புத்தகக் கண்காட்சிக்குச் செல்லலாம்; சுற்றிப் பார்க்கலாம்; புத்தகம் கூட வாங்கலாம். ‘ஆனா இந்த வருஷம் பரவால்லீங்களா?’ என்று மட்டும் கேட்டுவிடக் கூடாது. கடைக்காரர்கள் பதறுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் குதூகலமாக இருந்த பதிப்பாளர்களும் வியாபாரிகளும் இந்த வருடம்- இதுவரைக்கும்- சந்தோஷமாக இல்லை. சென்னைப் புத்தகக் கண்காட்சி என்பது திருவிழா. இந்த வருடம் அழுது வடிகிறது. நிறைய அரங்குகள், விசாலமான பாதைகள் என்று வசதிகள் இருக்கின்றனதான். ஆனாலும் விற்பனை மோசம்..
விசாரித்தால் ஆளாளுக்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள்.
வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தீவுத்திடலுக்கு வந்து சென்றுவிடலாம். ஆனால் பேருந்து பிடித்து போய் வருவது மலையை முறிப்பது போல. அதுவும் இந்தக் கோடையில் மாலை நான்கு மணிக்கு சென்னையில் பேருந்து ஏறுவது என்பது சாதாரணக் காரியமா? வெந்து கழண்டுவிடும். உள்ளே நுழைந்தாலும் கடும் வெக்கை. ஆஸ்பெஸ்டாஸ் சூட்டில் வியர்த்து விறுவிறுக்கிறது. அதனாலேயே பாதிக் கூட்டம் ஜகா வாங்கிவிடுகிறது.
வழக்கமாக புத்தகக் கண்காட்சி நடக்கும் ஜனவரி என்பது புத்தாண்டு, பொங்கல் விடுமுறை போன்ற கொண்டாட்டமான மாதம். செலவு செய்வதற்கான மனநிலையும் இருக்கும். ஜூன் மாதத்தில் அப்படியா? பள்ளிகளில் ஃபீஸ் அதிகமாக இருக்கிறது என்பதற்காகவே ‘ஒண்ணே போதும்’ என்று கு.க.அறுவை சிகிச்சை செய்து கொள்கிறவர்கள் பெருகிக் கொண்டிருக்கிற தேசத்தில் ஜூன் மாதம் புத்தகக் கண்காட்சியை வைத்தால் சட்டைப் பையிலிருந்து எப்படி பணத்தை எடுப்பார்கள்? அதுவும் பெரும்பாலான புத்தகங்கள் யானை விலை; குதிரை விலைதான். வழுவழுப்பான காகிதம்; கிளுகிளுப்பான அட்டை என்று ஏதாவதொரு காரணம் சொல்லி ஏகப்பட்ட விலை வைத்திருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு ஐந்து மணிக்கு உள்ளே வரும் கூட்டத்தைத் திசை திருப்பும் விதமாக ‘உலகப் புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் மேடையில் பேசுகிறார்’ என்று அறிவித்து மொத்தக் கூட்டத்துக்கும் வலை விரிக்கிறார்கள். புத்தகம் வாங்கலாம் என்று நினைக்கும் வெகு சிலரையும் அமுக்குகிறார்கள். புத்தகக் கண்காட்சியில் பட்டிமன்ற பேச்சாளர்கள் பேச வேண்டியதன் அவசியம்தான் புரியவில்லை. அவர்களும் கிடைத்த மேடைக்கு பங்கம் வராமல் ‘புத்தகங்கள் நம்முடைய நண்பர்கள்’ என்று வழுக்கு வழுக்கென்று வழுக்குகிறாரக்ள். கூட்டம் அங்கே கூடி நின்று ஆரவாரம் செய்கிறது.
இப்படியாக பத்துக் காரணங்களையாவது பட்டியலிட முடியும்.
கூட்டம் வருகிறதுதான். கடற்கரை மணலோடு உள்ளே வருகிறார்கள். கடற்கரைக்கு காற்று வாங்க வருகிறவர்கள் அப்படியே எட்டிப் பார்ப்பார்கள் போலிருக்கிறது. ஒட்டியிருக்கும் மணலை எல்லாம் கண்காட்சியின் நடைபாதையில் கொட்டிவிட்டுச் செல்கிறார்கள். சனிக்கிழமை முழுக்கவும் புத்தகக் காட்சியில்தான் சுற்றிக் கொண்டிருந்தேன். தீவுத்திடலில் ‘வைரமுத்துவோடு கை குலுக்குங்கள்’ என்று ஊர் முழுக்கவும் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள். புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் வழியெங்கும் வைரம் மின்னிக் கொண்டிருந்தது. போஸ்டரை அவரே அடித்து ஒட்டியிருந்தாலும் ஒட்டியிருப்பார். வியாபார காந்தம். அவர் வந்த போது பெருங்கூட்டம் சேர்ந்திருந்தது. ஆளாளுக்கு கை நீட்டிக் கொண்டிருந்தார்கள். அதே புத்தகக் கண்காட்சியில்தான் சாரு நிவேதிதாவிடம் அனுமதிச் சீட்டு இல்லையென்று வெளியே நிறுத்தி வைத்திருந்தார்களாம். நண்பர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எப்படியோ காரஞ்சாரமாக ஒரு கட்டுரை வரும் என்று எதிர்பார்க்கலாம்.
மற்றபடி எந்தக் குறையும் சொல்ல முடியாது. நிறையப் புத்தகங்கள் வந்திருக்கின்றன. எழுத்தாளர்களைப் பார்க்க முடிகிறது. சாவகாசமாகப் பேச முடிகிறது. மற்ற எந்த ஊர் புத்தகக் காட்சிகளுக்கும் இல்லாத அளவிற்கான முக்கியத்துவத்தை சென்னையின் புத்தகக் காட்சிக்கு ஊடகங்கள் தருகின்றன. என்ன இருந்து என்ன பயன்? மேலே சொன்ன ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றன. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் அடுத்த ஆண்டு இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்று நம்புவோம். இனி வரும் நாட்களிலாவது புத்தகங்கள் வாங்குகிறவர்களாகச் சென்று ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் கஜானாவாலாக்களிடம் காசைக் கொடுத்து எண்ணச் செய்வார்கள் என்றும் நம்புவோம்.
ஆக மொத்தம் வழக்கமான திருவிழாவாக இது இல்லை. ஜனவரி வரட்டும். தூள் கிளப்பிவிடலாம் என்று பதிப்பாளர்களும் வியாபாரிகளும் ஆறுதல் பட்டுக் கொள்ளக் கூடும்.
இரவில் பாரிஸ் பேருந்து நிலையத்துக்குச் சென்று அங்கேயிருந்து கோயம்பேட்டுக்கு இன்னொரு வண்டியைப் பிடிக்கச் சொன்னார்கள். பாரிஸ் சென்னையில் எனக்குப் பிடித்த பகுதி. அழுக்கும் குப்பையும் நெரிசலுமாக சென்னையின் இன்னொரு முகம். அபிராமபுரத்தையும், வேளச்சேரியையும் பார்த்துவிட்டு ‘இதுதான் சென்னை’ என்று நம்பிக் கொண்டிருப்பவர்களின் பொடனியிலேயே அடித்து ‘இதுதான் சென்னை’ என்று சொல்வதற்கு பாரிஸால் முடியும். இன்னும் எத்தனை மெட்ராஸ் படங்கள் வந்தாலும் இந்தப் பகுதியின் நுட்பத்தையும் புதிரான அழகியலையும் காட்டிவிட முடியாது என்றுதான் நம்புகிறேன். சாலையோரக் குடிசைக்கு முன்பால் சட்டையைக் கழட்டி வீசிவிட்டு வெற்றுடம்போடு பைக் மீது அமர்ந்தபடி ‘ஓத்தா..அவனுக்கு இருக்கு’ என்று பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருக்க கொடுப்பினை வேண்டும்.
எம்.ஜி.ஆரும், கருணாநிதியும், ஜெயலலிதாவும் தங்களின் நிழற்படங்களால் அலங்கரிக்கும் அந்த வீதிகளில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வந்து ‘இந்த ஏரியால நான் - வெஜ் எங்க நல்லா இருக்கும்?’ என்று ஆட்டோக்காரர் ஒருவரிடம் கேட்டேன்.
‘அப்படின்னா..கவிச்சியா?’ என்றார்.
ஒரு விடுதியைக் காட்டினார். சுத்தகமாகவும் இல்லை. சுவையாகவும் இல்லை. அழுக்கேறிய லுங்கியணிந்த சர்வர்களும் பழங்கால மரப் பலகைகளும் நிரம்பியிருந்த செட்டிநாட்டு உணவகம் இது. தொலைக்காட்சிப் பெட்டியில் சீவலப்பேரி பாண்டி படம் ஓடிக் கொண்டிருந்தது. வழக்கம்போல பிரியாணி கேட்டிருந்தேன். கொண்டு வந்து கொடுத்தார்கள். பிரியாணிச் சட்டியை இலையில் கவிழ்த்த போது முட்டை உருண்டு கீழே ஓடி ‘அட முட்டை போச்சே’ என்று ஆக்கியது.
மிகப்பெரிய கோழித் துண்டோடு போராடி முடித்து வந்து கோயம்பேடு பேருந்தில் ஏறிய போது ஒரு பதிப்பாளரும் வந்து பேருந்து ஏறினார். சிரித்துக் கொண்டோம். ‘வியாபாரம் எப்படி?’ என்று தப்பித் தவறிக் கூட நான் கேட்கவில்லை. அவரும் எதுவும் சொல்லவில்லை. பற்களுக்குள் சிக்கிக் கொண்டிருந்த கோழி இறைச்சியை நாக்கினால் நெண்டி வெளியே தள்ளிய போது கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடைந்திருந்தேன்.
1 எதிர் சப்தங்கள்:
நானும் இதைத்தான் நினைத்து கொண்டிருந்தேன் நீங்களும் அதையே சொல்லி இருக்கிறீர்கள்.பள்ளி கூடங்கள் திறக்கும் சமயத்திலா புத்தக கண்காட்சி நடத்துவார்கள். இவர்களுக்கு வியாபார தந்திரம் தெரிவதில்லை இவர்களுக்கு தெரிந்த வியாபார தந்திரம் எல்லாம் புத்தகம் எழுதிய எழுத்தாளர்களுக்கு ராயல்டி கொடுக்காமல் இருப்பது மட்டும்தான் போலிருக்கிறது
Post a Comment