வணக்கம்.
என் பெயர் அரவிந்த். விழிகளைப் பொறுத்தவரையிலும் மாற்றுத் திறனாளி. சென்னை பரோடா வங்கியில் பணியில் இருக்கிறேன். உங்கள் எழுத்துக்கள் ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாக அறிமுகமானது. மகேஷ்தான் அறிமுகப்படுத்தினார். சமீபத்திய மூன்றாம் நதி நாவல் உட்பட நீங்கள் எழுதியவற்றை நிறைய வாசித்திருக்கிறேன். அனைத்தும் ஒலி வடிவத்தில்.
தங்களின் பள்ளிக்காலத்திலிருந்து இன்று வரையிலான அனைத்தையும் வெளிப்படையாக எழுத்து வழியாக நீங்கள் பதிவு செய்வதுதான் என்னை ஈர்த்தது என்ரு சொல்ல வேண்டும். அறக்கட்டளை குறித்து நீங்கள் எழுதுவது உலகம் முழுவதும் இன்னமும் ஏகப்பட்ட நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
இனி மூன்றாம் நதி பற்றி-
நாவல் என்னை மிக எளிதாக பெங்களூருக்கு மாற்றிவிட்டது. நாவலின் தொடக்கத்தில் அமாசையுடனும் பிறகு பவானியுடனும் பயணித்தேன். நாவல் எங்கு தொடங்குகிறதோ அதே இடத்தில் முடிவது எனக்கு நிறைய நினைவுகளைக் கிளறிவிட்டது.
பவானியின் உணர்வுப்பூர்வமான கொந்தளிப்புகளையும் குழப்பங்களையும் நாவல் பதிவு செய்திருக்கும் விதம் நெகிழச் செய்கிறது. பவானியின் முதல் காதல், அவளின் பாலியல் உணர்வுகள் போன்றவை விடலைப் பருவத்தை நினைவு கொள்ளச் செய்கிறது. தண்ணீருக்கான பிரச்சினைகள் அதை விவரிக்கும் தொனி, ஒவ்வொரு அத்தியாயத்தையும் நேரடியானா காட்சி ஒன்றுடன் ஆரம்பிக்கும் விதம் பின்னர் அத்தியாயத்துக்குள் அந்த காட்சிக்கான பின்புலம் என வாசகனை சலிப்பில்லாமல் இழுத்துச் செல்கிறது.
நாவலின் வெற்றி உங்களின் கதை சொல்லும் உத்தியில் இருக்கிறது. அது நாவல் வாசிப்பவர்களை ஒன்றச் செய்வதாகத்தான் சொல்ல வேண்டும்.
நாவல் குறித்தான ஒன்றிரண்டு விமர்சனங்களும் இருக்கின்றன.
1) சில அத்தியாயங்கள் முந்தைய அத்தியாயங்களுடன் இறுக்கமாக பிணைக்கப்படவில்லை என்று தோன்றுகிறது.
2) நாவல் பேசாத இடங்கள் என்று சிலவற்றைச் சொல்ல முடியும். உதாரணமாக நாவலின் இறுதிக்குப் பிறகு பவானி என்ன செய்யப் போகிறாள் என்ற எண்ணம் தோன்றுகிறது. நாவலின் தொடர்ச்சி என்று ஏதாவது திட்டமிருக்கிறதா?
3) நாவலின் முதல் காட்சியை வைத்து க்ளைமேக்ஸை முடிவு செய்துவிட முடிகிறது. அது ஏன்?
ஒட்டுமொத்தமாக, நகரத்தை நோக்கி நகரும் எளிய மக்களின் வாழ்க்கையைக் காட்டும் மிக நல்ல நாவல். தொடர்ந்து வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.
நன்றி.
அன்புடன்,
அரவிந்த்
அன்புள்ள அரவிந்த்,
தங்களின் வாழ்த்துகளுக்கும், நாவல் குறித்தான குறிப்புகளுக்கும் மிக்க நன்றி. நாவலின் அச்சுவடிவம் இனிமேல்தான் மற்றவர்களுக்குக் கிடைக்கக் கூடும். ஓரளவுக்கு பரவலாக மற்றவர்களும் வாசிக்க ஆரம்பித்த பிறகு நாவல் பற்றி விரிவாகப் பேசலாம் என்று தோன்றுகிறது.
இப்போதைக்கு நாவலின் விமர்சனங்களாக நீங்கள் சுட்டிக்காட்டிய மூன்று விஷயங்களைப் பற்றி குறிப்பாகச் சொல்கிறேன்.
இவை மூன்றுமே ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தேன். நாவலின் வடிவம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு திட்டமிருக்கும் அல்லவா? அப்படி. ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனித்தனியாக வாசித்தாலும் கூட தனித்த கதையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இருபது அத்தியாயங்களிலும் அதைச் செயல்படுத்துவது சாத்தியமாகவில்லை. ஆனால் பல அத்தியாயங்களில் அதனைச் செய்து பார்க்க முடிந்தது. இந்த ஒரு திட்டமிடலின் காரணமாகத்தான் ஒரு அத்தியாயத்திலிருந்து இன்னொரு அத்தியாயத்திற்கான ஜம்ப் ஆக இருக்கும். ஆனால் வாசிக்கிறவர்களால் பிணைத்துக் கொள்ள முடியும்படியான ஜம்ப்.
நாவலின் தொடர்ச்சி என்று ஒரு யோசனை இருக்கிறது. அது நாவல் பெறப் போகிற வரவேற்பைப் பொறுத்து. ஹிட் அடிக்கிற படங்களுக்குத்தானே இரண்டாம் மூன்றாம் பாகங்கள் வெளிவரும்? பவானி நான் நேரில் சந்தித்த கதாபாத்திரம். அவள் இனி என்ன செய்யப் போகிறாள் என்பதை இனிமேல்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதே போல முதல் அத்தியாயமே க்ளைமேக்ஸ்தான் என்பதும் முடிவு செய்ததுதான். தொடக்கத்தையும் முடிவையும் இணைப்பதுதான் நாவலின் பயணம்.
எழுதுகிறவனுக்கு சந்தோஷமே அதைப் பற்றி அடுத்தவர்கள் பேச ஆரம்பிப்பதுதான். அது ஒரு உற்சாகமான மருந்து. நீங்கள் பேசியது மகிழ்ச்சி.
தொடர்ந்து பேசுவோம் அரவிந்த்! தொடர்பில் இருங்கள்.
அன்புடன்,
மணிகண்டன்.
3 எதிர் சப்தங்கள்:
I got your book. and, surely read reveal my comment.
Million thanks mani sir. For doing the unexpected. I never expected that you'd mention me in your thanks giving note. Thanks a lot!
மகிழ்ச்சி
Post a Comment