Aug 4, 2016

கல்லூரிக் காதல்கள்

பொறியியல் கல்லூரியில் சேர்வதற்காக கலந்தாய்வுக்குச் சென்றதுதான் சென்னைக்கு முதல் பயணம். செல்போன் புழக்கத்தில் வந்திருக்காத காலம் அது. மிகுந்த பதற்றத்துக்குப் பிறகு சேலம் கல்லூரியைத் தேர்ந்தெடுத்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் சுவரோரத்தில் இருந்த பெட்டிக்கடை எஸ்.டி.டி பூத்திலிருந்து அம்மாவிடம் சொன்ன போது ‘சேலமா? அந்த ஊர்ல எதுக்கு சேர்ந்த?’ என்றார். அவரைப் பொறுத்தவரைக்கும் கோயமுத்தூர் மட்டும் நல்ல ஊர். பிற ஊர்கள் அனைத்துமே மோசம்தான். அவருக்கு என்ன தெரியும்? 

கெளரி தியேட்டரும், அஞ்சு ரோடும், பழைய பேருந்து நிலையமும், பெண்கள் கல்லூரியும்- எனக்குத்தான் தெரியும்.

சோனா கல்லூரியைத் தேர்ந்தெடுத்த தினத்திலிருந்தே எனக்கு உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகள்தான். வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் தாறுமாறாக படபடக்கின்றன. முதன் முதலாக விடுதியில் தங்கப் போகிறேன், வீட்டை விட்டு வெகு தூரம் செல்கிறேன், அதையெல்லாம் விடவும் முக்கியமாக வயதுக்கு வந்த பிறகு பெண்களுடன் சேர்ந்து படிக்கப் போகிறேன் போன்ற நினைப்புகளால் கால்கள் நிலத்தில் படவே இல்லை. இவையெல்லாம் எல்லோருக்குமே உருவாகிற உணர்வுகள்தான் என்றாலும் எனக்கு ஒரு அவுன்ஸ் அதிகமாக இருப்பது போலப் பட்டது. கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் முதல் நாளிலிருந்தே ஏதாவதொரு பெண்ணைப் பார்த்து காதலிக்கத் தொடங்கி விட வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தேன். ‘காதலிப்பது எப்படி?’ என்று எங்கே குறிப்புகள் கிடைத்தாலும் மனனம்தான். யாராவது மூத்தவர்கள் நம்மையும் அழைத்து ஐடியா கொடுத்துவிட மாட்டார்களா என்று துழாவிக் கொண்டிருந்தேன். ஒரு பயலும் கண்டுகொள்ளவில்லை. கற்றுக் கொடுத்து வருவதில்லை மன்மதக் கலை என்று அன்றைக்கு முடிவு செய்ததுதான். நாமாகவே கற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். முதல் நாள் வகுப்பு. கேசவன், பெரியசாமி, நான் உட்பட ஆறேழு பேர்களை மட்டும் ஆசிரியை தனியாக பிரித்து எழுப்பி நிற்கச் சொல்கிறார். அத்தனை பேரும் கிராமத்தான்கள். தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள். ‘எப்படி கண்டுபிடிச்சிருப்பாங்க?’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வடிவேலு கொண்டையை மறைக்காத கதைதான். தலை நிறைய எண்ணெய் அப்பி, முகம் முழுக்க கோகுல் சாண்டல் பவுடர் பூசி, அதையே நெற்றியில் திருநீறாகவும் இட்டு, தொழபுழா பேண்ட்டும் ரப்பர் செருப்புமாக கிளம்பியிருந்த இளங்காளைப் படையில் நானுமொரு அங்கத்தினராக இருந்தேன். ராஜேஸ்வரி மேடம் எழுப்பி நிறுத்தி ‘இனிமேல் ரப்பர் செருப்பு போட்டுட்டு வந்தா அவ்வளவுதான்’ என்றார். அப்பொழுதுதான் ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கியிருந்த வெள்ளை நிறத்தில் நீல வார் பூட்டிய புத்தம் புது பிரீமியர் செருப்பு அது. ரப்பர் செருப்பு அணிந்தால் பெண்களுக்குப் பிடிக்காது என்று உணர்ந்து கொண்ட தருணம் அது. முதல் வருடம் முழுவதும் இப்படியே போராட்டம்தான். செருப்பை மாற்று, எண்ணையைக் குறை என்று ஆள் மாறுவதற்குள்ளாகவே திறமை வாய்ந்தவர்கள் ஆளாளுக்கு ஒருத்தியை பிக்கப் செய்திருந்தார்கள். அதீத திறமை மிகுந்தவர்கள் அக்கம் பக்கத்து கல்லூரி வரைக்கும் கொடியை பறக்கவிட்டிருந்தார்கள். நான் மட்டும் ‘இவ இல்லைன்னா என்னடா...நாம மாறி இன்னொருத்தியை ஓகே செய்வோம்’ என்று நம்பி நம்பியே அடுத்த வருடத்திற்கு வந்து சேர்ந்தேன்.

வந்து சேர்ந்தேனா? எங்களுக்குப் பின்னாலேயே ஜூனியர்களும் வந்து சேர்ந்தார்கள். வாய்ப்புகள் பிரகாசமாகின. புதுப் புது முகங்கள் ரத்தத்தில் உற்சாக டானிக்கை ஊற்றியிருந்தன. பேச்சுப் போட்டிகளிலும் கட்டுரைப் போட்டிகளிலும் கலந்து கொண்டேன். பிரபலமாகிக் கொண்டிருப்பதாகத் தப்புக் கணக்கு தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தது. நினைப்புதானே பொழைப்பைக் கெடுக்கும்? அப்படித்தான் கெட்டுப் போனது. சீந்த நாதியில்லை. ஆங்கிலத்தில் பேசுகிற பெண்களைப் பார்த்தால் பயம். தமிழில் பேசுகிற பெண்களிடம் போய் பேசினால் அவர்கள் தலை தெறிக்க ஓடுவார்கள். என்னடா இது நமக்கு வந்த சத்திய சோதனை என்று நினைத்தால் கூடச் சுற்றிய பையன்கள் கமுக்கமாக காய் நகர்த்திக் கொண்டிருந்தார்கள். எல்லோருமே கிராதகர்களாக இருக்கிறார்கள் என்று இரண்டு காதுகளிலும் புகை வரும். புகை வந்தால் மட்டும் என்ன பலன்? அதற்கெல்லாம் தனித்திறமை வேண்டும். பக்கத்தில் இருந்த அபிராமி மெஸ்தான் ஒரே ஆறுதல். தனியாகச் சென்று கொத்து புரோட்டாவை விழுங்கும் போதெல்லாம் ‘கடைசி வரைக்கும் நாம தனியாத்தான் கொத்து புரோட்டா தின்ன வேண்டும் போலிருக்கிறது’ என்று சோக கீதம் உள்ளே வாசிக்கும்.

நல்லவேளையாக விசு வந்து கை கொடுத்தார். அரட்டை அரங்கத்தை சேலத்தில் நடத்தினார்கள். தேர்வாகிவிட்டேன். இனி தமிழ்நாடே நம்மிடம் ஆட்டோகிராப் கேட்கும் என்று நம்பியிருந்தேன். அதில் ஒரு நல்ல பெண் கண்டிப்பாக ஐ லவ் யூ சொல்ல்விடுவாள் என்பது அதைவிடப் பெரிய நம்பிக்கையாக இருந்தது. நிகழ்ச்சி ஒளிபரப்பான மறுநாள் கல்லூரியில் நுழையும் போது வானம் பூத்தூவும், வெள்ளுடை தேவதைகள் வரிசையாக நின்று கை கொடுப்பார்கள் என்றெல்லாம் கட்டியிருந்த கோட்டையில் ஒவ்வொரு செங்கல்லாகச் சரியாமல் மொத்தமாகச் சரிந்தது. யாருமே கண்டுகொள்ளவில்லை. வேண்டாத கடவுள் இல்லை. பாடாத தெய்வமில்லை. ஏதோவொரு கடவுளுக்கு காது கேட்டிருக்கும் போலிருக்கிறது. ஒரு பெண் வந்து ‘நீங்கதான அரட்டை அரங்கத்தில் பேசுனீங்க? சூப்பர்’ என்றாள். அது போதாதா? தலை கால் புரியவில்லை. ‘வானம் எங்கே கீழே இருக்கு..பூமி எங்கே மேலிருக்கு’ பாட்டுதான். ஆட்டம்தான். 

அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் ஒரு அவள் எந்த வகுப்பு, பெயர் என்ன என்றெல்லாம் கண்டுபிடித்தாகிவிட்டது. விதவிதமான முயற்சிகள். என்னவோ ஏதோ என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அவளிடம் திரும்பவும் பேசத்தான் அத்தனை முயற்சிகளும். அவள் கண்டுகொள்ளவே இல்லை. நண்பர்கள் தினம் வந்தது. நமக்குப் பிடித்தவர்களுக்கான செய்தியை எழுதி அதை அட்டைப் பெட்டியில் போட்டுவிட்டால் கல்லூரியே கொண்டு போய் அவர்களிடம் சேர்க்கும். கனவு நாயகியின் பெயரை எழுதி ‘அன்பே..அழகே! சூரியன் மேற்கே மறைந்தாலும் சரி; உன் நட்பை மட்டும் கைவிட மாட்டேன்’ என்று எழுதி அனுப்பினேன். அடுத்த நாள் வேகமாக வந்தவள் ‘தேங்க்ஸ்ண்ணா’ என்றாள். ராஜா ராணி படம் வராத காலத்திலேயே ‘நீ அண்ணான்னு சொன்னாலும் சரி..விட மாட்டேன்’ என்றுதான் மனதுக்குள் கறுவிக்கொண்டிருந்தேன். ஆனால் எல்லாக் காதலுக்கும் ஒரு வில்லன் வருவது போலவே எங்கள் காதலுக்கும் ஒருத்தன் வந்தான். ஜூனியர்தான். ஆனால் என்னைவிடவும் பலசாலி. ‘அவளும் நானும் ஒரே ஏரியா...பல வருஷமா லவ் பண்ணுறேன்..நீ ஒதுங்கிக்க’ என்றான். கிடாயன் சொன்ன பிறகு என்ன செய்வது? ஒதுங்கிக் கொண்டேன். பிறகுதான் தெரிந்தது- அவனும் என்னைப் போலவேதான். இல்லை இல்லை- என்னைவிடவும் மோசம். நானாவது துணிந்து ஒரு துண்டுச் சீட்டை அனுப்பினேன். அவன் பேசியது கூட இல்லை போலிருக்கிறது. கல்லூரி முடிந்த அடுத்த ஆறு மாதத்திற்குள் வேறொருவனுடன் அவளுக்குத் திருமணமாகிவிட்டது.

இப்படியொரு விக்கெட் விழுந்ததா? இன்னொரு விக்கெட் வேறு மாதிரி. நாங்கள் நான்காம் வருடம் படிக்கும் போது அவள் முதல் வருடத்தில் சேர்ந்திருந்தாள். எங்கள் ஊர்க்காரப் பெண். எப்படியும் பேருந்தில் வரும் போதும் போகும் போதும் டெவலப் ஆகிவிடும் என்று கணக்குப் போட்டிருந்தேன். ஒரு நாள் கல்லூரி முடித்து விடுதிக்குச் சென்று கொண்டிருந்தவளிடம் அருகில் சென்று குரலை கணைத்துக் கொண்டு ‘நீங்க கோபியா?’ என்றேன். இந்த இடத்தில் நீங்கள் என் நிழற்படத்தை ஒரு முறை பார்க்க வேண்டும். பார்த்துவிடுங்கள். பார்த்தீர்களா? அவ்வளவு குரூரமாகவா இருக்கிறது. இல்லை அல்லவா? அவள் ஏன் அந்த ஓட்டம் ஓடினாள் என்று இன்னமும் புரியவில்லை. தலையில் ஒரு பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டிருந்தால் கூட அவ்வளவு நொந்திருக்க மாட்டேன். அடுத்த மூன்று நாட்களுக்கு கண்ணாடியில் என் முகத்தைத் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியொரு அதிர்ச்சியைக் கொடுத்தவளிடம் பிறகு என்ன பேசுவது? அதோடு சரி. அரும்பிய காதல் பொசுங்கிப் போனது.

இப்படி விதவிதமாகக் காதல்கள் அரும்பினாலும் ஒன்று கூட உருப்படவேயில்லை. போன ஜென்மத்தில் ஏதாவதொரு ரிஷியிடம் கர்ண கொடூரமாக சாபம் வாங்கியிருக்கக் கூடும். கர்மா!

மேற்சொன்னவை தவிர, ஒரே நாளில் பொசுங்கியது; ஒரே வாரத்தில் பொசுங்கியது என்று ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன. அதையெல்லாம் நாவலாகத்தான் எழுத வேண்டும். இப்பொழுதும் கூட யாராவது தெரியாத்தனமாகவாவது ‘உனக்கு எத்தனை கேர்ள் ஃப்ரெண்ட்’ என்று கேட்டால் பொங்கிப் பொங்கி அழுகை வந்துவிடும். கல்லூரி காலத்திலேயே ஒழுங்காக காதலிக்கத் தெரியாதவன் எந்தக் காலத்திலும் காதலிக்கத் தெரியாதவனாகத்தான் இருப்பான் என்று துண்டை குறுக்கே போட்டு சத்தியம் கூடச் செய்யலாம். அன்றைக்கு சேலம் அபிராமி மெஸ்ஸில் எப்படி தனியாகக் கொத்து புரோட்டா சாப்பிட்டேனோ அதே மாதிரிதான் இன்றைக்கும் நாகர்ஜூனாவிலும் மேக்னாவிலும் போன்லெஸ் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை இந்த மேலான சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். அக்காங்!

(கல்லூரிக் கால நினைவுகளை எழுதச் சொல்லியிருக்கிறார்கள். என் புத்திக்கும் அறிவுக்கும் இதுதான் தட்டுப்பட்டது)

15 எதிர் சப்தங்கள்:

dhana said...

Why Blood??
Same Blood !!!

Muralidharan said...

என் இனம்டா நீ :-)

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

சில சமயம் நாகரீகமா செய்த முயற்சியை சொல்லிவிடுகிறோம் .சில விசயங்கள் நிழலாய் மனதில் ....பதுங்கிக்கொள்ளும் .ஆனால் அவைதான்சுவாரசியமாக இருக்கக்கூடும் - வீட்டில் அவர்கள் படிக்காதவரை
.

சேக்காளி said...

//எப்படி தனியாகக் கொத்து புரோட்டா சாப்பிட்டேனோ அதே மாதிரிதான் இன்றைக்கும்//
வேணி சைவமா மணி?

சேக்காளி said...

//அதையெல்லாம் நாவலாகத்தான் எழுத வேண்டும்//
நாளை முதல் "மூன்றாம் காதல்" க்கு டீசர்

சேக்காளி said...

வந்துட்டாரு. பழைய மணி வந்துட்டாரு.

சேக்காளி said...

//நீங்கள் என் நிழற்படத்தை ஒரு முறை பார்க்க வேண்டும். பார்த்துவிடுங்கள்//
"ச்சூஊ ன்னு அந்த நாயை வெரட்டிட்டு போ" ங்குற மாதிரி யாவர தந்துரம் ஒண்ணுமில்லயே.

Unknown said...

Abirami mess!! Sweet memories.. ��

சூர்யா said...

நேற்று இரவு தான் போராடிக்கிறதே என்று அட்டகத்தி பார்த்தேன், முதல் தரம் பார்த்ததை விட இன்னும் இனிமையாக ரசிக்கும்படியாய் இருந்தது.
கல்லூரி காலத்தில் நீங்கள், நான், இயக்குனர் ரஞ்சித் உட்பட முக்கால்வாசி பேர் அட்டகத்திகள் தான் :)

யோசித்து பார்த்தால் கல்லூரி காலத்தில் அட்டகத்திகளாய் இருந்தவர்கள் தான் இன்று மற்றவர்களைவிட ஓரளவிற்கேனும் வாழ்க்கையில் மிளிர்கிறார்கள்.

Paramasivam said...

கல்லூரி நினைவுகள் சுவையாகவே உள்ளன. நீங்கள் படித்த சமயம், புது பஸ் ஸ்டாண்ட் வரவில்லை போல் உள்ளது.

Dev said...

நம்பிட்டோம்யா. ஆமாம். உங்கள் வீட்ல இருந்து என்ன வேண்டும்?

எனக்கு அபிராமி மெஸ்ஸும் தெரியும். நாகார்ஜூனா மெக்ன ம் தெரியும். நமக்கு சேலம் தன. அதுவும நீங்க சொன்ன இடம்தான்

Siva said...

Mani Anna one day ask ur wife Veni to join with you surprisingly in a restaurant for lunch. At that time your wish will be satisfied know?

Mugavathi said...

இன்னொரு கதைய மறந்துட்டிங்களே !!! மறந்துட்டிங்களா, இல்ல மறைச்சுட்டிங்களா?!?!

Anonymous said...

சில சமயம் நம்ம பாட்டுக்க சும்மதான் இருப்போம். ஆனா, நம்ம பத்தி பெருசா வத்தி வச்சிடுவானுக. அந்த பையன் ஒரு பொண்ணு கைய்ய பிடிச்சு இழுத்துட்டான், பத்து பொண்ணுகளுக்கு லவ் லெட்டர் கொடுத்திட்டான், அப்படி இப்படி எதாச்சும் சொல்லி வைப்பானுக. கை காது மூக்கு நாக்கு வைச்சு அது ஆலமரம் மாதிரி வளர்ந்துடும். நாம் எண்ணிக்காவது பேசனும்னு போனா பொண்ணுக ஒதுங்கி ஓதுங்கி போறப்பதான் நமக்கே அது புரியும்.

Siva said...

College life is always a sweet memories