கடந்த சில நாட்களாக பொழுது சாய்ந்தால் வானம் கருக்கிக் கொண்டு வந்துவிடுகிறது. நேற்றும் அப்படித்தான். கீழே விழுந்துவிடும் போல இருந்தது. மழையில் சிக்கிக் கொள்வோம் என்று பயந்து வீட்டுக்குக் கிளம்பாமல் எட்டு மணிக்குக் கிளம்பினால் அத்தனை போக்குவரத்து நெரிசல். வழக்கமாக ஒரு மணி நேரப் பயணம். நேற்று வெகு நேரம் பிடித்தது. வழியெங்கும் உடல் மீது ஈரம் படிந்து கொண்டேயிருந்தது. நசநசத்திருந்தேன்.
பொம்மனஹள்ளியில் வெகு கூட்டம். வண்டி நகரவேயில்லை. ஓரங்கட்டிவிட்டு இறங்கவும் முடியவில்லை. ஏதோ விபத்து நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வெகு நேரமாகவில்லை. ஆணா? பெண்ணா? முதியவரா? இளைஞரா? என்பதெல்லாம் தெரியவில்லை. போக்குவரத்தைச் சீர் செய்ய ட்ராபிக் காவலர்கள் திணறிக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் அவசர ஊர்தியின் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அந்த வண்டியாலும் நெருங்கவே முடியவில்லை. ஏதோ திரைப்படத்தின் குரூரமான காட்சியொன்றில் சிக்கியிருப்பதைப் போல உணர்ந்து கொண்டிருந்தேன்.
இதே இடத்தில்தான் சில மாதங்களுக்கு முன்பாக சாலையைக் கடந்த ஒரு மனிதர் தலை நசுங்கிக் கிடப்பதைப் பார்த்திருக்கிறேன். இதே இடத்தில்தான் அதிகாலையில் பெங்களூரில் வசிக்கும் மகன் வீட்டுக்கு வந்த தமிழ்நாட்டு முதியவர் ஒருவர் அடையாளம் தெரியாத டாக்ஸி டிரைவரால் அடித்து வீசப்பட்டுச் சென்றதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இதே இடத்தில்தான் எங்கள் பின்னால் வீட்டுக்காரர் பைக்காரன் ஒருவனால் தூக்கி வீசப்பட்டு மண்டை பிளந்து கிடந்தார். அத்தனையும் ஐம்பது அடி இடைவெளிகளில்.
இறங்கிப் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது. நாகராஜின் நினைவு வந்தது. பின்னால் வீட்டுக்காரரின் பெயர் அதுதான். ஏதோவொரு நிறுவனத்தில் பணியிலிருந்தவர். நிறுவனத்தை மூடிவிட்டார்கள். வேலை பறி போய்விட்டது. நாங்கள் குடியிருக்கும் லே-அவுட்டில் சாலை வசதி கூட இல்லாத போது சொற்ப விலைக்குக் கிடைத்த இடத்தை வாங்கி வீடு கட்டிவிட்டார். பையனும் சரியில்லை; பெண்ணைக் கட்டிக் கொடுத்த மருமகனும் சரியில்லை. குடிகாரர்கள். அக்கம்பக்கத்தில் யாரிடமும் பேசிக் கொள்ள மாட்டார். விடிந்தவுடன் வாசலில் நின்று விட்டேத்தியாகப் பார்த்துக் கொண்டிருப்பார். நடுவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவில் சிகரெட்டை வைத்து கைகளைக் குவித்து கஞ்சா புகைப்பது போல புகைத்துக் கொண்டிருப்பார்.
நேருக்கு நேராகப் பார்க்கும் போது சிரித்தும் சிரிக்காமலும் நகர்ந்து கொள்வோம். மகனும் மருமகனும் இருக்கிற சொத்துக்களைப் பிரித்துத் தரக் கேட்டுக் கொண்டிருந்த போது சில இடங்களை விற்று வீட்டை விஸ்தாரமாக்கினார். பெங்களூரில் விஸ்தாரமாக்குதல் என்றால் வாடகை வரும்படியாக அமைத்துக் கொள்வது. ஒற்றை படுக்கையறையுடனான வீடு என்றால் ஆறாயிரத்திலிருந்து ஏழாயிரம் வாடகை வரும். இரண்டு படுக்கையறை என்றால் பதினைந்திலிருந்து இருபதாயிரம் வரும். அப்பாவிடம் ஒரு முறை பேசிக் கொண்டிருந்த போது ‘இனி கடைசி வரைக்கும் பிரச்சினை இருக்காது’ என்று ஆசுவாசமாகச் சொன்னாராம். கடந்த வாரத்தில் ஒரு வீட்டில் குடியிருந்தவர்கள் காலி செய்துவிட்டார்கள். இந்த ஊரில் ஒருவர் குடியைக் காலி செய்தால் அடுத்தவர்களுக்கு வாடகைக்கு விடுவதற்கு முன்பாக பெய்ண்ட் பூசித் தருவார்கள். சாயம் வாங்கி வருவதற்காக பொம்மனஹள்ளி சென்றவர் திரும்ப வரும் போது duke பைக்காரன் வந்து அடித்திருக்கிறான். எதிரில் இருந்த பிரியாணிக்கடையின் சலனப்படக்கருவியில் பதிவாகியிருந்தது. நான்கைந்து அடிகளுக்கு மேலே எழும்பி கீழே சாய்ந்து மண்டை பிளந்துவிட்டது. தகவல் கேட்டு ஓடிய போது அவசர ஊர்தி வந்திருந்தது. அப்பொழுது நாகராஜ் பிரேதமாகியிருந்தார். வண்டிக்குள்ளாக தள்ளிவிட்டு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றார்கள்.
விபத்துகளில் இறந்து கிடப்பவர்களைப் பார்ப்பதற்கு மனம் ஒப்புவதேயில்லை. கனவுகளும் கஷ்டங்களும் வெகு சில வினாடிகளில் முடித்து வைக்கப்படுவதை புரிந்து கொள்ள முடிவதில்லை.
திருமணமாகிய புதிதில் ஒரு அதிகாலையில் உள்ளூர் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். தீடிரென்று சப்தம். வண்டியை நிறுத்தினார்கள். இறங்கிச் சென்று பார்த்த போது இளம்பெண்ணொருத்தி பேருந்தின் சக்கரத்தில் விழுந்து கிடந்தாள். திருமணமான பெண். கோழிக்கறியோ ஆட்டுக்கறியோ தெரியவில்லை- சிதறிக் கிடந்தது. அம்மா வந்து கோழிக் குழம்பு வைத்துத் தருவாள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவளது பிள்ளைகளின் அடையாளமற்ற முகங்கள் நினைவில் வந்து போயின. அடுத்த பல நாட்களுக்கு பசியே ஆகாமல் கிடந்தேன்.
இப்பொழுதெல்லாம் வாகனங்களின் நெரிசலும் அவற்றின் வேகமும் பயமுறுத்துகின்றன. இன்னும் பத்து வருடங்களில் பெங்களூர் மாதிரியான நகரங்களில் வண்டி ஓட்டுவது சாத்தியமே இல்லை எனத் தோன்றுகிறது. அத்தனை பேருக்கும் வேகம் வாய்த்திருக்கிறது. முறுக்கித் தள்ளுகிறார்கள்.
மழை நனைத்துக் கொண்டிருந்தது. ஹெல்மெட் கண்ணாடியில் வழியும் நீரும் எதிர் வாகனங்களின் வெளிச்சமும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தன. வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டேயிருந்தார்கள். மழையிலும் ட்ராபிக்கிலும் சிக்கியிருப்பதாகச் சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்து வைத்தேன். மெதுமெதுவாக விபத்து நடந்த இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போது அருகில் இருந்த காவலர் ஒருவரிடம் ‘ஏனாயித்து சார்?’ என்றேன். லாரிச்சக்கரத்தில் ஒருவர் வீழ்ந்துவிட்டார் என்றார். இவ்வளவு மெதுவாக நகரும் போக்குவரத்தில் எப்படி விழ முடியும் என்று யோசனையாக இருந்தது. மனநிலை சரியில்லாதவர் போலிருக்கிறது. அப்படித்தான் காவலர் சொன்னார். அதுவொரு யூகம்தான். மழையோடு சேர்த்து விபத்தும் ட்ராபிக்கையும் அதிகரித்திருக்கிறது.
‘உயிர் இருக்கா?’ என்றேன். சிரித்தார். வறண்ட புன்னகை அது. புரிந்து கொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை.
இறந்து போனவருக்கு மனநிலை எப்படி இருந்தது? தெரிந்துதான் வீழ்ந்தாரா? தெரியாமல் வீழ்ந்தாரா? குடும்பம் இருக்கிறதா? அநாதையா என்று எத்தனையோ கேள்விகள். ஒன்றுக்கும் பதில் கண்டுபிடிக்கும் மனநிலை இல்லை. மழையின் வேகம் அதிகரித்திருந்திருந்தது. மழை, நெரிசல், விபத்து குறித்தான நினைவுகள் என எல்லாம் சேர்ந்து அலைக்கழித்தன. காலையில் கிளம்பும் போது ‘அப்பா நான் தூங்குறதுக்குள்ள வீட்டுக்கு வந்துடுங்க’ என்று மகி சொல்லியிருந்தான். பல சமயங்களில் சாதாரண குடும்பஸ்தனாகத்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது. கிடைத்த சந்துகளில் வண்டியை நுழைத்துக் கொண்டிருந்தேன். அவசர ஊர்தி அப்பொழுதும் அலறிக் கொண்டுதான் இருந்தது.
4 எதிர் சப்தங்கள்:
"பல சமயங்களில் சாதாரண குடும்பஸ்தனாகத்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது. கிடைத்த சந்துகளில் வண்டியை நுழைத்துக் கொண்டிருந்தேன்"
உண்மை வரிகள் அண்ணா.எனக்கு ஒரு எண்ணம் தோன்றுவது உண்டு.'நடப்பவை அனைத்தும் நம் கையில் இல்லை.அவரவரது தவறுகளை சரி செய்ய அனைவரும் முயன்றால் சில அசம்பாவதங்களை தவிர்க்கலாம்' என்று தோன்றும்.
நான் இன்னும் குடும்பஸ்தன் ஆகவில்லை.ஆனால் என்னால் முடிந்த அளவு என் சுயநல எண்ணங்களால் இந்த சமுதாயத்திற்கு ஏதும் பிழை நிகலாமல் செய்ய முயல்கிறேன்.எல்லாரும் முடிந்தவரை முயலலாம்.
பசி,சுயநலம்,தான் என்னும் பிடிவாதம் இவை அனைத்திலும் ஏதேனும் ஒன்றே ஒன்று அனைத்தையும் வீண்னென்று மாற்றிவிடுகிறது.எங்கு சரி செய்வது என புரியவில்லை அண்ணா.
//‘இனி கடைசி வரைக்கும் பிரச்சினை இருக்காது’ என்று ஆசுவாசமாகச் சொன்னாராம்.//
எல்லாவற்றையும் பறித்துக்கொள்ளும் மரணம் நான் என்கிற கீதையின் வாக்கியம் நினைவுக்கு வருகிறது.
உண்மைதான்! வாகன நெரிசல்கள், அவசரம். வண்டியில் பயணிக்கவே பயமாகத்தான் உள்ளது. இருந்தாலும் பிழைப்புக்காக செல்லவேண்டிய கட்டாயம்!
Post a Comment