Aug 11, 2016

என்ன செய்ய வேண்டும்?

நம் ஊரில் ஒரு பழக்கம் உண்டு. ‘இந்த வருஷம் சாஃப்ட்வேர் சரியில்லையாமா அதனால மெக்கானிக்கல் சேர்ந்துடலாம்’ என்று ஒட்டு மொத்தமாக குட்டைக்குள் எட்டிக் குதிப்பார்கள். ஒரு வருடம் அத்தனை பேரும் கட்டிடப் பொறியியலில் குதித்தால் அடுத்த வருடம் ECEயில் குதிப்பார்கள். என்ன கணக்கு என்ன லாஜிக் என்றே தெரியாது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாக சொல்லச் சொல்லக் கேட்காமல் தானாவதி கல்லூரியில் மின்னணுவியல் படித்துவிட்டு பிறகு போனாம்போக்கி கல்லூரியில் முதுநிலை படிப்பும் படித்துவிட்டு இப்பொழுது வெட்டியாகச் சுற்றுகிறவர்கள் ஏகப்பட்ட பேர்கள் இருக்கிறார்கள். விரிவாக எழுதினால் சங்கடப்படக் கூடும். கல்லூரி ஆசிரியர் என்றால் பனிரெண்டாயிரம் சம்பளம். உள்ளூர் டெக்ஸ்டைல் நிறுவனங்கள் என்றால் எட்டாயிரம் சம்பளம். கட்டிட பொறியாளர் என்றால் சில ஆயிரங்கள் சம்பளம். ஏதாவதொரு வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் முட்டி தேய்ந்து கொண்டிருக்கிறார்கள். 

பக்கத்து வீட்டுக்காரப் பெண்ணின் தம்பி பெங்களூர் வந்திருக்கிறான். கட்டிடவியல் பொறியாளன். வேலை கிடைத்துவிட்டது. ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளம். பவானியிலிருந்து வந்து பெங்களூரில் தங்கி ஏழாயிரத்து ஐநூறு ரூபாய். அவனிடம் எதிர்மறையாக எதுவும் பேசுவது சரியில்லை. அமைதியாக இருந்துவிட்டேன். மிகச் சொற்பமான சம்பளத்துக்கு வேலையில் இருக்கும் ஏகப்பட்ட பொறியாளர்களை எதிர்கொள்ள நேர்கிறது. 

கல்வியைக் கொடுப்பதோடு மட்டும் அரசாங்கத்தின் வேலை முடிந்துவிடுகிறதா? அதுவும் அரைகுறைக் கல்வி. 

கடந்த வாரம் ஊரிலிருந்து வரும் சேலம் பேருந்து நிலையத்திற்குள் வந்த மதுரை பேருந்தில் ஏறினேன். பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு பயணி கடுப்பில் கத்திக் கொண்டிருந்தார். ‘சேலம் பேருந்து நிலையத்துக்குள் போகாதுன்னு சொன்னீங்க இல்ல? இப்போ ஏன் போகுது?’ என்பதுதான் அவர் பிரச்சினை. நடத்துநருக்கு இளம் வயது. ஒரேயொரு இருக்கை காலியிருந்தாலும் பேருந்து நிலையத்திற்குள்ளே சென்று அதிகாரியிடம் சீல் வாங்கிக் கொண்டுதான் சேலத்தைத் தாண்ட வேண்டும் என்பது விதியாம். விளக்கிக் கொண்டிருந்தார். ஆனால் கடுப்பாளர் ஏற்றுக் கொள்வது போலத் தெரியவில்லை. பொறுமையிழந்த நடத்துநர் ‘சார்..நான் பி.ஈ முடிச்சுட்டு மூணு லட்சம் கொடுத்துத்தான் கண்டக்டர் வேலைக்கு வந்திருக்கேன்...மெமோ அது இதுன்னு இப்பவே அலைய முடியாதுங்க..புரிஞ்சுக்குங்க’ என்றார். அந்த ‘புரிஞ்சுக்குங்க’ என்ற சொல்லில் அத்தனை அர்த்தம் இருந்தது.

இவர் ஒரு சாம்பிள். 

படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை என்றாலும் கூடத் தொலைகிறது. நான்கு லட்ச ரூபாய் செலவு செய்து படிப்பை முடித்து மூன்று லட்ச ரூபாய் கொடுத்து நடத்துநர் வேலை வாங்குவதுதான் அபத்தமாக இருக்கிறது. பத்தாம் வகுப்போடு நின்றிருந்தால் ஐந்தாறு லட்சம் மிச்சமாகியிருக்கும். பணம் பணம்தான். இப்பொழுதெல்லாம் வேலை வாங்குவதிலிருந்து மாற்றல் வாங்குவது வரைக்கும் அத்தனைக்கும் காசுதான். எல்லாவற்றுக்கும் இப்பொழுது ரேட் இருக்கிறது. சிபாரிசு இல்லையென்றால் ஒரு ரேட். சிபாரிசு இருந்தால் இன்னொரு ரேட். ஆனால் எதுவாக இருந்தாலும் கட்டு கை மாற வேண்டியிருக்கிறது என்கிறார்கள். அது ஒரு பக்கம். அரசுத்துறைகள். விட்டுவிடலாம்.

படித்து முடித்து வருகிறவர்களுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன? தமிழகத்தின் கல்வி நிலை, இங்கேயிருக்கும் வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி என்பதையெல்லாம் வெளிப்படையாக விவாதித்தால் நிலைமை அதல பாதாளத்தில் கிடக்கிறது என்பதுதான் உண்மை. ஒருவேளை டிசிஎஸ்ஸூம், இன்ஃபோசிஸூம், அசோக் லேலண்டும் திடீரென டேராவைப் பிரித்தால் தமிழகத்தின் தெருக்கள் நிரம்பிவிடும். அத்தனை பேர்கள் தெருவில் நிற்பார்கள். 

படித்த தலைமுறையை பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். படிக்காதவர்கள் கூட தன்னிச்சையாக, சுயசார்புடையவர்களாக இருக்கிறார்கள். படித்தவர்களில் தொண்ணூற்றைந்து சதவீதம் பேர் யாராவது ஒரு முதலாளிக்கு அடிமைதான். அரசாங்கம் நினைத்தால் சிறுகச் சிறுக மாற்ற முடியும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும். அதற்காக அதிகார மட்டத்தில் நீண்ட நெடிய விவாதங்களை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. இத்தனை பேர்கள் படிக்கிறார்கள். அத்தனை பேரும் வேலைக்குத்தான் செல்ல வேண்டுமா என்ன? லட்சக்கணக்கான பட்டதாரிகளில் சில ஆயிரம் பேராவது சுய தொழில்களைத் தொடங்கட்டும். அது பல்லாயிரம் பேருக்கான வேலைகளை உருவாக்கும். 

ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஒரு பிரச்சினையில்லை- பல பிரச்சினைகள். எந்தத் தொழிலைத் தொடங்குவது? வெறும் சிறு தொழில் கடன் கொடுத்தால் போதுமா? அனுமதி வாங்குவதிலிருந்து தொழில் தொடங்குவது வரை அதிகார வர்க்கத்திற்கு கப்பம் கட்ட வேண்டும்; உற்பத்திப் பொருளை சந்தைப்படுத்த வேண்டும்; தொழிற்துறைச் சிக்கல்களைச் சமாளிக்க வேண்டும்- இன்னும் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. இதையெல்லாம் எந்த எம்.எல்.ஏவும் அமைச்சரும் விவாதிக்கிறார்கள்? 

திமுகவின் பிரச்சினை அதிமுகவின் பிரச்சினை என்பதையெல்லாம் ஓரங்கட்டிவிடலாம். தற்போதைய சட்டமன்றக் கூட்டத் தொடரில் கூட உருப்படியாக ஏதாவது பேசுவார்கள் என்றுதான் எதிர்பார்த்தேன். வலிமையான ஆளுங்கட்சி. கிட்டத்தட்ட சரிசமமான பலத்துடன் எதிர்கட்சி. எந்த விவாதம் உருப்படியாக இருக்கிறது என்று கவனியுங்கள். திமுக எதைச் சொன்னாலும் ‘அது திமுக ஆட்சிக்காலத்திலிருந்தே அப்படித்தான்’ என்று அமைச்சர்கள் பதில் சொல்கிறார்கள். அதில் பாட்டும் கேலியும் கிண்டலும் நிறைந்து கிடக்கிறது. பதிலுக்கு திமுகவும் எதையாவது சொல்கிறார்கள். அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்குகிறார்கள். திமுக வெளிநடப்பு செய்கிறது. எலியும் பூனையையும் விடவும் மோசமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

இனி அடுத்த ஐந்து வருடங்களுக்கும் இப்படித்தான் இருக்கும் என்று சத்தியமே செய்யலாம். இவர்களை விமர்சனம் செய்வது நோக்கமில்லை. அதனால் பயனுமில்லை. ஆனால் தமிழகத்தின் கல்வித்துறையையும் தொழில்துறையையும் இணைக்க வேண்டியது மிக அவசியம். அதற்காக இவர்கள் காலில்தான் விழுந்தாக வேண்டும். ஹூண்டாய் நிறுவனத்தையும் டெல் நிறுவனத்தையும் ஸ்ரீபெரும்புதூருக்குக் கொண்டு வருவதால் மட்டும் அடுத்த தலைமுறைக்கு பயன் இல்லை. இங்கே இருக்கிற வளங்களையும் மனித மூளையையும் சுரண்டி பன்னாட்டு அதிகாரிகள் வளப்பம் ஆவதற்கான செயல்பாடுகளாக மட்டும்தான் அவை அமையும். இங்கே இருக்கிற வளங்களை இங்கே படித்து முடிக்கிற இளைஞர்கள் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைத் தொலை நோக்கோடு சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஸ்டார்ட்-அப் என்று சொல்லப்படுகிற புதிய நிறுவனங்களைத் தோற்றுவிக்க இளைஞர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். 

எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கின்றன- மஞ்சளை ஆட்டி எண்ணெயை எடுத்து ஏற்றுமதி செய்தால் ஏகப்பட்ட வருமானம் பார்க்கலாம். பொறியியல் படித்த மாணவரிடம் சொன்னால் கேட்கமாட்டார். இன்னொரு பொறியாளரை விடுவோம். நான் செய்வேனா? மாட்டேன். ‘அதெல்லாம் ரிஸ்க்’ என்று ஒரே வார்த்தையில் அம்மாவும் அப்பாவும் மணி அடித்துவிடுவார்கள். அரசாங்கம் கொள்முதல் நிலையத்தைத் தொடங்கினால் நான்கைந்து பேர்கள் முயற்சித்துப் பார்ப்பார்கள். ஈரோடு மாவட்டத்தில்தான் மஞ்சள் குவிகிறது. அதை ஏன் குவிண்டால் குவிண்டாலாக அடுக்கி ஏலம் விடுகிற வேலையை மட்டும் அரசாங்கம் செய்ய வேண்டும்? இருக்கின்ற வாய்ப்புகள், அதன் மூலமான தொழில் முயற்சிகள் போன்றவற்றையெல்லாம் சிந்திக்கிற அதிகாரிகளும்- அமைச்சர்களை இழுக்கவேயில்லை- அதிகாரிகளை அந்தந்த இடத்தில் நியமனம் செய்தாலும் கூட போதும். குறைந்தபட்சமாக கருத்துக்களுக்கு செவிமடுக்கிற அதிகாரிகளாக இருக்க வேண்டும். 

இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது. கெஞ்சியாவது கேட்போம். செய்யாவிட்டாலும் தொலைகிறது- பேசட்டும்.

3 எதிர் சப்தங்கள்:

Gopal bhavani said...

நீங்கள் கூறுவது மிகச் சரிதான் மணி சார்.இஞ்சினியரிங் படிக்க ஆசைப்பட்டு, இள நிலை வேதியியல் படித்து விட்டு ஒசூரில் பணிபுரியும் போது எம்.இ,எம்.டெக் படித்தவர்கள் 7500 to 8500 ரூபாய் சம்பளத்தில் நான் வாங்கியதை விட குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதை அறிந்ததும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் இஞ்சினியரிங் படித்த பலரின் நிலை அது தான். நீங்கள் குறிப்பிட்டுளதைப் போன்று 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் வேலைக்கு போக நினைப்பவர்கள் TNPSC நடத்தும் போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டு தொலைநிலைக் கல்வி முலம் பட்டம் பெறலாம். பட்டப் படிப்பை முடிப்பதற்கு முன்பு வேலை கிடைத்து விடும்.
TNPSC ஆல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வு எழுத 10 ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. முன்றே மாதத் தில் படித்து தேர்ச்சி பெற்று அரசு வேலையில் சேரலாம்.

Vinoth Subramanian said...

True sir. Educated becomes slaves.

Amanullah said...

டியர் மணிகண்டன்,

வணக்கம். நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன். EA grade எலக்டிரிக்கல் காண்டிராக்டார். தற்போது அரசாங்க கம்பனிகளுக்கு கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் வேலை செய்து வருகின்றேன். வேலை வாய்ப்பு பற்றி எனது அனுபவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது வரை என்னிடம் கடந்த இருபது ஆண்டுகளில் சுமார் இருநூறு பேர் பணி புரிந்துள்ளார்கள். அவர்களில் மிக சிலரே (5 பேர் மட்டுமே) இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணியில் தொடர்ந்து இருந்து இருக்கிறார்கள். அனைவருமே(5 பேருமே) தற்போது அரசு கம்பனிகளில் நேரடியாக காண்டிராக்டாக் எடுத்து என்னை போலவே மாதம் குறைந்த பட்சம் 50000 லாபம் ஈட்டுகிறார்கள். வியப்பு என்னவென்றால் அனைவரின் கல்வி தகுதியும் பத்தாம் வகுப்புக்கும் கீழ்தான். சொந்தமாக கார், வீடு என்று வசதியாக இருக்கிறார்கள். மற்ற அனைவருமே (கல்வி தகுதி குறைந்த பட்சம் - டிப்ளமா முதல் B.E வரை) இன்னமும் எந்த ஒரு வேலையிலும் நிரந்திரமில்லாம் மாதம் 10000 ரூபாய்க்கும் குறைவான சம்பளுத்தில் வேலை செய்து வருகிறார்கள்.