Jun 2, 2016

இடம்

அனைத்து எழுத்தாளர்களும் நமது ஊரில் யாருமே புத்தகங்களை வாங்குவதே இல்லை என்று சொல்கிறார்கள். உண்மைதான். ஆனால் மக்களைக் குறை கூறுவதைத் தவிர எழுத்தாளர்கள் என்ன செய்தார்கள்? திரைப்படங்கள் தவிர்த்து பிற போக்கிடம் இல்லாமல் வேறு எதாவது பொழுதுபோக்கு கிடைக்காதா என தேடுகிறவர்களை வாசிப்பின் பக்கம் ஈர்க்க ஏதேனும் விவாதங்களை நடத்தினார்களா? 

சில வருடங்களுக்கு முன்பு வரை பல வீடுகளில் ராமாயணம், மகாபாரதம், பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் மற்றும் பல சாண்டில்யன் நூல்கள் வாங்கி வாசித்தார்கள். முக்கியமாக யாராவது ஒருவர் வாங்கிய நூல்கள் பலருக்கு மாறி மாறிச் செல்லும். என்னுடையது கிராமம்தான் என்றாலும் ஏதாவது ஒரு சிறு புத்தகங்களையாவது வாசித்துகொண்டே இருப்பவர்கள் நிறைய இருந்தார்கள்.

திரைப்படங்கள் மட்டுமே பொழுதுபோக்காக மாறிவிட்ட இன்றைய காலத்தில் மக்களை வாசிக்க வைக்க என்ன செய்தார்கள் எழுத்தாளர்கள்?

எழுத்து பெரும் வரம். எழுதுவது மிகக் கடினம். நான் ஏற்கிறேன். ஆனால் இவர்கள் என்ன கடவுளா? 

மாணவர்களுக்கு வாசிப்பின் மகத்துவத்தை இன்றைய கல்வியும் எடுத்து கூறவில்லை. அரசுகளும் எடுத்துக் கூறவில்லை. எழுத்தாளர்களாவது ஒன்றிணைந்து வாசிப்பை வளர்ப்பார்களா என்பதே என் ஆதங்கம்.

சங்கர்நாத்.


யாருமே புத்தகங்களை வாங்குவதில்லை என்று எழுத்தாளர்கள் சொல்வதில்லை. விற்பனையின் எண்ணிக்கை மிகச் சொற்பமாக இருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள். உலகம் முழுக்கவும் தமிழர்களின் எண்ணிக்கை எட்டுக் கோடி என்றால் சமையல், ஜோதிடம், ஆரோக்கியம் தவிர்த்த பிற புத்தகங்களின் விற்பனை எண்ணிக்கை சில நூறு பிரதிகள்தான். இது தமிழில் மட்டுமே இருக்கின்ற பிரச்சினையாகத் தெரியவில்லை. கொரியன் மொழியின் புத்தக விற்பனை என்று கூகிளில் தேடினால் அவர்களும்தான் புலம்புகிறார்கள். பிரெஞ்ச் மொழியில் புத்தக விற்பனை எப்படி இருக்கிறது என்று துழாவிப் பார்த்தால் அங்கேயும் நிலைமை சரியில்லை போலிருக்கிறது. வேறு ஏதேனும் மொழிகள் குறித்துத் தேடிப் பாருங்கள்.

கடந்த வாரத்தில் மனுஷ்ய புத்திரனின் ‘புலரியின் முத்தங்கள்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். இடையிடையே தொகுப்பாளர் அவரிடம் கேள்வி கேட்டார். காமம் சார்ந்த எழுத்தைப் பற்றிய கேள்வி அது. மனுஷ்ய புத்திரன் பதிலாகச் சொன்ன விஷயம் மிக முக்கியமானதாகப்பட்டது. ‘இந்தக் காலத்தில் அத்தனையும் காட்சி மயமாக்கப்பட்டிருக்கிறது. பத்துப் பக்கம் எழுதி விவரிப்பதை பதினைந்து வினாடிகளில் ஒரு சலனப்படத்தால் உருவாக்கிவிட முடிகிறது’ என்றார். எழுதுகிறவர்களின் முன்பாக இருக்கக் கூடிய மிகப்பெரிய சவால் இது. காமத்தை நூறு பக்கங்கள் எழுதினாலும் சொல்லிவிட முடியாது. ஆனால் சலனப்படத்தின் வழியாக ஒற்றை அசைவு சொல்லிவிடக் கூடும்.

முன்பும் சலனப்படங்கள் இருந்தன. திரையரங்குகளில் மட்டும் பார்த்தார்கள். பிறகு தொலைக்காட்சியிலும் பார்த்தார்கள். பிறகு கணினியிலும் சேர்த்துப் பார்த்தார்கள். இப்பொழுது அத்தனையும் அலைபேசியில் கிடைக்கிறது. வாட்ஸப் குழுமத்தில் கேள்வியைத் தட்டச்சு செய்து எழுதி அனுப்பினால் பதிலைக் குரலாகப் பதிவு செய்து அனுப்புகிறார்கள். எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் பொறுமையும் இல்லை. அவசியமும் இல்லை. எழுத்து என்பதற்கான இடம் மெல்ல அழிந்து வருகிறதோ என்கிற சூழலில் வாசிக்கிறவர்களை இழுத்துப் பிடிப்பதும் அவர்களைப் புத்தகம் வாங்கச் செய்வதும் சாதாரணக் காரியமாகத் தெரியவில்லை.

புத்தகக் காட்சிகளும்,  விற்பனை உத்திகளும் ஒப்பீட்டளவில் புத்த விற்பனையின் எண்ணிக்கையை சமீபமாக அதிகரிக்கச் செய்திருப்பதாகத்தான் தெரிகிறது. ஆனால் ‘புத்தகம் வாங்க வைப்பது’ Vs ‘வாசிக்க வைப்பது’ என்பதில் நிறைய வித்தியாசமிருக்கின்றன. ஐநூறு பிரதிகள் விற்றால் வெறும் நூற்றைம்பது பேர்தான் அந்தப் புத்தகத்தை புத்தகத்தை வாசிக்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியும். நூற்றைம்பது என்பது கூட சற்றே மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கையாக இருக்கக் கூடும் என்கிற சந்தேகம் இல்லாமல் இல்லை. புத்தகத்தை வாங்க வைப்பது பதிப்பாளருக்கு பலன் தரும். வாசிக்க வைப்பதுதான் எழுதுகிறவனுக்கும் வாசகனுக்குமான பலனைத் தரக் கூடியது. ஆனால் எப்படி வாசிக்க வைப்பது?

இங்கே நிறைய புனிதப்பிம்பங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன. ஓர் வகையிலான எழுத்து உயர்ந்தது என்றும் இன்னோர் வகையிலான எழுத்து தாழ்ந்தது என்று தரம் பிரிக்கிறார்கள். எழுத்தை படிநிலை (Stages) என்கிறார்கள். அதனால் தன்னை உயர்ந்த இடத்தில் வைத்துக் கொள்ள எழுதுகிறவன் படாதபாடு படுகிறான். மேலே நிற்பதாகத் தன்னைக் கருதிக் கொள்கிறவன் மற்றவர்களைப் பார்த்து ‘அடேய் கீழ்நிலை எழுத்தாளனே!’ என்று கூவுகிறான். எவனுடைய குரல் உயர்வாகக் கேட்கிறதோ அவன் சொல்வதை ஒரு கூட்டம் நம்புகிறது. இதுதான் பிரச்சினை. எழுத்துச் சூழலுக்கும் வாசிப்பு சூழலுக்கும் இது தோதானது இல்லை. இங்கே எல்லாவிதமான எழுத்துக்குமான தேவை இருக்கிறது. ‘இதுதான் தரம்’ என்ற முத்திரை குத்தி வைத்தால் புதிதாக வாசிக்க வருகிற வாசகன் தரமான எழுத்து என்று அடுத்தவர்கள் சொல்வதைத் தேடுகிறான். அவனுக்கு புரியவில்லை என்றால் தலை தெறிக்க ஓடுகிறான். அதோடு எழுத்தைத் தலை முழுகிவிடுவான்.

ரமணிச் சந்திரனும், பாலகுமாரனும், ராஜேஷ்குமாரும் எல்லாக்காலத்திலும் அவசியமானவர்கள். என்னதான் இலக்கியம், புனிதம் என்று பேசினாலும் இவர்களைப் போன்றவர்கள் இல்லையென்றால் இன்றைக்கு வாசித்துக் கொண்டிருக்கிற முக்கால்வாசி வாசகர்கள் வேறொரு பொழுது போக்கைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள். சுஜாதா மாதிரியானவர்கள் இழுத்துவிடவில்லையென்றால் பாதிப் பேருக்கு இலக்கியவாதிகளின் பெயர்கள் கூடத் தெரிந்திருக்காது. இதுதான் நிதர்சனம். இந்த அடிப்படையில்தான் எழுத்துச் சூழலை புரிந்து கொள்ள வேண்டும்.

‘இவர் உசத்தி’ என்றெல்லாம் சொல்ல வேண்டியதில்லை. அப்படிச் சொல்ல அவசியமும் இல்லை. இங்கே அத்தனை எழுத்தாளர்களுக்குமான தேவை இருக்கிறது. எட்டுக்கோடி பேர் இருக்கிறார்கள். பாடப்புத்தகத்தைத் தாண்டி எழுத்தை நுகர்ந்தே பார்க்காதவர்கள் நான்கைந்து கோடிப் பேராவது இருப்பார்கள். அவர்களை வாசிக்கச் செய்ய இன்னும் பல்லாயிரக்கணக்கான எழுத்தாளர்களுக்கான தேவை இருக்கிறது. எழுத்து, குப்பை, இலக்கியம் என்று வகை வகையாக நிரம்ப வேண்டும். எழுதிக் குவிக்கப்பட வேண்டும். எல்லாவிதமான வாசகர்களுக்கும் தேவையான எல்லாவிதமான எழுத்துக்களும் எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கப்பட வேண்டும். தமக்குப் பிடித்த எழுத்தை வாசகன் பிடித்துக் கொள்வான். அது சலிப்படையும் போது அங்கேயிருந்து இன்னொரு எழுத்தாளனுக்கு நகர்வான். இப்படித்தான் வாசிப்புச் சூழலை உயிர்ப்புள்ளதாக வைத்துக் கொள்ள முடியும்.

உள்ளே வருகிறவனையெல்லாம் ‘உனக்கு புரியாது’ ‘நீ முட்டாள்’ ‘நான் எழுதுவதைப் புரிந்து கொண்டால் மட்டுமே நீ வாசிக்கத் தகுதியுடையவன்’ என்றெல்லாம் விரட்டியடித்தால் வெறும் ஐயாயிரத்து முந்நூறு வாசகர்களை வைத்துக் கொண்டு முந்நூறு பிரதிகளைத்தான் விற்க முடியும். புனிதப்பிம்பங்கள் உடைத்து நொறுக்கப்பட்டு விதவிதமான எழுத்துக்கள் இங்கே உருவாகும் போதுதான் பெரும்பான்மைச் சமூகத்தை எழுத்தை நோக்கி ஈர்க்க முடியும். ஏற்கனவே சொன்னது போல காட்சி மயமாக்கப்பட்ட யுகத்தில் இதுவொன்றும் லேசுப்பட்ட கரியமில்லை. ஆனால் அப்படியான சூழலை உருவாக்குவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

சங்கர்நாத் குறிப்பிட்டது போல எழுத்தாளர்கள் களமிறங்கி ஒருங்கிணைந்தெல்லாம் எழுத்தை வாசிக்கச் செய்ய வேண்டியதில்லை. உள்ளே வருகிற வாசகனை மிரட்டாமல் இருந்தால் போதும். தன்னுடைய எழுத்து வாசகனுக்கு சலிப்படையும் போது அவன் செல்ல வேண்டிய திசையை அவ்வப்பொழுது காட்டிக் கொண்டேயிருந்தால் போதும். நூறு வாசகர்கள் நம்மைவிட்டு நகரும் போது இருநூறு வாசகர்கள் வேறொரு எழுத்தாளனிடமிருந்து நம்மை நோக்கி வருவார்கள். இந்தப் புரிதல் இருந்தால் போதும். பொறாமை இருக்காது. இங்கே யாருடைய இடத்தையும் யாராலும் அழித்துவிட முடியாது. மாறாக பல கோடி வாசகர்களை உருவாக்குகிற சூழல் நிலவுகிற தமிழ் எழுத்துச் சூழலில் நமக்கென்று தனித்த இடத்தை ஒவ்வொரு எழுத்தாளனாலும் உருவாக்கிக் கொள்ள முடியும்.

4 எதிர் சப்தங்கள்:

ADMIN said...

எளிமைதான் உங்கள் எழுத்துகளின் பலம்!
நீங்க கலக்குங்க மணிகண்டன் சார்!

smsnoohu said...

"வெறும் ஐயாயிரத்து முந்நூறு வாசகர்களை வைத்துக் கொண்டு முந்நூறு பிரதிகளைத்தான் விற்க முடியும்" I think this sentence is pointed to some one.

venkat said...

கான்வென்ட்டுகள் பெருகி விட்ட பிறகு, தமிழ் மெல்ல சாகத்தான் செய்கிறது. மிக அருமையான படைப்புகள் பார்க்கப்படாமலே மரித்து விடுகின்றன. சமீபத்தில், அஜந்தா சென்றிருந்தேன். அந்த சிற்பங்களை ரசிப்பதற்கு, கல்கி சிவகாமியின் சபதம் மூலமாக சொல்லிக் கொடுக்காமல் போயிருந்தால், எனக்கு ஒரு ரசனையும் இருந்திருக்காது. இந்த கால, கான்வென்ட்டில் எத்தனை பேருக்கு தமிழ் பற்று வருகிறது. முதலில் அவர்கள் சொல்லிக் கொடுப்பது, தமிழ் ஒரு நீச மொழி. படிக்காதே. துதிக்காதே. தாய் மொழியில் படிக்காத குழந்தைகள், நம் கலாசாரத்தை அறிய முடியாதவர்கள். இன்னும் ரெயின் ரெயின் கோ அவே பாடிக் கொண்டிருக்கிறோம். நம் தமிழில் உள்ள குழந்தைப் பாடல்களில் இல்லாத நீதி நெறியே கிடையாது. எழுத்தாளர்கள் எல்லாம், நல்ல முறையில்தான் எழுதுகிறார்கள். ஆனால், அதனைக் கொண்டாட வேண்டிய தமிழ் சமூகம், மானாட மயிலாட வில் தன்னைத் தொலைத்து கொண்டிருக்கிறது.

Siva said...

நெத்திப் பொட்டு அடி... செம .....