Jul 25, 2016

மாற்று மருத்துவம்

அப்பா எப்படி இருக்கிறார் என்று யாராவது விசாரிக்கிறார்கள். நன்றி. நன்றாக இருக்கிறார். பூரணமாக குணமடைந்துவிட்டார் என்று சொல்ல முடியாது. ஆனால் நிறைய முன்னேற்றம். ஹெபாட்டிஸ் சி வைரஸ்தான் பிரச்சினையின் மூலகாரணம். அது கல்லீரலை எழுபத்தேழு சதவீதம் சுருக்கியிருந்தது. Chirrohtic condition என்கிறார்கள். அதன் பிறகு வைரஸூக்கு மருந்து எடுத்துக் கொண்டிருக்கும் போதுதான் கடந்த பிப்ரவரியில் வேறு பிரச்சினைகளைக் கண்டறிந்தார்கள். வெளியில் யாருக்கும் சொல்லவில்லை. அம்மாவுக்கும் கூடத் தெரியாது. இன்னமும் கூட அப்பாவுக்குத் தெரியாது.

பரிசோதனை விவரங்களை வைத்துக் கொண்டு நான்கைந்து சூப்பர் ஸ்பெஷல் மருத்துவர்களைச் சந்தித்தேன். ‘இதுக்கு ஒரே மருந்துதான் இருக்கு. அதுவும் கூட முழுமையாக சரி செய்யாது; ஆனால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்’ என்றார்கள். அந்த மருந்தை பேயர் நிறுவனம் தயாரிக்கிறது. மாதம் நாற்பத்தைந்தாயிரம் ரூபாய். ஜூன் மாத இறுதி வரைக்கும் அந்த மாத்திரையை எடுத்துக் கொண்டிருந்தார். அவர்கள் சொன்னது போல நோய் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் படிப்படியாக நோயின் வீரியம் உயர்வதைக் காணமுடிந்தது. வலி எதுவுமில்லை. ஆனால் ஒரு வகையிலான அசெகளரியம். கோயமுத்தூரில் ஒவ்வொரு மாதமும் மருத்துவரைச் சந்திக்கும் போது ‘அது அப்படித்தான் இருக்கும், ஆனால் நோய் கட்டுப்பாட்டில் இருக்கிறது’ என்பார். திரும்பி பெங்களூர் வந்துவிடுவோம்.

அப்படியிருந்த போதுதான் ஜூலை இரண்டாம் நாள் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது. அதற்கு ஒரு வாரம் முன்பாகத்தான் பரிசோதனைச் செய்திருந்தோம். வழக்கம் போலவே கட்டுப்பாட்டில் இருப்பதாகத்தான் சொன்னார். பெங்களூரில் நினைவு குறையக் குறைய மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது ‘ஈரல் செயல்பாட்டை நிறுத்திவிட்டது. இனி மருத்துவம் செய்ய முடியாது’ என்று கை விரித்தார்கள். அத்தனை வாய்ப்புகளும் தடைபட்ட பிறகுதானே மாற்று மருந்துகளை யோசிக்கத் தோன்றும்? நாட்டு பசுவின் மூத்திரத்தைப் பற்றி யாராவது பேசும் போது நக்கலடித்திருக்கிறேன். ஆனால் பஞ்சகவ்யம், அர்க் மற்றும் புனர்னாவா ஆகிய மருந்துகளைக் கொடுக்க ஆரம்பித்தோம். மெல்ல மெல்ல முன்னேற்றம் தெரிந்தது.

இந்தச் சமயத்தில்தான் சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் இணைப் பேராசிரியராக இருக்கும் வெற்றிவேல் வந்து பார்த்தார். அவர் மின்னியல் பேராசியர். ஆனால் சொந்த முயற்சியில் சித்த மருத்துவத்தில் மிகப்பெரிய அறிவாளி. அவராகப் படித்து வளர்த்துக் கொண்ட அறிவு. அப்துல்லா சாஹிப், பலராமையா உள்ளிட்ட சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் புத்தகங்களை வரிசைக்கிரமாக மனனம் செய்து வைத்திருக்கிறார். அவர் சங்ககிரி மனோகர், மருத்துவர் சரவணன் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து செயல்படுகிறார். அவர் முதன்முறையாக வந்து சித்த மருத்துவத்தைப் பற்றி பேசிய போது பெரிய நம்பிக்கையில்லை. 

‘சித்தா, நாட்டு மருந்தில் எல்லாம் ஸ்டீராய்டு கலந்துடுவாங்க..தயவு செஞ்சு போய்டாதீங்க’ என்று ஆரம்பகட்டத்தில் சில அறிவுரைகள் வந்து சேர்ந்தன. அதனால் பயமாக இருந்தது. வைத்தியம் பார்க்கிற மருத்துவர் வியாபார நோக்கில்லாமல் நேர்மையானவராக இருக்க வேண்டுமே என்கிற தயக்கம் இருந்தது. பேராசிரியர் வெற்றிவேலுக்கு சித்த மருத்துவத்தில் வருமானம் எதுவுமில்லை. உடலைப் புரிதல் என்கிற நோக்கத்தில் விடிய விடிய ஓலைச் சுவடிகளையும் புத்தகங்களையும் படித்துக் கொண்டிருக்கிறார். 

இரண்டு மூன்று முறை மருத்துவமனைக்கே வந்து பேசினார். அவருடைய அப்பா எங்கள் அம்மாவுக்கு ஆசிரியர். அய்யாமுத்து வாத்தியார் என்றால் உள்ளூரில் பிரபலம். வெற்றிவேல் அவர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு சித்த மருத்துவத்துக்கும் ஒத்துக் கொண்டோம். நோயைத் தடுக்க ஒரு மருந்து, ஈரலை மீண்டும் செயல்படச் செய்ய தனி மருந்து என்று எந்த மருத்துவர் எதில் சிறப்பாகச் செயல்படுகிறாரோ அவரிடம் அந்தந்த மருந்துகளைப் பெற்றுத் தந்தார். எந்த மருத்துவரும் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. இன்றோடு இருபத்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. அப்பாவால் நடக்க முடிகிறது. சாப்பிட முடிகிறது. ஏற்கனவே சொன்னது போல சிறு சிறு அசெகளரியங்கள் இருந்தாலும் ‘இனி மருத்துவம் வேலைக்கு ஆகாது. நீங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடலாம்’ என்ற சூழல் எதுவும் இல்லை. 

இதை இவ்வளவு அவசரமாக எழுத வேண்டியதில்லை. என்னளவில் இது உணர்வுப்பூர்வமான விஷயம். எழுதினால் யாராவதொரு மருத்துவர் வந்து விவாதத்திற்கு இழுக்கக் கூடும். அப்பாவை மையமாக வைத்து விவாதம் எதிலும் ஈடுபடுகிற மனநிலை இல்லை. ஆனால் யாராவது ஒருவருக்கு நிச்சயமாக பயன்படக் கூடும் என்பதற்காக இதை எழுதுகிறேன். கடந்த ஏழெட்டு மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ரத்தப் பரிசோதனை செய்த விவரங்கள், அப்பொழுதெல்லாம் என்ன புள்ளிகள் இருந்தன, கடைசியாக சித்தா மற்றும் நாட்டு மருந்து கொடுக்கப்பட்டு இருபத்தியிரண்டு நாட்கள் கழித்துச் செய்த பரிசோதனையில் எவ்வளவு புள்ளிகள் இருந்தன என எல்லாமும் கைவசம் இருக்கின்றன. ஒரு நாள் விரிவாகப் பதிவு செய்கிறேன்.

ஈரலின் செயல்பாடுகளைக் கண்டறிவதற்காக சில ரத்தப் பரிசோதனைகளைச் செய்கிறார்கள். முக்கியமான சிலவற்றை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்.


ஜூலை 02
ஜூலை 22
Normal Range
SGOT
399
84
15-37 U/l
SGBT
245
59
12-78 U/l
Total Bilirubin
3.57
1.3
0.3-1.1 mg/dl
Direct Bilirubin
2.45
0.9
0- 0.25 mg/dl

(“ஈரலைப் பொறுத்தவரையிலும் downgrade ஆவதைத் கட்டுபடுத்தலாம். அதையும் மீறி கீழே விழத் தொடங்கினால் தடுப்பது சிரமம். இவருக்கு கீழே விழத் தொடங்கிவிட்டது”- இது கோவையில் சிறப்பு மருத்துவர் சொன்ன வார்த்தைகள்)

இதையெல்லாம் எழுதுவதால் அலோபதி மோசம் என்பதை நிரூபிப்பதும் என் நோக்கமில்லை. கோபியில் செயல்படும் அபி மருத்துவமனை இல்லையென்றால் கோவையிலிருந்து அப்பாவை அழைத்துச் சென்று எங்கே படுக்க வைப்பது என்று தெரிந்திருக்காது. அபி மருத்துவமனையின் மருத்துவர்கள் செந்தில்நாதன், கார்த்திகேயன், குமரேசன், மோகன் உள்ளிட்டவர்களுக்கு வந்து பார்க்க வேண்டிய அவசியமேயில்லை. ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து பார்த்து ஆலோசனைகளைச் சொன்னார்கள். மருத்துவர் சிவசங்கர் ஒரு நாளைக்கு மூன்று முறை வருவார். உதவிகரமான சிகிச்சைகள் அத்தனையையும் அவர்தான் அளித்தார். பரிசோதனை முடிவுகளைப் பார்த்துவிட்டு நிலைமையைத் துல்லியமாகக் கணித்தது அவர்தான். அவர் இல்லையென்றால் இதெல்லாம் சாத்தியமே ஆகியிருக்காது. செவிலியர்கள் அத்தனை உதவிகளையும் செய்தார்கள். அலோபதி மருத்துவர்களின் உதவியுடன், சித்த மற்றும் நாட்டு மருந்துகள் வேலை செய்கின்றன.

நோய் இன்னமும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வராமல் இருக்கலாம். ஆனால் நோய் முதிர்ந்த நிலை இது; may be in weeks time என்று சொல்லப்பட்டவருக்கு எவ்வளவு முன்னேற்றம் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காக குறிப்பிட்டிருக்கிறேன். ஒருவேளை ஆரம்பகட்டத்திலேயே மாற்று மருந்துகளை முயன்றிருந்தால் இவ்வளவும் சிரமம் நேராமல் இருந்திருக்கலாம். 

ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து மருத்துவ விவரங்களை எழுதலாம் என்றுதான் தோன்றியது. ஆனால் அப்படியில்லை. யாரேனும் இதைப் பின்பற்றக் கூடும். தொடர்பு கொள்ளக் கூடும். அவர்களுக்கு பயன்படட்டுமே. 

பேராசிரியர் வெற்றிவேலை அழைத்து ‘உங்கள் பெயரைக் குறிப்பிட்டு எழுதட்டுமா? யாராவது விவரங்கள் கேட்டால் உங்கள் எண்ணைக் கொடுக்கட்டுமா?’ என்றேன். ‘தாராளமாகச் செய்யுங்கள். சேவையாகத்தானே செய்கிறோம்? இதில் என்ன தொந்தரவு’ என்றார். என்றாலும் கூட இங்கே பொதுவெளியில் அவருடைய எண்ணைக் குறிப்பிடவில்லை. தேவைப்படுகிறவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் அவருடைய எண்ணைத் தருகிறேன். எந்த மருத்துவரிடம் எந்த மருந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்து அவர் வழிகாட்டக் கூடும்.

சித்த மருத்துவத்துடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிற அர்க், பஞ்சகவ்யம் கிட்டத்தட்ட அத்தனை புற்று நோய்களிலும் வீர்யத்துடன் செயல்படுவதாகச் சொல்கிறார்கள். இந்துத்துவவாதிகள் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக மட்டுமே குருட்டுவாக்கில் நாட்டுப் பசுவின் மூத்திரத்தை விமர்சனம் செய்ய வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

மாற்று மருந்துகள் செயல்படுவதைக் கண்டுணரும் போது விவரங்களை மற்றவர்களுக்கும் சொல்வது நம் கடமை. ஒரேயொரு மருத்துவத்தை மட்டுமே கண்களை மூடிக் கொண்டு நம்ப வேண்டியதில்லை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிறேன். இவையெல்லாம் யாரோ சொன்னதில்லை. நேரடியான சாட்சியமாக இருக்கிறேன். சரியான மருத்துவரைக் கண்டுபிடிப்பதில்தான் மிகப்பெரிய சவால் இருக்கிறது. அதைக் கண்டுபிடித்துவிட்டால் போராடிப் பார்த்துவிடலாம். ஒரு கதவு அடைபட்டால் இன்னொரு கதவு திறக்கக் கூடும். நம்பிக்கை மட்டுமே முக்கியம்.

10 எதிர் சப்தங்கள்:

Bala's Blog said...

Hi Mani,

We all ray for speedy recovery of your father.

Thanks for sharing the much needed information in your blog.

Regards,
Bala

Anonymous said...

சித்தவைத்தியமாகட்டும், யுனானியாகட்டும், ஆயுர்வேதமாகட்டும் - நமது பாரம்பரிய மருத்துவத்தில்,அரிய பொக்கிஷங்கள் அமிழ்ந்துகிடக்கின்றன என நம்புபவன் நான். உங்களது பதிவு நிம்மதியைத் தருகிறது. நீங்கள் அந்த சித்தவைத்தியர் பற்றி எழுதிருப்பது யாருக்காவது நிச்சயம் பயன்படும் எனத் தோன்றுகிறது. ஒருமுறை, மஞ்சள் காமாலையால் நான் கிட்டத்தட்ட வீழ்த்தப்பட்ட வேளையில், இப்படித்தான் ஒருவர் வந்து பாரம்பரிய மருத்துவம்/மந்திரம் செய்து ஐந்தே நாட்களில் என்னை மீட்டார். அவர் இப்போது இல்லை. நினைவோ பசுமையாக இருக்கிறது.

உங்களது தந்தை பரிபூரண குணமடையப் பிரார்த்திக்கிறேன்.

Unknown said...

HELLO SIR

I'M JOTHIMANIKANDAN, MY SON IS 2 YEAR OLD BOY WHO HAS DIAGNOSED AS ADHD OR MILD AUTISM BY ALOPATHY DOCTORS, TILL HIS 1.5 YEARS HE HAS NORMAL SPEECH AS SINGLE AND TWO WORD SPEAK, & SOCIAL BEHAVIOURS AND EVERY THING NORMAL. BUT LAST 3 MONTHS ONLY HE WAS NOT SPEAKING, AND NO EYE CONTACT. MRI SCANS ABOUT BRAIN IS ALSO NORMAL. ENGLISH MEDICINE SAYS THERE IS NO CURE AND THERE IS IMPROVEMENT IN THEIR LIFE BY TAKING (OCCUPATIONAL THERAPY).

I BELIEVE IN INDIAN ANCIENT MEDICINES . OUR ANCIENT SIDDHA PEOPLE HAS GREATER IDEAS IN TRADITIONAL ANCIENT MEDICINES. BUT I HAVE NO RIGHT KNOWLEDGE ABOUT TO FIND THE RIGHT PEOPLE . CAN YOU PLEASE REFER MR. VETTRIVEL SIR WITH THIS TOPIC,

IT WILL USEFUL FOR ME to cure MY SON

THANKS
Jothimanikandan
Mobile : 98945 60684

Catherine Augustine said...

Sidha, Unani, Ayurveda will really help. But the challenge is to find the right doctor and non adulterated medicine. Anyone can give anything in the name of alternate medicine. There lies the challenge. If you find the right doctor and the right source of medicine , you can definitely trust alternate medicine.

Raja said...

Happy to know that your father is recovering. I wish him a speedy recovery

Unknown said...

எனக்கு தலையில் இருந்த சொரியாசிஸ் போன்ற
பொடுகு பிரச்சனைக்கு நான் செல்லாத அலோபதி
டாக்டர்களே இல்லை. ஹோமியோபதி, ஆயுர்வேதா
என்று அனைத்து டாக்டர்களையும் பார்த்தும் குணமாக
வில்லை. விரக்தியடைந்து நூலகங்களில் கூட
நோய் சம்பந்தமான நூல்களை படிக்குமளவுக்கு
ஆகி விட்டேன். பின் நன்பரின் ஆலோசனைப்படி
ஈரோடு skm சித்தா நிருவன தயாரிப்பான
வெட்பாலை தைலத்தை உபயோகித்த பின் தான்
இது மட்டுபட்டது. என்னை பொருத்தவரை
தோல் சம்பந்தப்பட்டவைகளுக்கு சித்த மருத்துவம்
சிறந்த ஒன்று.

ராமுடு said...

Feeling happy Mr.Mani.. Even during this hard time, your mind always think about others and how others can get benefit out of your problem.. incredible Mr.Mani.. Your dad will get back to normal for sure..

-Sriram.

Suresh said...

எல்்லாம்லா் வல்்லா பேரருள்் அருள்்"புரியட்்டும்டு்...

goldenking said...

மருத்துவர் முனைவர் அன்புகணபதி மக்கள் தொலைக்காட்சியில் காலை 0750 முதல் 0800 வரை நலம் தரும் மூலிகை நிகழ்ச்சி நடத்துபவர் (விளம்பர நிகழ்ச்சி அல்ல –மருத்துவ நிகழ்ச்சி )இத்தகைய நோய்களை எளிதாகத் தீர்ப்பதில் வல்லவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் அவரது தொடர்பு எண் 044-22551987…mobole 9884382200 சென்னையில் வேளச்சேரி பீனிக்ஸ் மால் எதிரில் இவரது மருத்துவ ஆலோசனை மையம் உள்ளது

சுதா சுப்பிரமணியம் said...

Hi manikantan,
Nice to hear about your father's recovery. Even for my son, he had continous coughs throughout.. Once in a year admitted in hospital.. Only after consulting ayurvedic.. he is fine now... Ayurvedic and siddha always safer... :)