Sep 21, 2016

கணவன் மனைவி

நேற்று அலுவலகத்திற்கு வரும் போது கோரமங்களாவில் ஒரு சண்டை. அவன் பைக்கில் அமர்ந்தபடி இருந்தான். மனைவி- மனைவியாகத்தான் இருக்க வேண்டும். நடைபாதையில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தாள். தூரத்திலிருந்தே கவனித்துவிட்டேன். அருகாமையில் நெருங்க நெருங்க அவளது உடல்மொழியின் வேகம் கூடிக் கொண்டேயிருந்தது. எதிர்பாராத தருணத்தில் வண்டியில் அமர்ந்திருந்தவன் பளாரென்று அறையவும் தடுமாறி வண்டி கீழே விழுந்தது. வண்டி விழவும்தான் தெரிந்தது அவனுக்கு முன்பாக ஒரு குட்டிப் பெண் அமர்ந்திருந்தாள். ஐந்து வயது இருக்கும். அம்மாவுக்கும் அப்பாவுக்குமான சண்டை, வண்டியில் இருந்து விழுந்த பயம் எல்லாமும் சேர அந்தக் குழந்தை அழத் தொடங்கியது. ஆட்டோக்காரர் ஒருவர் அருகில் வந்து பைக்கைத் தூக்கிவிட்டார். சாலையைப் பெருக்கிக் கொண்டிருந்த மாநகராட்சிப் பணிப்பெண்ணும் அருகில் வர சுற்றிலும் மூன்று நான்கு பேர் கூடிவிட்டார்கள். கணவன் மனைவி இருவருமே படித்தவர்கள். மடிக்கணினியை எடுத்துக் கொண்டு வேலைக்குச் செல்கிறவர்கள். சாலையில் அடித்துக் கொள்கிறார்கள்.

சங்கடமாக இருந்தது. அவர்கள் எப்படியோ போகட்டும். அந்தக் குழந்தைதான் பரிதாபம். 

வீடாக இருந்தாலும் சரி வெளியிடமாக இருந்தாலும் சரி- குழந்தையின் கண் முன்னால் சண்டையிடக் கூடாது என்பதில் கணவனும் மனைவியும் உறுதியாக இருக்க வேண்டும் என்பார்கள். அம்மாவும் அப்பாவும் சண்டையிட்டுக் கொள்வதை எட்டு மாதக் குழந்தை கூட புரிந்து கொள்ளும். பேசவே பழகியிருக்காத ஒரு குழந்தையின் முன்னால் நின்று அம்மாவையோ அல்லது அப்பாவையோ திட்டுவது போன்ற பாவனையைச் செய்து பார்க்கலாம். குழந்தையின் முகம் கோணுவதைக் காண முடியும். மூன்று வயதுக் குழந்தை உறங்குவதாக நினைத்துக் கொண்டு அதன் அருகாமையில் சண்டையிட்டால் அது நம்முடைய அறியாமை என்று அர்த்தம். உறக்கத்தில் இருந்தாலும் நம்மைச் சுற்றி என்னவோ வித்தியாசமாக நடக்கிறது என்பதை அந்தக் குழந்தையால் உணர முடியும். 

அம்மாவை அப்பாவோ அல்லது அப்பாவை அம்மாவோ நேரடியாக அல்லது மறைமுகமாகவோ தாக்குகிற சொற்களைப் பயன்படுத்துவது அந்தக் குழந்தையின் மனதில் நிச்சயமாக வடுக்களை உருவாக்கும். இந்த வடுக்கள் குழந்தையின் எதிர்கால வாழ்வில் எதிர்மறையான தாக்கங்களை உண்டாக்கும் வலிமை மிக்கவை. Emotionally damaging என்கிறார்கள். தனது பெற்றோரின் அரவணைப்பில் பாதுகாப்பாக இருப்பதான குழந்தையின் அடிப்படையான நம்பிக்கையைக் காலி செய்கிறோம் என்று அர்த்தம். குழந்தையின் மனதில் இனம்புரியாத பதற்றத்தை உருவாக்குவதற்கான முதல்படி இது.

கணவனும் மனைவியும் சண்டையே இல்லாமல் வாழ்வதற்கு சாத்தியமில்லைதான். ஆனால் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? 

2008 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் இருந்த போது நிறைய நேர அவகாசம் கிடைத்தது. வாராவாரம் ஊருக்குச் செல்கிற வழக்கமுமில்லை. அப்பொழுது ‘குடும்ப ஆலோசகருக்கான பயிற்சி’ என்று அமீர்பேட்டில் விளம்பரம் பார்த்தேன். பொழுது போகட்டும் என்று சேர்ந்ததைச் சொன்ன போது எஸ்.வி.ராமகிருஷ்ணன் தாறுமாறாகச் சிரித்தார். ‘உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை’ என்றார். ஆனால் நான் கேட்கவில்லை. வகுப்பில் இருந்தவர்கள் அத்தனை பேரும் குடும்ப நல ஆலோசனை என்பதைத் தொழிலாகச் செய்து கொண்டிருந்தவர்கள். எனக்கு அப்பொழுது திருமணமும் ஆகியிருக்கவில்லை. பொடியன்.

சில விவகாரங்களை அவர்கள் விளக்கியது கிளுகிளுப்பாக இருந்தது. சண்டைகளைப் பற்றிப் பேசும் போது ‘புருஷன் பொண்டாட்டிக்குள்ள இப்படியெல்லாம் கூட சண்டை வருமா?’ என்று பயந்ததுதான் மிச்சம். நான்கு சனி, ஞாயிறுகள் பயிற்சி வகுப்புகள் நடந்தன. ஒவ்வொரு வாரமும் புதுப்புது ஆட்கள் வந்து பேசினார்கள். அதே வருடம்தான் எனக்குத் திருமணமும் நிச்சயமானது.

‘புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை சகஜம்’ என்பது க்ளிஷேவான வாக்கியம்தான். சண்டை வராமல் இருக்க வாய்ப்பேயில்லை. ஆனால் எப்பொழுது சண்டை வரும், சண்டை வரும் போது எப்படிப் பம்முவது என்று புரிந்து கொள்கிறவர்கள் சுமூகமாக நழுவித் தப்பித்துவிடுகிறார்கள். 

கணவன் மனைவிக்கிடையிலான சண்டையில் தினமும் சண்டை அல்லது எதற்கெடுத்தாலும் சண்டை என்பது ஒரு வகை. எப்பொழுதாவது சண்டை வரும் ஆனால் வருகிற சண்டையானது கர்ண கொடூரமானது என்பது இரண்டாம் வகை. இரண்டாவது வகைதான் மிகச் சிக்கலானது. அபாயகரமானதும் கூட. அபாயம் என்றால் அடிதடி என்ற அர்த்தத்தில் இல்லை. உறவு முறிவு வரைக்கும் இழுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் நிறைந்தது.

நான்கு பயிற்சியாளர்களில் இரண்டாவது வகை சண்டை குறித்துப் பேசிய பயிற்சியாளரின் வார்த்தைகள் இன்னமும் நினைவில் இருக்கின்றன. மிகப்பெரிய அளவில் வெடிக்கக் கூடிய சண்டைகளை சற்றே உற்று கவனித்தால் இரண்டு விஷயங்கள் பிடிபடும். 1) Pattern மற்றொன்று 2) Triggering point.

Pattern என்பது எளிதாகக் தீர்மானிக்கக் கூடியது. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தினம் அல்லது வாரத்தில் சண்டை வரும். இதுவொன்றும் சூனியமில்லை. ஹார்மோன் மாற்றங்கள்தான் காரணம். ஆணுக்கும் உண்டு. பெண்ணுக்கும் உண்டு. மருத்துவர்கள் யாரேனும் உறுதிப்படுத்தலாம். மாதவிடாய் சுழற்சி பருவத்தில் இத்தனாம் நாள் என்று ஒரு கணக்கு. குறித்து வைத்துக் கொண்டால் அடுத்த மாதமும் கிட்டத்தட்ட அதே நாளில் சண்டை வந்தால் மூன்றாம் மாதம் தயாராகிக் கொள்ளலாம். ‘அந்தச் சமயத்தில் பேசாமல் விட்டாலும் கூட விட மாட்டேங்குறா சார்...பேசு பேசுன்னு சொல்லி சண்டை போடுறா’ என்று கூட புகார்கள் வரும். அதற்குத்தான் இரண்டாவது விஷயமான - Triggering point. கடந்த சண்டை எதற்காக வந்தது, அதற்கு முந்தின சண்டை எதற்காக வந்தது என்பதை சற்றே மனதில் வைத்திருந்தால் போதும். பெரும்பாலும் அவை சில்லியான காரணங்களாகத்தான் இருக்கும். ஆனால் அவையெல்லாம் நம் ஆளுக்குப் பிடிக்காது என்பதைப் புரிந்து வைத்திருந்தாலே போதும். சமாளித்துவிடலாம்.

‘அவளுக்கு பிடிக்காதுன்னா நான் செய்யக் கூடாதா? அப்படித்தான் செய்வேன்’ என்கிற ஈகோ இருந்தால் அதுதான் சிக்கலின் அடிநாதம். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்க்கையே சமரசங்களால்தான் ஆகியிருக்கிறது. தெருவில், அலுவலகத்தில், சொந்தபந்தத்தில் என்று எவரவரிடமோ சமரசம் செய்து கொள்கிறோம். நமக்காக நம்மோடு வாழ்கிறவள்/ன்- அவருக்காக சமரசம் செய்து கொள்ளாமல் எந்த ஈகோ தடுக்கிறது? 

இரண்டாம் வகைச் சண்டையானது நாளாக நாளாக முதல் வகைச் சண்டைக்கும் வித்திடும். கடும் சண்டைகளினால் கணவன் மீது மனைவிக்கும் மனைவி மீது கணவனுக்கும் வகைப்படுத்தவியலாத வன்மமும் கோபமும் உண்டாகிவிட்டால் பிறகு எதற்கெடுத்தாலும் சண்டை என்கிற முதலாம் வகைச் சண்டை சகஜமாகிவிடும்.

இரு அந்தரங்கமான உயிர்களுக்கு இடையிலான பிரச்சினைகளை பொதுமொத்தமாக எளிமைப்படுத்திவிட முடியாதுதான். அடுத்தவர்களால் அவிழ்க்கவே முடியாத சிக்கல்களாகக் கூட இருக்கலாம். ஆனால் குடும்பம் என்பதே மிக எளிமையான மனநிலை சூத்திரங்களால்தான் கட்டமைக்கப்படுகிறது. எந்தச் சூத்திரத்திற்கு என்ன விடை வரும் என்பது போல எந்த வினைகளுக்கு எவ்விதமான எதிர்வினைகள் என்று கணித்து வைத்து பிரச்சினைகளுக்குரியவர்கள் மனது வைத்தால் சிக்கல்களை அவிழ்த்துவிட முடியும். ஒரே சிரமம்- மனம் வைத்து, ஈகோவை ஒழித்து, நேரம் ஒதுக்கி, நிகழ்வுகளைக் கவனித்து, யோசனை செய்து காய் நகர்த்த வேண்டும்.

பெரும்பாலான குடும்பச் சண்டைகளில் சொற்கள்தான் ஆயுதமாகின்றன. நவீன உலகில் மனித மனம் குரூரரமானது. எந்தச் சொல் எதிராளியின் மனதை நைந்து போகச் செய்யும் என்பதைத் தெரிந்து கொண்டு அந்தச் சொல்லைத்தான் ஆயுதமாக்குகிறது. அறிமுகமேயில்லாத சக மனிதர்களிடமே இந்த யுக்தியைத்தான் பயன்படுத்துவோம். கணவன் மனைவியிடம் சொல்லவா வேண்டும்? கூடவே இருக்கிற ஜீவன். எந்தச் சொல் அவரைத் தாக்கும் என்பது தெரியாதா என்ன? தருணம் பார்த்து இறக்குவதுதான் எல்லாவற்றுக்கும் முதல் சுழியைப் போடுகிறது. நமக்கு எந்தவிதத்திலும் சளைக்காத எதிராளிக்கும் நம்மைத் தாக்கும் ஆயுதம் எதுவென்று தெரியும்- குறி பார்த்து இறக்குவார்.

தீராத கதையாகத் தொடர்கிறது.  

5 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//மனம் வைத்து, ஈகோவை ஒழித்து, நேரம் ஒதுக்கி, நிகழ்வுகளைக் கவனித்து, யோசனை செய்து காய் நகர்த்த வேண்டும்//
மனம் வைத்தாலே போதும். மற்றவை தானாக அமையும்.ஆனால் மனம் வைப்பது ?

Jaypon , Canada said...

//நமக்கு எந்தவிதத்திலும் சளைக்காத எதிராளிக்கும் நம்மைத் தாக்கும் ஆயுதம் எதுவென்று தெரியும்- குறி பார்த்து இறக்குவார்.// அதானே..

Thangavel Manickam said...

தன் இன்பம், தனித்தன்மை, பெண் விடுதலை போன்ற அக்கப்போர்கள் தான் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம். வாழ்க்கை என்பது பிறருக்காக வாழ்வது. மனிதன் தனக்காக தனக்கு மட்டுமே வாழ முடியாத பிராணி. அதை என்று அவன் புரிந்து கொள்கின்றானோ தெரியவில்லை.

vijayan said...

ரொம்பநாளைக்கு முன் படித்த ஜெயந்தனின் கதை ஒன்றில் கலப்பு மணம் செய்த புருஷன் பொண்டாட்டி க்குள் சண்டை வரும்போது மனைவி கணவனுக்கு எதை சொன்னால் உக்கிரமாவானோ அதை தவறாமல் சொல்லி உசுப்பி விடுவாள் ,அதாவது அவன் சாதி பேரை சொல்லி கூப்பிடுவது.vijayankn.

Unknown said...
This comment has been removed by the author.