Aug 30, 2016

சுதந்திரம்

எந்த வேலையும் இல்லாமல் சென்னையைச் சுற்றுவது ஒருவிதமான இன்பம் தரக் கூடியது. ஆனால் அப்படியான சந்தர்ப்பங்கள் வாய்ப்பதேயில்லை. யாரையாவது சந்திக்க வேண்டியிருக்கும். அதற்காக ஏதேனும் முன் தயாரிப்புகளுடன் வர வேண்டியிருக்கும். பெரும்பாலும் ஏதாவதொரு யோசனையோடுதான் பேருந்துகளில் பயணம் நிகழும். கடந்த வாரம் மட்டும் அப்படியில்லை. இரண்டு கூட்டங்களில் பார்வையாளனாகக் கலந்து கொள்வது மட்டும்தான் எண்ணம். தயாரிப்புகளும் முன் முடிவுகளும் யோசனைகளும் அவசியமேயில்லை என்பதால் காற்றில் பறக்கிற சிறகு மாதிரி மனம் இருந்தது. பேருந்தில் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. முதல் சில வரிசைகளுக்கு மட்டும் கேட்கும்படியான ஒலி அது. ஓட்டுநருக்கு அருகாமையில் அமர்ந்திருந்தேன். அவரும் நடத்துநரும் நிறையக் கதைகளைப் பேசிக் கொண்டே வந்தார்கள். பெரும்பாலும் அவர்களது சக பணியாளர்களைப் பற்றிய கதைகள். மாதத்தில் இருபது நாட்களாவது இரவில் வண்டி ஓட்டுகிறார்கள். இதே நடத்துநரும் இதே ஓட்டுநரும்தான் இணையாக இருப்பார்களாம். தூக்கத்தை ஒழிப்பதற்காக இருவரும் எதையாவது பேசியே தீர வேண்டும். 

விபத்துக்கள், ஓடிப் போனவர்களின் கதைகள், மேலாளருடனான சச்சரவுகள், டீசல் விலை, பேருந்தின் பழுதுகள், பிள்ளைகளின் படிப்புகள் என்று ஓயாமல் பேசிக் கொண்டேயிருந்தார்கள். இவர்களுக்கு எப்படி கதைகள் சுரந்து கொண்டேயிருக்கின்றன என்று அவர்களின் வாய்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஒரே கதைகளையே திரும்பத் திரும்பப் பேசுவார்களோ என்றும் கூடத் தோன்றியது. எதிர்வரும் கார்களும் பேருந்துகளும் சரக்குந்துகளும் தேசிய நெடுஞ்சாலையின் இருளை மஞ்சள் கலந்த விளக்கொளியில் தொடர்ந்து கிழித்துக் கொண்டேயிருந்தன. 

உறக்கமேயில்லாமல் கதைகளைக் கேட்டுக் கொண்டு வருவதற்கும் சுகமாகத்தான் இருக்கிறது. 

ஞாயிறன்று காலையில் கதிர்பாரதியின் புத்தக விமர்சனக் கூட்டம். முடித்துவிட்டு லலித் கலா அகடமிக்குத்தான் செல்வதாகத் திட்டமிருந்தது. ஆனால் மாலையில் நடக்கும் கூட்டத்திற்காக கரிகாலன் தன்னை ஒரு மணமகன் அளவுக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார். ‘பத்து நிமிடத்தில் வந்துவிடுவதாகச் சொல்லிச் சென்றவர் ஒன்றரை மணி நேரம் கழித்து வந்தார்’. எலைட் சலூனில் கூட்டம் அதிகமாம். ‘அது சரி’ என்று நினைத்துக் கொண்டேன். 

நேர அவகாசம் இல்லையென்பதால் நேரடியாக நிகழ்வு நடக்கும் இடத்துக்கே சென்றுவிட்டோம். சில நாட்களுக்கு முன்பாக அவர் அழைத்து நிகழ்வுக்கு வரச் சொன்ன போதே ‘பேசச் சொல்லவில்லையென்றால் வருகிறேன்’ என்றுதான் சொல்லியிருந்தேன். ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேசுவதாகவும் எழுதுவதாகவும் இருப்பின் வாசித்துவிட்டு ஆத்மார்த்தமாக பேச வேண்டும் அல்லது எழுத வேண்டும்- சமீபகாலமாக மனதுக்குள் இதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். 

ஆத்மார்த்தமாகப் பேசுவதென்றால் அந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கான மனநிலை உருவாகி வாசிப்பதற்கேற்ற தருணம் அமைந்து வாசித்த பிறகு அதைக் குறித்துப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் விஷயம் இருக்கிறது என்று தோன்ற வேண்டும். நிகழ்வுகளுக்கு ஒத்துக் கொள்ளும் போது அவசர அவசரமாக வாசித்து ஒரு மாதிரியாக ஒப்பேற்றி மேடைக்காக பேச வேண்டியிருக்கிறது. இறங்கும் போது குற்றவுணர்ச்சி குறுகுறுக்கிறது. கரிகாலனின் புத்தகத்தை முழுமையாக வாசித்து அது மனதுக்கு நெருக்கமாக இருப்பின் பொறுமையாக எழுதலாம்.

நிகழ்வு தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக முதல் பிரதியை வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள். அது திட்டத்திலேயே இல்லாத ஒன்று. எப்படியும்  பேச அழைத்துவிடுவார்கள் என்று தோன்றியது. அப்படியேதான் நிகழ்ந்தது. புத்தகத்தை வாங்கிக் கொண்ட பிறகு ‘இப்பொழுது புத்தகம் பற்றி பேசுவான்’ என்று இழுத்துவிட்டார்கள். ‘ஏய்யா கோர்த்துவிட்டீங்க?’ என்று சில வினாடிகள் கரித்துக் கொட்டாமல் இல்லை. முதல் பிரதியை வாங்கிக் கொண்டதிலிருந்து பேச அழைத்தது வரைக்குமான ஐந்து நிமிட இடைவெளியில் புத்தகத்தைத் தவிர வேறு என்னவெல்லாம் பேச வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். அதில் இரண்டு சம்பவங்கள் என்னளவில் முக்கியமானவை.

என்னுடைய திருமணத்துக்கு ஒரு வருடம் முன்பாக முதல் புத்தகம் வெளியானது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு வரப்போகிற மனைவியை இம்ப்ரெஸ் செய்துவிட வேண்டும் என்று கண்டதையெல்லாம் யோசித்து வைத்திருப்போம் அல்லவா? அப்படித்தான் நானும்.

‘என்னுடைய புக் ஒண்ணு வந்திருக்கு தெரியுமா?’ என்றேன். 

‘ம்ம்..சொன்னாங்க’ என்ற பதில் வந்தது. யார் சொன்னார்களோ தெரியவில்லை.

‘கவிதைத் தொகுப்பு...ஆமா நீ கவிதையெல்லாம் படிச்சிருக்கியா?’ என்றேன். இதெல்லாம் இணையவழி சாட்டிங்தான்.

‘இல்ல’

இதோடு விடாமல் ‘அனுப்பட்டுமா?’ என்று கேட்டு வைத்தேன்.

‘ம்ம்ம்’ என்றவுடன் உடனடியாக பிடிஎஃப் வடிவத்தை அனுப்பி வைத்திருந்தேன். இரண்டு நாட்கள் வேணி ஆன்லைன் பக்கமாகவே வரவில்லை. விளையாட்டுக்குச் சொல்கிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அப்படித்தான் நடந்தது.  ‘என்ன காரணம்’ என்றும் நானும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை. சொல்லப்படாத புரிதல்கள் அவை. அதோடு சரி. இதுவரைக்கும் கவிதை குறித்தெல்லாம் எங்களுக்குள் எந்த சம்பாஷணையுமே நடந்ததில்லை. 

‘சைட் அடிச்சேன்..லவ் பண்ணினேன்னு எழுதினா வீட்டில் எதுவும் கேட்கமாட்டாங்களா?’ என்று யாராவது கேட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். எங்களுக்கிடையில் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. அவரைப் பற்றி எழுதும் போது மட்டும் முன் அனுமதி வாங்கி சென்சார் செய்து பிரசுரிக்க வேண்டும். இந்தப் பதிவைக் கூட மின்னஞ்சலில் அனுப்பி வைப்பேன். திருத்தங்களைச் சொல்வார். அவற்றையெல்லாம் திருத்திவிட்டு பிரசுரம் செய்வேன். மற்றபடி நான் எதை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். அவர் எதையும் வாசிப்பதில்லை. நானாக விரும்பினால் மட்டும் ‘இதை படிச்சுப்பாரு’ என்று சொல்வதுண்டு. இது எனக்கு எவ்வளவு பெரிய சுதந்திரம்?

கவிதைக்கு திரும்பத் திரும்ப  நன்றி சொல்ல வேண்டுமானால் இந்த ஒரு காரணத்திற்காகவே சொல்வேன்.

இன்னொரு விவகாரமும் நடந்தது. 2008 ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம். ஜனவரியில் சென்னை சங்கமம் நிகழ்ந்தது. அதன் ஒரு பகுதியாக கவிதை வாசிக்கும் நிகழ்ச்சியும் உண்டு. அதற்கு கவிதைச் சங்கமம் என்று பெயர். திருமணமானதிலிருந்தே ‘நீங்க கலந்துக்கிற அத்தனை இலக்கியக் கூட்டங்களுக்கும் என்னையும் அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இது என்ன பெரிய வம்பாக இருக்கிறது என்று குழப்பமாக இருந்தது. கவிஞர்கள் கலாப்ரியாவும் விக்ரமாதித்தயனும்தான் அந்த வருடத்தின் கவிதைச் சங்கமத்துக்குத் தலைமை வகித்தார்கள். கலாப்ரியாவிடம் ‘மனைவியையும் அழைத்து வருகிறேன்’ என்று சொன்னதற்கு ‘புது மனைவி.....நல்லா யோசிச்சுட்டியா?’ என்றார். நான் தெளிவாக இருந்தேன்.

காலை பத்து மணிக்கு நிகழ்வு தொடங்கியது. ஹைதராபாத்திலிருந்து சென்றிருந்தோம். முடித்துவிட்டு தலைப் பொங்கலுக்காக ஊருக்குச் செல்வதாகத் திட்டம். வேணி வெகு உற்சாகமாகத்தான் இருந்தாள். யாராவது ஓரிருவர் கவிதை வாசித்தால் கேட்கச் சுவாரசியமாக இருக்கும். ஐந்து அல்லது பத்து பேர் வாசித்தால் ‘போதும்’ என்றாகிவிடும். நூறு பேர் வாசித்தால்? கீழே தள்ளி தலை மீது காலை வைத்து மெட்டிப் பிடித்துக் கொண்டு மரம் அறுக்கும் மொன்னை ரம்பத்தை வைத்து வெறுக்கு வெறுக்கு என்று மணிக்கணக்காக அறுப்பது போலத்தான். அன்றைக்கு அழைப்பிதழில் 126 கவிஞர்களின் பெயர் இருந்தது. பனிரெண்டு மணி ஆனது. ‘உங்களை எப்போ கூப்பிடுவாங்க?’ என்ற கேள்வி வந்த போது ‘சக்ஸஸ்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

மணி ஒன்றாகி இரண்டானது. ம்ஹூம். நாற்பது பேர் கூட வாசித்து முடித்திருக்கவில்லை. இப்படியே இழுத்து மாலை நான்கு மணிக்கு மேலாக என்னை மேடைக்கு அழைத்தார்கள். கவிதைச் சங்கமத்தில் யாருக்குமே கைதட்டல் எதுவும் வராது. ‘எப்படா நம்மைக் கூப்பிடுவாங்க?’ என்று வெறுத்துப் போய்க் காத்திருப்பார்கள். கவிதை வாசித்து முடித்தவர்கள் ‘தப்பிச்சண்டா சாமீ’ என்று வெளியே சென்றிருப்பார்கள். அந்த மயான சிறைச் சூழலில் வாசித்துவிட்டு கீழே இறங்கி வரும் போது வேணியைக் காணவில்லை. பதறிப் போனேன். பையைத் தூக்கிக் கொண்டு வெளியே நின்றிருந்தாள்.

மேடையை விட்டு நான் இறங்குவதற்குள்ளாக அவள் அரங்கத்தைவிட்டு வெளியேறிருந்தாள். பசிப்பதாகச் சொன்னாள். மதிய உணவைத் தவிர்த்திருந்தாள். உணவு விடுதிக்குச் செல்லும் போது ‘தலை வலிக்குது...’ என்ற ஒற்றை வரியைத் தவிர எதுவும் சொல்லவில்லை. எதுவுமே பதில் சொல்லாமல் வந்தவள் உணவு உண்ண அமர்ந்தவுடன் ‘இந்த மாதிரி ஒரு சித்ரவதையை நான் அனுபவிச்சதேயில்லை’ என்றாள். அதோடு சரி. இன்றைக்கு வரைக்கும் எந்த இலக்கியக் கூட்டத்துக்கும் வந்ததில்லை. 

எல்லாமே strategyதான். நமக்கான சுதந்திரத்தை எப்படி அடைகிறோம் என்பதில்தான் சூட்சமம் இருக்கிறது. 

கரிகாலனின் முதல் புத்தகம் இது. அநேகமாக அடுத்த வருடத்திற்குள் திருமணம் ஆகிவிடும் என்று நம்புகிறேன். என்னைவிடவும் மோசமான ஆள் அவர். நானாவது சம்பாத்தியத்தை வீட்டுக்குக் கொடுத்துவிட்டு ஊர் சுற்றுகிறேன். அவருடைய சம்பாத்தியமும் இலக்கியத்தில்தான் கரைகிறது. அத்தகைய மனிதருக்கு இந்த ஐடியாக்களையாவது சொல்லித் தருவோம் என்று மேடையிலேயே சொல்லிவிட்டு இறங்கி ஒரே ஓட்டமாக ஓடி வந்து பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கொண்டேன்.

5 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//‘நீங்க கலந்துக்கிற அத்தனை இலக்கியக் கூட்டங்களுக்கும் என்னையும் அழைத்துச் செல்ல வேண்டும்//
என ஆவலாக சொன்ன ஒருத்தியை முதல் கூட்டம் முடியும் முன்னரே //‘இந்த மாதிரி ஒரு சித்ரவதையை நான் அனுபவிச்சதேயில்லை’ //
என்று சொல்ல வைப்பதில் தான் நமக்கான சுதந்திரத்தை எப்படி அடைய வேண்டும் என்ற சூட்சமம் இருக்கிறது.

Vinoth Subramanian said...

Very good! Very funny.

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா... இதுவல்லவா சுதந்திரம்.... இதைப் பெறவும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே.....

இரா.கதிர்வேல் said...

//எல்லாமே strategyதான். நமக்கான சுதந்திரத்தை எப்படி அடைகிறோம் என்பதில்தான் சூட்சமம் இருக்கிறது.//

கில்லாடி மணி நீங்க. நீங்க சொல்லுற சூட்சமம் என்னான்னா கவிதை வாசிக்கிற சித்தரவதை எப்படி இருக்கும்னு காட்டிட்டோம்னா அவங்களுக்கு காட்டிட்டோம்னா, அதுக்குப்பிறகு அவங்க இந்த மாதிரி இலக்கிய கூட்டத்துக்கெல்லாம் வரமாட்டாங்க. நீங்க சுதந்திரமா இருக்கலாம்னு சொல்ல வர்றீங்க.

RajDP said...

எல்லாமே strategyதான். நமக்கான சுதந்திரத்தை எப்படி அடைகிறோம் என்பதில்தான் சூட்சமம் இருக்கிறது.


OMG...!
Well defined Strategy..!