Aug 10, 2016

ஹிஜ்ரா

‘ஹிஜ்ரா சூத்’ - அப்படித்தான் அந்த ஹிந்திக்காரன் திட்டிக் கொண்டிருந்தான். அதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் ஹிஜ்ரா என்பதற்கான அர்த்தம் தெரிந்திருந்தது. எங்கள் அலுவலகத்துக்கு பக்கத்திலேயே ஒரு நண்பரின் அலுவலகம் இருக்கிறது. அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவருடைய மகள் ஹிஜ்ராக்களுக்காக நடனம் சொல்லித் தருவதாகவும் அவர்கள் நடனம் சொல்லித் தரும் இடத்திற்கு தான் சென்றிருந்ததாகவும் சொல்லியிருந்தார். அவர் முகத்தைச் சுளித்த சுளிப்பிலேயே அந்த இடத்திற்கு ஒரு முறை சென்று பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது. 

‘உங்க பொண்ணு நெம்பர் தர்றீங்களா?’ என்றேன். யார்தான் தருவார்கள்? மரணக் கடுப்பில் ஒரு முறை முறைத்தார். நான் நல்லவன், வல்லவன், இந்த ஊரைக் காக்க வந்த உத்தமன் என்று சொன்னாலும் நம்பவா போகிறார்? ‘நீங்க தராட்டி போங்க’ என்று நினைத்தபடியே வந்து வந்து அவளை ஃபேஸ்புக்கில் கண்டுபிடித்து நட்பு அழைப்பு விடுத்திருக்கிறேன். இன்னமும் பதிலைக் காணவில்லை. பெங்களூரிலேயே பிறந்து வளர்ந்த தமிழ் பெண்கள் அதுப்பு காட்டுவார்கள். அதுவும் சொட்டைத் தலையும் அரைகுறை ஆங்கிலமுமாக என்னை மாதிரியான ஆட்கள் என்றால் அவ்வளவு இளக்காரம். ஆகட்டும், பார்த்துக் கொள்ளலாம். 

அந்த ஹிந்திக்காரன் ஹிஜ்ராவைத்தான் திட்டிக் கொண்டிருந்தான். நான்கைந்து பேர்கள் சுற்றிலும் நின்று கொண்டிருந்தார்கள். இந்தப் பகுதியில் அப்படியான சண்டைகள் அடிக்கடி நடக்கும். ஒரு குடிசை இருக்கிறது. அருகாமையிலேயே ஒரு பிராந்திக்கடை. ஏழு மணிக்கு மேலாக ஜிகுஜிகுவென்று வந்து சாலையில் நின்று கொள்வார்கள். கண்ணசைவும் கையசைவுமாக நிற்கிற அவர்களிடம் யாராவது சிக்கினால் குடிசைக்குள் அழைத்துச் செல்வார்கள். அதன் பிறகு கசமுசாதான். ஹிந்திக்காரன் விவகாரமும் கசமுசாவாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். இதற்காகவாவது ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும். சண்டைகளின் சுவாரசியமே தெரிவதில்லை. 

சில நாட்களுக்கு முன்பாக பொம்மனஹள்ளியில் ஒரு சண்டை நடந்தது. எங்காவது சண்டை நடந்தால் எனக்கு மூக்கு வியர்த்துக் கொள்ளும். கிடைக்கிற சந்தில் வண்டியை நிறுத்தி விட்டு சொட்டையைத் தடவியபடியே கூட்டத்துக்குள் நுழைந்துவிடுவேன். சிறுவயதிலிருந்தே அப்படித்தான். வீட்டுக்கு வீடு குழாய் பதிக்காத காலத்தில் எங்கள் ஊரில் குடிநீருக்காக கடும் சண்டை நடக்கும். ‘உன்ரதைக் கிழிச்சு தோரணம் கட்டிவிடுவேன்’ என்றெல்லாம் பெண்கள் பேசுவார்கள். அதை எப்படி தோரணம் கட்டுவார்கள் என்று கற்பனை சிறகடித்த காலத்தில் நான் வெறும் மூன்றாம் வகுப்புத்தான் படித்துக் கொண்டிருந்தேன். முட்டையில் படித்த பழக்கம் கட்டைக்கு போகிற வரைக்கும் நம்மோடு ஒட்டியிருக்குமாம். அப்படித்தான். சண்டை என்றால் சந்தோஷம். 

பொம்மனஹள்ளி சண்டை வெகு சுவாரஸியமானதுதான். ஆனால் அதுவும் ஹிந்திச் சண்டை. பக்கத்தில் இருந்த ஆட்டோக்காரர்தான் மொழி பெயர்ப்பாளர். ‘இவரு என்ன சொல்லுறாரு?’ என்றால் ட்ரான்ஸ்லேட் செய்து பதில் சொல்வார். அதற்குள் அந்தப் பெண்மணி எதையாவது சொல்லியிருப்பாள். ‘அவங்க என்ன சொன்னாங்க’ என்பேன். ஆட்டோக்காரரும் எவ்வளவுதான் பொறுமை காப்பார்? ஒரு கட்டத்தில் ‘ஏதோ புருஷன் பொண்டாட்டி சண்டை குரு...ரோட்டுக்கு வந்துடுச்சு...நமக்கு எதுக்கு?’ என்று கிளம்பிவிட்டார். புருஷன் பொண்டாட்டி சண்டைதான் வீட்டுக்கு வீடு நடக்கிறதுதான். ஆனால் என்ன காரணத்துக்காக சண்டை என்று தெரிந்து கொள்வதில் ஒரு குறுகுறுப்பு இருக்கிறது பாருங்கள். எனக்கு இருந்த ஆர்வத்துக்கு புருஷனிடமே கூட ‘ஏம்ப்பா இங்கிலீஷ்ல சண்டை போடக் கூடாதா?’ என்று கேட்டுவிடலாம் என்றுதான் இருந்தது. இடுப்பில் எதையாவது வைத்திருந்தால் எடுத்து செருகினாலும் செருகிவிடுவான். காவல்துறை வரும் வரைக்கும் வாயைத் திறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். லவடா மாதிரியான சில கெட்ட வார்த்தைகள் தெரியும். அதை மட்டும் காது கொடுத்து கேட்டபடியே இருந்தேன். 

பொம்மனஹள்ளி விவகாரம் நமக்கு இந்த இடத்தில் அவ்வளவு முக்கியமில்லை. ஹிஜ்ரா விவகாரத்திற்கு வருவோம்.

ஹிந்திக்காரன் பேசிக் கொண்டிருக்க அவனால் வசைபாடப்பட்டுக் கொண்டிருந்த ஹிஜ்ரா வந்து சேர்ந்தார். அவரோடு சேர்ந்து இன்னமும் சிலர் வந்து சேர்ந்தார்கள். ஹிந்திக்காரன் பம்மினான். அவர்கள் அந்த இடத்திற்கு வர மாட்டார்கள் என்று அவன் நம்பியிருந்திருக்கக் கூடும். நான்கைந்து பேர் சூழவும் அவனால் தப்பிக்கவே முடியவில்லை. அவனைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. ஆனால் வடக்கத்திக்காரர்கள் மட்டும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருப்பதேயில்லை. எகத்தாளம் சற்று கூடுதல். மகி பள்ளிக் கூடத்திலிருந்து வரும் போது யாரைப் பற்றியாவது புகார் வாசித்தால் அவனால் புகார் வாசிக்கப்படும் பொடியன் கண்டிப்பாக ஹிந்திக்காரனாகத்தான் இருக்கிறான். பொதுமைப்படுத்தவில்லை. ஆனால் அப்படித்தான் நடக்கிறது. பொது இடங்களில் குழந்தைகள் சேட்டை செய்தால் தென்னிந்தியர்கள் ‘டேய் சும்மா இரு’ என்றாவது சொல்கிறார்கள். வடக்கத்திக்காரர்கள் அடக்குவதில்லை. விட்டுவிடுகிறார்கள். பள்ளியிலும் அப்படியேதான் வளர்கிறார்கள். வளர்ந்த பிறகு சாலைகளிலும் அப்படியேதான் இருக்கிறார்கள். 

சாலையிலேயே மிகப்பெரிய பதாகை வைத்திருக்கிறார்கள். நாற்பதுகளின் நடுவில் இருக்கும் ஒரு ஹிஜ்ராதான் ‘நாயக்’. பதாகையில் அவர் படம்தான் இருக்கும். வேறு எந்தக் கன்னடத் தலைவரின் படமும் இல்லாமல் பின்ணனியில் ஜெயலலிதாவின் படம் போட்டு பெங்களூர் பிரதான சாலையில் பதாகை வைக்க கன தைரியம் வேண்டும். அவர்களிடம் இருந்தது. அந்த நாயக்தான் வந்தார். எச்சிலை உமிழ்ந்தபடியே வந்தவர் கட்டைக்குரலில் ‘ஏனு குரு’ என்றார். அவன் மீண்டும் ஹிந்தியில் பேச ‘ஸாலா’ என்று ஒரு அறைவிட்டார். அவருக்கு முன்பே விவரம் தெரிந்திருக்கக் கூடும். அந்த அறையின் சத்தம் எனக்கு காதுக்குள் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. அத்தனை பெரிய அறை. அதற்கு மேல் அவன் வாயைத் திறக்கவேயில்லை.  

நாயக் கன்னடத்தில்தான் பேசினார். ‘காசு கொடுத்து வந்தா காரியம் முடிஞ்சா கழுவிட்டு போய்ட்டே இரு...ரோட்டுல வந்து சத்தம் போடுற வேலை வெச்சுட்ட....அறுத்து வீசிடுவேன்’.

அந்தக் குடிசையும், அருகாமை குப்பையும், கவிச்சையும் அவரின் முரட்டுத் தனமும், அரைகுறையான வெளிச்சமும் திகிலூட்டுவதாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அவர் சொன்னது எனக்கு வரிக்கு வரி புரிந்தது. கூட்டம் மெல்ல விலகியது. ஹிந்திக்காரன் வண்டியை விலக்கினான். மீறி நின்று கொண்டிருந்த என்னைப் போன்ற கதை கேளிகளை நோக்கி ‘ஓகி..ஓகி’ என்று சில ஹிஜ்ராக்கள் சத்தம் போட்டார்கள். எதுவுமே கண்டுகொள்ளாதது போல ஹெல்மெட்டை தலைக்கு மாட்டிக் கொண்டேன். எந்த இடத்தில் வாய் கொடுக்கிறோம் என்பதில்தான் எல்லாமே இருக்கிறது. சூட்சுமம் தெரியாத ஹிந்திக்காரன்.

5 எதிர் சப்தங்கள்:

mokkarasu said...

கடைசி வரைக்கும் ஹிஜ்ராவுக்கு அர்த்தம் சொல்லவே இல்லீங்களே தல!!

Vaa.Manikandan said...

கூகிள் சொல்லாததையா நான் சொல்லப் போகிறேன்?!

சேக்காளி said...

//‘உன்ரதைக் கிழிச்சு தோரணம் கட்டிவிடுவேன்’//
//..அறுத்து வீசிடுவேன்’.//
+ + + + + + + + + + + + + + + + + +
மற்றும் வன்முறை

Unknown said...


ஹிஜ்ரா? 😢

Unknown said...

‘ஏம்ப்பா இங்கிலீஷ்ல சண்டை போடக் கூடாதா?’

ROFL .. Mudiyala ...