Jul 27, 2016

வன்மம்

‘இதுவரைக்கும் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க...ஆனால் அவன் பேரைக் கேட்டாலே கடுப்பா இருக்கும்..அப்படியான ஆளுங்களை லிஸ்ட் பண்ணுங்க’ என்றார் ஒரு நண்பர். 

பட்டியலிட்டேன். நீண்டு கொண்டே போனது.

நிறுத்தியவர் ‘ஒரு சில ஆட்களை ஒன்றிரண்டு முறைதான் பார்த்திருப்பீங்க...பேசியிருக்கக் கூட மாட்டீங்க....ஆனா இப்ப நினைச்சாலும் கடுப்பா இருக்கும்..அந்த ஆளுங்க?’ என்றார். 

அப்படியும் ஒரு பட்டியல் இருந்தது. 

‘இப்போ ரிவர்ஸ்...உங்களைப் பத்தி எதுவுமே தெரியாது ஆனால் உங்க மேல கடுப்பைக் காட்டுவாங்க...அப்படியான ஆளுங்களைச் சொல்லுங்க’ என்றார். அப்படியும் ஒரு பட்டியல் இருக்கிறது. ஒரே வம்பு. எப்படி மட்டையைப் பிடித்தாலும் மூன்று குச்சிகளையும் பெயர்த்து வீசுகிறது பந்து. 

கேள்வி கேட்டவருக்கு அறுபது வயது இருக்கும். வேறொரு காரியமாக வீட்டிற்கு வந்திருந்தார். ‘மனசுக்குள்ள கொஞ்ச நஞ்சம் நல்லவன்னு நினைச்சுட்டு இருந்தா அந்த நெனப்புல ஒரு லோடு மண்ணை அள்ளிக் கொட்டிவிட வேண்டும்’ என்ற நினைப்பில் வந்திருந்தார் போலிருந்தது. அது சரிதான். இத்தனை பேர் மீது வன்மத்தை வைத்துக் கொண்டு எந்த லட்சணத்தில் ‘நான் எல்லாம் எவ்ளோ நல்லவன் தெர்மா?’ என்று அலும்பு செய்ய முடியும்? 

ஒருவனைப் பற்றிய புரிதல் எதுவுமேயில்லாமல் அவன் மீது வன்மம் கொள்ள முடிகிறது. அவனைப் பற்றித் தூற்ற முடிகிறது. அவனுக்குக் கிடைக்கும் அங்கீகாரங்களைப் பார்த்து வயிறு எரிய வேண்டியிருக்கிறது. இல்லையா?.

சில வருடங்களுக்கு முன்பாக ஒரு எழுத்தாளரிடம் பேசிக் கொண்டிருந்த போது வேறொரு மனிதரைப் பற்றிய பேச்சு எழுந்தது. ‘அவன் ஒரு Phedophile' என்றார். தூக்கிவாரிப்போட்டது. அதோடு சரி. அவர் குறிப்பிட்ட அந்த மனிதர் மீது எந்தக் காலத்திலும் மரியாதை வரவேயில்லை. மிகச் சமீபத்தில்தான் அந்த phedophile ஆளைப் பற்றித் தெரிந்தது. அவ்வளவு நல்ல மனிதர் என்றார்கள். குற்றம் சாட்டியவருக்கு யாராவது சொல்லியிருக்கலாம். அவர் அப்படியே நம்பிக் கொண்டு என்னிடம் சொன்னார். நான் அதை அப்படியே நான்கைந்து பேரிடமாவது சொல்லியிருப்பேன். அந்த மனிதருக்கே தெரியாமல் அவர் மீது ஒரு கரும் போர்வையை போர்த்திவிடுகிறோம். பிறகு அந்த ஆளைப் பார்த்தாலே கடுப்பாகிறது. 

இன்னொரு சம்பவம்- எனக்கு நேர்ந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கவிஞர் ஒருவர் வந்து கட்டியணைத்துக் கொண்டார். அவரது மிகப்பெரிய உருவத்துக்குள் சிட்டுக்குருவியைப் போல உணர்ந்தேன். அது நிச்சயமாக போலியான அன்பு இல்லை. ஆத்மார்த்தமாகத்தான் தழுவினார். ஆனால் அடுத்த ஆறேழு மாதங்களில் வசைகளைப் பொழியத் தொடங்கினார். என்ன காரணம் என்றே தெரியாது. முதல் சந்திப்புக்குப் பிறகு அவருக்கும் எனக்குமான எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. அவரது எழுத்துக்களைக் கூட விமர்சனம் செய்ததில்லை. யோசித்துப் பார்த்தால் அவரைப் பற்றிக் கூட யாரிடமும் பேசியதில்லை. விசித்திரமாக இருக்கிறது. இரு மனிதர்களுக்கிடையில் நேரடியான பேச்சுவார்த்தை இல்லாமலே அவர்களுக்கிடையில் வன்மம் தோன்றிப் பெருகுவதை நினைத்தால் சற்றே பயமாகவும் இருக்கிறது. 

இரு மனிதர்களுக்கிடையில் கொள்கை ரீதியிலாகவோ, பண விவகாரத்திலோ அல்லது வேறு சில காரணங்களினால் பகைமையும் வன்மமும் வளர்வதை ஏற்றுக் கொள்ளலாம். சம்பந்தமேயில்லாமல் ஏன் எரிச்சல் அடைகிறோம்? தொடர்பே இல்லாதவனைப் பற்றி ஏன் ஏகப்பட்ட கோபம் கொள்கிறோம்? அடுத்தவர்கள் ஒருவனைப் பற்றிச் சொல்கிற விஷயங்கள் உண்மையா அல்லது பொய்யா என்பதைத் துளி கூட பரிசீலிக்காமல் முடிவுக்கு வந்துவிட முடிகிறது.  

பெரிய மனிதர் கேட்ட கேள்விகள் எல்லோருக்குமேதான் பொருந்தும். சம்பந்தமேயில்லாமல் எத்தனை பேர் மீது நமக்கு வன்மம் இருக்கிறது என கணக்கெடுத்துப் பார்க்கலாம். நூற்றுக்கணக்கில் தேறும். அப்புறம் என்ன மனிதம், வெங்காயம், விளக்கெண்ணெய் எல்லாம்? வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடாவிட்டால் தொலைகிறது. சக மனிதன் மீதாவது எரிச்சலும் கோபமும் பொறாமையும் வன்மமும் இல்லாமல் வாழலாம் அல்லவா? ம்ஹூம். ரொம்பவும் கஷ்டம்.

இன்று ஒரு செய்தியை வாசிக்க நேர்ந்தது. கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை. மனைவி அவனைப் பிரிந்துவிட்டாள். தனிமை அவனைக் கடுப்பேற்றியிருக்கிறது. யாரையாவது கொன்றுவிட்டு சிறைச்சாலைக்குச் சென்றுவிடலாம் என முடிவெடுத்தவன் சாலையில் சென்று கொண்டிருந்த யாரோ ஒரு ஆளைக் குத்திக் கொன்றுவிட்டான். செத்துப் போன மனிதருக்கு பத்து வயதில் ஒரு குழந்தையும் வயது முதிர்ந்த அம்மாவும் இருக்கிறார்கள். கொன்றவனுக்கும் செத்தவனுக்கும் முன்பின் அறிமுகம் இல்லை. பேசியதும் இல்லை. பகைமையும் இல்லை. கதை முடிந்தது.

கொன்றவனுக்கும் நமக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று நினைத்துப் பார்த்தால் அப்படியொன்றும் இல்லைதான் என்று தோன்றுகிறது. அவன் ஆளைக் கொன்றான். நாம் அடுத்தவர்களின் பிம்பத்தைக் கொல்கிறோம். அவ்வளவுதான். இன்றைக்கு ஒவ்வொரு மனிதனும் ஒரு ஊடகம்தான். யார் மீது வேண்டுமானாலும் சேறை வாரி இறைத்துவிட முடியும். யாருடைய பிம்பத்தை வேண்டுமானாலும் உடைத்து நொறுக்கிவிட முடியும். ஓரமாக ஒதுங்கி நிற்கும் தெருநாயைக் கல்லை எடுத்து அடிப்பது போல யார் மீது வேண்டுமானாலும் விசிறியடிக்க முடிகிறது. அதைப் பார்த்துவிட்டு இன்னமும் நான்கு பேர் கல்லெடுத்து அடிக்கிறார்கள்.

இது சமூக உளவியல். 

தனிமனித உளவியலுக்கும் சமூக உளவியலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. தனிமனித உளவியலில் நீங்கள் வேறு மாதிரி இருப்பீர்கள் நான் வேறு மாதிரி இருப்பேன். சமூக உளவியல் அப்படியில்லை. எனக்கும் உங்களுக்கும் அடுத்தவருக்கும் நிறைய விஷயங்களில் ஒத்துப் போகும். சக மனிதன் மீதான அடையாளமற்ற வன்மம் என்பது சமூக உளவியலின் அங்கம்தான். தொழில்நுட்பமும், வாழ்வியல் முறைகளும், நம் மனச்சிக்கல்களும் மொத்த சமூகத்திலும் பிரதிபலிக்கிறது. அவ்வளவு சீக்கிரம் யாராலும் மாற்றிவிட முடியாது. என்னதான் முயன்றாலும் அது அப்படித்தான் இருக்கும். ஆனால் குறைந்தபட்சம் நம் அளவில் மாற முயற்சிக்கலாம். சம்பந்தமேயில்லாமல் ஏன் இன்னொரு மனிதன் மீது பகைமையும் வன்மமும் பாராட்டுகிறோம் என்று கேட்டுப் பார்க்கலாம்? காரணங்கள் அற்பமானவையாக இருக்கக் கூடும். யாரோ சொன்ன செவி வழிச் செய்திகளாக இருக்கக் கூடும். சில்லரைத்தனமான பொறாமையாக இருக்கக் கூடும். இதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு பிறகு வேண்டுமானால் மனிதம் பற்றியும் நல்லவனாக இருத்தல் பற்றியும் பேசலாம். 

முயற்சித்து முயற்சித்துத் தோல்வியடைந்து கொண்டிருக்கிறேன். ஏன் ஒல்லியாக இருக்கிறாய் என்ற கேள்விக்கு இதுதான் பதிலாக இருக்கக் கூடும். அவ்வளவு வன்மம். 

5 எதிர் சப்தங்கள்:

ஏகலைவன் said...

Good Mani,

A very honest and know thyself writing.

Dev said...

இந்த வன்மத்தை வயித்தெரிச்சல் என்று சொல்லலாமா. நானும் ஒரு சுய பரிசோதனை செய்து பார்த்தேன் . லிஸ்ட் ல் செரினா, மோடி, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி டீம் ஹூம்... ஆனாலும் ஒவ்வொரு காரணம் தனி தனியே உண்டுு. Enakkenavo நீங்கள் எல்லோருக்கும் வன்மம் இருந்தாக வேண்டும் என்று பொதுமை படுத்துவதாக படுகிறது. நாம கபாலி + தெறி. அதுக்காக உத்தமவில்லனையும், தலையையும் குறை சொல்றதில்லை. இது ஒரு ரெண்டும்கெட்டான் மாதிரி னு நெனைக்கத்தோணும். வேல இருக்கு, இல்லை ஆனா be constructive.

Unknown said...

Very good article.

Rajan Chinnaswamy said...

உலகை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறாய். அருமையான பதிவு. ஒரு ஆசிாியாக எனக்கு கண்ணில் பட்டது pedophile. இந்த சிறிய கவனக்குறைவும் உன் மீது எதிா்மறையான எண்ணங்களை உருவாக்கலாம்.

பாலாஜி said...

நானும் சிலரிடம் மிக அதிகமான வன்மம் கொண்டிருந்தேன்.நான் தற்போது சக மனிதனைப் பார்க்கும் பாங்கு மாறிவிட்டது.அதற்குக் காரணம் விபாசனா.மேலும் விபரங்களுக்கு googleஐயோ http://www.tamil.dhamma.org/ என்ற வலைதளத்தையோ அணுகவும்.