Aug 19, 2016

ஐ கேன் டாக் இங்கிலீஷ்..

முதன் முதலாக வெளிநாடு செல்லும் போது எங்கள் வீட்டில் இருந்தவர்களுக்கு ஆச்சரியம்.  ‘இங்கிலீஷ் பேசுவியா?’ என்றார்கள். ஐ கேன் டாக் இங்கிலீஷ், ஐ கேன் வாக் இங்கிலீஷ் என்று சொன்னதை அவர்கள் நம்பிய மாதிரி தெரியவில்லை. எப்படியாவது நிரூபிக்க வேண்டுமல்லவா? அதற்காக வேண்டுமென்றே வீட்டிலிருந்து மேலாளரை அழைத்து ஆங்கிலத்தில் பேசி பீலா விட வேண்டியதாகிவிட்டது. அவர்கள் நம்பாமல் இருந்ததற்கு காரணமிருக்கிறது. ஷ்ரேயா ரெட்டி என்றொரு நடிகை இருந்தார் அல்லவா? விஷாலுடன் ஒரு படத்தில் நடித்தார். அவர் எஸ்.எஸ் மியூஸிக் என்ற சேனலில் ஒரு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தார். மதிய நேரத்தில் அழைத்துப் பேசினால் அதைப் பதிவு செய்து இரவில் ஒளிபரப்புவார்கள். 

பிரச்சினை என்னவென்றால் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். ஆண்களுடன் பேசினாலே தடுமாறுவேன். அந்தப் பெண்ணுடன் - அதுவும் அந்தக் கரடுமுரடான குரலின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். பார்க்கிற வரைக்கும் பார்த்துவிட்டு ‘யா..யெஸ்...யெஸ்’ என்று இரண்டே சொற்களை வைத்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் பேசி இணைப்பைத் துண்டிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அந்தச் சமயத்தில் வீட்டில் யாருமில்லை என்றாலும் வியர்வையும் படபடப்பும் ஒரு வழியாக்கியிருந்தன. அந்த நிகழ்ச்சியை எப்படியும் ஒளிபரப்பிவிடக் கூடாது என்று வேண்டாத சாமியில்லை. ஆனால் அன்றைய தினம் தம்பி மிகச் சரியாக அந்தச் சேனலை மாற்றினான். அம்மா, அப்பா, நான், தம்பி என நான்கு பேரும் இருக்கிறோம். ‘ஐ ஆம் மணிகண்டன் ஃப்ரம் கரட்டடிபாளையம்’ என்று சொன்னவுடன் எல்லோரும் தயாராகிவிட்டார்கள். ஒன்றரை வரியிலேயே குரலை வைத்து இவன்தான் என்ற முடிவுக்கும் வந்துவிட்டார்கள். பேயறைந்த மாதிரி அமர்ந்திருந்தேன். நாற்பது வினாடிகள்தான் ஒளிபரப்பினார்கள். மிச்ச மீதியெல்லாம் கத்தரிந்திருந்தார்கள். ஆனாலும் அந்த நாற்பது வினாடிகளைக் கடப்பதற்குள் ஏதோ பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதத் தேர்வைக் கடப்பது போல இருந்தது. 

பாட்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய போது அம்மா ‘என்னடா இது ரஜினி இங்கிலீஷ் பேசற மாதிரி யா யா, யெஸ் யெஸ்ஸூன்னு பேசற’ என்றார். அப்பொழுது எம்.டெக் படிப்பில் சேர்ந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தேன். என்ன பதிலைச் சொல்வது என்று தெரியவில்லை. தம்பி நக்கல் அடித்தான். அமைதியாக இருந்தேன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உள்ளூர வருத்தம்தான். அப்பொழுது அவர்களுக்கு உண்டான அதே சந்தேகம்தான் எப்பொழுதும். 

ஆங்கிலம் என்ன சிக்காத சரக்கா? கிடைக்கவே கிடைக்காது என்பதற்கு. பழகப் பழகத்தான் வரும். 

பனிரெண்டாம் வகுப்பு வரைக்கும் தமிழ் வழிக் கல்வி. அதன் பிறகு பொறியியல் படிப்பில் எப்பொழுதாவது செமினார்களில் பேசுவதோடு சரி. அதுவும் கூட சொதப்பல்கள்தான்- இரண்டாம் ஆண்டு படிக்கும் போது கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் ஜெனிடிக் அல்காரிதம் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. கட்டுரை தயாரிக்கும் வேலை என்னுடையது. அது குறித்து அரங்கில் பேசுவது ராஜேஷூடையது. அவன் ஊட்டிக்காரன். கான்வெண்ட்டில் படித்திருந்தான். அதனால் அவனைக் கூட்டாளியாக்கியிருந்தேன். கடைசி வரைக்கும் ஒரு முறை கூட அந்தக் கட்டுரையைப் புரட்டிக் கூட பார்க்கவில்லை. மேடையில் ஏறி நின்று படுகேவலமாகத் திணறிவிட்டு ஒலி வாங்கியிலேயே ‘இப்பொழுது என் நண்பன் விவரிப்பான்’ என்று சொல்லி தலையில் பாறாங்கல்லை இறக்கினான். அக்குளில் லட்சுமி வெடியை வைத்துக் கொளுத்துவான் என்று துளி கூட எதிர்பார்க்கவில்லை. இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கி ஓடி வந்தவன் சேலத்தில் வந்துதான் நின்றேன். ஆங்கிலம் அவ்வளவு கேவலப்படுத்திவிட்டது.  

எம்.டெக் படிக்கும் போதாவது அழகான வடக்கத்திப் பெண் ஒரே வகுப்பில் படித்திருக்கலாம். அதுவும் நடக்கவில்லை. வடக்கத்தி பையன்கள் வகுப்பில் இருந்தார்கள். அவர்களுடன் பேசுவதற்கு பேசாமலேயே இருந்து தொலையலாம் என்று பேசவில்லை. அப்புறம் எப்படி ஷ்ரேயா ரெட்டியுடன் மட்டும் பேச முடியும்? திணறத்தான் வேண்டும். இப்பொழுதும் கூட மிண்டி, லூக்கா அல்லது ப்ரையனுடன் தனியாகத் தொலைபேசியில் பேசுவதற்கு நடுக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் சம்பளம் கொடுக்கிறார்கள். ஒன்றாம் தேதியானால் வங்கிக் கணக்கு நிறைய வேண்டுமானால் பேசித்தான் தீர வேண்டும். பேசிவிடுகிறேன்.

இப்படி திக்கித் திணறிப் பேசிப் பழகியதுதான். என்னைப் போலவேதான் நம் ஊர்ப்பையன்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொள்வதுண்டு. இலக்கண சுத்தியாக பேசத் தெரியாவிட்டாலும் ஓரளவு சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன் என்றுதான் நினைக்கிறேன். எதற்கு இந்தக் கதையெல்லாம் என்று கேட்கத் தோன்றுமே? 

கடந்த வருடம் கோவாவில் நடைபெற்ற ‘பப்ளிஷிங் நெக்ஸ்ட்’ நிகழ்வின் சலனப்பட இணைப்பு கிடைத்தது. மேடை ஏறும் போது சற்று பயமாகத்தான் இருந்தது. வேட்டி கட்டிச் சென்றிருந்தேன். தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதிநிதி. சொதப்பினால் அந்தக் கூட்டத்தின் முன்பாக தமிழர்களின் மானத்தை வாங்கியது மாதிரிதான். ஆனால் கடைசியில் சந்தோஷமாகத்தான் இருந்தது. கூட்டத்தை சிரிக்க வைத்துவிட்டேன். சலனப்படம் ஒரு மணி நேரம் ஓடுகிறது. ஆனால் எப்படிப் பேசினேன் என்று ஓட்டிப் பார்ப்பதற்கு வெட்கமாக இருக்கிறது. ஒரு முறை கூட பார்க்கவில்லை. ஆனால் அம்மாவிடம் ஓட்டிக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். 

இந்த முறை பப்ளிஷிங் நெக்ஸ்ட் செப்டம்பர் மாதம் 15-17 தேதிகளில் நடைபெறுகிறது. கொச்சியில்தான் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். பயனுள்ளதாக இருக்கும். நான் செல்லவில்லை. ஆனால் ஒரு போட்டிக்கு நடுவராக இருக்கச் சொல்லியிருக்கிறார்கள். கெளரவம்தான். அங்கே செல்ல வேண்டியிருக்காது. பெங்களூரிலிருந்தே செய்துவிடலாம்.


ஒரு மணி நேரம் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. பார்த்துவிட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல்கிறேன். நேரமிருக்கும் போது பார்க்கலாம். ஏதேனும் உடான்ஸ் விட்டிருந்தால் பொறுத்தருள்க. ஆமென்!

8 எதிர் சப்தங்கள்:

Nisha said...

Nice Mani!

ABELIA said...

உடான்ஸ்சா... அப்படி எல்லாம் எதுவுமே இல்லை.. நல்லாதான் பேசுனீங்க.. ஆனால் ஒவ்வொருமுறை பேசி முடிச்சதும் தண்ணி குடிச்சீங்க... அங்கதான் நிக்கறான் தமிழன்..!

சூப்பரா பேசுனீங்க மணிகண்டன் சார். !

சுதா சுப்பிரமணியம் said...

Romba edharthama irukku nga manikandan. Neenga confident ah pesaradhu really nice to watch.

Avargal Unmaigal said...

மணி நீங்க நல்லாதான் பேசினீங்க ஆனால் அதே சமயத்தில் நீங்க நெர்வஸாக இருந்தீங்க... ஆனால் பேச பேச சரியாகிவிடும்

செ. அன்புச்செல்வன் said...

மிக அருமையாகத்தான் பேசியிருக்கிறீர்கள் சார்...

KSB said...

22.22 Started..

Anonymous said...

Just a year back, I saw your confident Tamil videos... Very important in communication, even if talking to a headmaster of govt school , is be erect in your posture, more specifically try to gain height while talking., this will kill every other negative issues of body language..

Unknown said...

english is ok but body language is looking like a government school student talking infront of a convent school headmaster.

English is like translating tamil to English..