Aug 23, 2016

ஃபாரின் சிடி- விமர்சனம்

ஃபாரின் சிடி புத்தகம் குறித்து அதிகமாக எழுதவில்லை. எழுத வேண்டாம் என்று தோன்றியது. விற்பனை ஆகுமா என்றும் தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து விற்பனை ஆகிக் கொண்டேதான் இருப்பதாகச் சொல்கிறார்கள். மகிழ்ச்சி. புத்தகம் குறித்தான முதல் விமர்சனம் இது. Pfool's movie recommendations என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார்கள். நன்றி. வழக்கம் போலவே நிசப்தம் தளத்தில் பதிவு செய்து வைத்துக் கொள்கிறேன். 

                                                                ***
இந்த மாதத் தொடக்கத்தில் வெளிவந்த புத்தகம் இது. நேற்று தான் என் கைகளுக்கு வந்தது.

அதிகம் வெளியே தெரியாத, ஆனால் அவசியம் பார்த்தே தீர வேண்டிய 23 படங்களை இந்தப் புத்தகத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் எழுத்தாளர் வா. மணிகண்டன் அவர்கள்.

சிக்கலான மொழிநடையைத் தவிர்த்து வெகுஜன வார்த்தைகளிலேயே முழுக்கதையை வெளிப்படுத்திவிடாமல், ஆனாலும் ஒரு படத்திற்கு மூன்று பக்கங்களுக்குக் குறையாமல் திரைப்படங்களை அறிமுகப்படுத்துகிறார். கட்டுரைகளின் தொடக்கத்தில் தனது சொந்த அனுபவங்களையும் சேர்த்துக்கொள்வது மற்றுமொரு சிறப்பு. இந்தப் புத்தகத்திலிருக்கும் படங்கள் அனைத்தும் 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு வந்த படங்களே. நிச்சயம் இந்தப் படங்களை நாம் கடந்து வந்திருப்போம், ஆனால் மற்றுமொரு படமே என்று தவிர்த்திருப்போம். அது மாதிரியான படங்களாகத் தேர்தெடுத்து, எழுதி, பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறார்.

தினமணி.காமில் இந்தத் தொடர் வெளிவந்த போதே தொடர்ந்து படித்து வந்தேன். டிஸ்கவரி புக் பேலஸின் அருமையான அச்சுத்தரத்தில் அட்டகாசமான புத்தகமாக வெளிவந்திருக்கிறது. நூலாசிரியர் எழுத்தாளர் வா. மணிகண்டனது 'நிசப்தம்' வலைபக்கத்தையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். 'கண்ணாடியில் நகரும் வெயில்' இவரது முதல் புத்தகம். கவிதைத் தொகுப்பு. அதன் பிறகு 'என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி'. இதுவும் கவிதைத் தொகுப்பு. இரண்டையும் வாசித்ததில்லை. ஆனால் இவரது சிறுகதைத் தொகுப்பான ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’ வாசித்திருக்கிறேன். கட்டுரைத் தொகுப்பான ‘மசால் தோசை 38 ரூபாய்’, நாவலான ‘மூன்றாம் நதி’ இரண்டும் வாங்கி வைத்திருக்கிறேன். எழுத்து தவிர தன்னுடைய ‘நிசப்தம்’ அறக்கட்டளை மூலம் பல நற்பணிகளைச் செய்துவருகிறார் என்பதும் தெரிகிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

எத்தனையோ முக்கியமான, மிகச் சிறந்த உலக சினிமாக்களை அடையாளம் காட்டும், மிகப்பெரிய படிப்பாளிகள், உலக சினிமா வித்தகர்களது புத்தகங்கள் இருக்கும் போது, சென்ற வாரமே வெளியான இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்யக்காரணம், சாமானியர்களுக்கு புரியும் வகையில் நல்ல சினிமாவை, இவரது நூல் விமர்சகர்கள் தொடர்ந்து சொல்வது போல தனது எள்ளல், துள்ளல் நடையில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் வா. மணிகண்டன்.

அரசியல் பேசும், குறீயிட்டுக்குவியல்களாக இருக்கும் சிக்கலான சினிமாக்கள் இந்தப் புத்தகத்தில் தேர்தெடுக்கவில்லை. சினிமா வை சினிமாவாக மட்டும் அணுகி, அது ஒரு ரசிகனாக தனக்குத் தந்த பரவசத்தை எழுத்தில் வடித்து வாசிப்பவருக்கும் கடத்தியிருக்கிறார். அரை நிமிடக்காட்சி ஒன்றை எடுத்துக்கொண்டு ‘அது ஒரு குறியீடு’ என்று சொந்தக் கற்பனையில் சிலாகித்து பக்கம் பக்கமாக நம்மை போரடிக்கவில்லை. தமிழ், ஹாலிவுட் படங்கள் தாண்டி உலகசினிமா பக்கம் திரும்பும் ஆசையுடன் இருக்கும் புதியவர்களுக்கு இந்தப் புத்தகம் நல்லதொரு ஆரம்பம். இதில் உள்ள படங்கள் நம்மை மிரளவைக்காது. மாறாக கைபிடித்து உலக சினிமாவிற்குள் அழைத்துசெல்லும். மேலும் இது போன்ற சாமானியர்களின் புத்தகங்களும் வெளிவரவேண்டும், மக்கள் ஆதரவு தர வேண்டும். இந்தப் புத்தகத்தின் வெற்றி இன்னும் பலரை எழுத வைக்கும். தாங்கள் பார்த்த சினிமாவை நம்முடனும் பகிர்ந்து கொள்ள வைக்கும். ஒரு சினிமாவைப் பார்த்து பிடித்துப்போய் அதைப் பற்றி நாம் விவாதிக்கும் போது, ஒரு பத்தி எழுதி பிறர் படிக்க வைக்கும் போது அந்தச் சினிமா நமக்கு இன்னும் நெருக்கமாகிறது. இது நடைமுறையில் நான் கண்ட ஒன்று.


ஆன்லைன் விற்பனை: வீகேன் ஷாப்பிங்

0 எதிர் சப்தங்கள்: