Jun 22, 2016

யானைக் கொலை

யானை செத்துவிட்டது. மகராஜ் என்று பெயர் வைத்துக் கொன்று குழி தோண்டி புதைத்துவிட்டார்கள். சொர்க்கத்தில் ‘என் பேரு மதுக்கரை மகராஜ்..தெரியுமா?’ என்று கெத்தாகச் சுற்றிக் கொண்டிருக்கும். ஃபேஸ்புக்கில் அழுவார்கள். அநியாயமாகக் கொன்றுவிட்டீர்களே படுபாவிகளா என்று மணிகண்டன் மாதிரியானவர்கள் பொங்கல் வைப்பார்கள். மாலை நேரத்தில் விஜய் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி இருக்கும். அனுஷ்காவும் ஸ்ரேயாவும் இடுப்பை வெட்டி வெட்டி ஆடுவார்கள். கிளுகிளுப்பாக படுத்துத் தூங்கினால் அடுத்த நாள் எப்படியும் இன்னொரு ஹாட் விவகாரம் சிக்கிக் கொள்ளும்.

ஆறு மாதங்கள் ஆகிவிட்டது அல்லவா? எண்பது திமிங்கலங்கள் செத்துக் கரை ஒதுங்கிய நிகழ்வு நடந்த போது. மேற்சொன்னவை எல்லாம் இம்மி பிசாகமல் நடந்தன. பகல் முழுக்கவும் உணர்ச்சிவேகத்தோடு திரிந்தேன். மாலையில் வீடு திரும்பி ஏதோவொரு புஷ்டியான நடிகையின் பின்பக்கத்தை திமிங்கலத்தின் வால் அசைப்போடு ஒப்பிட்டு கவிதை எழுதி கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று நினைத்தேன். மொத்திவிடுவார்கள் என்று பதறி பிறகு பம்மி எழுதிய கவிதையை ஷிஃப்ட்+டெலீட் செய்தேன். அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் திமிங்கலத்தை மறந்துவிட்டார்கள். அதன் பிறகு அது பற்றி எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை என்று தோன்றியது. விட்டுவிட்டேன்.

சூழலியல் சார்ந்த பிரச்சினைகள் எழும்போதெல்லாம் ஒற்றைப்படையாக பேசிவிட்டு நூறு லைக் வாங்கியவுடன் நம்முடைய தார்மீகக் கோபம் எல்லாம் வடிந்து அடங்கிவிடுகிறது. யானை செத்ததற்குக் காரணம்- மயக்க ஊசி. அவ்வளவுதான். 

உண்மையிலேயே அவ்வளவுதானா? 
இல்லை இல்லை- யானைதான் குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்தது. 

அதற்கு யானைதான் காரணமா? 
ச்சே..ச்சே மனிதர்கள்தான். காட்டை அழித்து வீட்டைக் கட்டினோம். 

அது மட்டும்தானா? 
யானைக்குத் தேவையான குடிநீர்க் குட்டைகளில் நீர் நிரம்புவதற்கான பாதைகளை அடைத்தோம். 

அப்புறம்? 
அதனால் யானைகள் நீர் தேடி ஊர்ப்பக்கங்களில் நுழைகின்றன.

அவ்வளவுதானா? 
அவ்வளவுதான்.

விவசாய நிலங்களில் நுழையும் யானைகளை வெடி வைத்துத் துரத்திவிடுவது காரணம் இல்லையா? 
இருக்கலாம். ஆனால் விவசாயிகளுக்கு வேறு வழியே இல்லையே.

நிலங்களைப் பட்டா போட்டு சாமியார்களுக்கு தாரை வார்த்தது காரணம் இல்லையா? 
ஆமாம். அதுவும்தான்.

அப்புறம் ஏன் இதையெல்லாம் பேசாமல் அந்த ஊசி போட்ட மருத்துவரையும் வனத்துறையையும் மட்டும் அர்ச்சிக்கிறோம்? 


ஒரு யானை சாகிறது. கத்திக் கூச்சல் போடுகிறோம். நம் உணர்ச்சியை தூண்டக் கூடிய சம்பவம்தான். எதிர்ப்புணர்வை பதிவு செய்வது சரிதான். அதோடு முடிந்துவிட்டதா?

தண்டவாளத்தில் விழுந்து சாகும் யானைகளையும், மிராஸ்தார்களின் மின்வேலிகளில் சிக்கிச் செத்து சத்தமில்லாமல் புதைபடும் யானைகளையும் ஏன் யாரும் கண்டு கொள்வதேயில்லை. சாலைகளில் அடிப்பட்டுச் சாகும் சிறுத்தைகளும் குரங்குகளும் ஒருவரின் கண்களிலும் படுவதேயில்லையா?

சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகளின் சரணாலயம் ஆகப் போகிறது என்று குச்சி பொறுக்கச் சென்ற ஊராளிகளையும் பழங்குடியினரையும் அடித்து துரத்தினார்கள். புலிகளைக் காப்போம் என்ற பெயரில் அங்கே வசிக்கும் ஏழைபாழைகளை வெளியேறச் சொல்லி இடித்துக் கொண்டேயிருப்பார்கள். இப்படி சூழலியலும் வனவியலும் வெறும் சாமானியர்களைச் சுற்றிச் சுற்றி மட்டுமே விவாதங்களை உருவாக்குகின்றன. அவர்களை மையப்படுத்தி மட்டுமே பேசுகிறார்கள். வனங்களில் ரிஸார்ட் அமைக்கும் கார்போரேட் நிறுவனங்கள் பற்றி வெளிப்படையான விமர்சனங்களை யார் செய்கிறார்கள்? நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் யானைகளின் பாதைகளை மறைத்து நடைபாதைகள் அமைக்கப்படுவதையும் கட்டிடங்கள் எழுப்புவதையும் பற்றி எங்குமே யாருமே ஏன் பேசுவதில்லை?

நான்கு, ஆறு, எட்டு வழிப்பாதைகளை வளர்ச்சி என்ற பெயரில் வனப்பகுதிக்குள் அமைக்கப்படுவதைப் பற்றி ஏன் எதுவுமே கண்டுகொள்வதில்லை?  சாமியார்கள் வனங்களை வளைத்து வளைத்துப் போடும் போதெல்லாம் எந்த ஊடகங்களில் எழுதினார்கள்? யார் விவாதித்தார்கள்? என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

கார்போரேட் சாமியார்களின் பெரும் ஆசிரமங்களில் பெளர்ணமி, அமாவாசை, சிவராத்திரி என்ற பெயர்களில் திரளும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், இரவு நேர முழக்கங்கள், வெளிச்சம் பாய்ச்சும் விளக்குகள் என வனவிலங்குகளுக்கான பெரும் சிரமங்கள் ஏன் வெகுஜன மக்களின் பார்வைக்கே வெளிவருவதில்லை?

மகராஜ் செத்ததில் வெறும் மயக்க ஊசி மட்டுமே காரணமில்லை. எல்லாவற்றையும் ஒற்றைப்படையாக முடித்து அடுத்தடுத்த ஹாட் செய்திகளுக்குத் தாவும் ஊடகக் கலாச்சாரம் நம்மிடமும் ஊடுருவிக் கிடக்கிறது. அதனால் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு மகாராஜ் பற்றி எழுதினால் லைக் கிடைக்கும். ரீஷேர் ஆகும். நாளைக்கு இதைப் பற்றி விவாதிக்க ஆட்களே கிடைக்கமாட்டார்கள்.

நாம் தொடர்ந்து பேசவும் விவாதிக்கவும் நிறைய இருக்கின்றன. 

உண்மையில் நாமும் நம் அடுத்தடுத்த தலைமுறைகளும் நிறைய இழந்து கொண்டிருக்கிறோம். சூழலியல் சார்ந்த பிரச்சினைகள் வெகு சிக்கலானவை. எளிதில் புரிந்து கொள்ள இயலாத இருண்ட பக்கங்கள் அவை. எல்லாமே பணம்தான். இன்றைக்கு எவ்வளவு உறிஞ்ச முடியுமோ அவ்வளவு உறிஞ்சிவிட வேண்டும் என்றுதான் நம்மைச் சுற்றிய கார்போரேட்களும் நாமும் இயங்குகிறோம். ஒரு நாளைக்கு எவ்வளவு மரங்களை வெட்டுகிறோம்? எவ்வளவு மலைகளைச் சிதைக்கிறோம்? எவ்வளவு வனங்களைச் சுரண்டுகிறோம் என்று இணையத்தில் மேம்போக்காக விவரங்களைத் தேடிப் பார்க்கலாம்.

ஒவ்வொரு புள்ளிவிவரமும் தலை சுற்றச் செய்கின்றன. வன அழிப்பும், சூழலியல் சிதைவும் வெறும் சாமானியர்களால் மட்டுமே நடைபெறுவதில்லை. ஆவணப்படம் எடுக்கிறேன்; சூழலியல் பற்றி எழுதுகிறேன் என்றும் கதறுகிற கார்போரேட் ஏஜெண்ட்டுகள் அப்படியொரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள். நாம் நினைப்பதைவிடவும், கற்பனை செய்வதை விடவும் பன்மடங்கு வன அழிப்பை கார்போரேட் கயவர்கள் செய்கிறார்கள். ஆனால் வெளியில் தெரிவதில்லை. அதிகாரிகள் துணை நிற்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கு சரியான பங்குகள் போய்ச் சேர்கின்றன.

இதில் எல்லாம் நம்மால் எதுவும் செய்ய முடியாமல் போகலாம். ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் யானையின் சாவுக்கு மயக்க ஊசி மட்டும்தான் காரணம் என்று முரட்டுவாக்கில் கத்த வேண்டியதில்லை. அதோடு பிரச்சினையின் அடிநாதத்தை நாம் புரிந்து கொண்டதாக முடித்துக் கொள்ள வேண்டியதில்லை. அப்படி முடித்துக் கொள்வதற்குப் பதில் ரீமாசென்னின் பின்பக்கத்தை யானையின் பின்பக்கத்தோடு ஒப்பிட்டு ‘கப்பக்கிழங்கே’ என்று படமாக்கிய இயக்குநரை தாராளமாக யானைக் காவலன் என்று பாராட்டலாம். தப்பேயில்லை.

5 எதிர் சப்தங்கள்:

கொமுரு said...

அன்பு மணிகண்டன் ,
காலையில் பேப்பர் பார்த்தவுடன் என் மகனிடம் புலம்பினேன் ஒரு யானையை காப்பாற்ற முடியவில்லை நாம் என்ன சுற்று சுழல் காக்க போகிறோம் என்று .இரண்டு நாள் முன்பு ரயிலில் அடிபட்டு ஒரு யானை இறந்து விட்டது என்ன செய்வது என்று புரிய வில்லை வருத்தபடுவதைத் தவிர , உங்கள் கட்டுரை மன ஆறுதலாக இருந்தது . நன்றி

சேக்காளி said...

20 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி34

raghavendran said...

http://www.bbc.com/news/world-latin-america-36593573?ocid=socialflow_facebook&ns_mchannel=social&ns_campaign=bbcnews&ns_source=facebook

Unknown said...

பகல் முழுக்கவும் உணர்ச்சிவேகத்தோடு திரிந்தேன். மாலையில் வீடு திரும்பி ஏதோவொரு புஷ்டியான நடிகையின் பின்பக்கத்தை திமிங்கலத்தின் வால் அசைப்போடு ஒப்பிட்டு கவிதை எழுதி கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று நினைத்தேன். மொத்திவிடுவார்கள் என்று பதறி பிறகு பம்மி எழுதிய கவிதையை ஷிஃப்ட்+டெலீட் செய்தேன்..


enna oru kovam...... :)

வெங்கட் நாகராஜ் said...

அடுத்த ஹாட் டாபிக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.....

உண்மை தான். கோபமும் வருத்தமும் தான் மிச்சம்.....

வனம் முழுவதும் அழித்து மனிதர்கள் ஆக்கிரமித்துக் கொள்ள விலங்குகள் எங்கே போகும்....