Jun 5, 2016

பதினெட்டு

நேற்று மதியம் வரை இருபத்தியேழு குட்டிக்கதைகள் வந்திருந்தன. ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தவை, தங்கிலீஷில் அனுப்பப்பட்டிருந்த சில கதைகளைத் தவிர்த்து சிறுகதை வடிவில் இல்லாத வெகு சிலவற்றை மட்டும் நிராகரித்திருக்கிறேன்.  

சொற்களின் எண்ணிக்கை இருநூற்றைம்பதுக்குள் இருக்க வேண்டும் என்ற விதியைச் சற்று தளர்த்திக் கொள்ளலாம். அந்தவொரு விதியை வைத்துக் கொண்டு நல்ல கதைகளை இழக்க வேண்டியதில்லை. பதினெட்டுக் கதைகள் இருக்கின்றன.  பெண், தண்ணீர் மற்றும் நகரம் சார்ந்த கதைகள் இவை.

வந்திருந்த கதைகள் உற்சாகமாக உணரச் செய்கிறது. இந்தக் கதைளில் சிலவற்றின் சாயல்களை மூன்றாம் நதி நாவலில் பார்க்கலாம். குறிப்பாக செவலை கதை. அந்தவிதத்திலும் சந்தோஷமாக இருக்கிறது. சுவாரஸியமாக எழுதக் கூடிய இவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்று பிரியப்படுகிறேன்.  

கிட்டத்தட்ட ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரசனை. வாசிக்க நன்றாக இருக்கிறது. நேரமிருக்கும் போது  வாசியுங்கள். நேரமில்லையென்றால் பக்கத்தைக் குறித்து வைத்துக் கொண்டு வாய்ப்பு கிடைக்கும் போது வாசியுங்கள். Worth reading!

பதினெட்டு கதைகளிலிருந்து சிறந்த பத்துக் கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வலது பக்கம் ஒரு சர்வே இருக்கிறது. உங்களுக்குப் பிடித்த முதல் பத்துக் கதைகளுக்கு வாக்களியுங்கள். நம் சக வாசகர்களின் ரசனையைப் புரிந்து கொள்ள நிச்சயமாக இந்த முடிவுகள் உதவும். அவசரமில்லை. புதன்கிழமை வரைக்கும் அவகாசம். வியாழக்கிழமையன்று சிறந்த பத்துக் கதைகளை முடிவு செய்யலாம்.

போட்டியை அறிவித்த பிறகு ஒரே நாள் அவகாசத்தில் கதைகளை அனுப்பிய அத்தனை பேருக்கும் நன்றியும் அன்பும்.

                                                                            ***


1. எப்பொழுதும் பெண் 
                                               - வெங்கட்

பதினேழு வருடங்கள் கழித்து திடீரென்று அகல்யாவைப் பார்ப்போம் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதுவும் ஒரு கான்பரன்சில். அகல்யாவின் பழைய தோற்றத்தையும், இப்போதைய தோற்றத்தையும் பொருத்திப் பார்க்கையில், அடையாளம் காண்பது சுலபமாக இல்லை. கான்பரன்சின் இடைவெளியில், திடீர் என்று யாரோ தோளைத் தொட்ட உணர்வு.

"நீ பிரபாகர்தானே?"

நாற்பது வயது வெள்ளை எழுத்து கண்ணாடியின் மேல் பாகத்தின் வழியாக, அவள் முகத்தை நியூரான்களில் தேடும் பொழுது, கொஞ்சம் சித்தி ராதிகா மாதிரி தெரிந்ததில் ஆச்சரியம் இல்லை. 

"அகல் நீயா?" என்று கேட்க நினைத்து, அருகில் இருந்த டை கட்டிய ஆசாமியைப் பார்க்கும் பொழுது, "அகல்யா நீங்களா? சர்ப்ரைஸ்" என்றேன்.

நான் பார்க்கும் ஐ டி தொழிலில், மணிரத்தினம் படம் மாதிரி சொற்ப வார்த்தைகளில், மனத்தில் உள்ளதை சொல்ல வேண்டும்.

"எக்ஸ்க்யுஸ்" கேட்டு விட்டு காப்டரயாவின் மூலைக்கு தனிமையில் செல்லும் பொழுது, அவளிடம் வரும் பிரத்யேக வாசனையை நிறைய வருடங்கள் கழித்து உணர முடிந்தது. பதினேழு வருடம் இருக்குமா? கடைசியில் பார்த்தது திருச்சி ஆண்டாள் ஸ்ட்ரீட்டில். அதுவும் ஸ்ரீராமிற்காக. 

"மச்சான் அவ என்னடா சொன்னா?"

"ப்ச்"

"பிரபா.....எதுவா இருந்தாலும், பரவா இல்லை.....சொல்லுடா”

"ஒண்ணும் இல்லடா..."

"இல்லை...பரவா இல்லை...என்னை பிடிக்கலேன்னு சொன்னாளா "

"சே சே"

"சரி, வேற என்னதான் சொன்னா?"

ஸ்ரீராமின் கவலையான முகம்  ஞாபகத்திற்கு வந்தது. இப்போது எங்கே இருக்கிறான்? கலிபோர்னியாவிலா? அவன் கல்யாணத்திற்கு கூட சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை ரயிலில் டிக்கெட் கிடைக்காமல், நின்று போனது...

"என்ன சாப்பிடற? காபி?"

காபி வரும் வரை....அவளை முழுவதுமாய் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. 

நிச்சயம் கல்யாணம் ஆயிருக்கும்....ஒரு வேளை, குழந்தைகள் இருக்கலாம்.

"அப்புறம் பிரபா? எப்படி இருக்க? கல்யாணம் ஆயிடிச்சா? எவ்வளவு குழந்தைகள்?"

சொன்னேன்.

"வாவ்...எப்படி இருக்கார் உங்க ப்ரண்ட்....இப்ப எங்க இருக்கார்.."

"யு எஸ்ல....கலிபோர்னியான்னு நினைக்கிறேன்....கல்யாணம் ஆயிடிச்சி....ரெண்டு பசங்க...."

அவர்களின் அமரக் காதல், பாதியிலியே அறுந்து விழுந்தது எனக்கு நன்றாக தெரியும். அந்த காதலுக்கு நிறைய தூது போனதால்.

அன்றைய தினங்களில், திருச்சி இப்போது மாதிரி பெரிய ஊராக இல்லை. எங்களின் சங்கமம் சத்திரம் பஸ் ஸ்டேண்டில் ஆரம்பிக்கும். 

ஸ்ரீராம் ஸ்ரீரங்கத்திலிருந்து வருபவன். வடகலை அய்யங்கார். நேஷனில் பி காம் படிப்பதோடு, சாயந்திர வேளைகளில் அகல்யாவை எக்கச்சக்கமாய் காதலிக்கவும் ஆரம்பித்தான். 

அகல்யா எஸ் ஆர் சீயில் பிசிக்சோ, என்னமோ படித்துக் கொண்டிருந்தாள். யாதவர் குலம். அவர்கள் அப்பாவிற்கு, ஸ்ரீனிவாச நல்லூர் தாண்டி ரங்கராஜபுரத்தில் குடிசை வீடு. புதுக்கோட்டை ரோடில், ஏர்போர்ட் அருகே இருந்த, லேத் பட்டறையில் வேலை. சொற்ப சம்பளம். ட்ராயரோடுதான் வேலைக்கு செல்வார். சாயந்திரம் வேலை விட்டு வரும் பொழுது, கொஞ்சம் தீர்த்தம் சாப்பிட்டு விட்டுதான் வருவார். 

அதற்குள் அகல்யா காலேஜிலிருந்து  வந்து, அந்த சிம்னி விளக்கு குடிசையில் அப்பாவிற்கு காத்திருப்பாள். அம்மா இல்லாத பெண் என்பதால் எக்கச்சக்க பாசத்தை வைத்து இருந்தார். 

"கண்ணு......" என்று உள்ளே நுழையும் போதே, சாராய வாசனை மூக்கைத் தொலைக்கும். 

சில நாட்களில் வெளியே நின்று சத்தம் போடுவார். வெட்ட வெளியில் யாரோ இருப்பதாக நினைத்துக் கொண்டு சவால் விடுவார். 

"நீ இல்லன்ன என்னடி? என்னால வாழ முடியாதா? என் பொண்ண மஹாராணி மாதிரி வளர்த்துவேண்டி...."

அப்பா....என்று அவள் அழைத்துக் கொண்டே, அவரை உள்ளே இழுத்து, கதவை சாற்றுவாள்.

இந்த இடத்தில், அகல்யாவின் அம்மா, வேறு யாருடனோ சென்று விட்டார் என்பதனை சொல்லியாக வேண்டி இருக்கிறது. இத்தனை விவரங்களையும் ஸ்ரீராமிடம் சொல்லிய பொழுது, அவன் அவளை மறப்பான் என்று நினைத்தேன். மாறாக, இன்னும் அதிகமாகவே காதலித்து தொலைத்தான்.  டைரியில் நிறைய கவிதைகள் எழுதினான். இரண்டொரு முறை, காதல் கடிதம் கொடுக்க சென்று கடைசி நொடியில் கிழித்தெறிந்தான். 

"எப்படியாவது என் காதல அவ கிட்ட சொல்லிடுறா...அவ இல்லாத ஒரு வாழ்க்கையை நினைச்சு கூட பாக்க முடியல "

நான் சொன்ன பொழுது, அகல்யா ஒரு முறை மேலும் கீழும் பார்த்து விட்டு, ஒற்றை வார்த்தையில் நிராகரித்தாள்.

"சாரி"

அதற்க்கப்புறம் ஸ்ரீராம் கொஞ்ச நாள் தாடி வளர்த்தான். டைரியில் காதல் தோல்வி கவிதைகள் எழுதினான். பி காம் முடித்ததும் கம்ப்யுட்டர் படித்தான். சென்னையில் ஒரு சாப்ட்வர் கம்பெனியில் வேலைக்கு சென்றான். ஹிந்துவில் விளம்பரம்  கொடுத்து, மாம்பலத்தில் இருந்த அலமேலுவை கல்யாணம் செய்து கொண்டான். 

அதற்கு பிறகு பதினேழு வருடங்களில் வாழ்க்கை மிக மாறி விட்டது. சமீபத்தில் பேஸ் புக்கில்  பார்த்து, அவனுடைய இந்திய விஜயத்தில், நேரில் சந்தித்து...

"ஸோ? ஹி இஸ் டூயிங் குட்.....அப்ப அவன் என் மேல ரொம்ப கிரேசியா இருந்தான்....பட், நான்தான் ரிஜக்ட் பண்ணிட்டேன்"

“அப்பா?”

"அவர் போயி பத்து வருஷம் இருக்கும்....என் லைப்ல எதுவுமே அவ்வளவு ஈசியா கிடைக்கல..சின்ன வயசில, அம்மா மூலமா ஒரு சோதனை வந்தது. அப்பா குடிச்சார்....விவரம் தெரிஞ்சும் தெரியாத வயசில, அவரையும் பார்த்துக்க வேண்டிய கட்டாயம்....வேலைக்கு அலைந்தேன்...பார்ட் டைம்ல படிச்சிட்டே, வொர்க் பண்ணினேன்.....இந்த பதினைந்து வருஷம் வெறும் அட்வென்சர்ஸ்தான் இன்னைக்கு இந்த நிலைமைக்கு வரதுக்கு, நான் பட்ட ரணங்கள் ஏராளம். பணம் சம்பாதிச்சேன்....எவ்வளவு முயற்சி செய்தும், அப்பாவ  என்னால காப்பாத்த முடியல....நிறைய குடிச்சி, குடல் வெந்து செத்து போனார்.....எவ்வளவு நாள் தனிமையில இருக்கிறது..கிஷோரப் பார்த்தேன்..வி டிசைடட் டு மேரி...அழகா, இரண்டு பசங்க....."

“எனக்கு இன்னும் கூட ஆச்சிரியமா இருக்கு அகல்...தப்பா நினைச்சுக்காதே...அன்னிக்கு அவன் எப்படி இருந்தான்....கிட்டத்தட்ட அரவிந்த் சாமி மாதிரி....அவ்வளவு அழகா.....அவன லவ் பண்ண, நிறைய பெண்கள் தயாரா இருந்தாங்க....அவன் என்னவோ, உன் மேல க்ரேசா இருந்தான்....அவன அந்த எமாற்றத்திலேர்ந்து வெளியே கொண்டு வருவதற்கு, கொஞ்ச நாள் ஆச்சு.....ஒரே ஒரு கேள்வி மட்டும் எனக்கு புரியல....அவன ஏன் ரிஜக்ட் பண்ணினே?”

“என்னைக் காதலித்திருந்தா, அவனும் என் கூட சேர்ந்து கஷ்டபட்டிருப்பான்....அத நான் விரும்பல...”

“ஏன்?” 

“அவன் மேல நான் உயிரையே வச்சிருந்தேன்” 


                                                             *****
                             
2. தண்ணீர்
                           - ரத்தினக் கனி

"யோவ் எப்படியாவது கொண்டு வந்துடுயா.." என்று ராமுத்தாய் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே, "என்னடி நான் என்னமோ சும்மா சுத்திட்டு வர்ற மாதிரி பேசுற... கிடைச்சா கொண்டு வரக்கூடாதுன்னு எனக்கு என்ன ஆசையா??" என்று கத்தினார் பொன்னுச்சாமி.

பொன்னுச்சாமி பழைய நினைவுகளை அசைபோட்டபடியே வெறுப்பாய் நடந்தார். வரவர நிலைமை மிகவும் மோசமாகிக்கொண்டேயிருக்கிறது. 

ஊருக்குள் யாருமே இல்லை. எல்லோரும் அதிகாலையிலேயே கிளம்பியிருந்தனர். தினமும் இதே வேலையாகி விட்டது.

ஏதோ ஒரு நம்பிக்கையில் நேற்று சென்ற முட்டுக்காட்டிற்க்கே இன்றும் செல்கின்றார். அவரது நடை மிகவும் வேகமானது. அதோ அங்கு ஒரு பெரிய மேடு போல் தெரிகிறது. அந்த மேட்டின்மேல் ஏறி நின்று எட்டிப்பார்த்தார். கீழே அது தெரிந்தது. வெயிலில் ஜொலித்தது. சுற்றும் முற்றும் பார்த்தார். சிறிது தூரத்தில் ஒரு பழைய வாலி ஒன்று கிடந்தது. அதை எடுத்துக்கொண்டு அந்த பள்ளத்தில் இறங்கினார். கொஞ்சம் ஈரமாக இருந்த நிலத்தில் அந்த வாலியை வைத்து கொத்தி மண்ணை அகற்றினார். சிறிது சிறிதாக தண்ணீர் வெளிப்பட்டது. 

அதைக்கண்டதும் மனம் துள்ளிக்குதித்தது. நேற்றைப்போலவே இன்றைக்கும் ஒரு குவளையாவது தண்ணீர் கிடைத்தது. எடுத்துவிட்டு மேலே வந்தார். பதின் வயது சிறுமி ஒருத்தி அந்த தண்ணீரை பார்த்துக்கொண்டே இருந்தாள்.

"தாத்தா எனக்கு கொஞ்சம் தண்ணி குடுங்க தாத்தா.. வீட்டுல அம்மா ஒடம்ம்புக்கு முடியாம படுத்து இருக்காங்க.. அப்பா கூலிக்குப் போயிட்டாரு.. வேற எங்கயும் தண்ணி கெடைக்கல.. நானும் கருக்கல்ல இருந்து தேடுறேன்.. கொஞ்சம் குடுங்க தாத்தா.." என்றாள்.

சிறிது நேரம் யோசித்து விட்டு தன்னிடம் இருந்த தண்ணீர் முழுவதையும் அவளிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினார். நேற்றும் இப்படி கிடைத்த நீரை அருகில் அலைந்துகொண்டிருந்த கால்நடைகளுக்கு ஊற்றிவிட்டு அரைக்குடம் தண்ணீரை மட்டுமே எடுத்து சென்றார். 

மனம் வெதும்பியபடி ராமுத்தாய் காலையில் சொன்ன வார்த்தைகளை நினைத்துக நொந்துகொண்டே வேறு இடத்திருக்கு நடந்தார் "யோவ் எப்படியாவது கொண்டு வந்துடுயா.. நேத்து மாதிரி கால்கொடம் தண்ணி கொண்டு வந்தா, நாம தண்ணி இல்லாம விக்கி சாக வேண்டியது தான்.."

                                                                      *****
                                                                  
3. அழகற்ற பட்சி
                              - ராஜ் ருபாஃரோ

மணி அதிகாலை மூன்றரை. அந்நேரத்தில் கோழிகளும் காவாலி பயலுகளும் சுற்றுவது பெரும்பாலான கே.ஃப்.சி இல்லாத ஊரில் உள்ள வழக்கம். மாறாக கான்கிரிட் காடுகளை கொண்ட பெங்களூர் மாதிரியான ஊர்களில் அலுவலக வண்டிகள் சுற்றும். 

பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தது தனக்காகவும் தனது பேனாவிற்காகவும் என்றாலும் பொறியியல் படிப்பு அப்பாவிற்காகவும், வேலை குடும்பத்திற்காகவும் நிகழ்த்தப்பட்டது. இப்பொழுது ஏழு வயதில் ஆண் குழந்தை (ஆனால் தட்டான் பிடிக்க தெரியாது, சூழல் அப்பிடி). குழந்தை பிறந்த பிற்பாடு கணவனும் மனைவியும் இருவர் முகத்தையும் முகநூலில் தான் பார்த்துக் கொள்கிறார்கள். அதுவும் சூழலினால்தான். ஈர்பதினெட்டு  வயதாகியும் சிகண்டிக்காகவே மகாபாரதத்தை அவ்வப்போது புரட்டுவதும் உண்டு.

Digital Strategist ஆக இருப்பதனாலயோ என்னவோ வேலை அழுத்தம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அழுத்ததிற்கு இடையிலும் கூட Cheryl strayed அனுபவித்து எழுதிய 'Wild' புத்தகத்தின் பக்கங்களுக்கு அடிமை. 

இரவு முழுவதும் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் அன்று. கண் கணினிக்கென ஆகியது. 

தூக்கம் துளைக்க, வெளியுலகம் நினைவுக்கு வந்தது. புத்தகத்தை எடுத்துகொண்டு கிளம்பினாள். அலுவலக வண்டியினை தவிர்த்தாள். தனியாக வீடு செல்லவைத்தது அப்புத்தகத்தின் வெற்றியென கருதலாம். சோர்வு மிகுதியால் சில தொலைவிற்கு பின் தன்னை கடந்த ஆட்டோவை நிறுத்தி ஏறினாள். எப்பவும் போல ஆட்டோகாரன் கடத்தல்காரனாகக் கூட இருக்கலாம் என்ற யோசனை ஒரு பக்கம் ஓடியது.

சிறு தூரம் செல்லவே வலது புறம் பார்த்த படியே “ரெண்டு பேருக்கும் ஒன்னு தான் வித்யாசம் ஒன்னு கற்பு, இன்னொன்னு கனவு” என்று மெல்லிய குரலில் ஆட்டோவோட்டிய படியே கூறியது அவளுக்கு கேட்டது.

"உங்களுக்கு ஆண் குழந்தையா பெண் குழந்தையா?" என்று வினவினாள் .

"பெண்" என கணீர் குரலில் பதிலளித்தான்.

நான் உங்களை போல் என் மகளை விடமாட்டேன் என்கிற தொனி அதில் இருந்தது. வேறு ஏதும் பேச காரணமில்லாமல் போனது.
வீடு நெருங்கியது.

பையிலிருந்த பேனா செல்லுமிடத்தை அறிந்து இருக்கையில் விட்டு இறங்கினாள்.

வீடு நுலைந்தவுடன் தூக்க கலக்கத்துடண் கத்தியை தேடினாள். கணவனுக்காக ஸாண்ட்விச் செய்வதர்க்கு (அடுத்த ஷிஃப்ட் போல).

                                                            ****

4. திருமணம் 
                         - சசிக்குமார்

ராமநாதனின் மதிய தூக்கத்தை கலைத்தது மின்சார வெட்டு. அலுத்துக்கொண்டே மொபைலில் நேரம் பார்த்தான். நெற்றியில் வியர்வை அரும்பியது.

தினசரியை எடுத்துக்கொண்டு ஹாலில் வந்தவன், விசிறிக்கொண்டே செய்திகளை மேலோட்டாமாய் பார்த்தான். 

‘மணமகன் தேவை. விதைவைப் பெண்ணுக்கு, நல்ல வருமானத்திலுள்ள 40 க்குள், சாதி தடையில்லை’ என்ற பெட்டி விளம்பரம் பெரிதாய் தெரிந்தது ராமுக்கு.

வரும் ஆகஸ்டில் 38 ஆக போகிறது. காலாகாலத்துல கல்யாணம் பண்ணிக்கோ என்று அம்மா தலை தலையாய் அடித்த பொழுதெல்லாம் வேலை இல்லாம எப்படிமா பண்றது என்று இவன் யோசித்தான்.

சிவில் இஞ்சியர், பரவாயில்லாமல் சம்பளம் கிடைத்தத போது முன் வழுக்கை விழுந்திருந்தது, சில பெண்களை இவன் தட்டிக்கழித்தான். பல பெண்கள் இவனை தட்டிக்கழித்தார்கள். மீறி வந்ததையெல்லாம் ஜோசியர் அவர் பங்குக்கு பொருத்தம் இல்லை என்றார். சரி நடப்பது நடக்கட்டும் என்றிருந்தான். அம்மா தான் மிகவும் கவலைப்பட்டாள்.

விதவைப்பெண்ணை கட்டுகிற அளவுக்கா நான் மோசமாயிட்டேன். எனக்கு வரப்போறவளுக்கு நான்தான் எல்லாத்துலயும் பர்ஸ்ட் என்று இளம்வயதில் நண்பர்களுடன் பேசிய பொழுதுகள் நிழலாடியது. அது எப்படி முதப்புருசன் நினப்பு இல்லாம வாழமுடியும். ப்ரண்ட்ஸ் எல்லாம் எப்படி பார்ப்பாங்க என்ன? இப்படி பல குழப்ப கேள்விகள். 

அம்மாவிடன் இருந்து அழைப்பு.

‘கல்யாணப்பேச்சு வேண்டாம் வேற ஏதாச்சும் பேசுங்க..’

‘நான் சொல்றத முழுசா கேளு தயவுசெஞ்சு...’ அழுத்தமாய் இருந்தது அம்மாவின் குரல்.

‘இது கல்யாண பேச்சுதான். பொண்ணுக்கும், அவங்க வீட்டுக்கும் உன்னை புடிச்சிருக்கு, ஜோசியம் பொருத்தம் தேவையில்லனு சொல்லிட்டாங்கா. இருந்தாலும் நான் பார்த்தேன். ஒரு பிரச்சனையும் இல்ல. ஆனா...’

‘வீட்டோட மாப்பிளையா இருக்கனுமா?’

‘முழுசா கேளுன்னு சொன்னேன்ல.. அவ விதவை..பொண்ணுக்கு இரண்டு வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆகி, புருசன் ஒரு விபத்துல தவறிட்டான்’

‘என்னமா, நான் அவ்ளோ மோசமா போயிட்டேனா? கையாலாகதவன் ஆகிட்டேன் நான்’ என உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டே இருந்தான்.

‘போதும் நிறுத்து ராமு’ விசும்பலுடன் ஆனால் ஒரு அமைதியான் குரலில்

‘இப்படி உங்கப்பா நினைச்சிருந்தா, நான் இன்னும் எங்கம்மா வீட்ல இருந்திருப்பேன். நீயும் பொறந்திருக்க மாட்ட, இந்த பேச்சும் கேட்டுருக்க மாட்டேன். இந்த நொடி வரைக்கும் நான் விதவையானவள்னு தோணாத அளவுக்கு உங்கப்பா பார்த்துகிட்டார். உடம்ப தாண்டியும் மனது, ஆறுதல், வாழ்க்கைனு ஆயிரம் இருக்குடா. பொண்ணு மனச பத்தி உனக்கு என்னடா தெரியும்?’ அம்மா சொன்னதும் சொல்லாமல் விட்ட வார்தைகளும் புரிவது போல் இருந்தது. மின்விசிறி சுழலத்தொடங்கியிருந்தது.

                                                          ***
5. GO SOLO
                           - கோகுலன்

அதிகாலை வெயில். இன்னும் கொஞ்ச நேரத்தில் பரபரப்பாக இயங்கக் காத்திருக்கும் அந்த சாலையில் தன்னைக் கடந்து வேகமாய் ஓடிய மெல்லிடையாளின் மீது மூழ் ஃபோகஸூடன் வேகமாக நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார் காதோரம் நரைத்த ஓர் அரசு அதிகாரி. முன்னால் வந்த பால்காரனை நூலிழையில் விலகி குப்பைத் தொட்டியிலிருந்து சிதறிக் கிடந்த குப்பைகளை மிதிக்காமல் தடுமாறி நிலை கொண்டார். ஜிம்மிற்கு duke பைக்கில் சர்ர்ரென விரைந்து கொண்டிருந்தான் ஒரு யுவன். பேட்மிண்டன் மட்டையோடு ஒரு சந்தில் இருந்து ஸ்கூட்டியில் பறந்தாள் ஒரு யுவதி.

குப்பைத் தொட்டி தாண்டி நின்ற காரில் இருந்து இறங்கி ஒரு சிறிய தெருவில் நுழைந்தாள் ஒரு ஐடி பெண். அந்தக் குப்பைத் தொட்டி அருகேயிருந்த சாலையோர குடிசையில் கயிறில் தொங்கிக் கொண்டிருக்கும் தன் தாய்க்கோ, போதை தெளியாத தன் தந்தைக்கோ, சாலையில் ஹெட் செட் அணிந்து தன்னைக் கடந்து செல்லும் எவருக்குமே தன் அழுகுரல் கேட்காது என தெரியாமல் பசித்து அழுது கொண்டிருந்தது அந்தக் குழந்தை.

                                   ***

6. காதல்
                        - அகில் குமார்

பகார்டி லெமனில் சோடா ஊற்றிக்கொண்டே பிங் வோட்கா பிரியவதனியின் இளம்தொண்டையில் இறங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

"நாலு வருஷமா லவ் பண்ண தீபக் ஒருநாள் என்னைப் போடினு சொல்லிட்டான். அவன் கால்ல விழுந்து கதறி அழுதேன். எட்டி மிதிச்சு கதவ சாத்திட்டான்" என்றாள் பிரியவதினி. எனக்கு அழ வேண்டும் போல் இருந்தது. மகிழினியின் கொஞ்சல்,  எதையாவது யோசிக்கும்போது உதட்டை சுளித்துக்கொள்வது, இடைவிடாத இரவுப் பேச்சுகள் எல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

"அவ என்ன சொன்னா மதி?" 

"காரணம்லாம் இல்ல.இது வேணாம்னு சொன்னா" 

"அவளுக்கு நீ புளிச்சு போய்ட்ட மதி. கொஞ்ச நாள்ல அவ கூட உனக்கு புளிச்சு போய்ருக்கலாம், நெருங்கனாவே புளிச்சிடும், எப்பவுமே கொஞ்சம் தள்ளி இருக்கணும். கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்ல பாரு ஜோடிக்கு பேச ஒண்ணும் இருக்காது. புளிச்சிடும். நெருங்கிய நட்புனு சொல்றது எல்லாம் உள்ளுக்குள்ள பொறாமைல பொகஞ்சிட்டு இருக்குமே அந்த மாதிரிதான். ரொம்ப நெருங்கனா புடிக்காது. புளிச்சிடும்" பிரியவதனி சொல்வதற்கு ஆமாம் போட்டுக்கொண்டிருந்தேன். 

பகார்டியைப் பிடுங்கி அதையும் கவிழ்த்த ஆரம்பித்தாள். "தீபக் போன வாரம் கால் பண்ணி புதுசா கார் வாங்கிருக்கேன். ஒரு ரைடு போவோம் வரியானு கேட்டான்"

"என்ன சொன்ன?"

"போனேன். நம்ம ரியாஸ் கூட பைக்ல. ஹாய் பஸ்டார்ட் இதாண்டா என் ஆளுனு ரியாஸ கட்டி பிடிச்சுகிட்டேன். அவன் கார்ல காறி துப்பிட்டு ரியாஸ் கூட லாங் டிரைவ் போனேன்." வழிந்த ஒருதுளிக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். திடீரென்று வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். கடைசியில் களைப்புற்று என் மடியில் படுத்து "ஐ லவ் திஸ் இடியாட்டிக் லைப்" என்று பிதற்றிக்கொண்டிருந்தாள். மூடியிருந்த அவள் கண்களில் முத்தமிட்டேன். இன்னும் வாழ்வதற்கான ஆசையோடு தூங்க ஆரம்பித்தேன்.

                                                          ***

7. நம்பிக்கை
                             - குகன்

வானம் இருண்டு கிடந்தது. ஆனால் மழைதான் வரமாட்டேன் என அடம்பிடித்துக்கொண்டிருந்தது. சில நாட்களாகவே இப்படித்தான். மழை இல்லாமல் பயிர்கள் வாடிக்கிடந்தன. கிணற்றிலும் தண்ணீர் வற்றிவிட்டது. வரப்பில் இருந்து வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தவரின் மனதில் பல எண்ணங்களும் சூறாவளியாக சுழன்றடித்தன.

சிறுபோகம் நடுவதா இல்லையா என பலவாறாக யோசித்து பயிர் நட்டிருந்தார். இறைவன்மேல் பாரத்தைப் போட்டு மனைவியின் தாலிக்கொடி அடைவுக்கடை வாசலைத்தாண்டியிருந்தது. அவளிடம் கடைசியாக இருந்த நகையும் அதுதான். பிள்ளைகளின் படிப்புச் செலவுகள் மளிகைக் கடை பாக்கிகள் கண்முன்னே விஸ்வரூப தரிசனம் காட்டின. இந்தமுறை எல்லாம் சரிவந்தால் கையூன்றி நிமிர்ந்திடலாம் என்றால் இயற்கை விடமாட்டேன் என்கிறது. 

ஒவ்வொரு முறையும் முயன்று பார்ப்பதும் கீழே விழுவதுமாக இருக்கிறது அவரது வாழ்வு. விவசாயத்தை விட்டால் வேறு தொழிலும் தெரியாது அவருக்கு. இயற்கை சமநிலை குழம்பியிருப்பது நன்றாகவே தெரிகிறது ஆனாலும் என்ன செய்வது. தொலைக்காட்சியிலும் செய்திதாள்களிலும் அடிக்கடி பருவநிலைமாற்றம் பற்றிய செய்திகளை விடாது பார்த்தும் வாசித்தும் இயற்கையை புரிந்துகொள்ள முடியவில்லை. எல் நினோவையும் லா நினோவையும் இப்பொழுதுதான் அவர் கேள்விப்படுகிறார். இது எதுவுமே தெரியாதுதான் என்றாலும் அவர் அப்பனும் பாட்டனும் இயற்கையை புரிந்து விவசாயம் செய்தவர்கள். 

இன்று பள்ளிமுடிந்து வந்த மகள் தாயாரிடம் சொல்லிக்கொண்டிருந்தது அவரின் காதிலும் விழுந்தது. நகர மயமாக்கலும் காடழிப்பும் எவ்வாறு பூமியை வெப்பமடைய வைக்கிறது என்றும் மழைவீழ்ச்சியை குறைக்கிறது என்றும் மகள் தாயாருக்கு விளக்கிக்கொண்டிருந்தாள். இன்று பள்ளியில் படித்தவற்றையெல்லாம் கூறிவிடவேண்டும் என்ற ஆர்வம் அவளிடம் தெரிந்தது. இதையெல்லாம் காதுகொடுத்து கேட்டுக்கொண்டிருந்த அவருக்கு தான் படிக்காவிட்டாலும் தனது மகள் ஆர்வமுடன் படிப்பது மனநிறைவையும் பெருமிதத்தையும் கொடுத்தது.

பெண்கல்வியின் முக்கியத்தை நான்கு உணர்ந்தவர்தான் அவர். அதேநேரம் உலகமயமாக்கலுக்கும் பெருகிவரும் காடழிப்புக்கும் எதிராக தன்னைப்போன்ற எளிய விவசாயி என்ன செய்யமுடியும் என்று யோசித்தபொழுது ஆயாசமும் அசதியுமே தோன்றியது. எப்போது இயற்கையை வஞ்சிக்கும் தவற்றைச் செய்யத்தொடங்கினோம் என யோசித்துப்பார்த்தார். ஆனால் விடைதான் இல்லை. யோசனையோடு இருந்தவரின் கையில் விழுந்தது ஒருதுளி மழை. சிந்தனை கலைந்து அண்ணாந்து வானத்தைப்பார்த்தார்.

கிழக்கிலிருந்து ஒரு மழைமேகம் வருவது தெரிந்தது. மனதில் நிறைந்த நம்பிக்கையுடன் திரும்பி பயிர்களைப் பார்த்தவருக்கு பயிர்கள் சிரிப்பது போலவே தோன்றியது.

                                                                   *****

8. மழை
                        - சரவணக்குமார்

நகரத்தில் ஒருவன் இருக்கிறான். ஒருவன் மட்டும் தான். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கோமாவிற்கு சென்றவன். பூமியின் அதிகபடியான வெப்பத்தால் உருவான லட்சகணக்கான நோய்க் கிருமிகளில் ஒன்று தாக்கி இருக்கிறது. 

நோய் பெயர்? யாருக்குத் தெரியும். அதை கண்டுபிடிக்க மருத்துவனும் இல்லை.  

கடந்த சில நூற்றாண்டுகளாகவே மக்கள் தொகை மிகவேகமாக குறைந்து வருகிறது. இப்போது இவன் ஒருவன்தான் உயிரோடு இருக்கிறான்.

இவனது அப்பா தண்ணீர் வியாபாரியாக இருந்தார். கொழுத்த பணம் . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்போதும் சண்டையிட்டு கொண்டிருந்த பாகிஸ்தானை ஒரே காசோலையில் வாங்கினார். 
இப்போது நாடு என்று ஒன்று இல்லவே இல்லை. எங்கு தண்ணீர் கிடைக்குமோ அங்கே மக்கள் வாழ்கிறார்கள் . இல்லை இல்லை. வாழ முயற்சிக்கிறார்கள். சுமார் எண்ணூறு கிலோ மீட்டர் சுற்றளவில் இங்கு மட்டும் தான் தண்ணீர் கிடைத்தது . ஆயிரம் பேர் வாழ்ந்தனர். இவரிடமும் தண்ணீரின் இருப்பு குறைந்தது. பெரும்பாலானோர் இறந்து போயினர். தண்ணீரை பாதுகாத்து நின்ற இவரின் ராணுவம் கடைசிச் சொட்டு நீர் வரைக்கும் உறிஞ்சிவிட்டு உயிர்விட்டது. மறைத்து வைத்திருந்த தண்ணிரை வைத்து 6 மாதம் வாழ்ந்து விட்டு அவரும் இறந்து போனார். சாகும் முன் கோமாவில் இருக்கும் தன் மகனுக்காக கொஞ்ச காலத்திற்கான தண்ணீரை குழாய் வழியாகக் கொடுக்கும்படியாக வசதி செய்துவிட்டு போனார்.

இவனது கெட்ட நேரம்- அந்தத் தண்ணீர் முடிவதற்கு முன்னரே கோமாவில் இருந்து விழித்து விட்டான் . 

கோமாவிலேயே போய் சேர குடுத்து வைக்கவில்லை போலும். எழுந்தான். வெளியே காலாற நடந்தான். எங்கும் மனித எலும்புகள். மனிதன் இறந்து மூன்றே நாட்களில் வெறும் எலும்பை மட்டுமே மிச்சம் வைக்கும் விஷக் கிருமிகள் பரவிக் கிடக்கின்றன. விலங்குகள் என்ற எதுவுமே இல்லை. அவை முற்றிலும் அழிந்து பல நூற்றாண்டுகள் ஆகின்றன. 

சர்வதேச வன விலங்கு பாதுகாப்பு அமைப்பு, மனித பாதுகாப்பு அமைப்பாக மாறி ஐநூறு ஆண்டுகள் ஆனா விழாவை சிறப்பிக்க வெறும் பதிமூன்று மனிதர்கள்தான்  வந்திருந்தார்கள். இந்த உலகம் எக்கேடோ கெட்டு போகட்டும் . நமக்கென்ன?. 

நாம் இவனுடைய கதைக்கு வருவோம். கொஞ்ச தூரம் வந்திருப்பான். ரொம்பவும் பசித்தது. கையில் கிடைத்த பிளாஸ்டிக் புட்டியை எடுத்து சாலை ஓரம் உள்ள தானியங்கி உணவு இயந்திரத்தின் உள்ளே போட்டான். உணவிலேயே சீனா என்று ப்ரண்ட் பெயர் குறிக்கப்பட்டிருந்தது. எடுத்து உண்டான். அவனுக்கு தெரியும் இது கடைசி நாளாக இருக்க வாய்ப்பு அதிகம் என்று. இருந்தாலும் எப்படியாவது முயன்று தண்ணிர் குடித்து விடவேண்டும்  என்று மனம் அலறியது. வெய்யில் 83 டிகிரி அடிக்கிறது. மழைவந்தால் எங்கு எப்படி வரும் என்று இவன் தந்தை இவன் சிறு வயதாய் இருக்கும் போது சொல்லிகொடுத்திருக்கிறார். அதை வைத்து சுற்றி கொண்டிருந்தான் . மனம் முழுக்கவும் தண்ணீர் நிரம்பி இருக்கிறது. அங்கும் இங்கும் சுற்றி ஒரு மிகபெரிய பாலத்திற்கு மேல் வந்து நின்றான். எந்நேரமும் உயிர் பிரியலாம். அழுகையும் வரவில்லை. வந்தால் கண்ணீரையாவது சுவைக்கலாமே.

திடீர் என்று வானம் சிவப்பு நிறமாகியது.. அமில மழை பெய்ய போகின்றது. இதுதான் ஓரளவு குறைந்த நச்சுடைய  மழை என்று தந்தை கூறியது மனதில் வந்தோடியது. பாலத்திலிருந்து சரியாக ஐநூறு மீட்டர் தொலைவில் மழை பெய்தது. இவனுக்கோ பயம் வந்துவிட்டது. நாம் செல்லும் வரை மழை நீர் அங்கு இருக்குமா என்று. 83 டிகிரி வெப்பம் . கடல் நீர் ஆவியாகி வளி மண்டலதிலேயே பலநூறு வருடங்களாக சுற்றிக் கொண்டிருக்கிறது . மழை வந்தாலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் வேகமாக கொட்டுகிறது. இவன் ஊரில் சுமார் 1500 வருடங்களுக்கு முன்னால் ஒரே நேரத்தில் பேய் மழை அடித்து ஊரே வெள்ளத்தில் மிதந்ததாம். அதன் பிறகு அடிக்கடி அந்த மாதிரி மழை பெய்ய ஆரம்பித்து, பிறகு அதுவே பழகி விட்டதாம். இதற்கு காரணம் "வெப்பநிலை அதிகமாகும் பொது மேகத்திற்கு  நீரை பிடித்து வைத்துகொள்ளும் சக்தி அதிகமாகி கொண்டே போகிறது. பிறகு மேக கூட்டம் மேலே எழும்பி குளிரும் பொது பிடித்து வாய்த்த அனைத்து நீர் திவலைகளும் நீர் துளியாக மாறி ஒரே இடத்தில கொட்டுகின்றன." என்று இவனுடைய அப்பா சொன்னது இவன் ஓடிக்கொண்டிருக்கும் வேகத்திலும் நினைவில் வந்தது தொலைத்து. உயிர் போகிற வேளையில் அறிவியல் சிந்தனைக்கு இடம் கொடுக்க முடியாது. இருக்கின்ற மொத்த சக்தியையும் பயன்படுத்தி ஓடிக்கொண்டிருந்தான். நினைத்தது போலவே மழை பெய்து முடித்து ஆவியாகி கொண்டிருந்தது. இன்னும் ஐம்பது மீட்டர் தான். கொஞ்சம் தண்ணீர் கண்களுக்கு தெரிகிறது. வந்துவிட்டான். வெறும் ஈரம் மட்டும் இருக்கிறது. யோசிக்கவில்லை. எடுத்து வாயில் போட்டு சப்ப ஆரம்பித்தான். கொஞ்சம் சுவை தெரிந்தது. அப்படியே மண்ணில் சாய்ந்தான். விக்கல் வேறு வருகிறது. வாய் முழுக்க மண். மரணம் உறுதி. மனம் முழுக்க இருந்த தண்ணீர் இப்போது இல்லை.

அடுத்த விநாடி மரணம். இவன் கோமாவுக்கு செல்வதற்கு முன் இவன் சந்தித்த ஒரு உருவம் இப்போது மனதில் வந்து நிற்கிறது. அது ..
                                                          ***

9. அவள்
                        - ஹேமா

வணக்கம்,

எப்படி இருக்கீங்க? பெயர் தெரியாத மின்முகவரியிலிருந்து வந்திருக்கிற இந்த மடலை பார்த்து விழிக்கிறீங்களா? என் பேரு முக்கியம் இல்லீங்க. நான் சொல்ல வந்த விஷயத்தை மட்டும் கொஞ்சம் கேளுங்க,ப்ளீஸ்! 

இது எனக்கு ரொம்பவே நெருக்கமான ஒரு பொண்ணைப் பத்தின கதை தான். 

‘சட்.. பொண்ணுங்க அவங்க பிரச்னையை பத்தி புலம்பறது ஒரு பேஷன் ஆயிடுச்சு’னு சலிப்போ, ‘இந்த மாதிரி அழுது வடியறது எல்லாம் கிளிஷே’ன்னு அலுப்போ உங்களுக்கு தோணினா தயவுசெய்து ஷிப்ட்-டெலிட் போட்டு இக்கடிதத்தை அழிச்சிட்டு ‘பெண்களை நேசிப்போம்,பெண்மையை போற்றுவோம்!’,‘அப்பாவுக்கு மட்டும்தான் தெரியும் மகளின் முத்தம்’ ‘சேவ்-வுமன்’னு வழக்கமான முகநூல் பதிவுகளை லைக்கிட்டும் ஷேர்செய்தும் உங்கள் சமூகப்பணியை இந்த யுகத்துக்கான புரட்சியை தொடர்ந்து செய்யுங்க. 

சரி விஷயத்துக்கு வரேன். என் தோழியின் பேரு... ஒரு பேச்சுக்கு ‘அவள்’னு வச்சுக்கோங்களேன்.

அவள் மிகப்பெரிய மல்டிநேஷனல் கம்பெனில மாசம் லட்சத்தை தொடும் சம்பளத்துடன் நல்ல பதவில இருக்கா. வெளியில் இருந்து பார்த்தா ‘உனக்கென்ன நல்ல புருஷன், அருமையான குழந்தைங்க, கூடவே இருந்து வீட்டை பார்த்துக்கிற மாமனார், மாமியார்; காசுக்கு காசு, வேலைக்கு வேலை’னு பெருமூச்சு விடுகிற சுற்றமும்-நட்பும் சூழ இருக்கும் வளமான வாழ்க்கை. ஆனா அவ வாழ்ற வாழ்க்கை எப்படினு எனக்கு மட்டும் தான் தெரியுங்க. 

கூட்டு குடும்பமாக இருந்து குழந்தைகளை பார்த்துக்கிறதால ‘எங்களை விட்டா உனக்கு வேற கதி இல்ல’ன்னு சிறிதும் புரிதல் இல்லாத புகுந்த வீட்டு உறவுகள். 

‘நானும் அந்த காலத்துல டீச்சரா வேலைபார்த்தவதான். வீட்டு வேலையை செஞ்சுட்டுதான் நானும் வேலைக்கு போனேன். நான் உயிரோட இருக்கிறவரைக்கும் இந்த வீட்டுக்கு வேலைக்காரி வைக்கக்கூடாது’னு அடம் பிடிக்கிற மாமியார். 

வீட்டுக்கு வர்ற கெஸ்ட் ‘என்ன இளைச்சுட்டீங்க.. மருமக சமையல் நல்லா இருக்குல்ல..? ஒழுங்கா சாப்பிட்டு உடம்பை தேத்துங்க’னு உபசாரமா சொன்னா திரும்பி மையமா ஒரு பார்வை பார்த்து நக்கலான சிரிப்பையே பதிலாக கொடுத்து வெறுப்பேற்றுகிற மாமனார். 

அவ புருஷனை பத்தி என்ன சொல்றது? நல்லவருதான். அன்பானவருதான். என்ன. வீட்டிலும் அலுவலகத்திலும் அவள் சந்திக்கும் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளப்போனால் ‘விடுமா...இது ஒரு விஷயமா’னு புறங்கையால் தள்ளியோ ‘நீ சரியா அந்த சிச்சுவேஷனை ஹாண்டில் பண்ணலை’னு கடுப்பேற்றவோ செய்கிற கல்லுளிமங்கன். அதுக்கு மேல அவரை பத்தி சொல்லி ஒண்ணும் இல்ல.
உங்களை ரொம்ப போரடிக்காம, அவளோட ஒரு நாள்ல நடக்குற சில விசயங்களை மட்டும் சொல்றேன், கேளுங்க.

‘நேத்து நைட்டெல்லாம் அவன் இருமினான். ஒரு கை ரசத்தை கூட்டி வச்சிட்டு போயேன்..’ லேப்டாப்பை அதன் பையில் வைத்து சுடிதாரை பின் பண்ணிக்கொண்டு வெளிவரும்போது திடீரென ஒலிக்கும் குரலின் நிமித்தம், அவள் கரங்கள் மீண்டும் அடுப்பை பற்ற வைக்கும். எட்டு மணி பஸ்ஸை பிடிக்கும் அவசரத்தில் விரல்கள் புளியையும் தக்காளியையும் கரைக்க, அவள் மனசு அன்று நடக்க இருக்கும் மீட்டிங்கிற்கான குறிப்புகளை வரிசைப்படுத்த, கண்களோ மொபைலை மேய்ந்து முக்கிய மெயில்களை மனதில் இருத்திக்கொள்ள முயலும். அவசர அவசரமாய் கிளம்பி ஆபீஸ் சென்றால் அடுத்த எட்டு பத்து மணி நேரத்துக்கு அலுவல்களே அவளை மென்று விழுங்கி சக்கையாக துப்பிவிடும். 

ஆளைப் பிழியும் வேலைப்பளுவும் அது கொடுக்கிற மன உளைச்சலும்..., அதெல்லாம் கூட அவளுக்கு பிரச்சனையே இல்லைங்க. ஆனா, எல்லாத்துக்கும் மேல இந்த பிள்ளைங்க?! நைட் எட்டு மணிக்குமேல வந்து வீட்டுபெல்லை அடிக்கும்போது டக்குன்னு நின்னு போற டிவி-சத்தமும், ரூமுக்குள்ள ஓடுற காலடி ஓசைகளும் புத்தகப் பையை வேகவேகமா விரிக்கிற இரைச்சலும் அவ காதில் விழ தவறுவதேயில்லை. 

தங்கள் அறைக்குள்ளிருந்து திரும்பி கூட பார்க்காமல் சீரியலில் ஆழ்ந்து போயிருக்கும் மாமியாரையும், பேப்பரை விரித்து படித்தபடி ஒரு புன்னகையை கூட கொடுக்காமல் உதாசீனப்படுத்தும் மாமனாரையும் பார்க்கும்போதுகூட அவளுக்கு அதிகம் வலிப்பதில்லை. ‘நாள் முழுக்க உழைச்சுட்டு வர்றவள பார்த்து சின்னதா ஒரு ஸ்மைல் பண்ணலாமே’னு ஆதங்கப்பட்டுபட்டு இப்ப அது கூட அவளுக்கு பழகி போயிடுச்சு. அதையெல்லாம் மீறி, அவளை எந்த நேரமும் அரிக்கிற மிகப்பெரிய வேதனை அவளது குற்றவுணர்வுதாங்க. அஞ்சாவதும் இரண்டாவதும் படிக்கிற மகனும் மகளும் ‘நாங்க எல்லாம் தனி உலகம்,நீ வேற ஆளு..’னு சொல்லாம சொல்ற மாதிரி உள்ள வர்ற அம்மாவை ‘உம்’னு ஒருபார்வை பார்த்துட்டு வேற பக்கம் திரும்பிக்கிற, வீட்டுப்பாடம் செய்யுற மாதிரி குனிஞ்சுக்கிற அந்த அசட்டையை, அப்போது அவள் நெஞ்சில் சுருக்குனு ஒரு கத்தி இறங்குமே, அந்த வலியை உங்களால கொஞ்சமே கொஞ்சமாவது உணர முடியுதா?

உள்ளுக்குள் குப்பென பொங்கும் உணர்வை அடக்கிக் கொண்டு ‘ஹோம் வொர்க் செஞ்சுட்டீங்களாம்மா...சாப்பிட்டீங்களா? பசிக்குதா? அஞ்சே நிமிஷம். அம்மா மூஞ்சி கழுவிட்டு வந்து தோசை ஊத்தி தரேன்’ பிள்ளைகளை தான் சரியாக கவனிப்பதில்லையோ என்ற தாழ்வுணர்வில் தன் சோர்வையும் அலுப்பையும் மறந்து அன்பும் பாசமும் வழியவழிய என்னதான் ஆதுரமாக கேட்டாலும்கூட  ‘இல்ல’

‘ம்..’

‘ஓகே’

‘சரி’ எல்லாமே ஒற்றை வார்த்தை பதில்கள் தான்.

‘அந்த கொலாஜ் நாளைக்கு கொடுக்கணும். இன்னும் நான் முடிக்கல’ சமயத்தில் பெரியது முறைத்துக்கொண்டு கேட்கும். 

‘இதோ இப்ப முடிச்சிடலாம்டா’ என்று தாஜா செய்யும்போதும் ‘எல்லோரும் போயம் கான்டெஸ்ட்ல ரைம் சொன்னாங்க. நீங்கதான் எனக்கு எதுவும் சொல்லிதரலையே’ என்று சின்னது கோபிக்கும்போதும் அவள்படும் துயரத்தை அவள் மட்டுமே அறிவாள். 

‘வேலையா? குடும்பமா?’ சதா தத்தளிக்கும் மனதோடு இரவு பத்து மணிக்கு மேல் பேனாவை எடுத்து பிள்ளையின் ப்ராஜெக்ட் வேலை செய்ய முனையும் ஒவ்வொரு நிமிடமும் அவளது மூளையின் ஒரு மூலை தன் ரிசிக்னேஷன் லெட்டரை டிராப்ட் செய்துகொண்டேதான் இருக்குது. 

நடுநிசியில் கண்ணயரும் ஓரோர் இரவிலும் அவள் நினைப்பில் இதுமட்டும் தான். ‘குடும்பம்னு அமையறதெல்லாம் அவங்கங்க வாங்கிட்டு வர்ற வரம். ப்ச்..கொஞ்சமே கொஞ்சம் அனுசரணையும் சிரிப்பும் பேச்சும் இருந்தா இதை விட பத்து மடங்கு வேலை செய்வேனே.. ம்ஹ்ம்...அந்த காலத்து பொம்பளைங்க கொடுத்து வச்சவங்க...’ அவளது நெடிய பெருமூச்சுடன் சில நொடிகளில் மெல்லிய குறட்டை சத்தமும் கலந்து போகும். 

‘இந்த ஃபாஸ்ட் பார்வர்ட் உலகத்துல இப்படி எல்லாம் யாரு கஷ்டப்படுறாங்க, சும்மா காமெடி பண்ணாதீங்க’னு நீங்க கேலியா சிரிச்சா, ஒண்ணும் சொல்றதுக்கில்லீங்க. உங்களை சுத்தி இயங்கும் பல பெண்களை நீங்க கவனிக்கத் தவறீட்டீங்கன்னு மட்டும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. அது போதும். இல்லை, இதெல்லாம் எல்லா வீட்டுலயும் நடக்கறதுதான்னு சொல்றீங்களா? நீங்க நினைக்கிறது சரி தான். ஒருவேளை உங்க வீட்டுக்குள்ளயும் இந்த மாதிரி ஒரு ‘அவள்’ இருந்தான்னா களைத்து வரும் அவளின் கண்களை பார்த்து மனசார ஒரு புன்னகை செய்யுங்க... எப்போதேனும் உங்களுக்கு நேரமும் சமயமும் வாய்த்தால் ஒரு கோப்பை தேனீர் தயாரித்து கொடுங்க....அவளுக்கு அதை தவிர வேற எதுவும் வேண்டாம். வறண்டு கிடக்கிற அவளோட மனசு அப்படியே குளிர்ந்து போயிடும், இல்லீங்களா?

இவ்வளவு நேரம் நான் எழுதினதை பொறுமையா படிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க!

இப்படிக்கு,
...
...
...
அவளாகிய நான். 

                                                                   ****

10. அக்கரைப் பெண்
                                 - ஸ்ரீதரன்

முருகனுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை, நல்ல வேலையில் இருந்தாலும் பெற்றோர்கள் பெண் பார்ப்பதால் ஜாதி, ஜாதகம் என நிறைய கிணறுகள் தாண்ட வேண்டியிருந்தது. முப்பதாம் வயதைக் கவலையுடன் கடந்து கொண்டிருந்தான். நண்பர்களுக்கு திருமணம் முடிந்திருந்தது. இப்போது கூட கல்லூரி ஜூனியர் பிஜு திருமணத்திற்காக கோவையிலிருந்து பேருந்து ஏறியிருந்தான்.

25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வேகமாக மூச்சிறைக்க ஓடிவந்து ஏறினாள். முன்று பேர் இருக்கையில் ஜன்னலோரத்தில் இருந்த இவனிடம்  'அந்த சீட் தரீங்களா' என்றாள். பயங்கரமாக மூச்சுவாங்கியதால் இவனும் இடம் கொடுத்தான். அவளும் புன்னைகைத்துவிட்டு ஜன்னலோரத்தில் அமர்ந்து இதமான காற்றில் ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

நடத்துநர் வந்தார் 500 ரூபாய் தாளைக் கொடுத்து ‘ஒரு பாலக்காடு’ என்றான். பயணத்தொகை 65 ரூபாய். 35 ரூபாய் கொடுத்துவிட்டு பாக்கி ரூ.400-ஐ பின்னர் தருவதாக கூறினார். அவளும் பாலக்காடு சீட்டு வாங்கினாள். ஒரு பெரியவர்  வந்தமர்ந்தார். நடுவில் இவன் சந்தோஷமாக  கண்ணை மூடிக் கொண்டு தூங்காமல் கனவுலகிற்கு சென்றான். 

கனவைப்பற்றி சொல்லவும் வேண்டுமா?

சிறிது நேரம் கழித்து அவள் இவனை எழுப்பினாள்  திடீரென விழித்தான் தூங்கி விழுந்து விட்டேனா என பயந்துகொண்டு "என்னங்க" என்றான்.

‘எந்தா இது காலைல இப்படி தூங்கறீங்க?’ என்றாள் மலையாள மணத்துடன். 

என்ன சொல்வதென்று தெரியாமல் புன்னகைத்துவிட்டு வெளியே பார்த்தான், வாளையார் தாண்டியிருந்தது. மீண்டும் கண்மூட எத்தனித்தான். 

‘பாக்கி  வாங்கலீயா’ என்றாள். 

முருகனுக்கு இதயம் விரிந்து முகம் மலர்ந்தது. ‘கூட்டம் கொறையட்டுங்க’ எனக் கூறிக்  கண்ணை மூடிக்கொண்டான். கனவு அடுத்த கட்டத்திற்குச் சென்றது.

சிறிது நேரம்...  மீண்டும் எழுப்பினாள். இம்முறை தைரியமாகப் பார்த்தான்.

‘பாக்கி பைசா மறக்கல்லே....’என்றாள்.

‘ஞாபகம் இருக்குங்க’என்றான். அவள் சமாதானமாகவில்லை. இவன் கனவை நனவாக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என யோசித்திக் கொண்டிருக்கையில் அந்தப் பெரியவர் எழுந்துவிட்டார்.

இவள் இவனைப் பார்த்தாள்  ‘இப்ப கேக்கறேங்க’ என்றான், சிரித்தாள்.

நடத்துநரிடம்  ‘நா கோயம்புத்தூர்ல கேறி, பாக்கி பைசா’ என்றான், இவனை பார்த்து ‘400 அல்லே’ என்று  எண்ணி நீட்டினார். வாங்க எத்தனிக்கையில் அவள் படார் என வாங்கினாள். முருகனுக்கு பக்கென்றது,  பார்த்தான் அவள்  கைப்பையில் வைத்தாள். நடத்துனரைப் பார்த்தான் மீண்டும் ஒரு 400 ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்தார், வாங்கிக் கொண்டு ஒரு குழம்பிய அதிர்ச்சியுடன் ‘நீங்களும் 500ரூ குடுத்தீங்ளா’ என்றான்.  அவள் ‘அதே’ என சிரிக்காமல் கூறிவிட்டு எழுந்து இறங்கச் சென்றாள்.

கனவுகள் சிதறின.!

                                                          ***

11. பாரதியின் புதுமைப்பெண் 
                                - பார்கவி ராஜேந்திரேன்

‘ஏய்...மணி 7 ஆகுது...இன்னும் என்ன பொம்பளை பிள்ளைக்கு தூக்கம், office-க்கு நேரமாகுது பாரு’ என்னும் பாரதியின் குரல் கேட்டு எரிச்சலுடன் விழித்தாள் மகள் ஓவியா. 

‘அம்மா உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. ஆம்பளை பிள்ளைனா மட்டும் 7 மணி வரைக்கும் தூங்கலாமா.. அது என்ன பொம்பளை பிள்ளை-னு extra-bit போடற..’ என்று பதிலுக்கு கத்திவிட்டு குளியலறைக்குள் புகுந்தாள் ஓவியா. இதை கேட்டதும் பல ஆண்டுகளாக சாந்தி அடையாமல் சுற்றி கொண்டிருந்த மகாகவியின் ஆன்மாவிற்கு ஒரே குதூகலம். 

அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பி உணவு மேஜைக்கு வந்த ஓவியா அங்கே உணவு இன்னமும் தயார் ஆகாததைக் கண்டு பாரதியிடம் கோவம் கொண்டாள். 

‘ஏழு கழுதை வயசாயிடிச்சு இன்னும் ஒரு சமையலும் தெரியாது.. இதில பொம்பளை பிள்ளைக்கு கோவத்தை பாரு’ என்று அருகிலிருந்த பாட்டி ஓவியாவின் கோப எண்ணெயில் நெருப்பை வார்த்தார். ஓவியா வீறு கொண்டு எழுந்தாள்.

‘அது என்ன நானும் பார்க்கிறேன், எதுக்கு எடுத்தாலும் பொம்பளை பிள்ள, பொம்பளை பிள்ளை- னு சேத்து சேத்து  சொல்றிங்க..இந்த வேலையை கத்துக்க.. இதைச் செய்யினு சொல்லுங்க...நா செய்வேன். அதை விட்டு பொண்ணு, அதனால செய்யினு சொல்றதாலதான் இதெல்லாம் வேணுமினே செய்யறதில்ல’- ஓவியா பொங்கி அடங்கினாள். மகாகவியின் ஆன்மா நினைத்தது-  ‘இவள் அல்லவோ நான் கண்ட புதுமை பெண். இனி நான் சாந்தி அடைந்துவிடுவேன்’என்று.

ஓவியா தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அலுவலகம் கிளம்பினாள். மகாகவியின் ஆன்மாவும், இந்த புதுமை பெண்ணின் சாகசங்களை இன்னும் கொஞ்ச நேரம் கண்டுகளித்து விட்டு சாந்தி அடையலாம் என்று பின் தொடர்ந்தது. ஓரளவு காலியாக இருந்த நகரப் பேருந்தில் ஏறி அமர இடம் தேடினாள் ஓவியா. எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் அமர்ந்திருக்க ஆண்கள் இருக்கை அருகே போய் நின்று கொண்டாள். அடுத்த நிறுத்தத்தில் மேலும் சில பெண்கள் ஏறினர். அவர்கள் யாருக்கும் அமர இடம் இல்லை. சற்று நேரத்தில் ஒரு நடுத்தரவயது பெண்மணி  ‘என்னங்க இது Ladies எல்லாம் நிக்கறோம்,  இந்த Gents எல்லாம் எழுந்திருக்காமல் இருக்காங்க..Ladies  நிக்கிறாங்கன்னு தெரியவேணாம்’ என்று சொல்ல ஓவியா ஆமோதிப்பாய் தலையசைத்தாள். பார்த்து கொண்டிருந்த ஆன்மா சற்றே துணுக்குற்றது. 

நேரம் 1.00PM: அலுவலகத்தின் உணவு இடைவேளை.

இன்னும் இரண்டு வாரத்திற்கு வேலை அதிகம் உள்ளதால் மேலதிகாரி அனைவரையும் தினமும் இரண்டு மணி நேரம் அதிகமாக வேலை செய்யவும், வாரயிறுதிகளிலும் வேலை செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளார். இதை பற்றி ஒவ்வொருவரும் பேசி கொண்டிருக்க, அங்கேயிருந்த ஓவியா ‘Gents-க்கு பிரச்சினை இல்ல...எவ்வளோ நேரம் இருந்தாலும் Ladies அப்படி இருக்க முடியுமா.. சனி ஞாயிறு எல்லாம் ஆபிஸ் வரது சான்ஸே இல்ல. நம்ம போய் மேலதிகாரியிடம் பேசலாம், லேடீஸ்ஸுக்கு கொஞ்சம் consider பண்ண சொல்லி....’ என ஓவியா பேசிக்கொண்டே போக மகாகவியின் ஆன்மா மனம் நொந்து நூலானது.

                                              ****
 12. செவலை
                           - கார்த்திக், மதுரை                                              

‘அப்பா எப்படிப்பா இருக்கீங்க?’

‘எனக்கென்ன தாயி நல்லா இருக்கேன்’

‘சின்னவ எப்படி இருக்கா?’

‘நல்லா இருக்காப்பா’

‘மேல படிக்கனும்னு சொல்றாப்பா’

 பணம் பொரட்டனும்ல தாயி...அப்பா வந்துடறேனே’ என்றவாறு போனை வைத்தார் பொன்னுசாமி.

இன்றோடு மூன்று வருடம் ஆக போகிறது பொன்னுசாமி இந்த பெரு நகரத்தின் எல்லையோர பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்து மழை பொய்த்து விவசாயம் பார்க்க வழி இல்லா ஓர் நாளில் ஆற்றாமையால் அழுது ஓய்ந்திருந்தவரை சாமியப்பன் தான் இங்கு வாட்ச்மேன் வேலைக்கு சேர்த்து விட்டான். 

செலவு போக விட்டிற்கு நான்காயிரம் ரூபாய் அனுப்ப முடிகிறது. சின்னவளை கல்லூரில் வேறு சேர்க்க வேண்டும் பதினைந்தாயிரம் மொத்தமாய் புரட்ட வேண்டும் என்று நினைக்கவே தலை சுத்தியது. அட்வான்ஸ் கேட்டாலும் இரண்டாயிரத்திற்கு மேல் தரமாட்டாங்க யோசித்தவாறு உட்கார்ந்து இருந்தவர் டீசல் நிரப்ப வந்த மாடுகள் ஏற்றிய லாரியில் இருந்த மாடுகளின் சத்தம் கேட்டு எழுந்தார். கைகள் நடுங்க போனை எடுத்தவர் மகளை அழைத்து ‘செவலைய கொடுத்துடும்மா’ என்று சொல்லி விட்டு இணைப்பை துண்டித்தார். தன் மனைவி இறந்த போது வந்த செய்முறையில் கன்று குட்டியாய் மேலுர் சந்தையில் இருந்து தான் ஓட்டி வந்து நினைவில் வந்து போனது .அது வந்த பிறகு வீட்டில் பாலுக்கு பஞ்சம் இல்லாமல் போனது. ஈன்ற நான்கு கன்றுகளும் கிடேரி தான் மேய்ச்சல் இல்லாமல் போய் எல்லா மாட்டையும் கொடுத்து விட்ட போதும் செவலையை மட்டும் கொடுக்க மனம் இல்லை. 

தன் மனைவி போன பின்பு வீட்டிற்க்கு வந்த பெண் என்ற நினைப்பு அவருக்கு. இப்பொழுது இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. ‘மழ தண்ணி இல்ல..பாவம் இரையும் போட முடியல..என்ன பன்றது?’ தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டார்.

இரவு போன் செய்த மகள் பத்தாயிரத்துக்கு தேனி ஏவாரி் வந்து வாங்கி லாரியில் ஏற்றி சென்றதைச் சொன்னாள். சுரத்தே இல்லாமல் ‘ம்ம்’ போட்டு விட்டு போனை வைத்தவர் தன்னை கடந்து செல்லும் ஒவ்வொரு லாரியாக பார்த்து கொண்டிருந்த்தார். திடீரென்று மாடுகள் ஏற்றிச் சென்ற ஒரு லாரியை பார்த்துச் ‘செவல செவல’ என்று வானம் அதிர கத்திக் கொண்டு மயங்கியவரை வேலை செய்யும் பையன்கள் தண்ணீர் தெளித்து எழுப்ப அவர் வாய் மட்டும்  ‘செவல செவல’ என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

                                                            *****

13. ஜோடி பொருத்தம்
                             - ராஜேஷ்

வீட்டிற்கு வந்திருந்த தோழிகளிடம் ப்ரியா பெருமையாக “எங்க அப்பாவும், அம்மாவும் எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்பங்க. எந்த ஒளிவுமறைவும் கிடையாது, நீங்க வேணா கேட்டு பாருங்க”

தோழிகளுக்கும் ஆச்சிரியமாகத்தான் இருந்தது. பொதுவாக தங்கள் வீடுகளில் பெற்றோர்களிடம் பார்க்கும் இறுக்கத்தை பார்க்க முடியவில்லை. ப்ரியாவின் அப்பா தன் கல்லூரி காமெடி அனுபவங்களை சொல்லச் சொல்ல எல்லாருக்கும் சிரித்து சிரித்து வயிற்று வலியே வந்தது. ப்ரியாவின் அம்மா சமையலறையில் ஒரு கண்ணாக இருந்தாலும் நடுவில் வந்து அப்பப்ப கலந்து கொண்டார்.

சாப்பாட்டு மேஜையில் ஹேமா தான் முதலில் ஆரம்பித்தாள். “இப்ப ஒரு விளையாட்டு விளையாடலாம். ஆங்கிள் பத்தி ஆன்ட்டி கிட்ட கேட்போம். ஆன்ட்டி பத்தி ஆங்கிள் கிட்ட கேட்போம். யார் யாரை பத்தி நல்லா தெரிஞ்சி வச்சிருக்காங்க பார்ப்போம்”

“ஆன்ட்டி, நீங்க சொல்லுங்க அங்கிளுக்கு பிடித்த …”

கேட்ட எல்லா கேள்விக்கும் சரியான பதில் சொல்லிட்டு வந்தவங்க ”அங்கிளோட முதல் காதலி பெயர் என்ன??” என்ற கேள்விக்கு வெட்கத்தோடு தலை குனிந்தபடி பதில் சொன்னார் .

“அங்கிள், இப்ப நீங்க....ஆன்ட்டியோட பெஸ்ட் ஸ்கூல் ப்ரண்ட் யாரு…”

அதுக்கு அப்பறம் யாரும் பேசலை. ப்ரியாவோட அம்மா வேகவேகமாக உணவைப் பரிமாற ஆரம்பித்தார் .

                                     ********

14. தோழி
                      - க.கூத்தையா

வழக்கத்தை விட முன்பாகவே எழுந்தது உற்சாகத்துடன் அலுவலகம் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தாள் சுபா. கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன உளைச்சளில் இருந்து கொண்டிருந்தாள். இரண்டு வருடங்களுக்கு முன்பாக பணியில் சேரும் பொழுது அவளுடன் ஒன்றாக சேர்ந்தவன் தான் பிரேம். சிலமாதங்களில் இருவரும் நண்பர்கள் ஆனார்கள். நிறுவனத்தின் தயாரிப்பை சந்தைபடுத்தும் துறையில் மிக சிறப்பாக செயல்பட்டார்கள். மற்றவர்களைவிட ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வும் வழங்கப்பட்டது.

எல்லா கார்பரேட் அலுவலகங்களில் ‌இருப்பது போல் இருவரையும் பற்றி புரணி ‌‌‌பேசப்பட்டது. சுபா அதைப்பற்றி ‌பெரிதுபடுத்தாமல் எப்‌போதும் போல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள். பிரேமுக்கு அவளின் மீது ஏற்கனவே ஒரு ஈர்ப்பு இருந்தது. அந்த ஈர்ப்பை அவனால் காதல் என்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அலுவலகத்தில் அவர்கள் இருவரையும் இணைத்துப் பேசுவது குறித்து உள்ளூர சந்தோசம் அடைந்தான்.

அடுத்த ஆறு மாதங்களில் அவளுக்கு மீண்டும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. பி‌ரேமிற்கும் ஊதிய உயர்வு கிடைத்திருக்கும் என்று அந்தச் செய்தியை அவனிடம் பகிர்நதுகொண்டாள். ஆனால் அவனுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. சில வாரங்களில் அவனிடமிருந்து மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தது. அவன் அவளிடமிருந்து விலக ஆரம்பித்தான்.

அலுவலகத்தில் ஆண் நண்பர்களிடத்தில் பொறாமையால் அவளைபற்றி தவறாக பேச ஆரம்பித்தான். இருவரும் பலமுறை ஒன்றாக இருந்ததாகவும் தற்போது உயர் அதிகாரியுடன் நெருக்கம் கொண்டுள்ளதாகவும் உளற ஆரம்பித்தான். இந்த விபரங்கள் அரைகுறையாக அவள் காதுகளை எட்டியது. நண்பனாக இருந்தவன் இப்படி பேசுவதை சீரணிக்க மிகச் சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள். இன்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள். அலுவலகத்ததிற்கு சென்று தனது பணிவிலகல் கடிதத்தை சமர்ப்பித்தாள்.

இந்த செய்தி பிரேமை அடைந்தது. அவன் நி‌னைத்தது நடந்துவிட்டது என்று மகிழ்ச்சியில் முகம் பூரித்தது. இரண்டு நாட்கள் கழித்து அவளுக்கு மனிதவளதுறையிடம் இரு கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி மின் அஞ்சல் வந்தது. பணிவிலகலுக்கான காரணம் மற்றும் உங்கள் இடத்திற்கு பொறுப்பான நபரை பரிந்துரைக்கும்படியும் ‌‌கேட்டிருந்தது. பணியை தொடர்வதற்கு உடல் நிலை சரியில்லை எனவும் மற்றும் எனது இடத்திற்கு பிரேமை பரிந்துரைப்பாதகவும் பதில் அனுப்பினாள். அந்த ‌பதில் மெயிலை பிசிசி யில் பிரேமிற்கும் அனுப்பியிருந்தாள்.

பிரேம் இன்னமும் அவளைத் தேடிக் கொண்டிருப்பதாகச் செய்தி. அவள் அவனை மறந்திருந்தாள்.

                                                               ****

15. தாகம்
                        - ஜெ.பாண்டியராஜ்

முருங்கை விதைகளை நீருக்குள் இட்டு பின் வடிகட்டி குடிப்பதால், கிருமிகளை விலக்கி சுத்தமான நீரைப் பருகலாம் என்ற தகவலை இணையத்தில் வாசித்துக் கொண்டிருந்தபோது. "என்ன புழுக்கம் புழுங்குது" என்ற முணுமுணுப்போடு வாசலில் என்னருகில் வந்தமர்ந்தாள்.

"தண்ணீ தாகமே நிக்கமிண்டக்கிடா, உனக்கெப்படியிருக்கு" என்றாள்.

"மண்பானைத் தண்ணீ நல்லாத்தாம்ம இருக்கு, கொஞ்சநாள்ல பழகிரும். இனி துட்டு குடுத்து தண்ணி வாங்குததா உத்தேசமில்லம்ம" என்றதோடு "முருங்க வெத போட்டு குடிச்சா கிருமி போயிருமாம், இதுல போட்ருக்கான்" என்றதும், "முருங்க வெதைக்கி மரம் வளக்கியாங்கோம்" என்று கூறிவிட்டு காற்றுக்கும் மரமில்லாத இடத்தில் தன் முந்தானையே சுழற்றி கொஞ்சம் காற்றினை உற்பத்தி செய்தாள். நான் அம்மாவைப் பார்த்தேன் லேசாக சிரித்தாள். அது என்னைக் கேலி செய்வதானவொரு மன உழற்றியை உண்டுபண்ணியது.

இரவில் தூங்குமுன் "உங்கம்ம பக்கத்துவீட்ல போய் தண்ணீ வாங்கி குடிக்காவ" என்றாள் தனம். என் மனைவி.

"ம்" என்றேன் யோசனையோடு.

"அந்தம்மா நேத்து சாய்ங்காலம் யாங்கிட்ட சொல்லுது, நல்ல தண்ணீ வாங்கி குடிக்கலாம்லா. நான் வேணும்னா கேன் போடச் சொல்லவான்னு"

நான் மீண்டும் "ம்" என்றேன்.

திரும்பிப் படுத்துக்கொண்டாள். சாளரம் திறந்திருந்தும் வராத காற்றில் வியர்த்துக்கொண்டிருந்தது.

இரண்டாவது நாள் சனிக்கிழமை மாலை ஞெகிழி டப்பாவை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். நீரோடு திரும்பினேன். "ஏன் ராசா தண்ணீ கொண்டாந்துட்டான்" என்றாள். பால்யத்தின் கிராமத்து வீட்டிற்கு இரண்டு குடம் கட்டி அய்யனார் கோவிலிலிருந்து நீர் எடுத்துவந்த போது அவள் உதிர்த்த இதே வார்த்தைகள் நினைவில் ஒழுகியதும் அவளைப்பார்த்தேன் மெல்லச் சிரித்தாள்.

                                                 ***
16. தண்ணி
                            - திலீபன்

பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டு சன்னலை இரண்டு கைகளிலும் பிடித்தாவாறே அதிர்ச்சியாக பார்த்தாள். பெரிய கூட்டமாக இருந்தது. கூட்டத்தின் கடைசி இரண்டு ரவுண்டுகளை போலீஸ் சுற்றி வளைத்திருந்தது. சிவப்பு கொடிகளும் வியர்வை வழியும் முகங்களுமாய் கையில் தட்டிகளுடன் சுமார் நூறு பேர் இருக்கும். அவர்கள் தங்களை தாங்களே சுற்றிக் கொண்டு சக்கர வியூகம் போல நின்று கொண்டிருந்தார்கள். கையில் தட்டியோடு இருந்த இளம்பெண்ணை ஒரு ஆண் போலீசு இழுத்துக் கொண்டிருந்தான். அவளைச் சுற்றிலும் இருக்கும் பெண்கள் அப்பெண்ணின் வயிற்றை சுற்றி பிடித்திருந்தார்கள். அவளின் மறுகையில் ஏந்தியிருக்கும் தட்டியோ ‘மூடு டாஸ்மாக்கை’ என அறிவித்தது. ஒரே இரைச்சலாக இருந்தது.

ஒரு பெரிய இழுவில் அந்தப் பெண் மீண்டும் கூட்டத்திற்குள் ஐக்கியமாவதற்குள் பேருந்து நகர்ந்துவிட்டது. அடிவயிற்றில் ஏதோ அறுந்தது போல இருந்தது. மூன்று நாட்களுக்கு முன்னர் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் சிலர் வீட்டுக்கு வந்து டாஸ்மாக்கை மூடப்போவதாகவும் அதற்காக போராடுவதாகவும் கூறி ஏதோ பேப்பரெல்லாம் கொடுத்தார்கள். அவர்களுடன் வந்திருந்தாள். ‘எனக்கு படிக்க தெரியாது பாப்பா’ எனக் கூறியவுடன், ‘நீங்க போங்க நான் பின்னாடியே வரேன்’ என அவர்களை அனுப்பிவிட்டு கீழே உக்கார்ந்து அந்த சின்ன பேப்பரில் இருப்பதை படித்து காட்டிவிட்டு  ‘கண்டிப்பா வாங்க அக்கா’ என கூறியவளிடம் காப்பி வைத்துக் கொடுத்து தனது கதையை சொல்லி அழ அந்தப் பெண்ணும் கண் கலங்க அந்த சமயம் போதையில் வந்தவன் படிக்கட்டில் அந்தப் பெண் வைத்திருந்த பேக் பேப்பர்களை எல்லாம் காலால் உதைத்து தள்ளி விட்டு உள்ளே சென்று சேரில் விழுந்தான். 

ஷாலில் கண்ணை துடைத்தவாறே எழுந்தவள் அமைதியாக அந்த பொருட்களை சேகரித்துக் கொண்டு ஒரு புன்னகையுடன் ‘போயிட்டு வரேங்க்கா....! கண்டிப்பா வாங்க’ என்று சொல்லி விட்டு போனவளைத்தான் அந்த போலீஸ்காரன் இழுத்துக் கொண்டிருந்தான். 

விண் விண் என்று தலை வலித்தது. அண்ணாச்சி கடையில் ஒரு தலைவலி மாத்திரை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழையும்போதே சாராய வாசம் குப்பென்று அடித்தது. வாந்தியெடுத்தவாறே குப்புற கிடந்தான். கையிலிருந்த பையை சமயலறையில் வைத்து விட்டு மாத்திரையை போட்டுக் கொண்டு அமர்ந்து அவனை வெறித்துப் பார்த்தாள். ஒரு கணம் ஆத்திரத்தில் ரத்தம் கொதிக்க கண் இருட்டிக் கொண்டு வந்து மீண்டும் தெளிந்தது. எழுந்தவள், வீட்டை பூட்டிவிட்டு வெளியே வந்தாள். தெரு முனையில் டாஸ்மாக் கடை இருந்தது. தேன் ராடு போல மொய்த்துக் கொண்டிருந்தார்கள். நடக்க துவங்கினாள். அவள் கையில் ஒரு வெள்ளை நிற கேன் இருந்தது.

                                                        ********

17. காதல்
                          - சுபத்ரா

தன் மீது மனதிற்குள் அளவிட முடியாத அன்பிருந்தும், அதை வெளிப்படுத்த தெரியாத தன் கணவனிடம் அவள் ஆசையுடன் அடிக்கடி சொல்வாள், ”ஏங்க, என்னைய யாருமே லவ் பண்ணினதே இல்ல, ‘ஐ லவ் யூ’னும் சொன்னதில்ல. நீங்களாவது சொல்லாமில்ல!” என்று. எப்போதும் போல அதற்கும் ஒரு புன்னகையையே பதிலாகத் தருவான் அவன். 

மிகவும் கட்டுப்பாடான பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரிகளில் அதையும் விட கட்டுப்பாடான விடுதிகளில் தங்கிப்பயின்ற அவள் முதன்முறையாக ஆண்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்த போது அவளுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. அதையும் தாண்டி பள்ளி கல்லூரி நாட்களில் வெளியிடங்களில் அவளை தீவீரமாக சைட் அடித்த ஒரு சிலருக்கும் இவளிடம் காதல் சொல்லும் தைரியம் இருந்திருக்கவில்லை. ஒரே ஒருவன் மட்டும் காதலைச் சொல்வதற்காகச் செய்த முயற்சியும் இவள் தோழியினால் தடைபட்டது.

விருதுநகரில் கண்டிப்பிற்கு பெயர் போன அந்தப் பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி இறுதியாண்டு படித்து வந்த இவள் ஒரு தடகள வீராங்கனை. மண்டல அளவிலான போட்டிகளுக்கு மாணவியரைத் தயார் படுத்துவதற்கு இவள் பள்ளி மேற்கொள்ளும் உத்திகளிகளில் போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்கே அழைத்துச் சென்று பயிற்சி அளிப்பதுவும் ஒன்று. அவ்வாறாக அந்த ஆண்டிற்கான போட்டிகள் அருகிலுள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவிருந்த்த்தால் வீராங்கனைகள் அனைவருக்கும் தினமும் மாலையில் அப்பள்ளியிலேயே பயிற்சிபெற ஏற்பாடு செய்யப்பட, தங்களை தினமும் ஆர்வத்துடன் வந்து வேடிக்கை பார்த்த அப்பள்ளி மாணவர் முன் பரவசத்துடன் பயிற்சி மேற்கொண்டனர்.

போட்டிக்கான நாளும் நெருங்கி பயிற்சிகள் முடிவடைய சில நாட்களிருந்த போதுதான் இவளை மேலும் பரவசமூட்டும் ஒரு கண்டுபிடிப்பை இவளது தோழியினர் நிகழ்த்தினர். அதாவது, எத்தனை பேர் விளையாடிய போதும், தினமும் ஒருவன் இவளை மட்டுமே வைத்த விழி வாங்காது பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதே அது.

அதன்பிறகு போட்டிகளெல்லாம் முடிந்து படிப்பில் கவனமாகிவிட்ட ஒரு மழை நாள் இரவில் அவளருகே வந்த அவளது உயிர்த்தோழி, “பாய்ஸ் ஸ்கூல்ல ஒருத்தன் உன்னையே பார்த்திட்டிருப்பானே! அவன் பேர் முத்துவாம், பெரியகுளத்துக்காரனாம். உனக்கு லவ் லெட்டர் குடுத்து விட்டிருந்தான். ப்ளஸ் டூ எக்ஸாம் வர்ற நேரத்தில இதெல்லாம் தேவையில்லாத விஷயம்னு அதை வாங்கி கிழிச்சுப்போட்டுட்டேன். நீ படி.” என்று கூறி விட்டு உறங்கச் சென்று விட்டாள்.

சந்தோஷம், ஏமாற்றம், கோபம் போன்ற கலவையான உணர்வுகளால் தாக்கப்பட்ட அவளால் இன்று போல் செல்போன் வசதிகள் பெருகியிராத அந்நாளில் அவனுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

திருமணம், குழந்தைகள், வேலை என இயல்பாய் வாழ்ந்து வரும் இத்தனை வருடங்களில் தனக்கென எழுதப்பட்ட ஒரே ஒரு காதல் கடித்த்தில் அப்படி என்ன எழுதியிருந்திருக்கும் என்ற குறுகுறுப்பு சில முறை தோன்றியதுண்டு. 

ஒரு வாரத்திற்கு முன்பு இவள் அலுவலகத்தின் சார்பாய் மாநில அளவிலான முகாம் ஒன்றில் இவள் கலந்து கொண்டபோது குழு செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இவள் தடகள 
பயிற்சிக்கு சென்ற பள்ளியில் அதே ஆண்டு ப்ளஸ்டூ படித்த ஒருவரும் இவளது குழுவில் இருந்த்தை அறிந்த போது இதயத்துடிப்பு சிறிது வேகமெடுத்தது. மறைத்துக்கொண்ட ஆர்வத்துடன், “சார், எங்க தூரத்துச் சொந்தம் ஒருத்தரும் நம்ம செட்ல உங்க ஸ்கூல்ல படிச்சார். உங்களுக்குத்தெரியுமா?” என அவரிடம் வினவினாள்.

“கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் மேடம். நாங்க நிறைய பேர் இன்னும் கான்டாக்ட்லதான் இருக்கோம். பேரென்னனு சொல்லுங்க.” என்றார்.

திடும்மென மனதில் பேரமைதி தாக்க, “பேர் மறந்திருச்சு சார். தூரத்து சொந்தம்தான், போகட்டும் விடுங்க.” என்றவாறு அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

                                                           ******

18. நீர்
                       - தி.வேல்முருகன்

அப்பா கொண்டு வந்த அந்த புது அட்லஸ் சைக்கிளை பார்த்ததும் அந்த பதினான்கு வயசு பையனுக்கு நம்ப முடியவில்லை. 

‘அப்பா நம்ப சைக்கிளாப்பா நான் கொஞ்சம் ஒட்டி பார்க்கட்டுமாப்பா?’ 

‘ம்ம்...உனக்கு தான் காலையில ஒட்டலாம் தொடைச்சு வை’ 

அதற்குள் அவனும் தம்பியும் போட்டியிட்டு சைக்கிளை துடைத்தனர். தம்பி, ‘சைக்கிள் எனக்கும் கத்து தரனும்’ என்றான் 

‘நீ முதலில் சைக்கிள் உயரம் வளரு பிறகு சைக்கிள் கத்துக்கலாம்’ என்றான் வீம்பாக 

‘நீயே சைக்கிள் சீட் உயரம் தான் இருக்க என்ன ஒட்டக் கூடாதுங்கிறியா’ 

‘அப்பா சைக்கிள் தரமாட்டானாம்பா’ 

‘ஆரம்பிச்சுட்டிங்களா? இரண்டு பேருக்கும் தான்’ 

‘சும்மா இருக்கும் போது அவனுக்கும் கத்து குடுறா’ என்றார்  அப்பா. 

வேண்டா வெறுப்பாக சரி என்று விட்டு எப்ப பொழுது விடியும்னு காத்திருந்து சைக்கிளை எடுத்ததான் 

‘ஏய் நில்லு எங்க கிளம்பிட்ட’என்றார் அம்மா. 

‘சைக்கிள் ஒட்ட போறம்மா’ 

‘எப்பா நில்லு நில்லு... இரண்டு நாளா  குடிதண்ணீ வரலப்பா டவுன் பஞ்சாயத்து பைப்ல இன்னைக்கும் வராதுன்னு சொல்ரறாங்க...சவுரு தண்ணிய தான குடிக்கிறோம்... நீ சித்த புத்து மாரியம்மன் கோயில் போய் அடிச்சு வந்துடன்ப்பா...நல்ல தண்ணீ குடிக்கலாம்’ 

அவனுக்கு உற்சாகம் தாங்கவில்லை. ‘நீ குடுமா நான் அடிச்சு வரேன்’. 

கேரியரில் சாக்கு போட்டு அம்மா கொடுத்த குண்டு தவலையை கயிறு கொண்டு சுற்றி கட்டி விட்டு சைக்கிளை தள்ளி ஒந்தி பெரிய மனுஷன் மாதிரி காலை தூக்கி போட்டான். குண்டு தவலை காலில் தட்டிவிட்டது சீட்டில் இருந்து கால் எட்டாத அவன் சைக்கிள் வேலி ஒரம் சென்றது சிரமப்பட்டு நேராக்கியதை பார்த்து ‘யேய் பார்த்து போய் வாடா’ என்றார் அம்மா. 

‘ம்ம்’ என்றவன் எதிரில் வந்த அவன் வயதை ஒத்த மோகனிடம் ‘ஏய் பார்ரா என் புது சைக்கிள’ என்றான். 

பின்னாடியே ஒடி வந்த மோகன்  ‘ஏய் எனக்கும் கொஞ்சம் கொடுக்கிறியடா?’ எனக் கெஞ்சினான்.

‘ம்ஹூம் ஆசை பூசை போடா’ 

‘நீ எங்கேயாவது சைக்கிள போட்டுட்டு உழுவ பார்ரா’

‘நீதான்டா விழுவ போடா’ 

மெயின் ரோடு வந்ததும் அவனுக்கு  உற்சாகம் கரை புரண்டு விட்டது. அவன் கூட படிப்பவர்கள் எல்லாம் சைக்கிள் வைத்து இருக்கிறார்கள் அவன் மட்டும் தினமும் இரண்டு மூன்று கிலோ மீட்டர் நடந்து தான் பரங்கிப்பேட்டை பெரிய பள்ளிக்கு செல்ல வேண்டும். தாமதித்துச் சென்றால் அப்பாவு வாத்தியார் என்றால் ஒரு அடியோடு விட்டு விடுவார் அதே ஐீபி வாத்தியார் என்றால் அவன் கையை பிடித்து எல்லோரிடம் காட்டுவார். ‘இவன் வீட்டுல சாப்பிடவே மாட்டான் போல இந்த எலும்புல நான் எங்கடா அடிக்கிறது’ என்று கேட்டு தலையில் குச்சியால் அடிப்பார் ஆகா இனி அடி வாங்க வேண்டாம். 

சிதம்பரம் போயி அன்புக்கு நான் அடிமை புது ரஐினி படத்த பார்த்துட்டு அதே மாதிரி ஸ்டைல் பண்ணி மோகன் அடிக்கறான்ல அவனுக்கு மாத்திரம் சைக்கிள் கொடுக்கக்கூடாது கதை கேட்டா மட்டும் சொல்ல மாட்டரான்.சைக்கிள் வேணுமாம் சைக்கிளைக் கொண்டு பள்ளிக்கு, கடைக்கு, ரைஸ்மில் எல்லாம் போகலாம் இனி நடக்கவே வேண்டாம். இப்படி கனவும் நினைவுமாக வேகமாக ஒட்டியதில் அவனுக்கு கோயில் வந்ததே தெரியவில்லை. 

வேக வேகமாக குண்டு தவலையை அவிழ்த்து தண்ணீர் நிரப்பினான் அதேபோல் கட்டி ஊகமாக சைக்கிளை தள்ளிக்கொண்டு போய் கோயில் படிக்கட்டில் வைத்து காலை தண்டில் போட்டு கொண்டு ஒந்தி ஒந்தி ஒட்ட ஆரம்பித்ததும் பின்னால் இருந்த தவலையில் தண்ணீர் தளும்ப ஆரம்பித்தற்க்கு ஏற்ப சைக்கிள் ஆட்டம் போட்டது. போதாதென்று எதிர் காற்று வேறு அவனது உற்சாகம் போன இடம் தெரியவில்லை வரும்போது இருந்ததை விட இரண்டு மடங்கு நேரம் ஆகிவிட்டது 

முதலில் ரோட்டோர கட்டமதகு, பெரிய தூங்குமூஞ்சி மரம் தாண்டி தண்ணீர் பூவரசு மரம் பிறகு ரெட்ட ரோடு தாண்டி ஐந்து கண் மதகு ஏறி இறங்கியதும் ரெயில்வே கேட் மோடு அவனுக்கு மேமூச்சி கீழ் மூச்சி வாங்கியது ஆனாலும் வீடு வர வில்லை. அப்படி இப்படி என்று வீட்டுக்கு கூப்பீடு தூரம் வந்து விட்டான் இன்னும் கொஞ்சம் தூரம் தான். 

அப்போது தான் எதிரில் வந்த ராணி ‘எங்கேருந்துடா கொண்டு வர’ என்றாள். 

‘முட்லூர் புத்துமாரியம்மன் கோயிலேருந்து’ 

‘அப்ப இனி புற்று மாரியம்மன் கோயில் தண்ணீர் தான் குடிப்பிங்களா? எனக்கும் தருவியாடா குடிக்க?’

‘அதெல்லாம் யாருக்கும் கிடையாது’ 

‘இருக்கட்டும் இருக்கட்டும்’ என்றாள் ராணி 

அதுவரை ஒழுங்காக வந்தவன் பேச்சு கொடுத்ததால் ரோட்டு திருப்பத்தில் இருந்த மேட்டிலேற வேகம் போதவில்லை. மேட்டிலேற முடியாத சைக்கிள் சாய ஆரம்பித்து ரோட்டை விட்டு சரிவில் இறங்கி விட்டது திடிரென வேகம் கூடியதை சமாளிக்க முடியாமல் கீழே விழுந்தான்.

வேகமாக சைக்கிளை நிமித்தி கண்ணீரோடு குண்டு தவலையை பார்த்தான் அதில் தண்ணீரே இல்லை... 

11 எதிர் சப்தங்கள்:

Unknown said...

8, 9, 12, 16 & 17 ஆகியவை மிக அருமையாக எழுதப்பட்டிருக்கின்றன.

சேக்காளி said...

15. தாகம் - ஜெ.பாண்டியராஜ்
க்கு தெருநெவேலி யா?

Vaa.Manikandan said...

கீழப்பாவூர்க்காரர். திருநெல்வேலிதான்.

சேக்காளி said...

பேரென்னனு சொல்லுங்க.” என்றார்.

திடும்மென மனதில் பேரமைதி தாக்க, “பேர் மறந்திருச்சு சார்.
பேர் அமைதியாய் தாக்கி விட்டதோ சுபத்ரா?

சேக்காளி said...
This comment has been removed by the author.
சேக்காளி said...

//“அவன் மேல நான் உயிரையே வச்சிருந்தேன்”
"உயிரையே வச்சிருக்கேன்"
ன்னு முடிச்சிருக்கலாமோ? ன்னு தோணுது வெங்கட்

Unknown said...

nice story

Unknown said...

Story 7 awesome

Clarke said...

7

Unknown said...

7 is nice

மகாவின் கிறுக்கல்கள் said...

நிறைய எழுத்துப் பிழைகள்