Sep 1, 2016

வேட்டை விலங்குகள்

ஆரம்பத்தில் காதலுக்காக பெண்கள் தாக்கப்படுகிற செய்திகளைக் கேள்விப்பட்ட போது பெரியதாக ஒன்றும் தெரியவில்லை. பத்தோடு பதினொன்று என்ற செய்தியாகத்தான் தெரிந்தது. கடந்த சில நாட்களாக பயம் படர்கிறது. சர்வசாதாரணமாக வெட்டுகிறார்கள். உருட்டுக்கட்டையால் அடிக்கிறார்கள். தீயை வைத்துக் கொளுத்துகிறார்கள். நேற்று வரை சாதாரண மாணவனாகச் சுற்றிக் கொண்டிருந்தவன் திடீரென்று வன்முறையாளனாக, கொலைகாரனாக, காதல் வெறியனாக உருவமெடுக்கிறான். இந்த ஊரைச் சார்ந்த இன்னாரின் மகன் என்று செய்தித்தாள்கள் பக்கம் பக்கமாக எழுதுகின்றன. ஒரு பெண்ணின் வாழ்வை முடித்து அவளது குடும்பத்தைத் திக்குத் தெரியாமல் நிறுத்தி தனது வாழ்க்கையை இருளில் புதைத்து தம் குடும்பத்தை விக்கித்துப் போகச் செய்கிறார்கள் இந்த விடலைகள்.

படிக்காதவர்கள், பாமரர்கள் என்றெல்லாம் சொல்லித் தப்பித்துவிட முடியாது. கவனித்துப் பார்த்தால் குறைந்தபட்சம் டிப்ளமோ படித்தவர்களாக இருக்கிறார்கள். படித்த மாணவர்கள்தான். ‘எனக்கு கிடைக்கலைன்னா அவ யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என்ற வெறியேற்றிக் கொள்கிறார்கள். கொல்கிறார்கள். காதல் என்பது உணர்வுப்பூர்வமானது என்கிற சூழலை வெகு தூரம் தாண்டி வந்துவிட்டோம் போலிருக்கிறது. தனது ஹீரோயிசத்தை பின்னிப் பிணைத்துக் கொள்கிறார்கள். தான் காதலிக்கும் பெண் சக மனுஷி என்கிற எண்ணமெல்லாம் எதுவுமில்லை. காமத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக பெண் விலங்குகளை வேட்டையாடுகிற ஆண் விலங்குகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். வனங்களில் முரட்டுத்தனமாக வேட்டையாடும் ஆண் விலங்கு கூட தனக்கான இணை கிடைக்கவில்லை என்பதற்காகக் கொன்றுவிட்டுப் போவதில்லை. ஆனால் இவர்கள் கொல்கிறார்கள். இதுவொரு ஈகோ. அவளை வென்றெடுக்க வேண்டும் என்கிற அபத்தமான ஈகோ.

காமத்தை அல்லது காதலை அடைவதற்காக பெண்களைக் கொல்லுகிற ஆண்களைப் பற்றிய செய்திகளை தென்னிந்திய அளவில் தேடிப்பார்த்தாலும் தமிழகத்தின் செய்திகள்தான் அதிகமாகத் தட்டுப்படுகிறது. எங்கேயிருந்து இந்தப் பிரச்சினை வேரூன்றியிருக்கிறது? ஏன் இப்படியொரு மனநிலை வாய்க்கிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் பிரச்சினை ஆழமானதாகிக் கொண்டிருக்கிறது என்பதை வேண்டுமானால் புரிந்து கொள்ள முடிகிறது. 

சற்றே சாவகாசமாகத்தான் இருக்கிறோம். ஏதேதோ பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் அல்லது யோசிக்கும் நாம் இந்த விவகாரத்தை தினத்தந்தியின் மூன்றாம் பக்கச் செய்தியாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பக்கத்து ஊரில் நடக்கிறது; பக்கத்து வீதியில் நடக்கிறது; பக்கத்து வீட்டில் நடக்கிறது என்று நம் வீட்டுக்குள் நடக்காத வரைக்கும் ‘நமக்கென்ன வந்தது’ என்று எளிமையாக விட்டுவிட வேண்டியதில்லை. இந்தப் போக்கின் வீரியத்தையும் வேகத்தையும் பார்க்கும் போது யாருடைய வீட்டிலிருந்து வேண்டுமானாலும் யாராவது கத்தியைத் தூக்கலாம் என்றுதான் தெரிகிறது. யாருடைய வீட்டில் வேண்டுமானாலும் ஒரு பெண் வெட்டுப்படலாம் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரச்சினை எங்கேயிருக்கிறது? தான் விரும்பும் பெண் தன்னைத்தான் காதலிக்க வேண்டும் என்கிற முரட்டுத்தனம் எங்கேயிருந்து வருகிறது? தனக்குக் கிடைக்காதவள் யாருக்குமே கிடைக்கக் கூடாது என்கிற வசனம் எந்தத் தருணத்திலிருந்து வடிவம் எடுக்கிறது?

தொழில்நுட்பம், குடி, சமூகம் என்று எல்லாவற்றையும் நோக்கி கை நீட்டலாம்தான். ஆனால் அவற்றையெல்லாம் உடனடியாகத் திருத்துவது சாத்தியமில்லை. நமக்கேற்றபடி வளைக்கவும் முடியாது. ஆனால் உடனடியாகச் செய்ய வேண்டியதென்றால் Human values என்ற அறத்தைத் திரும்பத் திரும்ப போதிப்பதுதான். எல்லா இடங்களிலும் அதை அழித்து நாசமாக்கிக் கொண்டிருக்கிறோம். போக்குவரத்து நெரிசலில் எதிராளியை நோக்கி கடும் வாசகத்தை உதிர்ப்பதில் தொடங்கி பேருந்தின் பக்கத்து இருக்கையில் அமர்கிறவனுக்காக துளி நகர்ந்து இடம் கொடுப்பதை மறுதலிப்பது வரை அத்தனை இடங்களிலும் ‘தான்’ என்கிற எண்ணம் ஊடுருவிக் கிடக்கிறது. எவனுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் ‘தமக்கான செளகரியம்’ என்பது முக்கியத்துவம் பெறுகிறது. ‘தன்னுடைய வெற்றி’ என்பது மட்டுமே ஈகோவாக மாறி அழுத்தம் பெறுகிறது. எல்லாவற்றையும் சேர்த்துத்தான் இத்தகைய சமூகப்பிரச்சினைகளை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 

சாதி, அந்தஸ்து, தனிமனித வசதி வாய்ப்புகள் ஒரு பக்கம் என்றாலும் நம்முடைய அறவுணர்வுகள், தனிமனித ஒழுக்கங்கள், சகமனிதனை மதிக்கும் பாங்கு என எல்லாவற்றையும் ஏறி மிதிக்கும் ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எப்படி புரிய வைப்பது இந்த விடலைகளுக்கு? நம்முடைய அபிலாஷைகளையும் ஆசைகளையும் சொல்வதற்கு எவ்வளவு உரிமைகள் இருக்கிறதோ அதை ஏற்றுக் கொள்வதற்கும் மறுப்பதற்கும் நம்முடைய உரிமையை விடவும் துளி கூடுதலான உரிமை அந்தப் பெண்ணுக்கு இருக்கிறது என்பதை ஏதாவதொரு விதத்தில் உணர்த்தியே தீர வேண்டும். நமக்குக் கிடைக்கவில்லையென்றால் அதை அழிக்க வேண்டும் என்கிற மனநிலை அவமானகரமானது என்று வற்புறுத்த வேண்டும்.

இதைச் சொல்வதால் அத்தனை பிரச்சினைகளும் ஆண்களிடம்தான் என்று அர்த்தமில்லை. தன்னோடு பழகும் ஆணொருவனைக் காதலிப்பதாகச் சொல்லிவிட்டு அவனை உருக்கும்படியான செய்திகளை எல்லாம் அனுப்பிவிட்டு திடீரென்று ஏதாவதொரு காரணத்திற்காக அவனை நிராகரிக்கும் போது கடுமையான சொற்களையும் உடல்மொழியையும் பயன்படுத்தி அவனைக் காயமடையச் செய்துவிட்டு நகர்ந்து செல்கிற பெண்களையும் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஒரு ஆணிடம் நாம் சொல்லித் தருகிற அதே Human values, ethics என்பதையெல்லாம் பெண்களுக்கும்தான் சொல்லித் தர வேண்டியிருக்கிறது.

காதலை மிகப் புனிதப்படுத்தி பிறகு அதனை வன்முறையோடு பிணைத்து சமீபமாக ‘அவளை அடைவதுதான் ஆண்மையின் வெற்றி’ என்ற ஈகோவோடு இணைத்து எல்லாவற்றையும் சிக்கலாக்கி வைத்திருக்கிறோம். காதல் என்பதே திருமணத்தில்தான் முடிய வேண்டும் என்கிற வலுக்கட்டாயம் எதுவுமில்லை. காதல் புரிதலுக்கான வழிமுறை. இருவருக்கும் ஒத்து வராத சமயத்தில் மனமொத்து பிரிவதில் எந்தச் சிக்கலுமில்லை; எந்த ஈகோவுமில்லை என்பதைச் சொல்லித் தர வேண்டியிருக்கிறது. அப்படி நிகழும் பிரிதலுக்கான தண்டனையெல்லாம் அவசியமில்லை. அவரவருக்கான வானம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது என்பதை விடலைகள் புரிந்து கொள்ளாத வரைக்கும் எதுவுமே சாத்தியமில்லை.

இந்தப் புரிதல்களும் சொல்லித்தருவதும் ‘நம் ஒவ்வொருவருடைய வீட்டிலிருந்தும் தொடங்க வேண்டும்’ என்று ட்ராமாட்டிக்காக முடிக்க முடியாது. அரசாங்கம் உதவ வேண்டும். பள்ளிகள் செயல்படுத்த வேண்டும். ஊடகங்கள் தமக்கான பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டும். சீரியல்காரர்கள் இதையே வாரம் முழுக்கவும் ஓட்டிக் கொண்டிருக்கக் கூடாது. சினிமா சற்றேனும் நெகிழ வேண்டும். எவ்வளவோ இருக்கிறது. 

எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. இந்தப் போக்கின் வேகத்தை எவ்வளவு கட்டுப்படுத்த முடியும் என்று தெரியவில்லை. ஆனால் இப்படியே விட்டு வைக்கவும் முடியாது. கண்களை மூடி சில வினாடிகள் யோசிக்கும் போது பயமாகத்தான் இருக்கிறது. 

9 எதிர் சப்தங்கள்:

பாலு said...

6 வது பத்தி உண்மையைச் சொல்கிறது. நீங்கள் இன்னும் அடி நாதத்தைப் பிடிப்பீர்கள் என எதிர்பார்த்தேன்.பெரியார் பிறந்த மண் அண்ணாச்சி இது.. இன்னும் நீங்களும் நானும் கர்னாடகாவில் குப்பை கொட்டிக் கொண்டிருப்பதில் வியப்பேதும் உள்ளதா? பிழைப்பு ஒன்றுக்காக மட்டும் நான் இங்கு இல்லை.

Unknown said...

காலை செய்தித்தாளில் படித்தவுடன் மனம் கனத்தது.நம் இளம் தலைமுறையினர் இவ்வளவு இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டும், சிக்கிக்கொண்டுமிருக்கிறார்கள் என்று நினைக்கையில் மனம் பதறுகிறது.இந்த பயம் நம் தங்கைகளுக்கோ அவர்கள் தோழிகளுக்கோ நம் தலைமுறையினரால் ஒப்படைக்கப்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் மனதை உரசிக்கொண்டேயிரிக்கிறது.ஆனால்,என்ன செய்வது என்று தெரியவில்லை. பதிவிற்கு நன்றி.

Suresh said...

//எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. இந்தப் போக்கின் வேகத்தை எவ்வளவு கட்டுப்படுத்த முடியும் என்று தெரியவில்லை. ஆனால் இப்படியே விட்டு வைக்கவும் முடியாது. கண்களை மூடி சில வினாடிகள் யோசிக்கும் போது பயமாகத்தான் இருக்கிறது.///

Balaji said...

Ver true.I am reading this post from UK. It is totally opposite to India with regard to the way we behave and treat people in public places. People are kind and respectful to others.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

HUMAN VALUES கற்பித்து வருவதில்லை. காலம் காலமாக அறநூல்கள் மகான்கள் வழியாக் அறம் கற்பிக்கப் பட்டுத் தான் வருகிறது.அனால்ந பலன்ம் பெரிதாக இல்லை. நடத்தைகள் மூலமே குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். சாலை விதிகளை கடைபிடிக்கும் பெற்றோருடன் தொடர்ந்து செல்பவன் நிச்சயம் தன வாழ்விலும் பின்பற்றுவான். சிகரெட் பிடிக்க மது அருந்த எந்த பள்ளியிலும் கற்றுக் கொடுபபதில்லை சமூகத்தில் இருந்துதான் அவற்றை கற்றுக் கொள்கிறான்.

vijayan said...

குழந்தைகளுக்கு முன் மாதிரியாக பெற்றோர்கள் வாழ்ந்து காட்டவேண்டும்,பிராய்லர் கோழி பள்ளிக்கூடங்களை தவிர்த்து,வாழ்க்கை என்பது மார்க்கும்,உத்தியோகம் மட்டுமல்ல என்று புரிய வைக்கவேண்டும் (பெரியவர்களுக்கும்தான்)knvijayan.

சேக்காளி said...

பொங்கும் அனைவரும் சிக்னல்களில் பச்சை விளக்கு எரியும் வரை காத்திருந்து அப்புறம் தான் நகர வேண்டும் என்பதிலிருந்து துவங்கலாம்.

Dev said...

வக்கிரம் பிடித்த மைண்ட் மட்டும் தான் இப்படி சக மனுஷியை கொலை செய்ய துணியும். அப்பா, அம்மா பையன்களை தங்கள் கஷ்டம் சொல்லி வளர்க்க வேண்டும்.

கல்வி முறை சரி இல்லை என்று புலம்புவர்களுக்கு: காலேஜ் வந்து விட்டாலே அவனவன் அவனாகவே படிக்க வேண்டும். வெளி உலகிற்கு தயாராகவேண்டும். தவறில்லாமல் English பேசினால் நான் வேலை தருகிறேன். இந்த வயதில் படிக்காமல் வேறென்ன மயிறு வேண்டி கிடக்கு வக்கிரம் பிடிச்ச மனசுக்கு. ஒரு போகஸ் கிடையாது. ஒரு aim கிடையாது. ஒரு புண்ணாகும் kidayathu. அப்பறம் இதையெல்லாம் ஏன்டா காதல்னு சொல்லி அந்த புனிதத்தை கெடுக்கிறீங்க.

நான் மரண தண்டனைக்கு எதிரானவன். ஆனால் போரில் கொல்லப்படுவதற்கு ஒரு வருத்தம் தான். நாட்டுக்காக போடும் சண்டையில் நாட்டு மக்களை காக்க வேண்டி உள்ளது . அதே மாதிரி நினைத்துக்கொண்டு ரோட்டில் ஓடவிட்டு....

தயவு செய்து இவங்களை மிருகங்களோடு ஒப்பிட vendam. மிருகங்கள் மனிதர்களை போல கேவலமாக நடந்து கொள்ளாது

Ravi said...

I strongly believe that modern day movies, which project the heroes as jobless drunkards but decent girls falling for them, as the main cause along with liquor. Especially Dhanush and Arya kind of movies.