ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று பெருமாள் முருகனுடனான உரையாடல் ஒன்று டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக கவுண்டர் இனத்தை அவமானப்படுத்திவிட்டதாகச் சொல்லி ஒரு கூட்டம் கொளுத்திப் போட பெருமாள் முருகனின் எந்த எழுத்தையுமே படித்திராத பெருங்கூட்டம் அவரது தலையைக் கொய்துவோம் கதையை முடிப்போம் என்று கிளம்பியது. சங்காத்தமே வேண்டாம் என்று ‘பெருமாள் முருகன் செத்துட்டான் போங்க’ என்று அடங்கிக் கொண்டார். தனது அத்தனை படைப்புகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் இனி எதையும் எழுதப் போவதில்லை என்றும் அவர் அறிவித்த போது தனிப்பட்ட முறையில் மிகவும் வருந்தினேன்.
கொங்கு வட்டாரத்துக்கும், அதன் மொழிக்கும், பண்பாட்டு கூறுகளுக்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தவர் பெருமாள் முருகன் என்று எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்ல முடியும். அவரது கொங்குவட்டாரச் சொல்லகராதிதான் இன்றைய தினம் வரைக்கும் கொங்குவட்டார மொழிக்கான ஒரே உருப்படியான சொல்லகராதி. பிற எழுத்தாளர்கள் எழுதிய கொங்குச் சிறுகதைகள், தலித் பற்றிய கொங்குச் சிறுகதைகள் ஆகியவற்றைத் தொகுத்து புத்தகமாக்கியதும், தி.முத்துச்சாமிக் கோனாரின் கொங்குநாடு என்ற புத்தகத்தைப் பதிப்பித்ததும் பெ.முதான். கொங்கு நாட்டின் வட்டார வழக்குகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் என இண்டு இடுக்குகளையெல்லாம் தனது படைப்புகளின் வழியாக ஆவணப்படுத்துகிற வேலையையும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தவரை முடக்கி ஓரத்தில் அமர வைத்துவிட்டார்கள் என்பதுதான் வருத்தம்.
இன்றைக்கும் கூட ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் எழுதுகிற சில அறிவாளிகள் ‘பெருமாள் முருகனை நான் படித்ததேயில்லை. ஆனால் இவரைப் போன்ற ஆட்களை எழுத விடக் கூடாது’ என்று எழுதுகிறார்கள். ‘நீதான் படிக்கவே இல்லையே..அப்புறம் எப்படி முடிவுக்கு வந்த?’ என்றெல்லாம் கேட்க முடியாது. ஏதாவது ஒரு சித்தாந்தத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அறிவைவிடவும் உணர்ச்சிதான் பெரிதாக இருக்கும். உணர்ச்சியைத் தூண்டிவிடுகிற வகையில் பேசத் தெரிந்த எவனாவது ஒருவன் கிளப்பிவிட்டால் போதும். அதையே பிடித்துக் கொள்வார்கள். தம் கட்டுவார்கள். ஜென்மத்துக்கும் மாற மாட்டார்கள். இவன் இதை எழுத வேண்டும், அதை எழுதக் கூடாது என்பதை அருவாளும் கொடுவா மீசையும் முடிவு செய்யக் கூடாது. அதுதான் பெருமாள் முருகன் விவகாரத்தில் அதுதான் நடந்தது. தோளில் துண்டு போட்டிருந்தவர்கள் எல்லாம் ‘நீ எழுதக் கூடாது’ என்று பஞ்சாயத்து நடத்தினார்கள்.
சர்ச்சையை உருவாக்குவதற்காகவே பெருமாள் எழுதியதாகச் சொன்னவர்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. நேர்பேச்சிலும் சரி, எழுத்திலும் துளி கூட அதிராதவர் பெருமாள் முருகன். சர்ச்சையை உண்டாக்கி தனக்கான இடத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இயல்பாக எழுதிச் சென்ற நாவலில் ஒரு பகுதியை அவருக்கு ஆகாதவர்கள் பல்லாயிரக்கணக்கில் பிரதி எடுத்து திருச்செங்கோடு பகுதிகளில் விநியோகித்தார்கள். அந்தப் பக்கங்களை மட்டும் வாசித்தவர்கள் பெருமாள் முருகனுக்கு எதிராகப் பொங்கினார்கள். யார் விநியோகித்தார்கள்? பெருமாள் முருகனை முடக்க வேண்டிய அவசியம் என்ன என்பதையெல்லாம் தனியாக விவாதிக்க வேண்டும்.
பிரச்சினைக்கான பின்னணியைப் புரிந்து கொண்டு பெருமாள் முருகனுக்கு ஆதரவாக எழுதிய போது ‘இவனும் அவரும் ஒரே சாதிக்காரங்க..அதனால் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக எழுதுகிறான்’ என்று வாயை அடைத்தார்கள். சொந்தச் சாதியைக் குறித்து அவதூறு செய்திருக்கிறார் என்றால் பெருமாள் முருகனுக்கு எதிராகத்தானே நிற்க வேண்டும்? ஏன் பெருமாள் முருகனை ஆதரிக்க வேண்டும்? பெருமாள் முருகனை ஆதரித்து எழுதியதற்காக உள்ளூரில் எவ்வளவு எதிர்ப்பு வந்தது என்பது என் குடும்பத்துக்குத் தெரியும். இன்றைக்கும் பெருமாள் முருகனை ஆதரிக்கக் காரணம் அவரது எழுத்தில் பகிஷ்கரிக்கப்படுகிற அளவுக்கு துவேசம் மிகுந்ததில்லை என்பதால்தான். அவரது புத்தகங்களை வாசித்திருக்கிறேன், அவரது பங்களிப்பு கொங்கு மண்டலத்துக்குத் தொடர்ந்து அவசியம் என்று முழுமையாக நம்புகிறேன். அதுதான் காரணம்.
ஒருவேளை நமக்கு பிடிக்கவில்லை என்றால் எழுத்தையும் எழுத்தாளனையும் விமர்சனம் செய்வதும், கண்டனம் தெரிவிப்பதும் தவறே இல்லை. எதிர்த்து உருவப்பொம்மையைக் கூட கொளுத்தலாம். புத்தகத்தை எரிக்கலாம். ஆனால் குறைந்தபட்சமாகவேனும் வாசித்துவிட்டு எதிர்க்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. அந்தப் படைப்பாளியின் மொத்தப் படைப்புளையும் வாசிக்காவிட்டால் தொலைகிறது. குறைந்தபட்சம் பிரச்சினைக்குரிய புத்தகத்தையாவது முழுமையாக வாசித்துவிட்டுப் பேசலாம். வெறும் பதினாறு பக்கங்களை வைத்து பெருமாள் முருகனுக்குக் கட்டம் கட்டினார்கள். இந்த விவகாரம் கொழுந்துவிட்ட எரிந்த சமயத்தில் இதையெல்லாம் பேசவே முடியாது. வாய் மீதே வெட்டுகிற வெறியில் திரிந்தார்கள். இன்றைக்கும் கூட புரிந்து கொண்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் தைரியமாக பேசலாம்.
ஜூலை ஐந்தாம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. எழுதுகிறவன் எதை எழுத வேண்டும் என்பதை போனாம் போக்கியெல்லாம் முடிவு செய்ய முடியாது. தேவைப்பட்டால் அதற்கான ஒரு கமிட்டியை நியமித்து அவர்கள் முடிவு சொல்லட்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதுதான் முக்கியம். நாம் உணர்வுப்பூர்வமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எழுதுகிறவன் மீது பகைமை இருந்தால் அவனை மிக எளிதாகக் காலி செய்துவிட முடியும். உணர்ச்சிகரமாகப் பேசி பெருங்கூட்டத்தைத் திரட்டிவிட முடியும். பணம் படைத்தவர்கள், அரசியல்வாதிகள், சாதியத் தலைவர்கள், மதவாதிகள் என்னும் அரைமண்டைகள் சேர்ந்தால் யாரை வேண்டுமானாலும் ஒழித்துக் கட்டிவிடக் கூடும். இந்தத் தருணத்தில் இத்தகையதொரு தீர்ப்பு அவசியமானது.
‘நீ யாருடா அடுத்தவன் எழுதுவதை முடிவு செய்வதற்கு’ என்று பொடனி அடியாக அடித்திருக்கிறார்கள். நூற்றைம்பது பக்கத் தீர்ப்பு. மனுதாரர்களாக ச.தமிழ்ச்செல்வனும் பெருமாள் முருகனும் இருக்கிறார்கள். எதிர்தரப்பில் இந்து முன்னணி, தீரன் சின்னமலை பேரவை யுவராஜ், இன்னபிற கொங்குநாட்டுச் சங்கங்களை எல்லாம் இணைத்திருக்கிறார்கள். தீர்ப்பின் கடைசி வரியாக ‘Let the author be resurrected to what he is best at. write’ என்று முடித்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் பெருமாள் முருகனுடனான வாசகர் சந்திப்பை பெங்குயின் பதிப்பகம் ஏற்பாடு செய்திருக்கிறது. இதுவொரு தொடக்கம். இனி பெருமாள் முருகன் எழுதட்டும். முன்பைவிடவும் அதிக உற்சாகத்துடனும் வேகத்துடனும் எழுதட்டும். அவர் முன்னேர். அவரைப் பின்பற்றி கொங்கு மண்டலத்திலிருந்து வட்டார எழுத்தாளர்கள் படையெடுக்கட்டும். சொலவடைகள், சொற்கள், கலாச்சாரம், பிராந்தியச் சிக்கல்கள், கொண்டாட்டங்கள், விழாக்கள், மனிதர்கள் என அனைத்தையும் எழுத்தாகப் பதிவாகட்டும். அதைத்தான் மனப்பூர்வமாக எதிர்பார்க்கிறேன். அதுதான் காலத்தின் தேவையும் கூட.
பெருமாள் முருகனின் வழக்கு எழுதுகிறவர்களுக்கும் கருத்துச் சொல்கிறவர்களுக்கும் எதிர்காலத்தில் ஒரு பாதுகாப்பு அரணாக இருக்கும். தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆக முடியாது என்பதே மிகப்பெரிய ஆசுவாசம்தான். வழக்கை நடத்திய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் ச.தமிழ்செல்வனுக்கும் பெருமாள் முருகனுக்கும் வாழ்த்துக்கள். அவர்களோடு அரணாக உடனிருந்த அத்தனை பேருக்கும் நன்றி. நீதிபதிகளுக்கு வணக்கம்.
7 எதிர் சப்தங்கள்:
MIKKA MAKIZHCHI
நன்றி மணிகண்டன். உங்களைப் போலும் உண்மை புரிந்தவர்கள் இருப்பதாலேயே பெருமாள் முருகன் போலும் கூர்மையான எழுத்தாளர்கள் எழுதவும் இயங்கவும் முடிகிறது.
அவர் வெளியில் வந்துவிட்டது மகிழ்ச்சியானது. வழக்கை நடத்திய தமிழ்ச்செல்வனுக்கு நன்றி சொன்னது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சிதான் என்றாலும்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இதன் பின்னணியில் இருந்து மாநிலம் முழுவதும் இயக்கம் நடத்தியதை மற்றவர்களைப் போல நீங்களும் மறந்துவிட்டீர்களே என்பதுதான் கொஞ்சம் என்னைப் போன்றவர்களுக்கு சங்கடமாக உள்ளது. எனினும் எழுதியமைக்கு நன்றியும் வணக்கமும்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை வேண்டுமென்று தவிர்க்கவில்லை. திருத்திவிட்டேன். புரிந்துணர்வுக்கு நன்றி திரு.முத்து நிலவன்.
//வழக்கை நடத்திய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் ச.தமிழ்செல்வனுக்கும் பெருமாள் முருகனுக்கும் வாழ்த்துக்கள். அவர்களோடு அரணாக உடனிருந்த அத்தனை பேருக்கும் நன்றி//
"பதிவர்" ன்னு சொல்ல சந்தோசமாத்தான் இருக்கு.
Maghilzhchi
இந்த அனுப்பர், கம்மா, காப்பிலியர், வல்லம்பன் இனத்து மக்கள் எல்லாம் முறை தவறி பொறந்தவங்கன்னு எழுதினாலும் தப்பில்லை! இப்படி நடக்கும் திருமணம் முதலான சடங்குக்கு சாட்சியா நின்னு பிள்ளைபேறு பார்த்தவர் போல எழுதுவது தான் முறையா?
அவங்க இனம்ன்னு எழுதினா கேட்கலை... பலர் பொறப்புக்கு சந்தேகம் வர வெச்சு நடத்தும் பிழைப்புக்கு முற்போக்கு எழுத்தாளர் தவிர வேற எதுவும் பேரு இல்லையா?
Hope you have read - http://www.vinavu.com/2015/06/12/thaali-a-historical-literary-perspective
அனுப்பர், கம்மா, காப்பிலியர், வல்லம்பன் ஆகிய சாதிகளில் உறவு விட்டுப்போகக் கூடாது (நிலம் போய் விடக் கூடாது என்பதன் வேற்றுவடிவம்) என்பதற்காக பருவ வயதை அடையாத சிறுவன் குமரிப்பெண்ணுக்குத் தாலி கட்ட வைக்கப்படுகிறான். அச்சிறுவன் வயதுக்கு வரும் வரை அவனுடைய சித்தப்பனோ, தந்தையோ, அல்லது நெருங்கிய உறவினரோ அப்பெண்ணோடு உறவுகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். அக்குழந்தைகள், தாலி கட்டிய சிறுவனுக்குப் பிறந்தவர்களாகக் கருதப்படுவர்.
check this link, Perumal murgan manipulated the history without knowing the facts.
https://youtu.be/HWDVqWz97tU
https://youtu.be/DZEYbWdoRyM
https://youtu.be/W8wvvjYnTHg
https://youtu.be/DZEYbWdoRyM
Post a Comment