Sep 17, 2016

கதை கேளு

ஏழு அல்லது எட்டு வயது வரைக்கும் குழந்தைகளுக்கு நாம் கதைகளைச் சொல்ல வேண்டும். அதன் பிறகு அவர்களைக் கதை சொல்ல விட்டுவிட வேண்டும். எதையாவது சொல்லட்டும். இல்லாததும் பொல்லாததுமாக உளறட்டும். தவறேதுமில்லை. ஆனால் அவர்களால் யோசிக்க முடிகிறது என்பதும் யோசித்ததை வெளியில் சொல்ல முடிகிறது என்பதும்தான் முக்கியம். தொலைக்காட்சி, கணினி உள்ளிட்ட காணொளி ஊடகங்களில் பார்வையையும் கவனத்தையும் பொருத்திக் கொள்கிற குழந்தைகளுக்கான கற்பனைத் திறன் வளர்வதில்லை. யோசிப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் அடைத்துவிட்டு தமது போக்கில் ஊடகங்கள் குழந்தைகளை இழுத்துச் செல்கின்றன.

இளம் வயதில் குழந்தைகளின் பொழுதுபோக்கு எதுவாக இருப்பினும் அது அவர்களை யோசிக்கச் செய்ய வேண்டும். ‘ஒரு வண்டு பறந்துச்சாமா’ என்று கதையாக வாசிக்கும் போது அல்லது கேட்கும் போது ‘வண்டு என்ன நிறம்? எப்படி இருக்கும்? எப்படி பறக்கும்?’ என்று ஆயிரம் கேள்விகளுக்கான பதில்களை குழந்தையின் மனம் யோசிக்கும். அதையே திரைகளில் காணும் போது கண்ணால் பார்ப்பதைத் தவிர எதையும் யோசிப்பதில்லை. அதனால்தான் கதைகளை வாசிப்பதும் கேட்பதும் மிக முக்கியம். அவர்களின் மனச் சிறைகளை உடைத்து நொறுக்குகிற வித்தை கதைகளுக்கு இருக்கிறது.

கதை சொல்லத் தொடங்குகிற குழந்தையின் ஆளுமை உருவாக்கம் மிக எளிதாக நடந்துவிடுகிறது. நான்கு பேர் இருக்குமிடத்தில் வெட்கமின்றி பேச முடிகிறது. தனது உடல்மொழியை இலாவகமாக மாற்றத் தெரிகிறது. கற்பனையின் ஓட்டத்தோடு பயணிக்க முடிகிறது. இப்படி நிறையச் சொல்லலாம். முன்பெல்லாம் குழந்தைகளை அமர வைத்து கதை சொல்கிறவர்கள் கிராமங்களில் இருந்தார்கள். மரங்களின் கீழாகவும், கோயில் முற்றங்களிலும் அமர்ந்து கதைகளைச் சொல்வார்கள். சிறார்கள் தாங்கள் விளையாடுமிடத்தில் கூடி அவர்களாகவே கதைகளை அளப்பார்கள். இவை தவிர ஊர்களில் குழந்தைகளுக்கான நிகழ்வுகள் நடந்து கொண்டேயிருந்தன. இப்பொழுது அவையெல்லாம் அருகிவிட்டன. அருகிவிட்டன என்பதைவிடவும் சுத்தமாகவே எதுவுமிருப்பதில்லை என்பது சரியாக இருக்கும். மூன்று வயதில் வீடியோகேம் விளையாடத் தொடங்கும் குழந்தை ஐந்து வயதில் பெரிய கண்ணாடி ஒன்றை அணிந்து கொண்டு கணினியில் விளையாடத் தொடங்குகிறது. சக குழந்தைகளுடன் பேசுவதைவிடவும் கார்ட்டூன் கதாபாத்திரங்களுடன்தான் அதிகம் பேசுகிறார்கள்.

விட்டுக்கொடுத்தல், சக குழந்தைகளின் கிண்டல்களை விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் போக்கு போன்ற பால்யத்தின் அத்தனை நல்ல விஷயங்களையும் குழந்தைகள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர் என்றுதான் தோன்றுகிறது. வெறும் படிப்பும் ஒலிம்பியாட் தேர்வும் சோட்டாபீமும் மட்டுமே குழந்தைப் பருவத்தை கவ்விக் கொள்கின்றன. 

நாகரிகமும் அவசரவாழ்வும் சிதைக்கும் குழந்தமையை மெல்ல மெல்ல மீட்டெடுக்கும் சிறு சிறுமுயற்சிகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெங்களூரில் ஒரு அபார்ட்மெண்ட்வாசிகள் தொடர்ந்து சிறார்களுக்கான கூட்டங்களை நடத்துகிறார்கள். வரத்தூர் பக்கமாக தூபரகள்ளி என்கிற இடத்தில் அடுக்ககம் இருக்கிறது. குழந்தைகளை அழைத்து வைத்து கதை சொல்லி அவர்களைச் சிரிக்க வைத்து மகிழ்வூட்டி என்று மாதமொரு முறையாவது அழைப்பு கண்ணில்படுகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம் நாளை நடைபெறுகிறது. அவர்களே பஞ்சுமிட்டாய் என்று சிறார்களுக்கான சிற்றிதழ் ஒன்றையும் நடத்துகிறார்கள். தமிழ் இதழ். அடுக்ககவாசிகள் ஆளாளுக்கு ஒரு வேலையை இழுத்துப் போட்டுச் செய்து இதழின் பணியை முடித்து வெளியிடுகிறார்கள். நாளைக்கு மூன்றாம் இதழ் வரப் போகிறது. இதழின் பெயர் பஞ்சுமிட்டாய்.

எழுத்தாளர்கள் பாவண்ணனும் சொக்கனும் நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். 

சொக்கனின் மகள்கள் நங்கையும் மங்கையுமே அட்டகாசமான கதை சொல்லிகள். அவர்களது கதைகளை ஏதாவதொரு இடத்தில் தொடர்ந்து வாசிக்க முடிகிறது. நூலைப் போல சேலை. தந்தையைப் போல பிள்ளைகள். இருவரையும் சொக்கன் அழைத்துவருவார் என நினைக்கிறேன். ‘பெங்களூர்ல தமிழ்க் குழந்தைகளுக்கு எந்த நிகழ்ச்சியும் சொல்லிக்கிற மாதிரி இல்ல சார்’ என்று வருந்துகிறவர்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லலாம்.

ஞாயிறு மாலையொன்றில் நண்பர்களைச் சந்தித்த மாதிரியும் இருக்கும். குழந்தைகள் விளையாடியபடியே கதை கேட்ட மாதிரியும் இருக்கும்.

நாள்:
செப் 18, மாலை 6 மணி

இடம்: 
ஆஷிஷ் ஜெ‌கே அபார்ட்மெண்ட்ஸ், தூபரகள்ளி எக்ஸ்டென்டெட் ரோடு,
வரத்துர் ஹோப்லி,
பெங்களூர் - 560066

தொடர்புக்கு: 
பிரபு - 9731736363 
அருண் கார்த்திக்: 9902769373 
ராஜேஷ் : 9740507242 
ஜெயக்குமார் : 9008111762

1 எதிர் சப்தங்கள்:

Paramasivam said...

அருமையான செய்தி. இன்று தான் அறிந்த படியால், செல்ல முயற்சிக்கிறேன். முடியாவிட்டாலும், தொடர்பு எண் கிடைத்தபடியால், அடுத்து அடுத்து வரும் நிகழ்ச்சிகளில் உறுதியாக கலந்து கொள்ளலாம். மணி அவர்களுக்கு மிக்க நன்றி.