Aug 31, 2016

வாசிப்பு

தான் வாசிக்கிற அல்லது வாசித்த புத்தகங்களைப் பற்றித் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறவர்களை மனதுக்கு வெகுவாகப் பிடிக்கிறது. தமிழில் அந்தப் பணியை இடையறாது செய்து கொண்டிருப்பவர்களில் ஒருவரைச் சுட்டிக் காட்ட வேண்டுமானால் எஸ்.ராமகிருஷ்ணன் முதல் இடத்தில் இருப்பார். வாசிப்பு குறித்து அவர் பேசுவதைக் கேட்பதும் எழுதுவதை வாசிப்பதும் வாசிப்பு நோக்கி வெகுவாக ஈர்த்துவிடும். ஒருவிதமான தூண்டல் அது. பத்து நாட்களுக்கு முன்பாக சமீபத்தில் தான் வாசித்த புத்தகங்கள் குறித்துப் பேசினார். கூட்டம் தொடங்கி சற்று நேரம் கழித்துத்தான் செல்ல முடிந்தது. ஆனால் அட்டகாசமான பேச்சு. சுருதி டிவியினர் பதிவு செய்து யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். ஒன்றரை மணி நேரம் பார்க்க வேண்டும். ஆனால் நேரம் கிடைக்கும் போது கேட்க வேண்டிய முக்கியமான பேச்சு.


வாசிப்பு பற்றிய சந்தேகங்களும் சிரமங்களும் நிறையப் பேருக்கு இருக்கிறது. ‘நேரமில்லை’ ‘நெட்டில் படிப்பது மட்டும்தான்’ என்று ஏதாவதொரு விளக்கம் சொல்கிறவர்களிடம் சொல்வதற்கு ஒன்றேயொன்றுதான் இருக்கிறது- வாரம் ஒரு புத்தகத்தை வாசித்துவிடுவதை இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். இணையத்தில் வாசிப்பது தவறில்லை. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமான மேய்ச்சலை ‘வாசிப்பு’ என்று கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. வாசிப்பு என்பது ஒரு முழுமையான புத்தகமாக இருத்தல் அவசியம். அது நாவலாகவோ, சிறுகதையாகவோ, அபுனைவாகவோ அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் முழுமையாக வாசிக்கிற அனுபவம் தனித்துவமானது. நமக்குள் உருவாக்குகிற திறப்புகள் முக்கியமானவை.

நேரமிருக்காதுதான். குடும்பம், வேலை, ஃபேஸ்புக், ட்விட்டர் என்று ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் தாண்டி நமக்கே நமக்கான செயல் என்று ஏதாவது இருக்க வேண்டுமல்லா? காமிக்ஸ் புத்தகங்கள் வாசிக்கும் போதும், சித்திரக் கதைகள் வாசித்த போதும் நமக்கு போரடித்திருக்காது. ஆனால் இப்பொழுது ‘படிக்கவே போரடிக்குது’ என்று சாவகாசமாகச் சொல்ல முடிகிறது. காரணம் reading pleasure என்பதைத் தாண்டி வேறு காரணங்களுக்காக வாசிக்க ஆரம்பிக்கிறோம். Peer Pressure. அறிவை வளர்க்க வாசிக்க வேண்டும்; பெருமை பேசிக் கொள்ள வாசிக்க வேண்டும் என்று ஏதாவதொரு காரணத்தினால் நம் மனநிலைக்கும் அறிவுநிலைக்கும் ஒத்துவராத புத்தகங்களை வாசிக்கும் போதுதான் நம்மையுமறியாமல் போரடிக்கிறது.

இப்படியாக வாசிப்பை விட்டு தூரம் சென்ற பிறகு புத்தகங்கள் என்பவை வெறும் பண்டங்களாகிப் போகின்றன. வாசிக்கிறோமோ இல்லையோ- சேகரிப்பதோடு நிறுத்திக் கொள்கிறோம். 

அவர்கள் சொன்னார்கள் இவர்கள் சொன்னார்கள் என்று கண்டதையும் வாசிக்க வேண்டியதில்லை. நமக்கு எது பிடிக்குமோ, எதைப் படித்தால் சந்தோஷமாக இருக்குமோ அதை மட்டும் தேர்ந்தெடுத்து வாசித்துக் கொண்டிருந்தால் ‘போரடிக்கிற’ பிரச்சினையே வராது. இங்கே புத்தக விமர்சனத்தில் கூட ஆயிரத்தெட்டு அரசியல் உண்டு. புத்தகப் பரிந்துரைகளில் கூட நூதனமான சூட்சமங்கள் உண்டு. அதனால் பரிந்துரைகள், விமர்சனங்கள் போன்றவற்றை புத்தகத்திற்கான அறிமுகமாக மட்டும் எடுத்துக் கொண்டால் போதும். ‘ஓ! இப்படியொரு புத்தகம் வந்திருக்கிறது’ என்கிற அளவிலான அறிமுகம். அவ்வளவுதான். அதற்கு மேலாக இவற்றைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றுதான் தோன்றுகிறது.

நம்முடைய சந்தோஷம், விருப்பம் தாண்டி வேறு சில தளங்களில் உள்ள புத்தகங்களை வாசிக்க விரும்பும் தருணங்களில் நானொரு உபாயத்தைக் கையாள்வதுண்டு. கலவையான வாசிப்பு. உதாரணமாக தற்பொழுது ரங்கநாயகம்மாவின் புத்தகத்தையும் தரம்பாலின் புத்தகத்தையும் ஒரு சேர வாசித்துக் கொண்டிருக்கிறேன். ரங்கநாயகம்மா மார்க்ஸியவாதி. அவரது சாதியப் பிரச்னைகளுக்குத் தீர்வு - புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை என்கிற புத்தகத்தை கொற்றவை மொழிபெயர்த்திருக்கிறார். நானூறு பக்கங்கள் கொண்ட புத்தகம் எண்பது ரூபாய்தான். அதுவே ஆச்சரியம்தான். நூறு பக்க புத்தகத்தை நூற்றுப் பத்து ரூபாய்க்கு விற்கிற காலகட்டத்தில் இம்மாம்பெரிய புத்தகத்தை இத்தினியூண்டு விலைக்கு விற்கிறார்கள். 

அம்பேத்கரை மையமாக வைத்து தொடங்கும் புத்தகம் மெல்ல மெல்ல அவரை வாருகிறது. காந்தியையும் விட்டு வைப்பதில்லை. விவேகானந்தரையும் விட்டு வைப்பதில்லை. ரங்கநாயகம்மாவுக்கு கிட்டத்தட்ட எண்பது வயது. பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்குப் பத்திரிக்கையொன்றில் தொடராக வந்து அதன் பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சமீபத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பில் தங்குதடையே இல்லை. அந்தவிதத்தில் கொற்றவையை மனதாரப் பாராட்ட வேண்டும். மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். இப்படி காந்தியையும், விவேகானந்தரையும் வாரும் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் போதே அவ்வப்போது தரம்பாலின் ‘காந்தியை அறிதல்’ புத்தகத்தையும் புரட்டிக் கொண்டிருக்கிறேன். 

ரங்கநாயகம்மா காந்தியைக் குறிப்பிடுகிற இடங்களில் மகாத்மாக்கள் என்று நக்கல் தொனியில் குறிப்பிடுகிறார் என்றால் அவருக்கு முற்றிலும் எதிர்திசையில் தரம்பால் நிற்கிறார். காந்தியவாதி. காந்தியைக் கடவுளுக்கு இணையாகக் கருதுகிறவர். லண்டனில் மனைவி ஆசிரியையாக பணி புரிந்து கொண்டிருந்த சமயத்தில் பெரிய பொருளாதார வசதி இல்லையென்றாலும் இங்கிலாந்து நூலகங்களில் காந்தி குறித்தான தரவுகளைத் தேடி அவற்றை ஒளிப்பிரதி செய்தால் செலவாகும் என்று கைகளாலேயே குறிப்புகளாகக் எழுதி பல்லாயிரக்கணக்கான பக்கங்களைச் சேகரித்த மனிதர். அவர் எழுதிய காந்தியை அறிதல் புத்தகத்தில் காந்தியைப் பற்றிய விரிவான உரையாடல் அவசியம் என்று ஆதங்கப்படுகிறார். ஐம்பதாயிரம் பக்கங்களை எழுதிக் குவித்திருக்கும் காந்தியின் பெரும்பான்மையான கருத்துக்கள் இன்னமும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்கிறார். 

இத்தகைய கலவையான வாசிப்பின் வழியாக நிதானம் தவறிவிடாமல் இருக்க முடிகிறது. ஒரேயடியாக மார்க்ஸ் பக்கமும் சாயாமல் காந்தியையும் கொண்டாடாமல் அதே தருணத்தில் இரண்டு பேரையும் புரிந்து கொள்ள முடிகிறது. சலிப்பும் இல்லை. ஒரே வாரத்தில் இந்த இரண்டு புத்தகங்களையும் வாசித்துவிட முடியாது. ஆனால் மூன்று நாட்களுக்கு நூறு பக்கங்கள் என்பது என் இலக்கு. அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வாசிப்பதற்கென ஒதுக்குகிறேன். இதைப் பீற்றலுக்காகச் சொல்லவில்லை. சமீபத்தில் சந்தித்த இரண்டு மூன்று ஐடி நண்பர்கள் தங்களுக்கு புத்தகம் வாசிப்பதில் இருக்கும் சிரமங்களைச் சொன்னார்கள். அவை பலருக்கும் பொதுவான சிரமங்கள். அறிவுரை சொல்லுமளவிற்கு இல்லையென்றாலும் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து சிலவற்றைச் சொல்ல முடியும். அலைபேசியையும், கணினியையும் சற்று தள்ளி வைத்துவிட்டு ஒரு மணி நேரத்தை ஒதுக்குவது பெரிய காரியமில்லை. மிக எளிதுதான். முயற்சித்துப் பார்க்கலாம்.

3 எதிர் சப்தங்கள்:

Saravana Kumar N said...

கொங்கு வட்டார பழமொழிகளுக்கென ஏதேனும் புத்தகம் இருந்தால் பரிந்துரைக்க முடியுமா...?

Unknown said...

realy nice post every one should know the importants of reading its a awesome habit! அலைபேசியையும், கணினியையும் சற்று தள்ளி வைத்துவிட்டு ஒரு மணி நேரத்தை ஒதுக்குவது பெரிய காரியமில்லை. மிக எளிதுதான். முயற்சித்துப் பார்க்கலாம். but fortunately or unfortunately we read everything in computer or mobile, ha ha!!! but truely cool post.

Kavipriya said...

உண்மை. புத்தகங்கள் தவிர வேறு பொழுதுபோக்கு எதுவும் இல்லை என்ற சூழ்நிலையில் வளர்ந்ததாலும் , எனது தாய் தந்தைக்கு வாசிப்பில் ஆர்வம் இருந்ததாலும் ஓரளவு வாசிப்பனுபவம் உண்டு. ஏழு-எட்டு வயது முதலே புத்தகமும் கையுமாக இருப்பேன். படித்த கதைகள்/புத்தகங்களின் பெயர், அதை எழுதியவர்களின் பெயர் என்று அனைத்தும் ஞாபகத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் , ஒன்றை மட்டும் உறுதியாகக் கூற முடியும். தொடர்ந்த வாசிப்பு என்னை எத்தனையோ விதங்களில் பண்படுத்தி இருக்கிறது, Books play a major role in shaping who I am today!