Aug 9, 2016

ஏலத் தொகை

மூன்றாம் நதி நாவல் வெளியான போது வெளியீட்டு விழாவுக்குப் பதிலாக ஏல அறிவிப்பை மட்டும் செய்திருந்தது நினைவில் இருக்கலாம். முதல் சில பிரதிகளை ஏலத்திற்கு விடுவதாக அறிவித்த போது கிட்டத்தட்ட ஏலத்தின் மூலமாக ஒரு லட்சத்து எண்பத்து எட்டாயிரம் ரூபாய் கிடைத்தது.

தொகை விவரம்:
  • இங்கிலாந்தில் வசிக்கும் சார்லஸ்                 - ரூ. 1,00,000
  • காங்கோவில் வசிக்கும் சந்தானராமன்        - ரூ. 50,000
  • சிங்கப்பூரில் வசிக்கும் அருண்குமார்          - ரூ. 10,001
  • அமெரிக்காவில் வசிக்கும் அம்ஜத் சந்திரன்   - ரூ. 7000
  • அமெரிக்காவில் வசிக்கும் ஹரிஹரன்        - ரூ. 6800
  • அபுதாபியில் வசிக்கும் துரைமுருகன்         - ரூ. 5555
மொத்தம் 1,79,356 ரூபாய் இந்தத் தொகையோடு கடந்த ஆண்டு லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன் மற்றும் மசால்தோசை 38 ரூபாய் ஆகிய புத்தகங்களின் விற்பனை வழியாகக் கிடைத்த ராயல்டி தொகை ரூ.9140 சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஆக, மொத்தமாகக் கிடைத்த தொகை ரூ.1,88,496 (ஒரு லட்சத்து எண்பத்து எட்டாயிரத்து நானூற்று தொண்ணூற்று ஆறு ரூபாய்).

இந்தத் தொகையானது ஏற்கனவே அறிவித்தபடி பிரித்து கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.

1) ஹோப் நிறுவனத்தில் படிக்கும் லதாவுக்கு - ரூ. 10,000  

2) யாமினி என்கிற பெண்ணின் படிப்புச் செலவுக்கு - ரூ 10,000 

3) கணவரால் கைவிடப்பட்ட செல்வி என்கிற பெண்ணின் குழந்தைகளின் படிப்புச் செலவுக்காக - ரூ.15,000 

4) பெற்றோர்களை இழந்துவிட்டு படிப்பதற்குச் சிரமப்படும் ஆகாஷ் என்கிற மாணவனின் கல்லூரிப்படிப்புக்காக - ரூ.15,500

5) இவை தவிர, திருவள்ளுவர் பேரவையின் சார்பில் சென்னை சுற்றுவட்டாரத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஏடுகள் வாங்குவதற்காக - ரூ13,250. (விவரங்கள் இணைப்பில்)

6) தந்தை இல்லாத கூலி வேலை செய்து மகளைப் படிக்க வைக்கிறார் மதுவின் தாயார். மதுவின் கல்லூரித் தொகை- ரூ 10,000


7) அரசு கூர்நோக்கு மையத்தில்(சிறுவர் சீர்திருத்தப் பள்ளி) தங்கி செவிலியர் படிப்பை படிக்கும் எல்லம்மாள், ஜோதி மற்றும் கோகிலா ஆகியோரின் மூன்றாம் வருடப் படிப்புக்காக தலா பதினைந்தாயிரம் என மொத்தம் - ரூ. 45,000.


8) சண்முகபிரியா என்கிற மாணவி அரசு சாலை மற்றும் போக்குவரத்துக் கல்லூரியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அவரது அப்பா கடந்த இரண்டு வருடங்களாக கல்லூரியில் பணம் கட்டவில்லை. படிப்பை நிறுத்திவிடச் சொல்லி வற்புறுத்தவும் சண்முகப்பிரியா தற்கொலை முயற்சி செய்து மீண்டிருக்கிறார். அவரை அழைத்துத் தொடர்ந்து படிக்கச் சொல்லி ஆலோசனை வழங்கி கடந்த இரண்டு ஆண்டு படிப்புத் தொகையையும் சேர்த்து கட்டப்பட்டிருக்கிறது - ரூ.50000

9) பெற்றோர் இல்லாமல் சொந்தமாக ஞாயிறு தோறும் கறிக்கடை நடத்தி படிப்பைத் தொடரும் மாணவியின் படிப்புக்கு - ரூ.15000 வழங்கப்பட்டிருக்கிறது.

ஆக ரூ.183750 வழங்கப்பட்டிருக்கிறது. இன்னுமொரு நான்காயிரத்து எழுநூறு ரூபாய் கைவசமிருக்கிறது. அந்தத் தொகையில் அரசுப் பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கிவிடலாம் என்கிற திட்டமிருக்கிறது.

மூன்றாம் நதி நூல் குறித்தான ஏலம் அறிவிக்கப்பட்ட போது ‘ஏலம் எல்லாம் நடக்குதாமா’ என்று நக்கல் அடித்துக் கொண்டிருந்த சில மனிதர்களுக்கு இந்தப் பதிவைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். குத்திக்காட்டுவதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் போகிற போக்கில் புழுதி வாரித் தூற்ற வேண்டியதில்லை என்பதற்காகச் சுட்டிக்காட்டுகிறேன். ஏலம் நடத்தியதன் நோக்கம் மிக எளிமையானது. புத்தக வெளியீட்டு விழாவை நடத்தி அதில சில ஆயிரங்களைச் செலவழிப்பதைவிடவும் இப்படியான ஏலங்களின் மூலமாக கிட்டத்தட்ட பத்து மாணவர்களின் எதிர்காலத்துக்கு விளக்கை ஏற்றி வைப்பதை முக்கியமானதாகக் கருதுகிறேன். அதை நம்மால் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையும் இருந்தது. பணம் கட்டாவிட்டால் படிப்பை நிறுத்திவிடுவோம் என்கிற சூழலில் இருக்கக் கூடிய மாணவர்கள் இவர்கள். பெற்றோர் இல்லாதவர்கள், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வளர்ந்தவர்கள் என்று விளிம்பு நிலையின் அடையாளங்கள் இவர்கள். படிப்பைக் கொடுத்தால் அவர்கள் மேலே வந்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அதைத்தான் செய்திருக்கிறோம்.

இதே ஏலம் சில ஆண்டுகளுக்கு முன்பு சாத்தியமாகியிருக்காது. அப்பொழுது இவ்வளவு மனிதர்கள் என்னை நம்பியிருக்கமாட்டார்கள். இப்பொழுது என்னை நம்புகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். இலட்சக்கணக்கான ரூபாயை அவர்கள் அடுத்தவர்களுக்காக செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். நம் மீதான நம்பிக்கையைப் பாலமாக வைத்து நம்மால் முடிந்த அளவு கை தூக்கி விடுவோம் என்பது மட்டும்தான் இத்தகைய ஏலத்தின் ஒரே நோக்கம். அந்த நோக்கம் செவ்வனே நிறைவேறியிருக்கிறது. இனி தொடர்ந்து செய்வோம்.

பதிப்பாளர் ஜீவகரிகாலன் இல்லையென்றால் இதை இவ்வளவு நேர்த்தியாகச் செயல்படுத்தியிருக்க முடியாது. அவருக்கு நன்றி. பயனாளிகளை அடையாளப்படுத்திய கார்ட்டூனிஸ்ட் பாலா, கவிஞர் கடற்கரய், தலைமையாசிரியர் அரசு தாமஸ், உதவி இயக்குநர் சுந்தர மூர்த்தி, ஆசிரியை கோமதி உள்ளிட்டவர்களுக்கு நன்றி. சொல்லவே வேண்டியதில்லை- நன்கொடையாளர்களின் தாள் பணிகிறேன். அவர்களும் அவர்தம் குடும்பமும் மன அமைதியோடு நல்லதொரு வாழ்க்கை வாழ இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

6 எதிர் சப்தங்கள்:

Siva said...

Maghilchi

சேக்காளி said...

//நன்கொடையாளர்களின் தாள் பணிகிறேன். அவர்களும் அவர்தம் குடும்பமும் மன அமைதியோடு நல்லதொரு வாழ்க்கை வாழ இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்//
நானும் கூட.

பரமசிவம் said...

வாழ்த்துக்கள், உங்களுக்கும் நன்கொடையாளர்களுக்கும்.

பரமசிவம் said...

வாழ்த்துக்கள்-நன்கொடையாளர்களுக்கும் உங்களுக்கும். 👏

Vinoth Subramanian said...

Keep going...

ravisai said...

வணக்கம்

தங்களின் சேவையை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

உங்களைப்போன்ற மனிதர்களால் தான் மனிதாபிமானம் இருக்கிறது என்பதை உணரமுடிகிறது.

மேன்மேலும் உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.

நான் சென்னையில் இருக்கிறேன். எனக்கும் தங்களோடு இணைந்து சேவையாற்ற விருப்பம்.

சென்னை தாங்கள் வந்தால் எனக்கு தெரியப்படுத்தினால் நான் தங்களை நேரில் சந்திக்கிறேன்


நன்றி வணக்கம்
ரவிச்சந்திரன்
ravisai18@gmail.com