Jun 16, 2016

நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர்

முன்முடிவு என்பது முன்வழுக்கை மாதிரி. இரண்டையும் அண்டவே விடக் கூடாது. அண்ட விட்டுவிட்டால் சோலி சுத்தம். போகவே போகாது. எதற்கு இந்த பிலாசபி என்று யோசித்து கட்டுரையின் தலைப்போடு சேர்த்து வைத்து ஏதோ சர்ச்சை விவகாரம் என்று முடிவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொள்ளாது. நானொரு முன்வழுக்கைக்காரன். போலவே, முன்முடிவுக்காரனும். முதலாவது பிரச்சினைக்கு ஜீன் காரணம். இரண்டாவது பிரச்சினைக்கு சகவாசம் காரணம்.

புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தவுடனேயே இலக்கிய உலகில் ரவுடியாக உருவெடுக்க வேண்டுமென்று அத்தனை பேரிடமும் குழாவ முயற்சித்துக் கொண்டிருந்தேன். தொடர்புகளின் வழியாகவே நமக்கான இடத்தை உருவாக்கிக் கொள்ளும் பின்வாசல் முயற்சி அது. இப்படிப்பட்ட குழாவல்களில் பேராபத்து உண்டு. இலக்கியம் பேசுகிறவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் ஏதாவதொரு தொனியில் ‘அவன் எல்லாம் ஒரு எழுத்தாளனா?’ என்ற வசனத்தை பிரயோகப்படுத்துவார்கள். ‘அதெல்லாம் ஒரு எழுத்தா?’ என்று கேட்பார்கள். வாசிக்கிறார்களோ இல்லையோ- நிராகரிக்கப் பழகி வைத்திருப்பார்கள். நாறும் மணக்கும்தானே? பழக்கம் எனக்கும் ஒட்டிக் கொண்டது.

ஒரு வட்டத்தைத் தாண்டி வாசித்ததில்லை. ஒவ்வொரு எழுத்தாளர் குறித்தும் முன்முடிவு உண்டு. ஒவ்வொரு படைப்பு குறித்தும் ஒரு விமர்சனம் வைத்திருந்தேன். படமே பார்க்காமல் போஸ்டரை வைத்து விமர்சனம் எழுதுவதன் இன்னொரு வடிவம் அது.  சமகால எழுத்தாளர்களை வாசிக்கவிட்டாலும் கூடத் தொலைகிறது. முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் மீதும் ஏதோவொரு அசூயை. வணிக எழுத்து, புண்ணாக்கு எழுத்து, பருத்திக் கொட்டை எழுத்து என்று வகை பிரித்து இலக்கிய எழுத்து வகையறாவுக்குள் வந்தால் மட்டும்தான் தொடவே வேண்டும் என்கிற பைத்தியகாரத்தனம். இப்படியெல்லாம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ‘நான் எவ்வளவு பெரிய இலக்கிய அப்பாடக்கர் தெரியுமா?’ என்று இறுமாப்பாகத் திரிந்ததில் இழந்ததுதான் அதிகம். எந்தப் படைப்பும் தன்னை வாசிக்கச் சொல்லி நம்மை இறைஞ்சப் போவதில்லை. வாசித்தால் வாசி; இல்லையென்றால் தூரப் போடா பரதேசி என்றுதான் அதனதன் பாட்டில் கிடக்கும்.

அப்படித்தான் பிரதாப முதலியார் சரித்திரமும்.

தமிழில் வந்த முதல் நாவல் எது என்ற கேள்விக்கு மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்று ஒன்பதாம் அல்லது பத்தாம் வகுப்பில் பதில் எழுதியதுண்டு. 1857 ஆம் ஆண்டில் வந்த புத்தகம் என்பதால் இப்பொழுதெல்லாம் வாசிக்கக் கிடைக்காது அப்படியே கிடைத்தாலும் படு மொக்கையான வாக்கிய அமைப்புகளால் வாசிக்கவே முடியாமல் இருக்கும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன்.

புண்ணியவான் ஒருத்தர்தான் வாசிக்கச் சொன்னார். சில ஆண்டுகளுக்கு முன் புத்தகமாகவும் கிடைத்தது. பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டிருந்தார்கள். இப்பொழுதும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. வாசிக்கத் தொடங்கிய போதுதான் உறைத்தது. இப்படியே எவ்வளவு புத்தகங்களை வாசிக்காமல் வைத்திருக்கிறோம் என்று. நூற்று அறுபது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல் இது. இரவில் வாசித்துவிட்டு தானாகச் சிரித்துக் கொண்டிருந்தேன். பிரதாப முதலி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இடத்திலிருந்தே அதகளம்தான். என் முழுப்பெயரையும் எழுதுவதென்றால் அதற்கே இந்தப் புஸ்தகம் முழுவதும் தேவைப்படும் என்பதால் பிரதாப முதலி என்று சுருக்கிக் கொள்ளலாம் என்று தொடங்கி  பக்கத்திற்குப் பக்கம் சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பார். ‘அண்ணே நான் கண்ணை மூடிட்டு செய்யற வேலையை நீங்கக் கண்ணைத் திறந்துட்டு செய்வீங்களா?’ என்கிற செந்தில் கவுண்டமணி நகைச்சுவையைக் கூட இந்த நாவலில் இருந்துதான் சுட்டிருக்கிறார்கள்.

பிரதாப முதலி பணக்கார வீட்டுப் பையன். அதனால் பாடம் சொல்லித் தருவதற்கு உபாத்தியாயர்கள் இவருடைய வீட்டுக்குத்தான் வர வேண்டும். எந்த உபாத்தியாயர் வந்தாலும் பிரதாப முதலியிடமும் அவரது பாட்டியிடமும் சிக்கிச் சின்னாபின்னமாவார்கள். கடைசியில் சோற்றுக்கு வழியில்லாத ஓர் உபாத்தியாயர் சிக்குகிறார். அவருடைய மகன் கனகசபையும் பிரதாப முதலியும் ஒரே வயது. முதலியின் பாட்டி ஒரு அட்டகாசமான ஐடியா கண்டுபிடிக்கிறார். முதலி தொண்டை வறண்டு போகுமளவுக்கு பாடம் சொல்ல வேண்டியதில்லை. வாத்தியாரின் மகன் கனகசபை சத்தமாக பாடம் சொல்ல வேண்டும். அதை முதலி காது கொடுத்துக் கேட்டால் போதும். வாத்தி கேள்வி கேட்டு பிரதாப முதலிக்கு பதில் தெரியவில்லையென்றால் அதற்கு தண்டனையை கனகசபைதான் ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரதாப முதலி பதில் சொன்னதும் கிடையாது. கனகசபையின் முதுகு பழுக்காத நாளும் கிடையாது. ‘ஏம்ப்பா இந்த வயிற்றுக்குத்தானே இந்தப் பாடு? முதுகில் அடிக்கிறதுக்கு பதிலா என் வயிற்றில் அடிங்க’ என்று கலங்க வைத்துவிடுவான் கனகசபை.

கதையை முழுமையாகச் சொல்லவில்லை. இலக்கியம், கட்டமைப்பு, ஆனியன், ரவா தோசை என்கிற பதார்த்தங்களை எல்லாம் சற்று ஓரங்கட்டிவிட்டு இதை வாசித்துவிட வேண்டும். இப்பொழுது பிரதாப முதலியார் சரித்திரம் ஆன்லைனிலேயே கிடைக்கிறது.

ஒரு வாசகனாக எந்தவொரு முன்முடிவும் இல்லாமல் இருப்பதுதான் நம்முடைய வாசிப்புப் பழக்கத்துக்கு நல்லது. சுவாரசியமான எழுத்துக்களில் ஆரம்பித்து அத்தனை வகைமையிலான எழுத்துக்களையும் ஒரு கண் பார்த்துவிட வேண்டும். தமிழின் முதல் புதினம் என்கிற அடிப்படையில் நிச்சயமாக வாசித்திருக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். அதைவிடவும் அதன் நகைச்சுவைக்காகவாவது வாசித்துவிட வேண்டும்.

நாவலை வாசித்த பிறகு இந்தக் கட்டுரையின் தலைப்பு உங்களுக்குப் பொருத்தமானதாகத் தெரியக் கூடும்.

தமிழில்தான் இளம் எழுத்தாளர் என்பதற்கு எந்த வரையறையும் இல்லையே- ஐம்பதைத் தாண்டினாலும் இளம் எழுத்தாளர்தான். அப்படியென்றால் இருபது அல்லது இருபத்தைந்து வயது எழுத்தாளர்களை என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும். எனக்கென்னவோ மாயூரம் வேத நாயகம் பிள்ளைதான் தமிழில் நம்பிக்கைக்குரிய எழுத்தாளராகத் தெரிகிறார். ஏற்கனவே வாசித்தவர்களோ அல்லது இனிமேல் வாசிக்கப் போகிறவர்களோ அவருடைய நாவலை வாசித்துவிட்டு மறுப்பதாக இருந்தால் தெரியப்படுத்துங்கள். பட்டத்தை வேறொரு எழுத்தாளருக்கு மாற்றிக் கொடுத்துவிடலாம். டஜன் எழுத்தாளர்களைப் பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். நாம் என்ன சொன்னாலும் கேட்கக் கூடிய எழுத்தாளர்கள் அவர்கள்.

5 எதிர் சப்தங்கள்:

Unknown said...

//எனக்கென்னவோ மாயூரம் வேத ரத்தினம் பிள்ளைதான் தமிழில் நம்பிக்கைக்குரிய எழுத்தாளராகத் தெரிகிறார்//
Typo?

”தளிர் சுரேஷ்” said...

என் தாத்தாவிடம் இருந்து அந்த நாவலை வாங்கி வந்து பத்து வருடத்திற்கு மேல் ஆகிறது இன்னமும் படிக்கவில்லை! பரணில் இருப்பதை தேடி படிக்க ஆசையாக இருக்கிறது நீங்கள் சொல்வதை கேட்கையில்! நன்றி!

சேக்காளி said...

//இப்படிப்பட்ட குழாவல்களில்//
?

Paramasivam said...

இந்த பதிவின் முதல் இரு பாராக்கள் என்னை பற்றியதாகவே உள்ளது. நானும் இனி அனைத்து புத்தகங்களையும் எந்த ஒரு முன் முடிவுடன் படிக்கக் கூடாது என முடிவு எடுத்து விட்டேன். முதலியார் சரித்திரம்--நாவல் பதிவிறக்கம் செய்து விட்டேன். படிப்போம் இன்று முதல்.

ilavalhariharan said...

பதிவிறக்கம் செய்தாயிற்று....படிச்சு முடிச்சிட்டு அப்றமாப் பேசுறேன். தலைப்பைப் பாத்தவுடன் லட்சுமி சரவணக்குமாரத்தான் பிடிக்கப் போறீங்களோன்னு நெனச்சேன்....நல்லவேள..அடுத்த போஸ்டிங்லெ எதிர்பார்க்கிறேன்.