Aug 22, 2016

குண்டுச்சட்டிகள்

கோயமுத்தூர் செல்லும் வேலை இருந்தது. காலையிலிருந்து அலைந்து திரிந்துவிட்டு மாலையில் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த போது வழக்கமான உரையாடலுக்குப் பிறகு மகனைப் பற்றி புலம்பத் தொடங்கினார். அவன் பி.ஈ முடித்துவிட்டு கடை ஆரம்பிப்பதாகச் சொன்னார். கைவினைப் பொருட்களுக்கான கடை. அவனுக்கு அதில் ஆர்வமிருக்கிறது. பொருட்களையும் அவனே செய்கிறான். ஆள் வைத்து பொருட்களைத் தயாரித்து விற்பனையைத் தொடங்க விரும்புவதாகச் சொன்னான். ‘பெங்களூர்ல கூட காவேரி எம்போரியம் மாதிரி நிறைய இருக்குங்களண்ணா? அப்படித்தான் ப்ளான்’ என்றான். தெளிவாகத்தான் இருப்பதாகத் தோன்றியது. 

அப்பாவுக்குத்தான் குழப்பம். ஒவ்வொரு வீட்டிலும் வருகிற குழப்பம்தான். எங்கள் வீட்டிலும் அப்படியொரு குழப்பம் இருந்தது. பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சியில் சேர விரும்பினேன். தமிழ் வாத்தியாராகி வேட்டி கட்டிக் கொண்டு டிவிஎஸ்50 வண்டியில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது கனவு வேலையாக இருந்தது. மடை மாற்றிவிட்டார்கள். பொறியியல் படிப்பை முடிக்கும் தருவாயில் ஊரிலேயே ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றுதான் விரும்பினேன். ‘தொழில் எல்லாம் கஷ்டம்..வேலைக்கு போற வழியைப் பாரு’ என்று அறிவுரை சொன்னார்கள். நம் ஊரில் கேட்காமலேயே அறிவுரை சொல்லுகிற ஆட்கள்தான் அதிகம். அம்மாவும் அப்பாவும் ‘இவன்கிட்ட கொஞ்சம் சொல்லிட்டு போங்க’ என்றால் கேட்கவா வேண்டும்? ஈயத்தை உருக்கி காதுகள் வழிய வழிய ஊற்றினார்கள். எந்த மறுப்பும் சொல்லாமல் ஹைதராபாத்துக்கு மூட்டை கட்டிவிட்டேன். சம்பளம், நல்ல வேலை, ஒரேயொரு மனைவி, குழந்தை - ‘இதுவே நல்லாத்தானே இருக்கு’ என்று குண்டுச்சட்டியில் படுவேகமாக குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். என்ன பிரச்சினையென்றால் ‘மணியண்ணன் மாதிரி செட்டில் ஆகப் பாரு’ என்று சில பொடியன்களிடம் விரல் நீட்டி அக்கம்பக்கத்தில் உதாரணம் ஆக்குகிறார்கள். எவ்வளவு பெரிய தவறைச் செய்கிறார்கள் என்று நினைத்தால் துக்கம் தொண்டையை அடைக்கிறது.

கோயமுத்தூர்க்காரரும் பேச்சுவாக்கில் ஒன்றைச் சொன்னார் பாருங்கள்- ‘படிச்ச படிப்புக்கு சம்பந்தமிருக்கிற வேலையைச் செய்ய வேண்டாமா?’ என்றார். தூக்கிவாரிப் போட்டது. இப்படியெல்லாம் ஒரு வரையறை வைத்தால் இந்த நாட்டில் முக்கால்வாசிப்பேருக்கு வேலையே இருக்காது. மின்னியல் மற்றும் மின்னணுவியல் பாடங்களைக் குப்புறப் படுத்தெல்லாம் படித்தேன். இன்றைக்கு கரண்ட்டுக்கும் வோல்டேஜூக்கும் என்ன சம்பந்தமென்று அடிப்படைக் கேள்வியைக் கேட்டால் கூட சில வினாடிகள் பிதுக்கா பிதுக்காவென்று விழி பிதுங்காமல் சொல்ல முடியாது. இந்த லட்சணம்தான் கிட்டத்தட்ட தொண்ணூற்றைந்து சதவீதம் பேருக்கு. பி.ஈ, எம்.பி.ஏ, எம்.சி.ஏ என்ற படிப்புகள் எல்லாமே பன்னாட்டு நிறுவனங்களுக்குள் நுழைந்து கழுத்தில் அடையாள அட்டையைத் தொங்கவிடுவதற்கான நுழைவுச்சீட்டுக்கள். அவ்வளவுதான். பெரும்பாலான நிறுவனங்களில் பெரும்பாலான வேலைகளைச் செய்வதற்கு நம்முடையை கல்லூரி படிப்பெல்லாம் அவசியமே இல்லை. கொஞ்சம் ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்தால் ப்ளஸ் டூ முடித்த பையனே கூட இந்த வேலையையெல்லாம் செய்துவிடலாம் என்பதுதான் நிதர்சனம். பத்து வருடங்கள் கழித்து அவனே மேனேஜரும் ஆகிவிடலாம்.

வெளியில்தான் இன்ஃபோஸிஸில் வேலை செய்கிறேன், டிசிஎஸ்ஸில் மேனஜராக இருக்கிறேன், சிடிஎஸ்ஸில் நாரதராக இருக்கிறேன் என்று பீலா விட முடியும். பாட்டிலில் வளர்க்கப்படுகிற மீன்கள் மாதிரிதான். இந்த பாட்டில் இல்லையென்றால் இன்னொரு பாட்டிலுக்குள் விழுந்தால்தான் தப்பிக்க முடியுமே தவிர வெளியில் எட்டிக் குதித்தால் தப்பித்துவிட முடியும் என்று நம்புவதெல்லாம் பெரிய ரிஸ்க். முதுகெலும்பு இல்லாத, தங்களுக்கு ஏற்ப ‘மோல்ட்’ செய்யப்பட்ட களிமண் பொம்மைகளைத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கில் சம்பளத்தைக் கொடுத்து எல்லாவற்றையும் மறைத்துவிடுகின்றன. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இதெல்லாம் தெரியவே தெரியாது. பையன் பந்தாவாக இருக்கிறான் என்று நம்பிக் கொள்கிறார்கள்.

கோயமுத்தூர்காரரிடம் சொல்வதற்கு ஓர் உதாரணம் இருக்கிறது. ஆனால் சொல்லவில்லை. 

பெங்களூரில் ஒரு காபிக்கடை இருக்கிறது. தேனீரகம் இல்லை. காபி பொடியை அரைத்து விற்கும் கடை. மலையாளிதான் முதலாளி. இருபது வருடங்களுக்கு முன்பாக இந்த ஊரில் டீக்கடைதான் அவருடைய முதல் தொழில். பி.காம் படித்துவிட்டு கணக்கு எழுதுகிற வேலைக்காக பெங்களூர் செல்வதாகச் சொல்லிவிட்டுத்தான் ரயில் ஏறியிருக்கிறார். இங்கேயொரு கட்டிட ஒப்பந்ததாரரிடம் இருபதாயிரம் ரூபாய் கடன் வாங்கி கடையைத் தொடங்கியிருக்கிறார். இந்தத் தொழிலின் சூட்சமங்களைத் தெரிந்து கொண்டு டீக்கடை பக்கத்திலேயே காபிக்கொட்டை அரைக்கிற கடையை ஆரம்பித்து கூர்க்கில் நகரிலிருந்த சில வியாபாரிகளோடு தொடர்பை உண்டாக்கிக் கொண்டு அங்கிருந்து நேரடியாக காபிக் கொட்டையை வாங்கி அரைத்துக் கொடுக்கிறார். நகரத்துக்கு வெளியேயும் ஒரு தொழிற்சாலையை நடத்துகிறார். சில நிறுவனங்கள் கேட்கிற விகிதாச்சாரத்தில் அரைத்துக் கொடுக்கிறார்கள். அந்நிறுவனங்கள் தங்கள் பெயரை லேபிளாக ஒட்டி விற்பனை செய்து கொள்கிறார்கள். கொள்ளை வருமானம் போலிருக்கிறது. எம்.ஜி சாலையில் வெள்ளை நிற Porsche மகிழ்வுந்தை பார்த்தால் அது அவருடையதுதான்.

இந்தக் கதையை அவர் சொல்லவில்லை. அலுவலகத்துக்குப் பக்கத்தில் நவீன் பாலி மாதிரி தாடி வைத்த மூன்று மலையாளிகள் டீக்கடை நடத்துகிறார்கள். அவர்கள் சொன்ன கதை இது. காபிக்கடை முதலாளியை தங்களுக்கான முன்னுதாரணமாக வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால் அந்த மனிதரைப் பற்றி பேசிய போது இளம் மலையாளி அவ்வளவு உற்சாகமானார். இவர்களும் படித்தவர்கள்தான். பெங்களூரில் அறையெடுத்துத் தங்கியிருக்கிறார்கள். இரண்டு துணிக் குடைகளை ப்ளாட்பாரத்தில் நட்ட வைத்து தேனீரகம் நடத்துகிறார்கள். நல்ல கூட்டம். சிகரெட் விற்கிறார்கள். ஆம்லெட் போட்டுத் தருகிறார்கள். மிட்டாய்கள் விற்கிறார்கள். துணைக்கு ஒரு தெலுங்குப்பையனை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள். 

மூன்று பேருக்கு வருமானம் கொடுத்து சிக்கல் இல்லாத வாழ்க்கையை அமைத்து கூட ஒரு பையனுக்கு வேலையையும் அந்த இரண்டு மர மேசைகள் கொடுத்திருக்கின்றன. யாருமே இல்லாத சமயத்தில் ஒரு மலையாளிடம் ‘உங்க லட்சியம் என்ன?’ என்று கேட்ட போது ‘லட்சியத்தை யாராவது வெளியில் சொல்லுவாங்களா? அதை செஞ்சுதான் காட்டணும்..மனசிலாயோ’ என்றார். அதன் பிறகு அவரிடம் கேட்பதற்கு எதுவுமில்லை. ஆனால் அந்த மூன்று மலையாளிகளுமே பி.ஈ முடித்தவர்கள் என்பதுதான் அடிக்குறிப்பு. 

படித்த படிப்புக்குச் சம்பந்தமான வேலையைத்தான் செய்ய வேண்டும் என்றெல்லாம் எந்த விதியும் இல்லை. அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமுமில்லை. படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமேயில்லை. பையனுக்குத் திறமையிருந்தால் விட்டுப்பிடிப்பதுதான் நல்லது. ஆனால் சொல்வது எளிது. செய்வது கடினம். இருபத்தொரு வயதில் வேலை; இருபத்தைந்தில் திருமணம்; இருபத்தெட்டில் குழந்தை; முப்பதில் வீடும் காரும் என்கிற அழுத்தம் பெற்றோர்கள் மீதுதான் விழுகிறது. ‘பையன் என்ன பண்ணுறான்?’ கேட்டு சாவடிப்பார்கள். எப்படி விட்டுவிட முடியும்? ‘இதெல்லாம் எங்க கடமை..இதெல்லாம் நடந்த பின்னாடி உன் இஷ்டத்துக்கு என்ன வேணும்ன்னாலும் பண்ணு’ என்பார்கள். வீடு வாங்கி கார் வாங்கிச் சேர்க்கும் போது நாற்பது ஐம்பது லட்சம் கடன் சேர்ந்திருக்கும். அடுத்த இருபது வருடங்களுக்கு EMI இருக்கும். கட்டி முடிக்கும் போது மகனுக்கும் மகளுக்கும் திருமண ஏற்பாடுகள் ஜரூராக நடக்கும். 

இப்படித்தானே குண்டுச்சட்டிகளும் குதிரைகளும் லட்சக்கணக்கில் உருவாக்கப்படுகின்றன!

9 எதிர் சப்தங்கள்:

Mahesh said...

100% ninga sollurathellam middle class and upper middle class families ku sariyaaga porunthum.

pathivu - arumai sir.

KSB said...

இன்றைக்கு கரண்ட்டுக்கும் வோல்டேஜூக்கும் என்ன சம்பந்தமென்று அடிப்படைக் கேள்வியைக் கேட்டால் கூட சில வினாடிகள் பிதுக்கா பிதுக்காவென்று விழி பிதுங்காமல் சொல்ல முடியாது

எவ்வளவு உண்மையான வரிகள் ...

Vinoth Subramanian said...

//நல்ல வேலை, ஒரேயொரு மனைவி, குழந்தை - ‘இதுவே நல்லாத்தானே இருக்கு’ என்று குண்டுச்சட்டியில் படுவேகமாக குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். என்ன பிரச்சினையென்றால் ‘மணியண்ணன் மாதிரி செட்டில் ஆகப் பாரு’ என்று சில பொடியன்களிடம் விரல் நீட்டி அக்கம்பக்கத்தில் உதாரணம் ஆக்குகிறார்கள். எவ்வளவு பெரிய தவறைச் செய்கிறார்கள்?// புரியுது சார். ’ஒரே ஒரு மனைவி’ அதைத்தானெ தப்புனு சொல்ரீங்க? ரெண்டு மூனுக்கு முயர்ச்சி செஞ்சி பாக்குரோம்.

இரா.கதிர்வேல் said...

தெளிவா புரியுது...

MV SEETARAMAN said...

http://www.badriseshadri.in/2016/08/blog-post_22.html

may please read

we have not prepared the students to question and get the right answers.

they are DUMP. My expriences and experiments with many gives me a negative feeling, but i can say that one to one teaching method which made me to identify the receptors among the youngsters, has made the young boy/ girl to pursue their goals properly, and enjoy their work properly. but this method can produce slow and steady stream of achievers. Constant long duration interaction ( distance does not matter) between the GURU and the learner is the key to sucess. good luck to the young minds

Unknown said...

Ippadi..unnami...tappu..pottuudachitingala....

venkatapathy said...

Physics படிச்சேன்,
இப்ப பிசினஸ் செய்யறேன்.
உண்மையை உடைத்திருக்கீர்கள்.

ABELIA said...

அப்படியே பாடம் படிச்சு சொன்ன மாதிரி இருக்கு. நிதர்சன உண்மை.

Dev said...

அவநம்பிக்கைக்கு அப்பால் மற்றும் குண்டுச்சட்டிகள் பதிவுகளுக்கான பொது பின்னூட்டமாக எடுத்துக்கொள்ளவும். என்னை பொறுத்தவரை இரண்டு பதிவுகளும் ஒன்றோடு ஒன்று பிணைந்தவை.

"அவநம்பிக்கைக்கு அப்பால்" ஹீரோவும் நானும் ஒன்று. கிட்டத்தட்ட " " கோடிகளை தொலைத்துவிட்டு, பிசினஸ் அதை திருப்பி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் போராடி கொண்டிருப்பவன்.

If somebody is happy, doing a 9-5 job let them be. Trust me. Starting up something new would need a monumental effort to succeed. I like to read these quotes again and again. "Starting up an SME is not for the weak hearted". "The successful are not that talented ones but the relentless ones". I endured this and hence can vouch for these quotes.


Few thoughts (may be right..may be wrong..): (Step 1) - and there are 100 other steps.

The governments cannot create jobs for all. What as a country we could do to manage our life. One alternative would be encouraging entrepreneurship. If you are a first generation, then it takes a lifetime to be successful. I take my field. Out of 100% tech startups, only 0.3% survive as per the data available. This would give us what we are taking up.

Don't do something because just that bug bitten you. Without passion and dedication you cant move an inch.

Don't take loan. A Rs100/- loan with an interest rate of 15%/Annum, will need you to pay Rs15/- at the end of the year. The tax is Rs30/- @30%. And margin to sustain yourself, just add that. Now you know that why the Indian services and products were never competitive among the outside products/services.

Don't do a business if you don't have a in depth knowledge in it. Else you cannot innovate & create an USP and eventually get on to an unending cycles of troubles.

And business is like sex. you have to do your own. No body else can do it for you.

Yes. Its unique to everyone and there is no definite success formula except that tireless effort to continue and improve in whatever you do.

-Dev