Jun 6, 2016

என் இதயம் இதுவரை..

லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் புத்தகத்தை புத்தகக் கண்காட்சியில் வைத்து வெளியிட்டோம். வெளியீடு முடிந்த பிறகு அறைக்குச் சென்று பேசிக் கொண்டிருந்துவிட்டு களைப்பில் உறங்கச் சென்ற போது நள்ளிரவு தாண்டியிருந்தது.  அப்பொழுது சோழன் அறிமுகமாகியிருக்கவில்லை. அதிகாலையின் வெளிச்சம் படருவதற்கு முன்பாக நூல் குறித்தான குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார். அத்தனை களைப்பு காணாமல் போனது. மசால் தோசை 38 ரூபாய் slow pick up. இப்பொழுதுதான் அந்தப் புத்தகத்தைப் பற்றி பேசுகிறார்கள். மூன்றாம் நதி நாவல் என்பதால் இதுவும் அப்படியானதாகத்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் புத்தகம் விற்பனைக்கு வந்த ஓரிரு நாளில் அலைபேசி அழைப்புகளும், நூல் குறித்தான குறிப்புகளும் உற்சாகமடையச் செய்கின்றன. எழுதுவதன் வழியாக இதை மட்டும்தான் எதிர்பார்க்கிறேன். நன்றாக இருக்கிறதோ இல்லையோ- அதை நம்மிடம் வெளிப்படையாகப் பேசக் கூடியவர்களைச் சேர்த்து வைத்தால் போதும். நம்மிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்கள் என்று புரிந்து கொள்வதற்கன வாய்ப்புகள் உருவானால் போதும். எழுதுவதெல்லாம் பாழுங்கிணற்றில் வீசப்படும் கற்களைப் போலக் கிடக்காமல் இருந்தால் சரி.

அத்தனை குறிப்புகளையும் தொகுத்து வைக்கலாம். 

இந்தக் குறிப்புகளையும் வாழ்த்துக்களையும் பார்க்கும் போது சிங்கம் II, சிங்கம் III மாதிரி அடுத்தடுத்த பாகங்களை எழுதத் தொடங்கிவிடலாம் போலிருக்கிறது. அனுஷ்கா, ஹன்சிகாவெல்லாம் படத்தில் இருக்கட்டும். ஒரே நிபந்தனை - சூர்யாவுக்கு வாய்ப்பில்லை. அந்தப் பொறுப்பையும் கூடவே நாயகிகளையும் சிரமப்பட்டாவது நானே சுமந்து கொள்கிறேன். இல்லையென்றால் நாயகிகள் வருந்தக் கூடும். அதனால்தான்.

என் இதயம் இதுவரை துடித்ததில்லை...இப்போ துடிக்கிறதே....

                                                            (1)

உங்கள் கட்டுரைகளும் புத்தகங்களும் சுந்தர் சி படம் பார்க்கும் குதூகலத்தை மனதினுள் ஏற்படுத்தும் ஆனால் மூன்றாம் நதி இயக்குனர் பாலா  படம் பார்த்த கனத்தை தந்துள்ளது .

பெங்களுரு போன்ற பெரு நகர மக்களின் வாழ்வியலையும் அவர்கள் சந்திக்கும் தண்ணீர், கட்டபஞ்சாயத்து, கீழ் நிலை பெண் ஊழியர்கள் சந்திக்கும் பாலியல் அத்துமீறல்கள், பணமே உலகம் என்றிருக்கும் கணினி ஊழியர்கள் இதனூடே நம் விவசாயிகள் சந்திக்கும் வறுமையை ஒரு பசு மாட்டு விற்பனையில் சொல்லிய விதம் அருமை. அமாவசைகளும் சின்னசாமிகளும் அதிகரித்து வரும் இந்த உலகில் நம் மக்கள் சினிமா படங்களை trending ஆக்கி பெருமை பேசும் கேவலம் நம் ஊரில் மட்டுமே நடக்கும்...

இன்று காலை உங்களுடன் தொலைபேசியில் பேசும்போது கூட ஊர்ல மழை பெஞ்சுதா? என்று கேட்டீர்களே. அதில் நீங்கள் எழுத்தாளர் மட்டும் அல்ல கீழ் மட்ட மக்களின் மேல் என்றும் கரிசனத்துடன் இருக்கும் நபர் என்பதை காட்டியது..

உங்களையும், தான் தினமும் தொலைகாட்சியில் தெரிய வேண்டும், கருத்து  சொல்லிகொண்டே இருக்க வேண்டும், காக்கா பிடித்து மேல்சபை உறுப்பினராகி விட வேண்டும், 5 வருசத்துக்கு முன்னாடி கூடங்குளத்துக்கு ஆதரவா  பேசிவிட்டு இப்போ அதை பேசினால் கட்சியில் இருந்து பதவி, மரியாதை கிடைக்காது என்பதால் இப்போது அதை பற்றி வாயே திறக்காமல் இருக்கும் சுயநல மவுனிகளையும் ஒப்பிடும் போது  மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான் தெரிகிறது.

புத்தக விமர்சனத்தில் ஏன் அடுத்தவர்களை பற்றி பேச வேண்டும் என்று சிலர் கேட்கலாம். எனக்கு இப்போது தான் வாய்ப்பு  கிடைச்சுருக்கு அதான் எழுதிருக்கேன்...

உங்கள் அடுத்த படைப்பை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்...

நானும் என் நண்பன் அருணும் உங்களை பற்றி பேசும்போது வேலை, குடும்பம், எழுத்து , அறக்கட்டளை பணி  என எல்லாவற்றிற்கும் நேரத்தை எப்படி நிர்வாகம் செய்கிறீர்கள் என்பதுதான்..

வாழ்க வளமுடன்.

அன்புடன்,
மாரிமுத்து சிவாச்சலம்

                                                            ***
                                                             (2)

உங்களை சென்னை புத்தக கண்காட்சியில் பார்த்தது மகிழ்ச்சி. உங்களைத்தான் பார்தேனா என்று சிறிய சந்தேகம் கூட உள்ளது. அவ்வளவு சிம்பிள் உருவம்!

உங்கள் நாவலைப் படித்தேன், தண்ணி வண்டிக்காரர் கொலை பற்றிய உங்கள் பதிவை ரொம்ப நாள் முன்னாள் படித்த நினைவு. அதில் இருந்து ஒரு முழு நாவலை, வேறு ஒரு உலகத்தை பவானி வழியாக காண்பித்துள்ளீர்கள். நாவலின் நடை உங்கள் வழக்கமான ஸ்டைலில் உள்ளது. நாவல் விறுவிறுப்பாகவும் நன்றாகவும் இருந்தது. நாவல் முழுதும் ஒரே லெவலில் செல்கிறது. உங்களையும் நாவலில் ஒரு ‘guest role’ இல் கொண்டு வந்திருப்பதை ரசித்தேன்.

உங்களுக்கு கஷ்டங்களை மிக இயல்பாக சரியான வார்த்தைகளில் சொல்ல தெரிகிறது; அதுபோல் உங்களுக்கு காமெடியும் மிக இயல்பாக வரும், அந்த வகையான ஒரு முழு நீள நாவலையும் அடுத்து எதிர்பார்கிறேன்.

Best Regards,
B. Thirukumaran

                                                              ***
                                                              (3)

மூன்றாவது நதி:

பெங்களூருவில் கடந்த 30 வருடங்களில் நடந்த நகரமயமாக்கல் பற்றியும் அது விளிம்புநிலை மக்களை உறிஞ்சி சக்கையாக துப்பிய விதத்தையும் மணி அவர்கள் தனக்கே உரிய வகையில் விவரித்து இருக்கிறார். பணமும் சரி, கடவுளும் சரி ஏழைகளுக்காக படைக்கப்பட்டது இல்லை என்பதை பவானிக்களும், லிங்கப்பாக்களும், அமாவாசைகளும் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள். வெகு சாதாரணமாக 300 பக்கங்களுக்கு மேல் எழுத வாய்ப்புள்ளதை 103 பக்கங்களில் முடித்து இருக்கிறார். மிக கச்சிதமான எடிட்டிங். வாழ்த்துக்கள் மணி.

வெங்கட்ராமன்

                                                                 ***
                                                                   (4)

குடிசையின் முன்பாக நின்று "அக்கா வா" என்று அழைத்தபோது பவானி கையகல முகக் கண்ணாடியில் தலைமுடியை சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.

கனத்த இதயத்துடன் 103 வது பக்கத்தையும் புரட்டிப் பார்த்தேன் லிங்கப்பா பிழைத்துவிட்டேனோ என்று. முதல் 15 பக்கங்கங்களை படிக்கும்போது இன்னும் சற்று மெருகேற்றியிருக்க வேண்டும் என தோன்றியது. ஆனால், அதற்கு பிறகான பக்கங்கங்கள் என்னை 104 வது பக்கத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டது..

நன்றி. அருமையான படைப்பு.

தமிழரசு செல்வம்

1 எதிர் சப்தங்கள்: