Aug 8, 2016

உயரம்

ஒரு கல்லூரியில் பேச அழைத்திருந்தார்கள். ‘யாரையாவது பேசக் கூப்பிடலாம்’ என்று துறைத்தலைவர் கேட்ட போது ‘இந்த ஆளு காசு வாங்கமாட்டாரு...கூப்பிடலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். துறைத்தலைவர் தொலைபேசியிலேயே அப்படித்தான் சொன்னார். சிறு வயதில் சண்டைகள் வரும் போது நமக்கு அடி விழக் கூடிய தருணத்தில் ‘நீ நல்லவன் அடிக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும்டா’ என்று சொன்ன பிறகு எதிராளிக்கே சந்தேகம் வந்துவிடும். ‘ஒருவேளை நாம அவ்வளவு நல்லவனோ’ என்று யோசனை செய்தபடியே அடிக்காமல் போய்விடுவான். இதுவும் அப்படித்தான். காசு வாங்கமாட்டேன் என்று சொன்னதாக நினைவு இல்லையே என்று குழப்பமாகிக் கொண்டிருந்த போது ‘நாளைக் குறிச்சுக்கட்டுமா?’ என்று கேட்டார். இப்படி யாராவது கிடைத்தால் ஓசியில்ஆ ம்னி பேருந்திலாவது பயணிக்கலாம். அதைக் கேட்பதற்குள்ளாகவே துண்டித்துவிட்டார்.

தமிழ்நாட்டில் இப்பொழுது அதிகமாகத் தேவைப்படுகிறவர்கள் பேச்சாளர்கள்தான். அதிக வருமானமும் அந்தத் தொழிலுக்குத்தான். கொழிக்கிறார்கள். 

வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு சினிமாக் கவிஞரைச் சந்திக்கச் சென்றிருந்தோம். கல்லூரியின் தமிழ்ச் சங்க விழாவுக்கு அவரிடம் நாள் வாங்குவதுதான் நோக்கம். அவர் மெல்ல பிரபலம் ஆகிக் கொண்டிருந்தார். சென்னையிலிருந்து வேலூர் வந்து போவதற்கு ஒரு கார் வேண்டும் என்றார். அது சரிதான். வேலூர் வந்த பிறகு குளித்துத் தயாராவதற்கு நட்சத்திர விடுதியில் அறை வேண்டும் என்றார். அதுவும் சரிதான். அது போக சில ஆயிரங்கள் பணம் வேண்டும் என்றார். அவர் ஒரு அறக்கட்டளை நடத்துவதாகவும் கிராமப்புறங்களில் கவிஞர்களை ஊக்குவிப்பதாகவும் சொன்னார். தமிழாசிரியை அழைத்து அன்னாரது கோரிக்கைகளைச் சொன்ன போது ‘மத்த சங்கம்ன்னா கல்லூரியில் காசு தருவாங்க..தமிழ் சங்கத்துக்கு எல்லாம் அவ்வளவு பணம் தர மாட்டாங்க’ என்றார். அதன் பிறகு பக்கத்து ஊர்க் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவரை அழைத்து மொக்கை போடவிட்டதோடு அந்தச் சங்கம் அந்த ஆண்டுக்கான சங்கை ஊதியது.

அந்தக் கவிஞர் அப்பொழுது கேட்ட சில ஆயிரங்கள் என்பதெல்லாம் இன்றைய காலகட்டத்துக்கு வெகு குறைவு. ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒரு கூட்டத்துக்கு நாற்பதாயிரம் ரூபாய் வாங்குகிறார். ஐ.ஏ.எஸ் உயரதிகாரியின் மாதாந்திரச் சம்பளம் எவ்வளவு என்று கூகிள் அடித்துப் பார்த்துக் கொள்ளலாம். சம்பளம் போக ஓட்டுநர், உள்ளூர் கார் வசதி, இத்யாதி இத்யாதி. இவை போக இந்தச் சமூகத்தை திருத்துவதற்காக மாதம் ஒன்றேகால் லட்சம் வரைக்கும் கூடுதலாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தவறு என்று எப்படிச் சொல்வது? சொல்லவுமில்லை. இந்தக் கூட்டங்களுக்காகத் தயார் செய்ய வேண்டியிருக்கிறது. நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறது. பயணிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு ஒரு விலை வைக்கிறார்கள்.

எங்கள் ஊர் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளச் சொல்லி ஒரு நடிகரைக் கேட்டிருக்கிறார்கள். வயது முதிர்ந்த வாய்ப்புகள் அதிகமும் இல்லாத நடிகர் அவர். ஒரு நாள் கால்ஷீட்டுக்கு எவ்வளவு வாங்குகிறாரோ அவ்வளவு கொடுத்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அது போக சென்னையிலிருந்து வந்து செல்வதற்கான விமானக் கட்டணம் தனி. ஒரு நாள் கால்ஷீட்டுக்கு அவர் ஒன்றே முக்கால் லட்சம் வாங்குகிறாராம். தலை சுற்றியது. ‘அவர் படங்களில் நடிச்சே பல வருஷமாச்சே’ என்று நாம் சொன்னால் கேட்கவா போகிறார்கள்? இன்னமும் நடித்துக் கொண்டிருப்பது போலவே ஒரு பில்ட்-அப் கொடுத்து ‘நிக்க நேரமில்லை’ என்று ஒரு தாங்கு தாங்கி கறந்துவிடுகிறார்கள்.

ஒரு நாள் கூத்துக்கு ஒருவரை அழைத்து வருவதற்கு மட்டுமே இத்தனை செலவு செய்ய வேண்டுமா? துணிக்கடைக்காரன், நகைக்கடைக்காரன் அழைத்து வருகிறான் என்றால் ஒரு அர்த்தமிருக்கிறது. உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு எதற்கு இவ்வளவு செலவு? சமீபத்தில் ஒரு அரசுப் பள்ளியிலிருந்து அழைத்திருந்தார்கள். ‘முப்பத்து இரண்டாயிரம் இருந்தால் சத்துணவுக் கூட்டம் கட்டிடுவோம்’ என்றார்கள். அரசாங்கம் காசு தருவதில்லையா என்று கேட்டால் SSA திட்டத்திலிருந்து வருடம் இருபதாயிரம் வருகிறதாம். அதைத்தவிர பிற கட்டிடங்கள் என்றால் தனியாக விண்ணப்பம் அனுப்பி அது ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் பிறகு கட்டிட வேலை ஆரம்பிக்க பல வருடங்கள் ஆகும் என்றார்கள். நிலைமை இப்படி இருக்க, இதே ஊரில்தான் ஒரு நடிகரை அழைத்து வந்து கூட்டம் சேர்க்க லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள். நாம் எதையும் கண்டுகொள்ளக் கூடாது. விட்டுவிட வேண்டும். வெளிப்படையாக எழுதினால் சங்கடம்தான்.

அரசுப்பள்ளிகளும் கல்லூரிகளும் பெருந்தலைகளை எந்தக் காலத்திலும் அழைத்து நிகழ்ச்சி நடத்த முடியாது. பெரும்பாலான சமூக சீர்திருத்தவாதிகள் பணத்தை வாங்கிக் கொண்டுதான் மேடையில் முழங்குகிறார்கள். எல்லா ஊர்களிலும் இதே கதைதான். தொழிலதிபர்கள் வாழும் திருப்பூர் மாதிரியான ஊரெல்லாம் சொர்க்க பூமி. கொஞ்சம் வழவழா கொழகொழாவென்று பேசத் தெரிந்தால் கல்லா கட்டிவிடலாம். காசுக்கேற்ற பணியாரம் என்பதெல்லாம் லுலுலாயிக்கு. இப்பொழுதெல்லாம் Brandக்கு ஏற்ற காசு. சிவக்குமாரைவிடவும் ராமாயணத்தை சிறப்பாக சொற்பொழிவாற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிவக்குமாரை அழைத்துப் பேச வைத்தால்தான் கூட்டம் வருகிறது என்கிறார்கள். ஈரோடு புத்தகக் கண்காட்சியில் கன கூட்டமாம். 

மாணவர்களிடம் இதைத்தான் பேசினேன். Branding. திறமை, புண்ணாக்கு, பருத்திக் கொட்டை என்பதெல்லாம் அப்புறம். முதலில் நமக்கென்று ஒரு மரியாதை இருக்க வேண்டும். ‘இவன் ஒரு ஆளுமை’ என்ற நினைப்பு உருவாக வேண்டும். அப்பொழுதுதான் நாம் எதைச் சொன்னாலும் மதிப்பார்கள். பொருட்படுத்துவார்கள். இல்லையென்றால் காற்றில் கத்தி சுற்றுகிற கதைதான். அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்கிற முக்கால்வாசிப்பேர் இருளில் ஒளிந்திருப்பதும், அரைகுறைகளும் வேகாதவைகளும் துள்ளிக் கொண்டிருப்பதும் Branding என்கிற ஒரு விஷயத்தினால்தான். அட்டைக்கத்திகள் தங்களை ப்ராண்டாக மாற்றிக் கொள்ளும் போது அது போலியான ப்ராண்டாக மாறிவிடுகிறது. உண்மையான திறமையாளன் தன்னை ப்ராண்டாகவும் மாற்றிக் கொள்கிறபட்சத்தில் அவனது வீச்சு இந்தச் சமூகத்தில் மிகப்பெரியதாக இருக்கும்.

நம் சமூகத்தில் நிறையப் பேர் இந்தவொரு அம்சத்தில்தான் தங்களைச் சுருக்கிக் கொள்கிறார்கள். வெட்கம், அடக்கம் என்று எந்தப் பெயரை வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளலாம். திறமையாளர்கள்தான். ஆனால் வெளியில் காட்டிக் கொள்வதில்லை. திறமையாளர்களை அடையாளம் கண்டுபிடித்து இந்த உலகம் தூக்கிவிட்டுவிடும் என்பதெல்லாம் லட்சத்தில் ஒருவருக்குத்தான் சாத்தியமாகும். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அது நடக்கவே நடக்காது. நம் திறமையை நாம்தான் வெளிப்படுத்த வேண்டும். நம் ஆளுமையை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். வாசிப்பதும், உலகை கவனிப்பதும், தொடர்புகளை உருவாக்கிக் கொள்வதும் இதற்கான முதல்படிகள். 

நாகரிகத்தோடு நம்மை வெளியுலகில் பிரஸ்தாபித்துக் கொள்ளாமல் எப்படி நம்மை வெற்றியாளனாக மாற்றிக் கொள்ள முடியும் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. 

இப்படி நிறையப் பேச வேண்டியிருந்தது. ஓரளவு பேசினேன். பெரும்பாலும் கிராமப்புற மாணவர்கள்தான். திரும்ப வரும் போது நான்கைந்து மாணவர்கள் பேருந்து நிலையம் வரைக்கும் வந்தார்கள். பேருந்து நிலையக் கடையில் தேநீர் பருகினோம். பேருந்து வந்த போது ‘என்ன சார்? இந்த வண்டியிலயா போறீங்க?’ என்றார்கள். ஆமாம் என்றேன். ‘அடுத்த தடவை கெத்தா வந்து இறங்குங்க சார்’ என்றான் ஒரு மாணவன். ப்ராண்ட் என்பது வெட்டி பந்தா இல்லை. நம்முடைய ப்ராண்டிங் நேர்மையானதாக இருக்க வேண்டும். போலித்தனமில்லாமல், நம் இயல்பை நம் ஆளுமையை அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் உள்ளது உள்ளபடியே வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும். விளக்கிய போது சிரித்துக் கொண்டான். புரிந்திருக்கும் என நினைத்தேன். கையை உயர்த்திக் கட்டை விரலைக் காட்டினான். கண்டிப்பாக புரிந்திருக்கும்.

3 எதிர் சப்தங்கள்:

kailash said...

எங்களுடன் முதுகலை படிக்கும் பொழுது இப்படி பிராண்டிங் செய்து கொண்ட நண்பன் தான் இன்று ஒரு கம்பனியில் VP ஆக இருக்கின்றான் நாங்கள் இன்னமும் அதே டீம் மெம்பெர் தான் :-) . Those who do branding alone succeeds and falls down after some time where as the one with talent alone struggles a lot to reach top where as the ones with talent and branding reach top and are remembered forever.You can map anyone under this category mostly .

சேக்காளி said...

//நாகரிகத்தோடு நம்மை வெளியுலகில் பிரஸ்தாபித்துக் கொள்ளாமல் எப்படி நம்மை வெற்றியாளனாக மாற்றிக் கொள்ள முடியும்//
இது அது இல்லியே??????????

Vinoth Subramanian said...

Very true.