Sep 7, 2016

தாடி

சில நாட்களுக்கு முன்பாக வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது மகி தனது கன்னத்தைத் தடவிப் பார்த்துவிட்டு ‘அப்பா எனக்கு தாடி முளைச்சிருக்கு பாருங்க’ என்றான். ‘ஏழு வயதில் தாடி முளைக்காது’ என்று சொன்னால் அவன் நம்பத் தயாராக இல்லை. தடவிப் பார்க்கச் சொன்னான். ஆம் என்று சொல்லாவிட்டால் வருத்தப்படக் கூடும் என்பதற்காகவே பொய் சொல்ல வேண்டியிருந்தது. 

பள்ளியில் படிக்கும் போது எனக்கும் அப்படித்தான் ஆசை இருந்தது. டி.ஆர், பிரபுதேவா போன்றவர்களின் அதிதீவிர ரசிகராக இருந்தது தாடி ஆசைக்கு பெட்ரோல் ஊற்றிக் கொண்டிருந்தது. கருவேப்பிலை போட்டு கொதிக்க வைத்த தேங்காய் எண்ணெய்யை தேய்த்தால் முடி வளரும் என்கிற கான்செப்டை நம்பி முகத்துக்குத் தேய்த்த அக்கப்போரையெல்லாம் செய்து கொண்டிருந்தேன்.  ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. அதன் பிறகும் வெவ்வேறு உபாயங்களைத் தேடிக் கொண்டிருந்த தருணத்தில் அடிக்கடி சிரைத்துக் கொண்டேயிருந்தால் முளைத்துவிடும் என்று எவனோ பீலா விட்டதை நம்பி அப்பாவின் ப்ளேடைத் திருடி வரக் வரக்கென இழுத்ததில் தோலைக் கிழித்துக் கொண்டதுதான் மிச்சம். இன்னமும் அந்தத் தழும்பு பல்லை இளிக்கிறது.

பொடியனாக இருக்கும் வரைக்கும் எப்பொழுது வயது கூடும் என்ற ஏக்கம் இருந்து கொண்டேயிருந்தது. முப்பதைத் தாண்டிய பிறகு வயது கூடுவதைக் கயிறு போட்டு இழுத்துக் கட்டிவிட முடியாதா என்ற நினைப்பு வந்து அமர்ந்து கொள்கிறது. என்ன மனமோ! என்ன சித்தாந்தமோ. கண்றாவி.

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து அரும்பு மீசை சற்றே கருகருவென மாறத் தொடங்கிய தருணத்திலிருந்தே ‘ஷேவ் செய்யலையா?’ என்று வீட்டில் கேட்கத் தொடங்கினார்கள். தாடி என்பது ரவுடிகள், முரடர்கள், பொறுக்கிகளின் அடையாளம் என்று காலங்காலமாக உருவேற்றி வைத்திருந்த எண்ணத்தை அப்படியே விதைத்தார்கள். எனக்கும் அப்படித்தான் ஆகிப் போனது. நெகுநெகுவென இருந்தால்தான் யோக்கியன், ஒழுக்கசீலன், படிப்பாளி என்றெல்லாம் வெகுவாக நம்பத் தொடங்கியிருந்தேன். எவ்வளவு அயோக்கியத்தனம் செய்தாலும் தாடியை மழித்து மீசையைச் சரி செய்து நெற்றியில் திருநீறு இழுத்து நித்யானந்தா போலச் சிரித்தால் நம்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கை பொய்க்கவேயில்லை. இந்த உலகத்தில் யோக்கியர்களுக்கென சில ட்ரேட்மார்க்குகள் உண்டல்லவா? சமூக ஒழுங்குகள். அதைப் பின்பற்றிக் கொண்டிருந்தால் நம் கேப்மாரித்தனங்களை மற்றவர்கள் கண்டுபிடிக்க சற்றே காலதாமதமாகும். 

கன்னத்தில் சற்றே முடி வளர்ந்திருந்தாலும் அப்பாவுக்கு பிடிக்காது. அம்மாவுக்கும்தான். ஊரில் இருந்தவர்களும் ‘என்னடா பொறுக்கி மாதிரி சுத்துற?’ என்று கேட்பது சர்வசாதாரணமாக இருந்தது. நல்ல பையனாக இருந்து பெற்றவர்களுக்கு பெயர் வாங்கிக் கொடுப்பதுதான் மகனுக்கு அழகு என்று வள்ளுவர் வேறு கிளப்பிவிட்டுவிட்டு போயிருக்கிறார் அல்லவா? அதை தலைமையாசிரியர் திரும்பத் திரும்பச் சொல்லி உசுப்பேற்றிக் கொண்டிருந்தார். பள்ளிக்கூடத்தில் தாடி வைத்த ஒரு ஆசிரியரின் முகம் கூட நினைவுக்கு வருவதேயில்லை. அப்படி யாருமே இருக்கவில்லை என்பதுதான் காரணம். கல்லூரியிலும் அதே மாதிரிதான். ‘இண்டர்வியூக்கு போகும் போது முதலில் ஷேவ் செஞ்சுட்டு போங்க’ என்று வகுப்பு எடுத்தவர்கள் அத்தனை பேரும் மறக்காமல் சொன்னார்கள். தாடியும் மீசையுமாகச் சென்றதால் வேலை கிடைக்காமல் வறுமையின் நிறம் சிவப்பு கமல் மாதிரி சுற்றியவர்களின் பட்டியலை வரிசைக்கிரமமாகச் சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். பளிச் ராமசாமியாகவே திரிந்தேன்.

தாடி தானாக முளைப்பது. அதன் மீது நம்மவர்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் என்று புரிவதேயில்லை. அழகுக்குக் கூட ஒரு வரையறை வகுத்து வைத்திருக்கிறோம். இல்லையா? சிவப்பாக இருக்க வேண்டும்; தலையைப் படிய வாரிச் சீவியிருக்க வேண்டும்; துளியும் கசங்காத ஆடையணிய வேண்டும். இத்யாதி. இத்யாதிகள். இதையெல்லாம் மீறுகிறவர்கள் கலகவாதிகள். அப்படியானவர்களைத் தரை லோக்கலாகத் திட்டினால் பொறுக்கிப் பயல்.

வள்ளுவன் தாடி வைத்திருந்தான். பாரதி தாடி வைத்திருந்தான். தாகூருக்கும் தாடி இருந்தது. அதையெல்லாம் யார் கண்டுகொண்டார்கள்? ‘நீ தாடி வைத்திருக்கக் கூடாது’ அவ்வளவுதான். முடித்துக் கொண்டார்கள். நவீன் பாலி எவ்வளவு அழகாக இருக்கிறார்? பிரேமம், பெங்களூர் டேஸ் படங்களையெல்லாம் அவருக்காகத்தான் பார்த்தேன் என்று சொன்னால் நம்பத்தான் வேண்டும். மணிவண்ணனின் தாடிக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. இப்படி எதைச் சொன்னாலும் ஒத்துக் கொள்ளாத உலகம் இது. சினிமாக்காரனும் நீயும் ஒண்ணா? என்று கேட்பார்கள். அம்மா இதில் எல்லாம் விவரம். ‘வைரமுத்து தாடி வெச்சிருக்காரா?’ என்று கொக்கி போடுவார். சுந்தர ராமசாமி வைத்திருந்தார் என்று பதிலாகச் சொன்னால் ‘அது யாரு?’ என்பார். எதற்கு பொல்லாப்பு என்று ஆமோதித்துக் கொள்வேன். 

இப்படியெல்லாம் பேசுவதால் வளர விட்டால் ஆறரை அடிக்கு வளர்கிற தாடியைக் கொண்டவன் என்றெல்லாம் என்னைப் பற்றி நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. நா.முத்துக்குமார் மாதிரி கசகசவென்றுதான் வளரும். அதைக் கூட வைத்துப் பார்க்க அனுமதிக்காத அதீத ஒழுக்க சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிறேன்.

இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை. அம்மாவும் அப்பாவும் ஊரில் இருக்கிறார்கள். வேணி கூட கண்டுகொள்வதில்லை. இவன் இப்படித்தான் என்கிற முடிவுக்கு அவள் வந்து சேர்ந்து வெகு நாட்களாகிவிட்டது. கூகிளில் தாடி வளர்ப்பது எப்படியென்றல்லாம் தேடிக் கொண்டிருக்கிறேன். ப்ரவுசர் ஹிஸ்டரியைத் துழாவினால் தாடி சம்பந்தமாகத்தான் நிறையைத் தேடியிருக்கிறேன் என்று காட்டுகிறது. பதினைந்து இருபது நாட்களில் அரைகுறையாக வளர்ந்து நிற்கிறது. அலுவலகத்தில் ‘ஏன் டல்லா இருக்க?’ என்று ஒன்றிரண்டு பேர்கள் கேட்டார்கள். மனிதவள ஆட்கள் கூட கோடு காட்டிவிட்டு போயிருக்கிறார்கள். ஒரே பதில்தான் - ‘சாமிக்கு விட்டிருக்கிறேன்’. ஒற்றை பதில் அத்தனை பேர் வாயையும் அடைத்துவிடுகிறது. சாமிகுத்தம் ஆகிவிடும் என்பதால் அமைதியாகிவிடுகிறார்கள்.

கடந்த வாரம் ஊருக்குச் சென்றிருந்த போது அம்மாவும் அப்பாவும் சொல்லிப் பார்த்தார்கள். பெங்களூர் போய் ஷேவ் செய்து கொள்வதாகச் சொன்னதற்கு ‘பளிச்சுன்னு இருந்தாத்தானே ஆகும்?’ என்றார்கள். எதுவுமே பதில் சொல்லாமல் மாமனார் வீட்டுக்குச் சென்றேன். அவர் அழிச்சாட்டியம்தான் பெரிய அழிச்சாட்டியம். அவரும் பளிச் வகையறாதான். தினமும் மழித்துக் கொண்டு வெள்ளையும் சுள்ளையுமாக ‘வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்க வளமுடன்’ என்பார். வேதாத்ரி மகரிஷி ஃபேன்.

பார்த்த சில நிமிடங்களிலேயே ‘உங்க ரூம்ல ஷேவிங் செட் வெச்சிருக்கேன்...போய் குளிச்சுட்டு வாங்க’ என்றார். தலையைக் குனிந்து சுகி சிவத்தின் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். கடுப்பாகியிருக்கக் கூடும். மாமனாரின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகி தேறியிருந்தார். ‘தாத்தா நல்லா இருக்காங்களா?’ என்று கேட்டு வைத்தேன். நல்லா இருக்காங்க என்று சொல்லிவிட்டு ‘ஷேவ் செஞ்சு விட வர்றேன்னு சொல்லியிருக்காங்க’ என்று சம்பந்தமேயில்லாமல் பதில் சொன்னார். சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறாராம். அவர் துலாம் ராசி என்றாலும் நானும்தான் துலாம் ராசி. காதிலேலேயே வாங்கிக் கொள்ளாமல் மீண்டும் சுகி சிவத்தின் புத்தகத்தை புரட்டத் தொடங்கினேன். சொல்லாமல் கொள்ளாமல் எழுந்து போய்விட்டார்.

மறுநாள் காலையில் பொறுத்தது போதும் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. ‘மாப்பிள்ளை..ஷேவ் செஞ்சுக்கலையா?’ என்றார். எனக்கும் வேறு வழியே தெரியவில்லை. ‘சாமிக்கு விட்டிருக்கிறேன் மாமா’ என்றேன். அமைதியானவர் கொஞ்ச நேரங்கழித்து வேணியிடம் ‘எந்த சாமிக்கு?’ என்று கேட்டிருக்கிறார். ஐய்யப்பனுக்கு என்று பதில் சொன்னாளாம். ஐய்யப்பனுக்கு முடி விடுவார்களா? பதினெட்டாம்படியானுக்குத்தான் வெளிச்சம்.

10 எதிர் சப்தங்கள்:

viswa said...

பாலகுமாரனை மறந்து விட்டீர்கள் அழகான தாடியை கொண்டவர்

வஸ்வநாதன்

சேக்காளி said...

//மணிவண்ணனின் தாடிக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது//
எனக்கு ரொம்ப பிடிக்கும்

நெய்தல் மதி said...

மீசையும், தாடியும் தாண்ணே கெத்து! கெத்த விட்டுடாதீங்கண்ணே....

ADMIN said...

அய்யப்பன் சாமிக்கு தாடி விட்ட முதல் ஆள் நீங்களாதான் இருப்பீங்க !

Muthu said...

மோடிய உதாரணம் சொல்லுங்க. தாடியில்லா மோடிய கற்பனை செஞ்சி பாக்க முடியுமா ?

இல்லையா, நம்மளமாதிரி ஃப்ரென்சு தாடிக்கு மாறிடுங்க. சுத்தம்.

Thangavel Manickam said...

ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஷேவ் செய்வது வழக்கம். அடுத்த நாள் காலையில் மகள் நிவேதிதா முகத்தை தடவுவார். அப்பா சொர சொரன்னு இருக்குப்பா என்பார். அடுத்த நொடி ஷேவ் செய்யச் சென்று விடுகிறேன். தாடி வைக்கும் சுதந்திரம் தனியாக இருந்தால் கிடைக்கும். குடும்பஸ்தனாக மாறிய பிறகு வாய்ப்பே இல்லை. ஆங்காங்கே வெள்ளை முடி எட்டிப்பார்ப்பது வேறு திகிலைக் கிளப்புகிறது தாடி வைப்பதற்கு.

Mahalingam said...

Where is the photo with 'thaadi'

Unknown said...

எங்க வீட்டிலும் இதே நிலைமை தான் 'No shave November'ல் ஆரம்பித்தார்.இன்னும் சவரம் செய்யாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்.அப்போ அப்போ கி&கா அர்ஜுன் கபூர் styleயும் இருமுகன் விக்ரம் styleயும் செய்து பார்த்தார்.இப்போ கேட்டால் 'பாஞ்சாலி சபதம்' மாதிரி shortfilm முடிஞ்சதும் தான் என்று சொல்லிவிட்டார்.

Mohamed Ibrahim said...

Beard will give manly and gigantic look, but the society feel different.

Aravind said...

most of the women love men with தாடி only.
so மநிகண்டன் ஐய்யா சொல்லுங்க திடீர்நு அடம்பிடிச்சு தாடி வளற்பதற்கு any secret reason?
உங்களை சரியா கன்காநிக்க சொல்லனும் அந்நியை.