Sep 22, 2016

அப்பனைக் கொல்லுகிற சதி

கூடப் படித்தவனின் கதை இது. பெயரைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் ஏதாவது பெயரை வைத்துத்தானே கதையை நகர்த்த முடியும். பழனியப்பன் என்று வைத்துக் கொள்ளலாம். கன லோலாயி. ஆறாம் வகுப்பில் கொண்டு வந்து எங்கள் பள்ளியில் அமுக்கினார்கள். அ,ஆ,இ,ஈ கூடத் தெரியாது. ஐந்தாம் வகுப்பு வரைக்கும் ஆல் பாஸ், ஆல் பாஸ் என்று சொல்லிச் சொல்லியே கொண்டு வந்து ஆறாம் வகுப்பில் தள்ளிவிட்டார்கள். இவனை சேர்த்துக் கொண்டு சுசீலா டீச்சரும், கண்ணம்மா டீச்சரும் அழாத குறை. வகை தொகையில்லாமல் சாத்தக் கூடிய வெங்கடாசல வாத்தியார் கூட ஒரு கட்டத்தில் மாரடித்து அழுகிற சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டார்.

அத்தனை கிரகங்களும் நீச்சத்தில் இருந்த ஒரு தினத்தில் வெங்கடாச்சல வாத்தியார் ‘யாருக்காச்சும் ஆறறிவு என்னன்னு தெரியுமா?’ என்றார். அது பாடத்தில் இல்லாத கேள்விதான். ஆனால் தொல்காப்பியரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு ஒவ்வொரு அறிவையும் பஞ்ச பூதத்தோடு தொடர்பு படுத்தி முதல் அறிவு என்பது தொடு அறிவு. நிலத்தோடு தொடர்பு கொண்டது. செடிகளுக்கு ஓர் அறிவுதான் உண்டு. அவை மண்ணோடு மட்டும் நின்று கொள்கின்றன. இரண்டாவது அறிவு நீர். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்கிறது. புழுக்களுக்கு ஈரறிவு உண்டு. அதனால்தான் அவை சுவை தேடி நகர்கின்றன. சுவையறிதல் (நாக்கு) இரண்டாம் அறிவு. மூன்றாவது அறிவு காற்று. நுகரும் அறிவு. வண்டுகளுக்கு இருப்பது என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது பெரிதாகப் புரியவில்லை என்றாலும் கேட்டுக் கொண்டிருந்தோம். சொல்லி முடித்துவிட்டு சில வினாடிகள் இடைவெளி விட்டார். அந்த இடைவெளியில் பழனி ஒரு கேள்வி கேட்டான் பாருங்கள். வாத்தியார் விதிர்விதிர்த்துப் போய்விட்டார்.

‘கண்ணு, காது, மூக்கு, தோல், நாக்கு எல்லாம் சொன்னீங்க..ஜிண்டுல இருக்கிறது என்ன அறிவு சார்?’ என்றான். 

அவன் திமிருக்காகக் கேட்டானா, உண்மையிலேயே கேட்டானா என்றெல்லாம் புரியவில்லை. வகுப்பறையில் அத்தனை பேரும் பையன்கள்தான். பாய்ஸ் ஸ்கூல். அவனவன் தலையைக் குனிந்து கொண்டு சிரிக்கிறான். வாத்தியாருக்கு வந்த கோபத்தை பார்த்திருக்க வேண்டும். வழக்கமாக பையன்களை தனது இடத்துக்கு அழைத்து பூசை போடும் வாத்தியார் அன்றைய தினம் மட்டும் குடுகுடுவென்று ஓடி அவன் இடத்துக்கு வந்துவிட்டார். 

‘ஏண்டா மொளச்சு மூணு எல உடுல...அதுக்குள்ள என்ரா கேள்வி கேக்குற?’ என்று பொங்கல் வைத்துப் படையல் போட்டார். பூசையை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டு சிரித்துக் கொண்டே அமர்ந்தான். அடி வாங்கிவிட்டு ‘வலிக்கவே இல்லையே’ என்று காட்டிக் கொள்வதில் அவனுக்கு அலாதி இன்பம். உடலில் எவ்வளவோ உறுப்புகள் இருக்கின்றன. கை, கால், வயிறுக்கு எல்லாம் என்ன அறிவு என்று கேட்டிருக்கலாம். அது ஏன் ஜிண்டுக்கு என்ன அறிவு என்று கேட்டான் என்று மட்டும் இன்றுவரை புரியவில்லை. அநேகமாக வாத்தியார் தொல்காப்பியரின் அந்தப் பாடலையே கை விட்டிருக்கக் கூடும்.

இப்படியான லோலாயம் பிடித்த கேள்விகளைத்தான் கேட்பானே தவிர படிப்பு மண்டையிலேயே ஏறவில்லை. அதைப் பற்றி அவன் அலட்டிக் கொண்டதுமில்லை. வீட்டுப்பாடத்தை படித்து வரவில்லையென்று கண்ணம்மா டீச்சர் அடித்த போது ‘எப்படி டீச்சர் படிக்கிறது? எங்கப்பன் ரெண்டாம் பொண்டாட்டி கட்டிட்டு வந்து ராத்திரி பூரா குசுகுசுன்னு பேசிட்டே இருக்கான்..தூங்கலைன்னா எட்டி உதைக்கிறான்’ என்றான். டீச்சருக்கு புரிந்துவிட்டது. அதன் பிறகு அவனைக் கேள்வி கேட்பதையே விட்டுவிட்டார். 

அதுதான் பழனியின் பிரச்சினை. அவனுக்கு அம்மா இல்லை. துரத்திவிட்டுவிட்டதாகச் சொல்வான். அப்பாவுக்கு மைனர் ஷோக்குதான். அப்பொழுது டிவிஎஸ் 50 வைத்திருப்பார். கருகருவென்று மீசை, படிய வாரிய தலை, தங்கச் சங்கிலி என்று வினுச்சக்ரவர்த்தியின் மினியேச்சர்.

பழனியும் நானும் மெல்ல நண்பர்களாகியிருந்தோம். அடிக்கடி ‘எங்கப்பனை கொன்னுடுவேன்’ என்பான். கிட்டத்தட்ட அதுதான் அவன் வாழ்வின் லட்சியமாக இருந்தது. 

‘எப்பட்றா கொல்லுவ?’ என்று கேட்டால் நகத்தைக் கடித்து வாயிற்படியில் வைத்துவிட்டு வந்திருப்பதாகவும் காலில் ஏறினால் செத்துவிடுவார் என்றும் சொல்வான். 

‘உங்கொப்பன் கட்டிட்டு வந்திருக்கிறவ கால்ல ஏறுச்சுன்னா?’ என்று கேட்டால் ‘அந்தக் கண்டாரோலி செத்தாலும் நல்லதுதான்’ என்பது அவன் முடிவாக இருந்தது.

அடுத்த நாள் சாவுச் செய்தியோடு வருவான் என்று எதிர்பார்த்து காத்திருந்ததுதான் மிச்சம். ‘இனி பத்து நாள் கழிச்சு கட்டைவிரல்ல நகம் பெருசா மொளச்சதுக்கு அப்புறம்தான் சாவடிக்க முடியும்’ என்பான். அவனைப் பொறுத்தவரைக்கும் நகம்தான் உலகிலேயே விஷம் தோய்ந்த ஆயுதம். யாரோ சொல்லியிருக்கிறார்கள். நம்பிக் கொண்டான். தன் தந்தையைக் கொல்லுகிற சதிக்கு அந்த ஆயுதத்தையே தொங்கிக் கொண்டிருந்தான்.

அந்த வயதில் அவனுக்கு அவ்வளவு அழுத்தம். அம்மா இல்லை. அப்பாவும் கவனிப்பதில்லை. ஒற்றையறை கொண்ட வீட்டில் அந்த மனிதர் செய்கிற அக்கிரமங்கள் என்று எல்லாவற்றையும் பொறுக்கமாட்டாமல் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறான். படிப்பு அவனுக்கு பெரிய விஷயமாகவே இல்லை. அது பெரிய விஷயம் என்று சொல்லவும் ஆட்கள் இல்லை. இப்பொழுது நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவன் பாவமாகவே காட்டிக் கொண்டதில்லை. எதைச் சொன்னாலும் அவன் சொல்லுகிற தொனியிலேயே சிரிப்பு வந்துவிடும். எல்லாவற்றையும் தன்னால் சமாளித்துவிட முடியும் என்று நம்பிக் கொண்டிருந்தான். 

‘ஊட்ல பெரிய மனுஷன் இருக்காறான்னு நினைக்கறானா? ஆன்னா ஊன்னா தூங்குடா தூங்குடான்னு ஒரே அலும்பு...நானும் கண்ணை மூடிட்டுத்தான் படுக்கிறேன்..தூக்கம் வருமா?’ என்றான். எனக்கு கிளுகிளுப்பாக இருக்கும். ‘ரெண்டு பேரும் என்னடா பண்ணுவாங்க?’ என்று கேட்கும் போதெல்லாம் ‘த்தூ..கருமம்’ என்று மட்டும் சொல்லி ஏமாற்றிவிடுகிறான் என்ற கடுப்பு இருந்தாலும் என்றைக்காவது ஒரு நாள் அவன் சொல்லிவிடுவான் என்கிற நப்பாசையில் அவனோடு தொடர்பில் இருந்தேன். 

அப்பனைக் கொன்றுவிட்டால் அவள் தனது வீட்டை விட்டு ஓடிவிடுவாள் என்றும் தன் அம்மாவைக் கண்டுபிடித்து அழைத்து வந்துவிட முடியும் என்கிற நம்பிக்கை அவனுக்கு ஆழமாக இருந்தது. எட்டாம் வகுப்பு வரைக்கும்தான் தொடர்பில் இருந்தான். அதன் பிறகு தலைமையாசிரியர் அவனது பெற்றோரை அழைத்து பழனிக்கு படிப்பே வருவதில்லை என்றும் ஒன்பதாம் வகுப்புக்கு அனுப்ப முடியாது என்றும் சொல்லிவிட்டார். ‘ஃபெயில் ஆனாத் தொலையுது’ என்றுதான் அவனது அப்பா சொல்லியிருக்கிறார். ஆனால் ஆசிரியர்கள் வற்புறுத்தி வேறு பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். 

தாராபுரம் பக்கத்தில் என்னவோ பள்ளி. விடுதியில் விட்டு அடி பிழிவார்கள் என்று சொன்னார்கள். அவன் கேட்கிற கேள்விக்கு பிழிவதோடு நில்லாமல் காயவும் போட்டிருக்கக் கூடும். அதன் பிறகு பழனியை பார்த்ததேயில்லை. அவனுடைய அப்பாவை மட்டும் அடிக்கடி பார்ப்பதுண்டு. பழனி இல்லாதது செளகரியமாகப் போய்விட்டது போலத் தெரிந்தது. இரண்டாவது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் மூவரும் டிவிஎஸ்50 இல் செல்லும் போது பார்த்திருக்கிறேன். எப்பொழுதாவது கடைகளில் பார்க்கும் போது ‘பழனி என்ன பண்ணுறான்’ என்று விசாரிப்பேன். அவன் தொடர்ந்து படித்துக் கொண்டேதான் இருந்தான். வீட்டுக்கு வருவதேயில்லை. விடுமுறைகளில் அவனுடைய மாமா வீட்டுக்குச் சென்றுவிடுவதாகச் சொன்னார். ஆசிரியர்கள் சொன்னது போல படிப்பை பாதியில் விட்டுவிடவில்லை. 

சமீபத்தில் பழனியின் அப்பாவைச் சந்தித்த போது  அவர் அப்படியேதான் இருந்தார். இன்னமும் டை அடிக்கிறார். மீசைய முறுக்கிவிட்டிருக்கிறார். டிவிஎஸ்ஸை விற்றுவிட்டு கியர் வண்டியொன்று வாங்கியிருக்கிறார். பழனி குறித்து விசாரித்த போது அவன் துபாயில் இருப்பதாகச் சொன்னார். அங்க என்ன வேலை என்று கேட்டேன். அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. ‘அவன் கூட பேச்சு வார்த்தை இல்ல தம்பி’ என்றார். பேசாமல் இருந்து கொள்வதுதான் இருவருக்கும் நல்லது என்று நினைத்துக் கொண்டேன். இந்நேரம் அவனுக்கு எதில் என்ன அறிவு என்றும் தெரிந்திருக்கும். நகமும் பெரிதாக வளர்ந்திருக்கும்.

தொல்காப்பியப் பாடல்...

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

5 எதிர் சப்தங்கள்:

NoName said...

/ அந்த வயதில் அவனுக்கு அவ்வளவு அழுத்தம். அம்மா இல்லை. அப்பாவும் கவனிப்பதில்லை. ஒற்றையறை கொண்ட வீட்டில் அந்த மனிதர் செய்கிற அக்கிரமங்கள் என்று எல்லாவற்றையும் பொறுக்கமாட்டாமல் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறான் /

Vedu :(

NoName said...

/ அந்த வயதில் அவனுக்கு அவ்வளவு அழுத்தம். அம்மா இல்லை. அப்பாவும் கவனிப்பதில்லை. ஒற்றையறை கொண்ட வீட்டில் அந்த மனிதர் செய்கிற அக்கிரமங்கள் என்று எல்லாவற்றையும் பொறுக்கமாட்டாமல் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறான். /
Vedu :(

ADMIN said...

பழனி கேட்ட கேள்விக்கு, மாணவர்களோடு நானும் சேர்ந்தே சிரித்தேன்.

சேக்காளி said...

//ராத்திரி பூரா குசுகுசுன்னு பேசிட்டே இருக்கான்..தூங்கலைன்னா எட்டி உதைக்கிறான்’ என்றான்//
நான் முன்பு ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்த "எப்படி சொல்லி புரிய வைப்பது" என்ற எனது கவிதைக்கு நிகரான ஒரு சம்பவம்.

Kannan said...

சே ... ஒரு நிஜ அறிவாளிய துபாய்க்கு விட்டு கொடுத்துட்டோமேண்ணே!