Jul 26, 2016

தடியாள்

வீட்டிற்கு பக்கத்தில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை ஒன்றிருக்கிறது. கடை முதலாளியைவிடவும் அங்கே இருக்கும் பொடியனோடு நல்ல பழக்கம். சார்லஸ் என்று பெயர். பொடியன் என்றால் அவனுக்கும் பதினேழு வயதுக்கு மேல் இருக்கும். பிரபா என்றொரு காதலி கூட உண்டு. அதே வீதியில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்கிற பெண் அவள். வரும் போதும் போகும் போது சைட் அடித்து அப்படியே காதலாகிவிட்டது. 

‘டேய் பிரபா’ என்று காதலியின் பெயரைச் சொல்லி சத்தம் போட்டு அழைத்தால் ‘சார்...சும்மா இருங்க’ என்று பம்முவான். அவன் ஏதோ பயப்படுகிற ஆள் என்று நினைக்க வைப்பதெல்லாம் நடிப்பு. தில்லாலங்கடி. சார்லஸ் தமிழன். இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பாக பெங்களூர் வந்து அப்படியே தங்கிவிட்ட குடும்பத்தின் வாரிசு. இருசக்கர வாகனம் பழுது நீக்குகிற வேலையைத் தவிர இன்னொரு வேலையும் செய்கிறான். உள்ளூர் அடியாளிடம் சண்டைக்காரன். Fighter. வெட்டுக்குத்தெல்லாம் இல்லை. மிரட்டுதல், லேசாகத் தட்டுதல் போன்ற வேலைகளைச் செய்கிறான். அந்த தடியாளிடம் சார்லஸ் போன்றே வேறு சில பையன்களும் இருக்கிறார்களாம். கூட்டமாகச் சென்று அதுப்புக் காட்டிவிட்டு வருவார்கள். 

சார்லஸிடம் நிறையக் கதைகள் உண்டு. பெரும்பாலான கதைகளின் ஆதியும் அந்தமும் அவனுக்குத் தெரியாது. ‘ஒரு பையன் சார்..பத்தாங்க்ளாஸ்ஸூ...ஃபோட்டோவை வாட்ஸப்புல அனுப்பி தட்டின்னு வரச் சொன்னாங்க...தட்டவே இல்ல...போய் நின்னவுடனே மூத்திரம் பெஞ்சுட்டான்..சும்மா பேசிட்டு வந்துட்டேன்’ என்றான். என்ன காரணம்? ஏன் அடிக்கச் சொன்னார்கள் என்கிற விவரங்கள் எதுவும் தெரியாது. அபாயகரமான வேலை. ஆனால் வெகு இயல்பாக இருக்கிறான்.

இந்தத் வேலைக்குள் சார்லஸ் எப்படி வந்தான் என்பதுதான் சுவாரஸியமான கதை.

உள்ளூரில் ஒரு பெரிய மனுஷன். எச்சில் கையில் காகம் ஓட்டாத பெரிய மனுஷன். அவனுக்குப் பிறந்தநாள் வந்திருக்கிறது. சார்லஸ்ஸூம் இன்னபிற நான்கு பொடியன்களுக்கும் அவன் மீது மகா கடுப்பு. அவனை ஏதாவதொரு வகையில் நொந்து போகச் செய்ய வேண்டும் என்று சில முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். கார் போகும் வழியில் ஆணிகளைப் போட்டு வைத்தல், வீட்டு மதிற்சுவரில் எதையாவது எழுதி வைப்பது போன்றதான அரதப்பழசான முயற்சிகள். அத்தனையும் தோல்வியில் முடிந்து போக சார்லஸூடன் இருந்த ஒரு பையனுக்கு மண்டையில் பல்ப் எரிந்திருக்கிறது. வீதியெங்கும் ‘பிறந்தநாள் காணும் பெரிய மனுஷனே’ என்று அவனது அல்லக்கைகள் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்ததைப் பார்த்த பிறகு எரிந்த பல்பு அது. 

சிகரெட் அட்டைகளைப் பொறுக்கியெடுத்து ‘அய்யாவின் பிறந்தநாளில் இலவச வேஷ்டி சேலை பெற்றுக் கொள்வதற்கான கூப்பன்’ என்று ரப்பர் ஸ்டாம்ப் ஒன்றை உருவாக்கி அருகாமை குடிசைப்பகுதியில் இரவோடு இரவாக விநியோகித்துவிட்டார்கள். அதோடு விட்டார்களா? ‘அய்யா காலையிலேயே வெளியே போய்டுவாரு..காலையில் அஞ்சு மணிக்கெல்லாம் போய்டுங்க’ என்று சொல்லியபடியே விநியோகம் செய்திருக்கிறார்கள். நம் ஆட்கள் இலவசம் என்றால் விடுவார்களா? அடுத்த நாள் காலையில் நான்கரை மணிக்கே பெரிய மனிதரின் வீட்டுக்கு முன்பாகக் கூடிவிட்டார்கள். ஐந்து மணிக்கெல்லாம் சலசலப்பு கேட்கத் தொடங்க வீட்டிலிருந்து ஒவ்வொருத்தராக வந்து பார்த்திருக்கிறார்கள். பிறந்தநாள் காணும் பெரிய மனுஷன் பல்லைக் கூடத் துலக்காமல் இந்தப் பஞ்சாயத்துக்கு வந்து ‘அப்படியெல்லாம் கொடுக்கலையே’ என்று குழம்ப கூட்டத்தில் இருந்தவர்கள் ‘மகராசனா இருக்கணும்ய்யா’ என்று கும்மியடித்திருக்கிறார்கள்.

வேறு வழியே இல்லை. 

பிறந்தநாள் அதுவுமாக இந்தக் கூட்டத்தை திருப்பியனுப்பினால் சாபம் விடுவார்கள். வீட்டிலிருந்து பணக்கட்டை எடுத்து வந்து ஆளுக்கு நூறு ரூபாயாகக் கொடுத்திருக்கிறார். வேஷ்டி சேலையை எதிர்பார்த்துச் சென்றவர்களுக்கு ஏமாற்றம்தான் என்றாலும் போதும் என்கிற மனதோடு வந்துவிட்டார்கள். ஆனால் பெரிய மனுஷனுக்குத்தான் பயங்கர எரிச்சலாகியிருக்கிறது. தனது ஆட்களை வைத்து விசாரிக்கச் சொன்னதில் சார்லஸ் மற்றும் குழுவினரை மிகச் சாதாரணமாகக் கண்டுபிடித்துவிட்டார்கள். குடிசைப்பகுதியில் ‘உனக்கு யார் கூப்பன் கொடுத்தாங்க?’ என்று கேட்டால் கை காட்டமாட்டார்களா? காட்டிவிட்டார்கள். பெரிய மனுஷனின் ஆட்கள் ஒன்றும் செய்யவில்லை. காவல்நிலையத்தில் விவரமாகப் போட்டுக் கொடுத்து கையோடு கவர் ஒன்றையும் கொடுத்துவிட்டு வந்துவிட்டார்கள். 

ஜீப்பை எடுத்துக் கொண்டு வந்தவர்கள் நான்கு பேரையும் அள்ளிப் போட்டுச் சென்று கும்மியெடுத்துவிட்டார்கள். சார்லஸின் வார்த்தைகளில் சொன்னால் ‘நெட்டி முறிச்சுட்டானுக’. இரண்டு நாட்கள் உள்ளே வைத்து விளாசினார்களாம். வருகிற போகிறவனெல்லாம் நொறுக்கிவிட்டுப் போக கடைசியாக வெள்ளைச் சட்டையும் வெள்ளைப் பேண்ட்டும் அணிந்து ஸ்கார்ப்பியோவில் ‘சார் பசங்களை இனி நான் அமைதியா இருக்கச் சொல்லுறேன்’ என்று சொன்னவன்தான் சார்லஸ் இப்போது வேலைக்கு இருக்கும் தடியாள். சார்லஸ் உள்ளிட்டவர்களின் பெற்றோர்கள் அவனிடம் சரணாகதியடைய ஆபத்பாந்தவனாக வந்து காப்பாற்றி பொடியன்களைத் தன்னோடு வைத்துக் கொண்டான். 

ஆபத்பாந்தவன் சிறு ரவுடி. கட்டப்பஞ்சாயத்து, சிறு சிறு தகராறுகளில் நீதிபதி. தீர்ப்புக்கு ஏற்ப அவனுக்கு கப்பம் கட்டிவிடுகிறார்ர்கள். நிறையத் தொடர்புகளை வைத்திருக்கிறான். நாளைக்கு கவுன்சிலராகவோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றாகவோ ஆகிவிடக் கூடும். இப்போதைக்கு தனது வருமானத்தில் ஐந்தோ பத்தோ சார்லஸ் மாதிரியான பொடியன்களுக்குப் போடுகிறான். வேலை இருக்கும் போது ஒரு அழைப்பு. தான் வேலை செய்யும் கடை உரிமையாளரிடம் சொல்லிவிட்டு சார்லஸ் ஓடுகிறான். சார்லஸூக்கு பணம் பிரச்சினையே இல்லை. இந்த வேலை கொடுக்கிற கெத்துதான் அவனுக்கு முக்கியம். ‘ஃபைட்டர்ன்னு சொன்னா நம்ம ஏரியாவுல பயப்படுவானுக சார்’ என்பான். அவனிடம் பேசுவதற்கு எனக்கும் கூட கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும்.

பயமில்லாமல் இருக்குமா? 

பெங்களூரில் மாலை ஏழு மணிக்கு மேலாக சந்து பொந்துகளுக்குள் சென்றால் சிறு சிறு சச்சரவுகளை நிறையப் பார்க்க முடிகிறது. நேற்றும் கூட ஒருவனை அடித்தார்கள். சார்லஸின் குழுவில்லை. வேறொரு குழு. மாலையில் மழை பெய்து கொண்டிருந்தது. விவேக் நகர் பக்கமாக ஒரு வீதியில் பைக்கில் சென்றவனை நிறுத்தி நான்கைந்து பொடியன்கள் அடித்துக் கொண்டிருந்தார்கள். அடி வாங்கியவன் சாகவெல்லாம் மாட்டான். மொத்து அடிதான். ஆனால் மனதுக்குள் வஞ்சம் இருக்கும். பார்த்துவிட்டு வந்து அதைக் கட்டுரையாக எழுதும் போது வண்டியை நிறுத்திவிட்டுச் சென்று நான்கைந்து பேரையும் விரட்டி விட்டதாகத்தான் எழுத விரும்பினேன். நீங்கள் நம்பவா போகிறீர்கள்? உண்மையையே சொல்லிவிடுகிறேன். ஓரமாக நிறுத்தி அலைபேசியில் பேசுவதைப் போல பாவ்லா காட்டினேன். அடித்துக் கொண்டிருந்த கூட்டத்திலிருந்த ஒருத்தன் - அவனுக்கு பதினைந்து வயது கூட இருக்காது. ‘கிளம்பு’ என்று சைகை காட்டினான். ‘சரி குரு’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பி வந்துவிட்டேன். 

வேணி ‘ஏன் இவ்வளவு லேட்’ என்று கேட்டாள். ‘ஒரு பிரச்சினை. சரி செய்துவிட்டு வந்தேன்’ என்று கெத்துக் காட்டியிருக்கிறேன். நம்பிக் கொண்டாள். என்ன சொன்னாலும் நம்புகிற ஒரே ஜீவன்.

5 எதிர் சப்தங்கள்:

kaniB said...

"சரி குரு" - இதன் அர்த்தம் பெங்களூரில் இருப்பவர்கள் சிலருக்கு கூட புரியாது... சொல்லப்பட்ட இடம் மிகச்சரியான அர்த்தத்தை உணர்த்துகிறது...

சேக்காளி said...

//ஒரு பிரச்சினை. சரி செய்துவிட்டு வந்தேன்’ என்று கெத்துக் காட்டியிருக்கிறேன். நம்பிக் கொண்டாள்//
கம்ப்யூட்டர் ல வைரஸ் ப்ரசனைய சரி பண்ணிட்டு வந்திருப்பாரு போல ன்னு நெனச்சிருப்பாங்க.

TK said...

"'கிளம்பு’ என்று சைகை காட்டினான். ‘சரி குரு’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பி வந்துவிட்டேன்."

தீர்க்கதரிசி மணி நீங்க, கபாலி பதிவிலேய இந்த தடியாட்களுக்கு நல்ல உறைக்கின்ற மாதிரி பதில் சொல்லிருக்கீங்க .

"முடியுமா? முறைத்தால் அடங்குற ஆளா நான்? கிளம்பிவிட்டேன்."

Vinoth Subramanian said...

unga gethu ungalukku theriyala sir...

ilavalhariharan said...

அடுத்த நாவலுக்கான கருவும் களமும் தயாராயிருச்சீங்கோ.....சார்லஸ் கதாநாயகன்....இல்லே உபகதாநாயகன்.....சரியா மணி.....