Jun 22, 2016

வாழ்தல்

கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாயில் வெறும் பத்தாயிரம் ரூபாய்தான் குறைந்திருக்கிறது. மூன்றாம் நதி நாவல் ஏலம் போன தொகை. பணம் பதிப்பாளரிடம் இருக்கிறது. லதா என்கிற பெண்ணுக்கு பத்தாயிரம் கொடுத்திருக்கிறோம். அதன் பிறகு இந்த வாரத்தில் நான்கு பேருக்குச் சிறுகச் சிறுக பிரித்துக் கொடுத்திருக்கிறோம். 

யாமினி என்ற மாணவி எழுத்தாளர் கடற்கரய் மூலமாகத் தொடர்பு கொண்டார். பத்தாம் வகுப்பில் 481 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறாள். அப்பா ஒரு மளிகைக்கடையில் விற்பனையாளராக இருக்கிறார். பதினோராம் வகுப்புச் சேர்க்கைக்காக உதவி கோரியிருந்தார்கள். அந்த மாணவிக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸில் எழுத்தாளர் என்.ஸ்ரீராம் மூலமாக இந்தத் தொகையை வழங்கியிருக்கிறார்கள்.


இன்னொரு பத்தாயிரம் ரூபாய் திருமதி.செல்விக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கணவரால் கைவிடப்பட்ட குடும்பம். மிகச் சொற்பமான சம்பளத்தில் வேலை செய்து குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய மகன் ஸ்ரீனிவாசலு பத்தாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்புக்குச் செல்கிறான். மகள் ஸ்ரீதேவி எட்டாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்புக்குச் செல்கிறாள். இருவருக்குமாகச் சேர்ந்து பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. பாலா இளம்பிறை, ரமேஷ் ரக்‌ஷன், சோழன் ஆகியோர் வழங்கியிருக்கிறார்கள். சோழனின் ஒரு நேர்காணல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. நேரமிருப்பவர்கள் வாசிக்கலாம்.

ஏலம் அறிவிக்கும் போது அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மட்டும்தான் உதவி வழங்கப்படும் என்ற யோசனை ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் எல்லா நல்ல காரியங்களிலும் சில விதிவிலக்குகள் தவிர்க்க முடியாதவை. ஆகாஷ் அப்படியான விதிவிலக்கு. குழந்தையாக இருக்கும் போதே அம்மா இறந்துவிட்டார். சமீபத்தில் ப்ளஸ் டூ தேர்வு நடந்து கொண்டிருக்கும் போது அப்பாவும் தவறிவிட்டார். தனி மரமாகிவிட்டான். மதுரைக்கார பையன். அப்பா இறந்த பிறகு சரியாகத் தேர்வு எழுதவில்லை. இப்பொழுது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ படிப்புக்கு விண்ணப்பித்துக் கிடைத்திருக்கிறது. பதினாறாயிரம் ரூபாய் கட்ட வேண்டும். சுபாஷ் என்கிறவர்தான் ஆகாஷூக்காக என்னிடம் தொடர்ந்து பேசினார். சுபாஷூக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இன்று ஆகாஷூக்கு பதினைந்தாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. 


இன்னொரு பதின்மூன்றாயிரத்து இருநூற்றைம்பது ரூபாய் திரு.வை.ம.குமாரிடம் வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு எல்லாமே திருக்குறளும் திருவள்ளுவரும்தான். திருவள்ளுவர் பெயரில் ஒரு இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார். வயதில் மூத்தவர். ஒவ்வொரு வருடமும் மாம்பலம் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கிறார். கடந்த ஆண்டு நேரடியாகச் சென்று சென்னையில் நோட்டுப் புத்தகங்களை வாங்கிக் அவரிடம் ஒப்படைத்தேன். இந்த வருடம் அந்த வேலையை ஜீவகரிகாலன் செய்திருக்கிறார். 

உண்மையிலேயே மனதுக்கு மிக நிறைவாக இருக்கிறது. அதீத வெளிச்சம் எதுவும் தேவையில்லை. விளம்பரங்களும் அவசியமில்லை. இப்படியே சப்தமில்லாமல் மெதுவாக நகர்ந்து கொண்டேயிருக்கலாம். பல நூறு குழந்தைகளின் வாழ்வில் சிறு திரியைத் தீண்டிவிட்டு தொடர்ந்து வெளிச்சம் உண்டாக்கிக் கொண்டேயிருக்க முடியும். நாம் வாழ்தலுக்கான அர்த்தங்கள் என்று இப்படியான காரியங்களைத் தவிர வேறு எதைச் சொல்ல முடியும்? 

கடந்த ஒன்றிரண்டு வருடங்களாக எனது ஒவ்வொரு முன்னெடுப்புக்குப் பின்னாலும் பல நூறு பேர் நிற்கிறார்கள். யாருடைய முகமும் தெரியாது. அதை அவர்கள் எதிர்பார்ப்பதும் இல்லை. நிதி அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். தொடர்ந்து மனதுக்கு உற்சாகமாகப் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். வங்கிக் கணக்கில் நிதி இருந்து கொண்டேயிருக்கிறது. வேலைகளைச் செய்ய அலுப்பதேயில்லை. 

நிதி கொடுப்பவர்கள், அதைப் பெற்றுக் கொள்கிறவர்கள், இந்தக் காரியங்களில் உறுதுணையாக இருப்பவர்கள் என அத்தனை பேரும் நன்றாக இருக்கட்டும். அவர்களின் குடும்பங்கள் நீடுழி வாழட்டும். இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். 

மூன்றாம் நதி ஏலத்தில் வந்த தொகையில் மட்டும் இன்னமும் தோராயமாக ஒன்றேகால் லட்ச ரூபாய்க்கும் மேலாக கைவசம் இருக்கிறது. நிறையப் பேருக்கு உதவ முடியும். உங்களுக்குத் தெரிந்த தகுதியான மாணவர்கள் இருப்பின் தெரியப்படுத்தவும். அலசி ஆராய்ந்துவிட்டுத்தான் கொடுக்கிறோம். ஆனால் தகுதியான மாணவர் என்று தெரிந்தால் நிச்சயமாக உதவலாம். ஒரு நாவலின் வழியாக இத்தனை மாணவர்களுக்கு உதவ முடிகிறது என்கிற விதத்தில் மிகுந்த சந்தோஷம். சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் நன்றி. ஏலத்திற்காக நிதி கொடுத்த நண்பர்களுக்கு மனப்பூர்வமான நன்றி.  ‘ஒரு குடும்பம் உதவி கேட்டிருக்கு...முகவரியை எஸ்.எம்.எஸ் செய்யறேன்... அவங்களை நேரில் போய் விசாரிச்சுடுங்க’ என்று யாரை நோக்கி கை நீட்டினாலும் மனம் கோணாமல் அலைந்து திரிந்து உதவித் தொகையை விநியோகித்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஜீவ கரிகாலனுக்கு சிறப்பு நன்றி.

5 எதிர் சப்தங்கள்:

Unknown said...

தொடரட்டும் ிந்த வாழ்தலுக்கான அர்த்தங்கல்

சேக்காளி said...

சந்தோசமாய் இருக்கிறது மணி.
உதவி பெற்று உயர்ந்தவுடன் நான் எனது என ஒதுங்கி ஒளிந்து கொள்ளாமல் நாலு பேருக்கு உதவ வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள்.

சூர்யா said...

இவ்வளவு பேர் உதவி செய்ய இருந்தும் இது போன்ற செய்கைகளை தடுக்க இயலவில்லையே... வருத்தமாக இருக்கிறது

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/student-suicide-of-unable-to-pay-college-fees-116062400005_1.html

வெங்கட் நாகராஜ் said...

தொடரட்டும் இந்த சேவை.....

ஒவ்வொருவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.....

Umaganesh said...

👏👏👏👏