிற்பதாக சொன்னதும்,பக்கத்து கேபினில் இருந்து சென்று பார்த்ததில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர்.
சில சான்றிதழ் மாற்றங்களை அவர்களுக்கு தமிழில் விளக்கிக்கூறிய பின் ஒருவருடைய சான்றிதழை சரிபார்த்தேன்.கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர்.அப்பா முன்னாள் இராணுவவீரர்.மூத்த இரு சகோதரர்களும் இராணுவம்.ஒருவர் பூன்ச்சிலும்,மற்றொருவர் அருணாசாலலிலும் பணியில் உள்ளனர்.
இப்போது உங்கள் நிறைய பேருக்கு தோன்றிருக்கலாம்.சரியாக படித்திருக்கமாட்டார் என்று.அதான் வந்திருப்பார் என்று.(நான் இப்பதிவை எழுத முக்கிய காரணமும் இதுதான்.படிப்பு வராதவர்கள்தான் இராணுவத்தில் சேர்வார்கள் என்று இன்னும் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்).நானும் அப்படி ஒருவேளை இருக்கலாம் என்ற எண்ணத்தில்தான் மதிப்பெண் சான்றிதழை பார்த்தேன்.அங்கேதான் நம் முகத்தில் கரியை பூசியிருக்கிறார் அவர்.பத்தாம் வகுப்பு 444 (2012),மேல்நிலை 1039 (2014).தற்சமயம் Bsc(phy) மூன்றாம் வருடம்.(discontinue செய்துவிட்டு இங்கே வந்திருக்கிறார்)
சரி,அவரை பற்றி தெரிந்துகொள்வோம்மென பேச்சுக்கொடுத்ததில், அவர் அப்பா ஓய்வு பெறும்போது இவர் அம்மாவின் வயிற்றில் 6 மாத குழந்தை.சகோதர்கள் தேவையான படிப்பை படிக்க உதவுவதாக கூறியும்,உதறிவிட்டு வந்திருக்கிறார்.
அந்த தாத்தா கூறியதை நீங்கள் கேட்காமல் விட்டுவிட்டது ஞாபகம் வர,நான் அதை கேட்டுவிடும் முனைப்பிலும், அவர் மனதை தெரிந்து கொள்வதிலும் பேச தொடங்கினேன்.பட்ட படிப்பை தொடர்ந்து,BEd முடித்தால் TET exam ல் எளிதாக பாஸாகி,நல்ல பணியில் இதைவிட அதிக ஊதியம் கிடைக்கும்.இல்லையேனில் ஏதாவது குருப் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கலாம் என ஆலோசனை அடுக்கிக்கொண்டே போன என்னை நெடுநேரம் கவனித்துக்கொண்டே இருந்துவிட்டு எளிதாக ஒரு பதிலளித்தார்.. " இது என்னோட கனவு அண்ணா " என்றார்.
இவருடைய கனவு, தாயின் வயிற்றிலேயே தொடங்கிருக்கலாம்.இன்று நனவாகியும் போனது.இப்படி கனவு கண்டுகொண்டிருப்பர்களை பற்றிதான் நேற்று முன்தினம் ஒரு பேஸ்புக் கமெண்ட் படித்தேன் (உருதுலோ,ஹிந்திலோ அல்ல.தமிழில்தான்)." காஷ்மீர் மக்களை கொன்ற பாவத்தால்தான் 18 வீரர்களும் மரணித்ததாக". நீங்கள் எதுவென்றாலும் கூறிக்கொள்ளுங்கள்.அந்த இளைஞர் அடுத்த மாத இறுதியில் தனது பயிற்சியை தொடங்கியிருப்பார்... சல்யூட் Mr.Ajith..

Avargal Unmaigal said...

இந்தியா அரசு போருக்கு கண்டிப்பாக போகாது காரணம் இந்திய மக்களின் மீதுள்ள அக்கறையால் அல்ல இந்திய தொழில் அதிபர்களின் மிதுள்ள அக்கறையால்தான். காரணம் இவர்கள்தான் இந்திய அரசை பின்பக்கமாக இருந்து நடத்தி கொண்டிருப்பவர்கள் அவர்களைப் பொருத்தவரை யாரோ சில வீரர்கள் இறப்பதால் இவர்கள் தங்கள் பிஸினஸில் போட்டு இருக்கும் முதலீட்டிற்கு பாதகம் வராமல் இருக்க போருக்கு செல்லாமல் இருக்கவே விருப்பபடுவார்கள்.அதுதான் உண்மை இந்த முதலீட்டாளர்களுக்கு தங்கள் முதலீடும் அதில் இருந்து கிடைக்கும் வருமானம்தான் முக்கியம் ஆனால் நம்மை போல இருக்கும் போது மக்கள்தான் ரோசப்பட்டு என்ன பின் விளைவுகள் ஏற்பட்டாலும் பராவாயில்லை பாகிஸ்தானை துவம்சம் செய்துவிட வேண்டும் என போர் முழக்கங்கள் செய்து கொண்டு சமுக தளங்களில் பேசிக் கொண்டிருப்போம். இதுதான் நிதர்சன உண்மை

Muthu said...

நேரடி போரெல்லாம் சாத்தியமில்லை. மறைமுக தாக்குதலில் - தடயமே இன்றி ஊடுறுவி தாக்குதல் நடத்திவிட்டு தடயமேயின்றி ஓடி வந்துவிடுவது. யாரால் எப்படி தாக்குதல் நடந்தது என்று கண்டுபிடித்தல் கடினம் - இறங்கிப்பார்க்கலாம். மொஸாட்காரர்கள் இதில் கெட்டிக்காரர்களாம்.

சீனாவின் மடியில் பாகிஸ்தான் இருக்குவரையில் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தல் கடினம். (ஒருவேளை பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவை அதீதமாக எதிர்த்தால் இந்திய சந்தையின் கதவுகள் சீனாவுக்கு திறக்கப்படமாட்டாது என்று மிரட்டிப்பார்க்கலாம், அவ்வளவுதான் முடியும்) அதுவுமின்றி ஆயுத விற்பனையாளர்களுக்கு பாகிஸ்தானிய சந்தையும் தேவைதான்.

நீண்டநாள் கணக்கில் என்றால் ஆஃப்கானை பாகிஸ்தானுக்கு எதிராக கொம்பு சீவிவிட்டு அங்கிருந்து இஸ்லாமாபாதிற்கு நிரந்தர தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் பெரும் தொல்லை.

சேக்காளி said...

ஒருவேளை ஆட்சியமைத்த நான்காண்டு முடிவில் ஒரண்டைய இழுக்கலாம். அப்படி யுத்தம் வந்தால் இந்தியாவை ஆளும் அம்பானி,அதானிகளுக்கு நஷ்டம். ஆகவே சண்டையெல்லாம் வராது.
எனவே வழக்கம் போல் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் எதிரெதிரே அமர்ந்து சியர்ஸ் சொல்லி மாலை வேளையை தொடங்குவார்கள். அவ்வப்போது வீரர்கள் மட்டும் எதிரிகளின்(தீவிரவாதிகள் உட்பட) தாக்குதலில் மரணமடைந்து நம்மிடமிருக்கும் தேசிய பற்றை அணையாமல் காப்பார்கள்.