Aug 25, 2016

பால்யத்தின் சித்திரங்கள்

சத்தியமங்கலத்திலிருந்து கோயமுத்தூர் செல்லும் சாலையில் செண்பகப்புதூர் என்ற ஊர் இருக்கிறது. பெயருக்கு ஏற்றபடி அம்சமான ஊராக இருந்தது. அம்மா கிராமநிர்வாக அலுவலர் பயிற்சியை முடித்தவுடன் அந்த ஊரில்தான் பணியமர்த்தினார்கள். சட்டி பானையைத் தூக்கி டெம்போவில் போட்டுக் கொண்டு குடி மாறினோம். நூறு அல்லது நூற்றைம்பது ரூபாய்தான் வாடகை. ஓட்டு வீடு. சமையலறையிலிருந்த பின்வாசலில் இறங்கினால் வயல்வெளி. அதனூடாக ஓடுகிற சிற்றோடைகளில் மீன் குஞ்சுகள் பிடிப்பதற்கு வசதியாக இருந்ததால் எனக்கு அந்த வீடு மிகப் பிடித்திருந்தது. அப்பொழுது பெரிய வசதியெதுவும் இல்லை. ஆனாலும் எங்களுக்கு குறையொன்றும் வைக்கவில்லை. ஹார்லிக்ஸ் வாங்கி வைத்திருந்தால் ‘அப்டியே சாப்பிடுவேன்’ என்று காலி செய்து அரையும் குறையுமாகக் கழுவி மீன் குஞ்சுகளைப் பிடித்து வைத்திருந்தால் சாயந்திரம் அப்பா வந்து பார்த்துவிட்டு ‘எதுக்கு இவனுக கொறத்தி குஞ்சுகளை புடிச்சு வெச்சிருக்கானுக?’ என்று பல்பு கொடுப்பார். தவளையின் தலைப்பிரட்டை வடிவத்திற்கு எங்கள் ஊரில் கொறத்திக் குஞ்சு என்று பெயர். 

நம் பால்ய காலத்தில் வசித்த ஊர்களுக்கும் அந்த ஊரின் நண்பர்களுக்கும் பிரத்யேகமான தனித்துவம் இருக்கிறது அல்லவா? ஒவ்வொருவருக்கும் அத்தகைய நினைவுகள் மனம் நிறைய இருக்கக் கூடும். 

செண்பகப்புதூரில் ஒரு அட்டகாசமான கூட்டம் சேர்ந்திருந்தது. கவுண்டமணியின் தொனியில் சொன்னால் கரகாட்ட கோஷ்டி. டீக்கடைக்காரர் பையன், மாட்டுவண்டிக்காரர் பையன், நான் - தம்பியைக் கழற்றிவிட்டுவிடுவேன், அப்புறம் இரண்டு மூன்று பெண்குட்டிகள். டீக்கடைக்காரர் பையன் தான் கோஷ்டியின் தலைவர். காடு மேடெல்லாம் சுற்றுவோம். எந்த மரத்தில் குருவி இருக்கிறதுஎன்பதையெல்லாம் கண்டுபிடித்து வைத்திருப்பான். மாட்டுவண்டிக்காரரின் மகன் சரவணனுக்கு மரம் ஏறத் தெரியும். கோஷ்டியின் விதிப்படி தினசரி வீட்டிலிருந்து ஆளுக்கு ஒரு துண்டு எடுத்து வர வேண்டும். அதை மரத்தைச் சுற்றிலும் கூடு மாதிரி கட்டி வைத்துவிட்டு சரவணன் மேலே ஏறுவான். அவன் குஞ்சுகளை லாவகமாகப் பிடித்து ட்ரவுசர் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கீழே இறங்குவான். அதையெல்லாம் கோஷ்டி தலைவர் பிரகாஷ் கீழே இருந்து வழி நடத்துவார். ஒருவேளை அவனது ட்ரவுசரிலிருந்து குஞ்சு- குருவிக் குஞ்சுதான் - எட்டிக் குதித்துவிட்டால் தப்பித்து ஓடி விடக் கூடாது என்பதற்காகத்தான் துண்டுகளை வைத்து மரத்தைச் சுற்றிலும் தடுப்பு ஏற்படுத்துவது. 

முதன் முறையாக பீடி குடித்துப் பார்த்தது கூட அந்த ஊரில்தான் - சொல்ல மறந்துவிட்டேன். அப்பொழுது சாரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எல்லோருமே என் வயதையொத்தவர்கள்தான். பிஞ்சிலேயே பழுத்திருந்தோம். தம்பியை வைத்துக் கொண்டு பீடியை உறிஞ்சி அதை அவன் வீட்டில் போட்டுக் கொடுத்தால் வம்பாகிவிடும் என்றுதான் அவனைக் கழற்றிவிடுவது. ‘பெரிய பசங்க மட்டும்தான் போகோணும்..குருவி புடிச்சுட்டு வந்து உனக்குக் கொடுக்கிறேன்’ என்று பசப்பி தப்பித்துவிடுவது வாடிக்கையாகியிருந்தது. இப்படியே சுற்றிக் கொண்டிருந்த எங்களுக்கு போரடித்தது. அப்பொழுது எங்களைவிடவும் ஒன்றிரண்டு வயது கூடுதலான ஒரு பொடியன் வந்து சேர்ந்தான். அவனும் வெளியூர்க்காரன். வாய்க்காலுக்கு போகலாம் என்றான். எங்களுக்கும் ஆசைதான். பெண்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. பையன்கள் நான்கு பேர் மட்டும்தான். போகிற வழியிலேயே தெரிந்தவர்கள் ஒன்றிரண்டு பேர்கள் பார்த்துவிட்டு ‘எங்க இந்தப் பக்கம்?’ என்றார்கள். எதையாவது சொல்லித் தப்பித்து வாய்க்காலைச் சென்று பார்த்த போது தண்ணீர் சுழற்றிக் கொண்டு ஓடியது. அது மிக ஆபத்தான பகுதியும் கூட. இப்பொழுது தெரிகிறது. அப்பொழுது தெரியவில்லை.

யாரும் இல்லாத பக்கமாகச் சென்று சட்டை ட்ரவுசரை எல்லாம் மடித்து வைத்துவிட்டு நான்கு அம்மணத்தான்களும் ஒவ்வொருவராக வாய்க்காலுக்குள் இறங்கினோம். முதலில் அந்த வெளியூர்க்காரன் தான் இறங்கினான். நாங்கள் மூன்று பேரும் முழுமையாக இறங்கவில்லை. நீர் சில்லிட்டுக் கிடந்தது. தொடை வரைக்குமான நீரில் நின்று கொண்டிருந்தோம். அவன் துணிந்து உள்ளே சென்று கொண்டிருந்தான். நான்கைந்து அடிகள்தான். அவன் திணறியது முழுமையாகத் தெரிந்தது. ஆனால் என்ன செய்வது என்று புரியவில்லை. ஆளாளுக்குக் கத்தினோம். ஒரு கட்டத்துக்கு மேல் அவனைக் காணவில்லை. மூழ்கிவிட்டான். எங்கள் கதறலில் காது கேட்ட ஆட்கள் அவசர அவசரமாக எட்டிக் குதித்து நீந்தினார்கள். ஆளாளுக்கு முக்குளிப்பதும் எழுவதுமாக இருந்த போது ஒருவர் அவனைப் பிடித்துவிட்டார். பேச்சு மூச்சில்லாமல் கிடந்தவனை மற்றவர்களும் சேர்ந்து இழுத்து வந்தார்கள். வாய்க்கால் உடல் முழுவதும் கீறியிருந்தன. பக்கத்திலிருந்து வண்டிப்பட்டறையிலிருந்து ஒரு சக்கரத்தை எடுத்து வந்து அவனைப் போட்டு சுழற்றினார்கள். கிறுகிறுவென்று சுற்றியதில் வாயிலும் வயிற்றிலுமிருந்த நீர் கொட்டியது. அப்பொழுதும் மயக்கமாகத்தான் கிடந்தான். தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்கள். ஒன்றிரண்டு நாள் கழித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அவனுடைய அம்மாவும் அப்பாவும் திட்டுவார்கள் என்று பயந்து செல்லவேயில்லை. திடீரென்று ஒரு நாள் வெளியில் வந்தவன் ஏதோ நாங்கள்தான் அவனை வாய்க்காலுக்குள் தள்ளிவிட்டது போல சட்டை ட்ரவுசரை எல்லாம் கழற்றிக் காட்டி ‘இங்க பாருங்கடா..பூரா வேலி முள்ளு கிழிச்சுடுச்சு..குஞ்சாமணி கூட தப்பிக்கல’ என்றான். அவனுக்கு அதுதான் பெரிய வருத்தம் போலத் தெரிந்தது. சிறு நீர் கழிப்பதற்கு மட்டும் இடம் விட்டு வெள்ளைத் துணியைச் சுற்றிவிட்டிருந்தார்கள். அவன் பிரச்சினை அவனுக்கு. பாவம்.

அடுத்த ஆண்டு அந்த ஊரைக் காலி செய்துவிட்டு வந்துவிட்டோம். ஆனால் அந்த ஊரில் சேகரித்து வைத்து நினைவுகள் வெகு சுவாரசியமானவை. செண்பகப்புதூருக்கு மிகச் சமீபத்தில் சென்றிருந்தேன். நம் காலத்தின் பிற ஊர்களைப் போலவே அந்த ஊரும் மாறியிருக்கிறது. நிறைய வீடுகள் முளைத்திருந்தன. டீக்கடை இல்லை. வண்டிக்காரரின் வீடு இருந்த சுவடே இல்லை. வெளியூர்க்காரர் குடும்பத்தைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. என்னையும் யாரிடமும் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. அறக்கட்டளையிலிருந்து உதவி கேட்டு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதை விசாரிப்பதற்காகச் சென்றிருந்தேன்.

இதுவரை மனதுக்குள் அந்த ஊருக்கென்று இருந்த மொத்தச் சித்திரமும் கலைந்து போனது. வந்திருக்காமலேயே இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு பேருந்து ஏறினேன்.

எட்டாம் வகுப்பில் ஒரு தலையாகக் காதலித்த பெண்ணை சமீபத்தில்தான் ஃபேஸ்புக்கில் கண்டுபிடித்திருக்கிறேன். ‘ஏண்டா கண்டுபிடித்தோம்’ என்று ஆகிவிட்டது. ஆட்டோகிராஃப் சேரனுக்கு மட்டும்தான் பாட்டெல்லாம் பாட முடியும். நம்மால் முடியாது. இத்தினியூண்டு அழகியாக இருந்தவள் உருமாறியிருந்தாள். அதே மாதிரிதான் ஐந்து அல்லது ஆறாம் வகுப்பில் சைட் அடித்த டீச்சரை ஒரு நிகழ்வில் சந்தித்த போது ‘பார்க்காமலேயே இருந்திருக்கலாமோ’ என்று தோன்றியது. பால்யகாலச் சித்திரங்கள் அற்புதமானவை. அவை கலையாமல் அப்படியே இருப்பதுதான் நல்லது. நரை கூடும் பொழுது குதப்பினாலும் அந்த ஊர் அப்படியேதான் இருக்க வேண்டும். காதலித்த பெண்கள் அதே வடிவில்தான் இருக்க வேண்டும். சைட் அடித்த டீச்சர்கள் அப்படியே மடிப்புக் கலையாத புடவையைத்தான் உடுத்தியிருக்க வேண்டும். 

எல்லாம் விதி. கலைத்துப் போடுகிறது. 

அடுத்ததாக வெளியூர்க்காரனைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். படித்து முடித்து அமெரிக்காவில் இருக்கக் கூடும். திருநெல்வேலியிலும் கூட இருக்கலாம். அவனைக் கண்டுபிடிப்பது பிரச்சினையில்லை. கண்டுபிடித்த பிறகு இப்பொழுதும் தழும்பைக் காட்டாமல் இருக்க வேண்டும் என்றுதான் கவலைப்படுகிறேன்.

9 எதிர் சப்தங்கள்:

KSB said...

// கண்டுபிடித்த பிறகு இப்பொழுதும் தழும்பைக் காட்டாமல் இருக்க வேண்டும் என்றுதான் கவலைப்படுகிறேன்.//

வி.வி.சி. .. :))))

வெட்டி ஆபீசர் said...

உங்கள பாத்து அவங்க என்ன நெனைச்சாங்களோ...:P

Raj said...

Reminds me of "Tholaindhu ponavargal" by Sa.Kandasamy... remember seeing it as a serial in Doordarsan...

சேக்காளி said...

//திருநெல்வேலியிலும் கூட இருக்கலாம்//

Suresh said...

அருமை....

bandhu said...

Hector and the search for Happiness படத்தில் ஒரு தேடலின் முடிவாக வரும் Nostalgia is overrated! எவ்வளவு உண்மை!

செ. அன்புச்செல்வன் said...

மிக அழகாகப் போய்க்கொண்டிருந்தக் கதைத் திடீரென நின்றுவிட்டது ஏக்கத்தைத் தருகிறது..கூடவே ஊர்நினைப்பையும் உண்டுபண்ணிவிட்டீர்கள்.

royapuram2 said...

அருமை இப்படித்தான் என் நண்பன் பற்றி கந்தா என்கிற கந்தசாமி "" எழுதி இருந்தேன்.குழந்தைப் பருவ பிம்பங்களை வைத்து தற்போது பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

”தளிர் சுரேஷ்” said...

பால்யகால சித்திரங்கள் அற்புதமானவை! ஆம்! உண்மைதான்! சில சமயம் அது நமக்கும் பொருந்துகிறது! இன்று முடி திருத்திக்கொள்ள சலூனுக்குச் சென்று கண்ணாடி முன் அமர்ந்தபோது என் உருவம் என்னையே கிண்டல் செய்வது போல தோன்றியது!