Jun 7, 2016

புண்ணியம் கோடி

லதா குறித்து வெகு நாட்களுக்கு முன்பாகவே சுந்தர மூர்த்தி சொல்லியிருந்தார். லதாவுக்கு வயது முப்பதைக் கடக்கிறது. அவரது வீட்டில் மொத்தம் ஐந்து பெண்கள். லதா மூத்தவர். மற்றவர்களுக்குத் திருமணமாகிவிட்டது. லதா பத்தாம் வகுப்பு முடித்திருக்கிறார். இரண்டு கால்களும் செயல்படாத அவரை அதற்கு மேல் படிக்க வைப்பதில் பெற்றவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. வீட்டிலேயே முடங்கிவிட்டார்.

சமீபத்தில் அவருடன் பேச்சுக் கொடுத்த மகாலட்சுமியிடம் ‘தான் பனிரெண்டாம் வகுப்பு படிக்க வேண்டும்’ என்கிற ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். மகாலட்சுமி பல பெண்களுக்கு பாடம் சொல்லித் தரும் தன்னார்வலர். முப்பதைக் கூடத் தாண்டியிருக்காத வயது. அவர் சுந்தரமூர்த்தியிடம் பேச சுந்தரமூர்த்தி என்னைத் தொடர்பு கொண்டார்.

சென்னை அண்ணாநகரில் ஹோப் என்றொரு நிறுவனம் இருக்கிறது. மாதம் எந்நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு மாணவர்களுக்கு விடுதி வசதி செய்து கொடுத்து படிக்க வைக்கிறார்கள். அந்நிறுனத்தில் லதா சேர்ந்து படிப்பதற்கு உதவ முடியுமா என்று கேட்டிருந்தார்கள். எட்டாயிரத்துச் சில்லரை ரூபாய் தங்கும் வசதி மற்றும் உணவுக்காகவும், பாடப்புத்தகங்களுக்கு என இன்னுமொரு ஆயிரத்து ஐநூறு ரூபாய். ஆக, பத்தாயிரம் ரூபாய் தேவை. 

இந்தக் கோரிக்கையை மனதில் வைத்துக் கொண்டுதான் மூன்றாம் நதி நாவலை ஏலம் விடும் எண்ணமே தோன்றியது. லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் புத்தகத்தின் முதல் பிரதியை ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார்கள். இந்த முறை அந்தத் தொகை பத்தாயிரம் ரூபாயாகக் கூடும் என்கிற நம்பிக்கையிருந்தது. அந்தத் தொகையை புத்தக வெளியீட்டு விழாவில் லதாவிடம் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். நம்பிக்கைகள் அடித்து நொறுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய் கிடைத்தது. இப்படி நொறுக்கப்படும் நம்பிக்கைகள்தான் இன்னும் சற்று உயரமாக யோசிக்கச் செய்கின்றன. அடுத்த முறை இரண்டு லட்ச ரூபாயை மனதில் வைத்துக் கொண்டு ஏலம் விட்டாலும் தவறில்லை. 

சமீபத்தில் யாரோ ஒருவர் புத்தகம் ஏலம் விடுவதைப் பற்றி கிண்டலடித்திருப்பதாக ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் பகிர்ந்து கொண்டார். பேசத்தான் செய்வார்கள். அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தால் நாம் செய்ய வேண்டிய காரியங்களைக் கோட்டை விட்டுவிடுவோம். பேசுகிறவர்களை விட்டுவிடலாம். அவர்கள் பேசிக் கொண்டேயிருக்கட்டும். 


இன்று காலையில் அண்ணாநகருக்குச் சென்று ஜீவகரிகாலனும், மகாலட்சுமியும், சுந்தரமூர்த்தியும் ஹோப் நிறுவனத்தில் லதாவை பனிரெண்டாம் வகுப்பில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் நம்பிக்கையின் சிறு திரியைத் தூண்டியிருக்கிறார்கள். இனி அந்தப் பெண் படித்து என்ன செய்யப் போகிறாள்? எதிர்காலத் திட்டம் என்ன என்பதெல்லாம் ஒரு பக்கமாக இருக்கட்டும். முதலில் அவர் பனிரெண்டாம் வகுப்பை முடிக்கட்டும். அதன் பிறகு அவருக்கான பாதையை அவரே முடிவு செய்துவிடக் கூடும்.

‘அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ கோடி புண்ணியமும் பணம் கொடுத்தவர்களுக்கும் இதைச் சாத்தியப்படுத்திய கரிகாலன், மகாலட்சுமி, சுந்தரமூர்த்திக்கும் சேரட்டும். புத்தகத்தின் ஏலத்தில் வந்த தொகையில் இருபதில் ஒரு பங்குதான் இது. இன்னமும் பணம் மிச்சமிருக்கிறது. கடைசி ரூபாயைக் கொடுக்கும் வரைக்கும் யாருக்குக் கொடுத்தோம், எதற்காகக் கொடுத்தோம் என்று அனைவருக்கும் தெரியப்படுத்திவிடுகிறேன்.

மூன்றாம் நதி நாவல் வெளியீட்டு நிகழ்வு இனி இல்லை என்றாகிவிட்டது. இரண்டு லட்ச ரூபாய் இருக்கிறது என்பதற்காக அவசர அவசரமாக கண்களில் படுபவர்களை எல்லாம் அழைத்துக் கொடுக்க வேண்டியதில்லை. இப்படி ஒவ்வொருவராகத் தேடிச் சென்று கொடுத்துவிடலாம். அதனால்தான் புத்தக வெளியீடு எதுவும் நடத்தப் போவதில்லை. புத்தக விற்பனை தனியாக நடக்கட்டும். புத்தகத்தைச் சாக்காக வைத்து வந்த இந்தத் தொகை பதிப்பாளரின் கணக்கில் இருக்கிறது. அதை ஒவ்வொரு பயனாளிக்கும் தனித்தனியாகக் கொடுத்துவிடலாம். அப்பொழுதுதான் அது சரியான நபரை அடையும். ஒரு புத்தகத்தை எழுதி ஏலம் விட்டு அந்தத் தொகையை நானும் பதிப்பாளரும் பங்கிட்டுக் கொள்ளப் போகிறோம் என்று சொன்னால் இவ்வளவு பெருந்தொகையை யாரும் கொடுக்கப்போவதில்லை. இது நம்பிக்கைக்காக வந்த தொகை. ‘இவனிடம் கொடுத்தால் சரியான ஆட்களுக்குச் சென்றுவிடும்’ என்று நம்புகிறார்கள். அதைக் காப்பாற்றுவதுதான் முக்கியம்.

லதாவுக்காக சுந்தரமூர்த்தியும், மகாலட்சுமியும் இருபது முறையாவது அழைத்திருப்பார்கள். 'இவ்வளவு தடவை ஏன் கூப்பிடுறீங்க? நம்பிக்கை இல்லையாங்க?’ என்று சுந்தரமூர்த்தியிடம் சற்று கடுமையாகவும் கூட ஒரு முறை பேசிவிட்டேன்.  நினைத்தால் சங்கடமாக இருக்கிறது. லதாவுக்காகத்தான் செய்திருக்கிறார்கள். புத்தகக் கண்காட்சியில் இருப்பதைத் தெரிந்து கொண்டு நேரில் சந்தித்து ஆவணங்களைக் கொடுத்தார்கள்.

சுந்தரமூர்த்தி திரைத்துறையில் உதவி இயக்குநராக இருக்கிறார். மகாலட்சுமியிடம் இன்று காலையில்தான் ‘நீங்க என்ன செய்யறீங்க?’ என்றேன். ‘சிவில் சர்வீஸூக்கு படிச்சுட்டு இருக்கேன்’ என்றார். இடையிடையே நேரம் கிடைக்கும் போது ஏழைப் பெண்களுக்கு வகுப்பு எடுக்கிறார். பாடம் சொல்லித் தருகிறார். லதா மாதிரியான பெண்களுக்காக அலைகிறார். அவரிடம் அலைபேசியில் எதுவும் சொல்லவில்லை. பிறகு நினைத்துக் கொண்டேன் - இந்த மாதிரியானவர்கள்தான் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெல்ல வேண்டும். சர்வீஸ் என்ற சொல் மகாலட்சுமி போன்றவர்களால்தான் அர்த்தம் பெறுகிறது. 

5 எதிர் சப்தங்கள்:

Mugavathi said...

லதாவும் மகாலட்சுமியும் அவர் அவரது லட்சியங்களில் வெல்ல மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சேக்காளி said...

//சர்வீஸ் என்ற சொல் மகாலட்சுமி போன்றவர்களால்தான் அர்த்தம் பெறுகிறது//
ஆமாய்யா ஆமா.அதே மா((தி)ரி "ம" ல பேரு ஆரம்பிக்கிற இன்னொரு ஆளுக்கும் பொருந்தும்.

காவேரிகணேஷ் said...

kudos to latha and mahalakshmi

Dev said...

வெகு சிலருக்குதான் இப்படிவாய்க்கும். உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும், மற்றும் நிசப்தம் அறக்கட்டளை வழியாக உதவி வழங்குவர்களும் எல்லா வளமும் பெற்ற பெறு வாழ்வு வாழவேண்டும். உங்களுடன் சேர்ந்து உழைக்கும் தன்னார்வ கூட்டத்துக்கு எந்த பரராட்டும் போதாது

Avargal Unmaigal said...

///‘இவனிடம் கொடுத்தால் சரியான ஆட்களுக்குச் சென்றுவிடும்’ //


இது மிக மிக உண்மை... நானும் கூடிய சீக்கிரம் என்னால் முடிந்த ஒரு தொகையை அனுப்பி வைக்கிறேன்