Sep 19, 2016

திறமை

வெகு நாட்களுக்கு முன்பாக ‘நாள் முழுவதும் உங்களுடன் சேர்ந்து பெங்களூரைச் சுற்ற வேண்டும்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். எனக்கு அவரை அறிமுகமில்லை. சரிப்பட்டு வராது என்று நினைத்துக் கொண்டு பதில் அனுப்பவேயில்லை. முன் பின் தெரியாதவருடன் ஏன் வேலை வெட்டியைக் கெடுத்துக் கொண்டு நாள் முழுவதும் சுற்ற வேண்டும் என்றுதான் நிராகரித்திருந்தேன். நேற்று எதேச்சையாகச் சந்தித்த போது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதுதான் இருக்கும். ராஜ் ருஃபாரோ. பெங்களூரில் சித்ரகலா பரிஷத்தில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறார்.


வெளிநாடு ஒன்றில் மருத்துவம் படிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம். இப்பொழுதெல்லாம் சீனாவில் மருத்துவம், உக்ரைனில் மருத்துவம் என்று தள்ளிவிடுவதற்காக பேண்ட் சர்ட் அணிந்த பெருச்சாளிகள் நிறையத் திரிகின்றன. வங்கியில் கடன் வாங்கிக் கொள்ளலாம், ஆயா கடையில் ஸ்காலர்ஷிப் வாங்கிவிடலாம் என்று அடித்துவிடுவார்கள். நம்பி சிக்கினால் அதோகதிதான். பல கல்லூரிகளுக்கு அங்கீகாரமே இருப்பதில்லை. நான்கைந்து லட்சத்தைக் கொண்டு போய் கட்டிவிட்டு மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தாறுமாறாகச் சிக்கிக் கொள்கிறார்கள். ராஜ் ருஃபாரோவை யாரோ ஒருவர் காப்பாற்றியிருக்கிறார். தப்பி வந்து சித்ரகலா பரிஷத்தில் எட்டிக் குதித்திருக்கிறார்.

மதுரைக்காரர். 

ஒருவனுக்கு எவ்வளவுதான் திறமை இருப்பினும் அவனது வெற்றி என்பது அவன் ஒருவனைச் சார்ந்தது மட்டுமில்லை. பெற்றவர்கள், ஆசிரியர்கள், சமூகம் என்று எல்லோரும்ம் சேர்ந்துதான் அவனை உயரத்தில் தூக்கி வைக்கிறார்கள் அல்லது கீழே தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். திறமையாளனுக்கு எல்லோருமே ஆதரவாக இருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது; அத்தனை பேரும் எதிராக நிற்பார்கள் என்றும் சொல்ல வேண்டியதில்லை. mixed. நல்லது கெட்டது தெரிந்து அதற்கேற்ப இலாவகமாக நடந்து உயரத்தை அடைகிறவர்களைத்தான் இந்த உலகம் வெற்றியாளனாகப் பார்க்கிறது. 

ராஜூவுடன் பேசும் போது பத்தோடு பதினொன்றுதான் என்று நினைத்துக் கொண்டேன். வீட்டிற்கு வந்து இணையத்தில் அவர் குறித்துத் தேடிய போதுதான் தெரிகிறது. ஏகப்பட்ட திறமைகளை கைவசம் வைத்திருக்கிறார். சரியான திசையில் செல்லும்பட்சத்தில் இன்னமும் பத்து வருடங்களில் மிகப்பெரிய உயரங்களைத் தொட்டுவிடுவார் என்று நம்பலாம்.

ராஜ்ருஃபாரோவின் அப்பா ஃபோட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கிறாராம். ‘உருப்படுற வழியைப் பாரு’ என்று சொல்லாமல் மகன் விரும்பும் பாடத்தைத் தேர்ந்தெடுக்க அனுமதித்திருக்கிறார். ஆசிரியர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள். 

நேற்று நடைபெற்ற பஞ்சுமிட்டாய் வெளியீட்டு நிகழ்வில் நிழற்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். நேரம் கிடைத்த போது பேசிக் கொண்டிருந்தோம்.

படங்கள் வரைகிறார். சிற்பங்கள் வடிக்கிறார். நிழற்படங்கள் எடுக்கிறார். வார இறுதிகளில் பெங்களூரின் இண்டு இடுக்குகளில் எல்லாம் சுற்றி வருகிறார். அதற்காகத்தான் எனனையும் அழைத்திருக்கிறார். நான்தான் குண்டக்க மண்டக்க நினைத்துக் கொண்டேன். இவையெல்லாம் தவிர இணையதளங்கள் வடிவமைத்துக் கொடுப்பதாகவும் சொன்னார். நிழற்படக் கருவியொன்றை கைவசம் வைத்திருக்கிறார். நிகழ்ச்சிகளுக்கு நிழற்படங்களும் எடுத்துத் தருகிறாராம். இதன் வழியாக சொற்ப வருமானமும் பார்க்கிறார். ‘வருமானம் பரவாயில்லையா?’ என்றால் தன்னுடைய செலவுகளைச் சமாளித்துக் கொள்ளுமளவிற்கு சம்பாதிப்பதாகச் சொன்னார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் தன் செலவுகளைத் தானே சமாளிப்பது எவ்வளவு பெரிய விஷயம்? - அதுவும் திறமையை மட்டுமே நம்பி.

வெகு துடிப்பாக இருக்கிறார். ராஜ் ருஃபாரோவின் திறமைகளில் ஒருவிதமான பக்குவத்தன்மை இருப்பதை உணர முடிந்தது. இரவில் வெகு நேரம் வரைக்கும் அவர் எடுத்த நிழற்படங்களையும், அவரது ஓவியங்களையும், வடிவமைப்புகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இணையதள வடிவமைப்பாளர், ஓவியர். நிழற்படக் கலைஞர், சிற்பி அல்லது ஒரு திறமையாளனை என ஏதாவதொரு காரணத்திற்காகத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஓவியம்:
வடிவமைப்பு:
சிற்பம்:


நிழற்படம்:


மின்னஞ்சல்: raaj301096@gmail.com

அலைபேசி: 8546820807 (கல்லூரி மாணவர் என்பதால் அலுவல் நேரத்தில் தொடர்பு கொள்ள வேண்டாம்)

4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//நல்லது கெட்டது தெரிந்து அதற்கேற்ப இலாவகமாக நடந்து உயரத்தை அடைகிறவர்களைத்தான் இந்த உலகம் வெற்றியாளனாகப் பார்க்கிறது.//

Muthu said...

அற்புதம். சந்தேகமே இல்லாமல் வெகு திறமையாளன்தான். பெரும் ஆளுமையாய் மலர வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு திறமையாளர் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

Adobe Certified Expert said...

அந்த இளைஞருக்கு வாழ்த்துக்கள்....