Sep 18, 2016

பஞ்சுமிட்டாய்

பெங்களூரில் குடும்பத்தோடு எந்த நிகழ்ச்சிக்கும் சென்றதில்லை. ‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக் குருவி’ என்ற இரண்டாவது கவிதைத் தொகுப்பைக் கூட இந்த ஊரில்தான் வெளியிட்டோம். ஆனால் குடும்பத்தை அழைத்துச் செல்ல வேண்டும் எனத் தோன்றியதில்லை. இன்று முதன் முறையாக குடும்பத்தோடு சென்றோம். வெகு தூரம். கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர். பெங்களூரு மாதிரியான ஊரைப் பொறுத்த வரையிலும் இருபது கிலோமீட்டர் என்பது வெகு தூரம்தான். ஞாயிற்றுக்கிழமையன்று கூட ஒரு மணி நேரம் பயணப்பட வேண்டியிருக்கிறது.

சுற்றிலும் காலிபிளவர் தோட்டம். நடுவில் ஒரு அடுக்ககத்தைக் கட்டி விற்றிருக்கிறார்கள். நடு பெங்களூருவுக்குள் விவசாயம் செய்கிறார்கள் என்பதே ஆச்சரியமாக இருந்தது. குடும்பத்தை நிகழ்ச்சியில் அமரச் சொல்லிவிட்டு காலிபிளவர் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தேன். 

ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு ரெட்டிகாருவிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு விஷயத்தைச் சொன்னார். அவருடைய உறவினர்களில் சிலர் குடும்ப நிகழ்ச்சிகளில் பேசிக் கொள்ளும் போது ‘நீக்கு எந்தா ஒஸ்துந்தி...நாக்கு நலபை’ ‘அயனுக்கு யாபை’ என்பார்களாம். ‘எனக்கு நாற்பது ‘அவருக்கு ஐம்பது’ என்று அர்த்தம். அவர்கள் பேசிக் கொள்வது நாற்பது லட்சங்கள். ஐம்பது லட்சங்கள். தங்கள் வாடகை வருமானத்தைப் பற்றி பேசிக் கொள்வார்களாம். ‘ஐம்பதாயிரம் ரூபாய் வாடகை வரும்படியாக பார்த்துக் கொண்டால் வாழ்க்கை செட்டில் ஆகிவிட்டது மாதிரி அர்த்தம்’ என்று நம்பிக் கொண்டிருக்கும் எனக்கு நாற்பது, ஐம்பது லட்சங்களை வாடகையாக வாங்குகிறார்கள் என்று கேள்விப்பட்டால் வாயடைக்காமல் என்ன செய்யும்?

அந்தக் காலத்தில் வொயிட் ஃபீல்ட் மாதிரியான இடங்களில் குடியேறியவர்கள் சில பல ஏக்கர்களை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். மென்பொருள் துறை விரிவடைய விரிவடைய பெரும் கட்டிட அதிபதிகள் இவர்களிடமிருந்து இடங்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். விற்றவர்களுக்கு பெரிய பலனில்லை. விவரமானவர்கள் இடங்களைக் குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள். குத்தகை இடங்களில் கட்டிட அதிபதிகள் அலுவலகங்களைக் கட்டி வாடகைக்கு விட்டுவிடுவார்கள். மூன்றில் ஒரு பங்கு அல்லது நான்கில் ஒரு பங்கு வாடகை இடத்தின் உரிமையாளர்களுக்கு. மீதமிருக்கும் தொகை கட்டிட அதிபதிகளுக்கு. குத்தகை காலம் முடிந்தவுடன் இடமும் கட்டிடமும் இட உரிமையாளர்களுக்கு. அப்படி பேசுகிறவர்கள்தான் நலபை, யாபை எல்லாம்.

தோட்டங்களைப் பார்த்தவுடன் நலபை, யாபையெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. பேராசை பெரு நஷ்டம். திரும்பி வந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்திலேயே அமர்ந்து கொண்டேன். 

எழுத்தாளர்கள் பாவண்ணன், சொக்கன் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். அக்கம்பக்கத்துவாசிகள் நிறையப்பேர் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். நிசப்தத்தில் எழுதியிருந்ததைப் பார்த்துவிட்டு சிலர் வந்திருந்தார்கள். ‘இலக்கியக் கூட்டமெல்லாம் நடத்துனா இத்தனை பேர் வர்றதில்லையே’ என்றார் எழுத்தாளர் பாவண்ணன். நாம ராவு ராவுன்னு ராவினா யார் சார் வருவாங்க என்று நினைத்துக் கொண்டேன். அவ்வளவு கூட்டம். குழந்தைகளும் பெற்றவர்களுமாக அரங்கம் முழுவதும் அமர்ந்திருந்தார்கள்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடத்துகிறார்கள். நான்கே நான்கு பேர் இருந்தாலும் கதை சொல்கிறார்கள். பாடல் பாடுகிறார்கள். குழந்தைகளே நாடகம் நடத்துகிறார்கள். அது போக தமிழ் சொல்லித் தருவதாகவும் சொன்னார்கள். மகி நந்தனுக்கும், யுவ நந்தனுக்கும் கன சந்தோஷம் - யுவ நந்தன் தம்பியின் மகன். மகி கூட்டத்தில் ஒரு கதை கூட சொன்னான். ஆறு மணிக்கு ஆரம்பித்து ஏழரை மணிக்கெல்லாம் முடித்துவிட்டார்கள். அவ்வளவு தூரம் நான்கு பேரும் பைக்கில் செல்வது சிரமம் என்பதால் வாடகைக்கார் ஒன்றைப் பிடித்திருந்தோம். நிகழ்ச்சி முடிந்தவுடன் பிரபுவின் வீட்டில் பாயசம் கொடுத்தார்கள். எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போதே அவசர அவசரமாகக் கிளம்பி வர வேண்டியதாகிவிட்டது. மகிழ்வுந்துக்காரர் காத்திருக்கிறாரே என்றுதான் கிளம்பி வந்தோம். வரும் போது  ‘எல்லோரும் பேசிட்டு இருக்கும் போது நீங்க மட்டும் அவசரப்பட்டு கிளம்புவது பந்தா செய்யுற மாதிரி இருக்கு’என்றாள் வேணி. அடக்கடவுளே!

இத்தகைய நிகழ்ச்சிகளை குழந்தைகள் வெகுவாக ரசிக்கிறார்கள். ஒன்றாக இணைந்து கதை கேட்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. கதை சொல்வதற்கான மேடை அமைகிறது. ஆடிப்பாடி வெகு சுவாரசியமாக நேரத்தைக் கழிக்கிறார்கள். பாவண்ணன் அழகிய கதையொன்றைச் சொன்னார். சொக்கன் அருமையாகப் பேசினார். பிரபுவும் ராஜேஷூம் கதைகளைச் சொல்லி குழந்தைகளோடு சேர்ந்து பாட்டெல்லாம் பாடுகிறார்கள். 

கிளம்பி வரும் போது ‘இனி எப்போ நடத்தினாலும் சொல்லுங்க அங்கிள்’ என்று ஏற்ப்பாட்டாளர்களில் ஒருவரான அருண் கார்த்திக்கிடம் மகி சொன்னான். இனி அவன் ஒவ்வொரு மாதமும் எங்களை நச்சரிக்கக் கூடும். 

அழகான கூட்டம் இது. நான்கைந்து தமிழ் குடும்பங்கள் இருந்தாலும் கூட போதும். எந்த ஊராக இருந்தாலும் இத்தகைய கூட்டங்களை ஏற்பாடு செய்யலாம். எனக்கும் ஆசையாக இருக்கிறது. வீட்டிற்கு அருகாமையில் இப்படியொரு கூட்டம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஒவ்வொரு முறையும் ஐநூறு ரூபாய் வண்டி வாடகையாகக் கொடுக்க முடியாது. ‘நானும் ஒரு கூட்டத்தை நடத்தட்டுமா?’ என்றேன். ‘முதல்ல சனி, ஞாயிறுல வீட்டுல இருங்க...அப்புறம் யோசிக்கலாம்’ என்று பதில் வந்தது. அடங்கிக் கொண்டேன். 

கூட்டத்தில் பஞ்சுமிட்டாய் என்ற சிறார் இதழையும் வெளியிட்டார்கள். அட்டகாசமான உள்ளடக்கம். இனி இதை அச்சு இதழாகவே கொண்டு வருவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆவண செய்யலாம். எப்படியும் வாங்கிக் கொள்வார்கள். மூன்றாவது இதழை இணைப்பில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொண்டு வாசிக்கலாம்.

3 எதிர் சப்தங்கள்:

Senthil Prabu said...

Happy to know, i will join next sesson :)

Jegadeesh said...

கண்டிப்பாக அடுத்தமுறை சேர்ந்து கொள்கிறேன். முடிந்தால் முன்கூட்டியே தெரிய படுத்துங்கள்.

சேக்காளி said...