Jun 21, 2016

பெரியவர்

ஒரு பெரியவர் வந்திருந்தார். பெங்களூருக்குத்தான். சில நாட்களுக்கு முன்பாகவே அழைத்துப் பேசியிருந்தார். ஓர் அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் எனச் சொல்லி முகவரி கேட்டிருந்தார். கொடுத்திருந்தேன். ஆனால் அதை வைத்துக் கொண்டு பெங்களூர் வந்துவிடுவார் என்று நினைக்கவில்லை. சனிக்கிழமை ஒன்றரை மணி இருக்கும். பெங்களூர் வந்துவிட்டதாகச் சொன்னார். இப்படி சொல்லாமல் வந்து நிற்கும் இரண்டாவது பெரியவர் இவர். 

கடுப்பாக இருந்தது. ‘எங்கே இருக்கீங்க?’ என்றேன். சொன்னார். அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு கிளம்பினேன். கடுமையான பசி. எதற்காக வந்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஏதாவது பெரிய வேலையாக வைத்துவிடக் கூடும் என்று குழப்பமாக இருந்தது. சமீபமாக பெங்களூரில் வெயில் குறைந்திருக்கிறது. அவ்வப்பொழுது மேகம் திரண்டும் நான்கைந்து துளிகள் துளிர்க்கத் தவறுவதேயில்லை. எப்பொழுதும் நனைந்துவிடக் கூடும் என்பதான கருக்கலில் அவரைக் கண்டுபிடித்துவிட்டேன். எழுபதை நெருங்கியிருப்பார் போன்ற தோற்றம். களைத்திருந்தார். விழுப்புரம் பக்கத்திலிருந்து வந்திருக்கிறார்.

‘எதுக்கு வந்தீங்க?’ என்றேன். குரலில் கடுகடுப்பு இருந்தது. 

‘பார்த்துட்டு போலாம்ன்னு’என்றார். உண்மையைச் சொல்கிறாரா அல்லது கிண்டல் செய்கிறாரா என்று புரியவில்லை.

‘சாப்பிட்டீங்களா?’- அவரைப் பார்த்தால் பசியோடு இருப்பதாகத்தான் தெரிந்தது. 

சிரித்துக் கொண்டே ‘சாப்பிடலாம் வாங்க’ என்றார். திக்கென்றிருந்தது. கையில் பணம் எடுத்து வராமல் வந்திருந்தேன். அவர் அழைப்பதிலிருந்தே அவர் சாப்பிட்டிருக்கவில்லை என்பது புரிந்துவிட்டது. கேட்டாகிவிட்டது. அவரும் அழைக்கிறார். கையில் காசு இல்லை. என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை.

எதிரிலேயே ஒரு உணவு விடுதி இருந்தது. இருவருமாக நுழைந்தோம். அவர் உணவருந்திக் கொண்டிருக்கும் போது ஓடிச் சென்று வீட்டிலிருந்து காசு எடுத்து வந்துவிடலாமா என்று யோசனை ஓடியது. அது சரிப்படாது. உணவு விடுதி வீட்டுக்குப் பக்கத்திலேயேதான் இருக்கிறது. காசு கொண்டு வந்து தந்துவிடுவதாகச் சொன்னால் நம்புவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. 

சிப்பந்தி வந்து நின்றார். பெரியவர் என்னைப் பார்த்து‘என்ன சாப்பிடுறீங்க?’ என்றார். 

‘வீட்டில் சாப்பிட்டுக்கிறேன்..நீங்க சாப்பிடுங்க’ தவிர்க்க முயன்ற போதும் அனுமதிக்கவில்லை. 

‘என் கூட ஏதாச்சும் சாப்பிடுங்க’- வற்புறுத்தினார். 

‘இல்ல சார்...விடுமுறை நாட்களில் வீட்டிலேயே இருப்பதில்லை. அதிசயமாக ஒன்றிரண்டு நாள் கிடைக்கும் போது வெளியில் சாப்பிட்டுவிட்டுச் சென்றால் வருத்தப்படுவார்கள்’ என்றேன். அவர் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. சிப்பந்தியிடம் ‘எனக்கு ஒரு வடை மட்டும் கொடுங்க’ என்று சொன்னேன்.

சாப்பிடும் போது இருவரும் அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை. உணவை முடித்துவிட்டுக் கைகழுவச் சென்றார். கஜானாவில் அமர்ந்திருப்பவரைப் பார்த்தேன். பொடியன்தான். பணத்தைப் பிறகு தருவதாகச் சொல்லி சம்மதிக்க வைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையளிக்கக் கூடியது போன்றதான தோற்றம் அவனுக்கு. சிப்பந்தி உணவுக்கான பில்லை எடுத்து வரும் போது வழியிலேயே மறித்து பெரியவர் வாங்கிக் கொண்டார். உண்மையிலேயே பணம் வைத்திருப்பாரா என்று தெரியவில்லை.

எழுந்து சென்று ‘நான் கொடுக்கிறேன் சார்’ என்றேன்.

‘ஒரு வடை மட்டும் சாப்பிட்டுட்டு பில்லை நீங்க கொடுக்கறீங்களா?’ என்று சிரித்தார். மீண்டும் ஒரு முறை கேட்டுவிட்டு அமைதியாகிக் கொண்டேன். பைக்குள் கிடந்த துண்டு ஒன்றில் கையின் ஈரத்தைத் துடைத்துக் கொண்டு அதே பைக்குள் கையை விட்டுத் துழாவினார். ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து சிப்பந்தியிடம் நீட்டிவிட்டு என்னிடம் திரும்பி ‘உங்க கூட கொஞ்ச நேரம் பேசலாம்ன்னுதான் வந்தேன்’ என்றேன். அவருடைய செயல்பாடுகள், பணத்தை மிகச் சாதாரணமாகக் கையாளும் இயல்பு போன்றவை அவர் சொல்வதை உறுதிப்படுத்தின. நிச்சயமாக உதவி எதுவும் கேட்டு வந்திருக்கவில்லை. 

‘வீட்டில் போய் பேசலாமா?’ 

‘இல்லை..இன்னொரு நாளைக்கு வர்றேன்’ என்றவர் வந்த காரியத்தைச் சொன்னார். ஹெப்பால் பக்கத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதி ஒன்று இருக்கிறது. அவ்வப்போது வந்துவிட்டுப் போகிறார். இனி நிரந்தரமாக அங்கேயே தங்கிக் கொள்ளலாமா என்ற குழப்பத்தில் இருப்பதாகச் சொன்னார். பெரியவருக்குக் குடும்பம் இருக்கிறது. ஆளாளுக்கு அவரவர் திசை. அவர்களை விட்டுத் தனியாகப் பிரிந்து வந்துவிட்டார். ‘யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது’ என்பது அவரது வாதம்.

அரசு ஊழியராக இருந்திருக்கிறார். பொதுப்பணித்துறையில் அலுவலர். மாதாமாதம் பென்ஷன் வருகிறது. பேசிக் கொண்டிருந்தவர் ஒரு பணக்கட்டை எடுத்து நீட்டி ‘பத்தாயிரம் இருக்கு..உங்க அறக்கட்டளைக்கு வெச்சுக்குங்க’ என்றார். ‘சார்..தப்பா எடுத்துக்காதீங்க..பணமா வாங்கறதில்லை...அது பழக்கமாகிடும்...நீங்க பேங்க் அக்கவுண்ட்ல போட்டுவிடுங்க’ என்றேன். சிரித்தவர் ‘இதை அந்த விடுதிக்குத்தான் எடுத்துட்டு வந்தேன்...உங்களை பார்த்துட்டு எதுவும் கொடுக்காம போனா நல்லா இருக்காதுன்னு கொடுத்தேன்’ என்றார்.

இதுவரையிலுமான தனது அனைத்து சேமிப்புகளையும் இப்படியான விடுதிகளுக்குத்தான் கொடுத்திருக்கிறார். ‘ரிட்டையர்ட் ஆனப்போ எட்டு லட்ச ரூபாய் வந்துச்சு...எட்டு ஆர்கனைசேஷனுக்குக் கொடுத்தேன்...பசங்களுக்கு எம்மேல அதுல கொஞ்சம் வருத்தம்’ என்றார். நேரமாகிக் கொண்டிருந்தது. பசியை மறந்திருந்தேன். புத்தகங்களைப் பற்றி நிறையப் பேசினார். நிறைய வாசித்திருக்கிறார். இத்தகையவொரு மனிதர் நம்மைத் தேடி வந்திருக்கிறார் என்பதே சந்தோஷமாக இருந்தது. 

எப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்கள்?

‘கணக்கு வழக்குப் பார்த்துட்டு இந்தக் குழந்தைங்க கூடவே இருந்துடுறேன்னு கேட்கப் போறேன். சரின்னு சொன்னாங்கன்னா அடுத்த மாசம் வந்துடுறேன்’ என்று அவர் பேசிக் கொண்டிருந்த போது அவரைப் பற்றி மனதுக்குள் உருவாக்கி வைத்திருந்த அத்தனை பிம்பங்களும் உடைந்து கொண்டிருந்தன. பணமும் தோற்றமும்தான் மனிதர்களைப் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குகிறது என்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம்? வெட்கமாக இருந்தது.

கிளம்பும் போது ‘நீங்க சிரிச்சு பேசுவீங்கன்னு நினைச்சேன்..ஏன் ஆரம்பத்தில் கோபமா இருந்தீங்க?’ என்றார். ஏதோ சொல்லி மழுப்பினேன். முகம் மனிதர்களை சர்வசாதாரணமாகக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. என்ன காரணம் என்று எல்லோருக்கும்தான் தெரியுமே. இங்கே ஒத்துக் கொள்வதில் என்ன வெட்கம்? நேரடியாக வந்து தொந்தரவு செய்கிறார் என்ற எரிச்சல்தான் காரணம். எவ்வளவு பெரிய கசடு இது? மனதுக்குள்தான் சேகரித்து வைத்திருக்கிறேன். இதுதான் காரணம் என்பது அவருக்கும் தெரிந்திருக்கக் கூடும். அதை உடைப்பதற்காகத்தான் அதை வெளிப்படையாகவும் கேட்டிருக்கக் கூடும். சங்கடத்தில் நெளிவதை உணர்ந்தவராகப் பேச்சை மாற்றிவிட்டார். 

நிறையப் பேசினோம். 

மெதுவாக எழுந்து தனது கைப்பையை எடுத்துக் கொண்டு வேட்டியை இறுக்கிக் கட்டியபடி‘அடுத்ததடவை வரும் போது வீட்டுக்கு வர்றேன்’ என்று சிரித்தார். ஹெப்பாலுக்கு நேரடியாகப் பேருந்து இல்லை. சில்க் போர்ட் சென்று அங்கேயிருந்து பேருந்து பிடிக்க வேண்டும். ‘நானும் வரட்டுமா?’ என்றேன். ‘குடும்பத்தோட நேரம் செலவழிங்க...நான் போய்க்கிறேன்’ என்றார். 

எந்த மனிதனையும் தோற்றத்தை வைத்து எடை போட்டுவிட முடிவதில்லை. அப்படித்தான் எடை போடுவேன் என்று மனது வீறாப்பாக நிற்குமாயின் எனக்கு அறிவிருக்கிறது, நான் படித்திருக்கிறேன் என்றெல்லாம் எந்த அடிப்படையில் சொல்லிக் கொள்ள முடியும்? அவரைப் பற்றி நினைத்ததையும் அவர் பேசியதையும் போட்டு மனது குதப்பிக் கொண்டிருந்தது. ஏன் வந்தார் எதற்காக வந்தார் என்றெல்லாம் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. வந்தார். அவ்வளவுதான். 

நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் நமக்கான மிகப்பெரிய பாடத்தைச் சொல்லித் தருகிறான். எடுத்துக் கொள்வதும் விட்டுவிடுவதும் அவரவர் பாடு. எவ்வளவு பெரிய புத்தகத்தைக் காட்டிலும் மனிதர்கள் சொல்லித் தரும் பாடங்கள்தான் நம் ஆழ்மனதின் கசடுகளையும் வன்மங்களையும் அறியாமையும் ஒதுக்கித் தள்ளி நம்மைப் பண்படுத்துகின்றன என்று உறுதியாகச் சொல்ல முடியும். பெரியவர் கிளம்பிச் சென்ற பிறகும் பேருந்து நிறுத்தத்திலேயே அமர்ந்திருந்தேன்.  எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் பெருநகரத்தின் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. சாலை முழுக்கவும் பெரும் புழுதி. 

10 எதிர் சப்தங்கள்:

viswa said...

நாம் கற்றுக்கொள்ளவேண்டியது உலகளவு.எப்போது உணர்வோம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது

sonaramji said...

never judge a book by its cover என்று இதைத்தான் சொன்னாா்களா

Dev said...

இப்போது இதை பற்றி தான் ஒரு வாரமாக மூளை சத்தமிட்டு (mind voice ) கொண்டிருக்கிறது. you are bang on. I am sorry if I am drawing wrong parallels. நீங்க எழுதிட்டீங்க. ஒவ்வொரு சாமானியர் என்று நான் நினைத்தவர் எல்லா ம் மண்டையில சம்மட்டியால் அடித்தது போல பாடம் சொல்லி கொடுத்துக்கொண்டே அவர்கள் வழியில் போய் கொண்டு இருக்கிறார்கள். இன்று ஒரு காவலரிடம் மிக arrogant அ பேசிய பிறகு உரைத்தது. இதுவே நம்ம ஊரா இருந்தா குறைந்த பட்சம் ஸ்டேஷன் வரை போகவேண்டியிருந்திருக்கும். அவருக்கு ஏதாவது செய்யவேண்டும்.

-Dev

Avargal Unmaigal said...

முன்பின் தெரியாதவர்க்ளுக்கு வீட்டு அட் ரஸ் கொடுக்க வேண்டாம் இதை எதற்காக சொல்லுகிறேன் என்றால் உங்களின் கடந்த பதிவை படிக்கும் போது ஒர் ஆள் உதவி கேட்டு மிரட்டியதாக எழுதி இருந்தீர்கள் அப்படிப்பட்ட சிலர் உங்களுக்கு தீங்கு ஏது செய்ய நேரலாம்.அல்லதி இவர்களால் குடும்பத்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் நேரலாம் அதனால் ஜாக்கிரதையாக இருங்கள்.

Unknown said...

பெரியவர்! என்ற தலைப்பிலேயே நாம் பெரியவராக வழி சொல்லியது மிக்க சிரப்பு. அருமையான பதிவு.

Paramasivam said...

நான் வங்கி அதிகாரியாக பணி புரிந்த காலத்தில் ஓரிரு தடவை இவ்வாறு ஆகிஇருக்கிறது. தோற்ற அடிப்படையிலும், மிக எளிமையாக பேசும் தோரணையை வைத்து ஏமாந்து, பின் சமாளித்தது நினைவுக்கு வருகிறது. அந்த இரு தடவைகளுக்குப் பின், எனது அணுகுமுறையே மாறியதில், நல்ல பெயர் பெற்றேன். நல்ல புதிய அறிமுகங்கள் பெற்றேன். வங்கியின் வியாபாரம் பெருகியதில் அங்கும் நல்ல பெயர். எனது குடும்பமும் அவ்வாறே ஆனது. பையனும் பெண்ணும் அவர்கள் அலுவலகங்களில் மிக நல்ல பெயர் பெற்றுள்ளனர். சென்னைவாசி

சேக்காளி said...

ஆளாளுக்கு அவரவர் திசையில் செல்லும் குடும்பத்தையுடைய பெரியவரின் அனுபவத்தில் விளைந்த வார்த்தைகள் //குடும்பத்தோட நேரம் செலவழிங்க//
இது 'நானும் வரட்டுமா' என்று கேட்டதற்காக மட்டுமே சொல்லப்பட்டிருக்கும் என நினைக்கிறீர்களா?

”தளிர் சுரேஷ்” said...

பெரியவர் தான் உண்மையிலேயே பெரியவர் என்பதை உணர்த்திச்சென்றுவிட்டார்.

வெங்கட் நாகராஜ் said...

மனதைத் தொட்ட பகிர்வு. பல சமயங்களில் இப்படித் தான் நடந்து கொண்டுவிடுகிறோம் எல்லோருமே....

Malar said...

எப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்கள்? - மனதைத் தொட்ட பதிவு!