பெங்களூரின் மரண வீடு அது. மொத்தமே ஐந்தாறு பேர்கள்தான் வந்திருந்தார்கள். அவ்வளவு பேர்தான் வருவார்கள். வார இறுதி என்றால் ஒன்றிரண்டு பேர் கூடுதலாக வந்திருக்கக் கூடும். மேற்கு வங்கத்துக்காரர் அவர்.
அம்மாவுக்கு உடல் நலிவுற்றவுடன் அழைத்து வந்து தம்மோடு தங்க வைத்திருந்தார். எங்கள் தெருவிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளியிருக்கிறார்கள். ‘அம்மாவுக்கு அவங்க ஊர்ல இருக்கணும்ன்னு ஆசை’ என்று அவர் முன்பொருமுறை சொல்லியிருந்தார். இதே ஆசைதான் கிட்டத்தட்ட பெரும்பாலான பெற்றவர்களுக்கும் உண்டு. தான் பிறந்த ஊர், தான் வாழ்ந்த ஊர்- என்று ஏதோவொரு பாசம். அக்கம்பக்கத்தினரும் உற்றாரும் உறவினரும் கண்டுகொள்கிறார்களோ இல்லையோ- இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்த ஊரின் வாசம் அவர்களை மனரீதியாக திருப்திப்படுத்துகிறது.
எல்லோராலும் அம்மாவையும் அப்பாவையும் அழைத்துத் தம்மோடு வைத்துக் கொள்ள முடிவதில்லை. ‘அம்மாவும் அப்பாவும் அங்க தனியாத்தான் இருக்காங்க..கஷ்டம்தான்....ஏதாவது பிரச்சினைன்னு ஃபோன் செஞ்சா போகக் கூட முடியறதில்லை...கூட வெச்சுக்கிறது எவ்வளவோ தேவலாம்...நம்ம கூட இருக்காங்களேன்னு ஒரு சின்ன ஆறுதல் இருக்கும்’ - இப்படி ஒரு எண்ணம் பெரும்பாலான பிள்ளைகளுக்கு உண்டு.
பெரியவர்களுக்கு உடல்நிலை சீராக இருக்கும் வரைக்கும் எந்தப் பிரச்சினையுமில்லை. வருவதும் போவதுமாக இருப்பார்கள். அவையவை அதனதன் போக்கில் நகர்ந்து கொண்டிருக்கும். ஆனால் ஏதாவதொரு தருணத்தில் தினசரி நடவடிக்கைகள் தடுக்கி விழும் பொழுதிலிருந்துதான் போராட்டங்கள் ஆரம்பமாகின்றன. உடல் ரீதியிலான போராட்டங்கள் அவர்களுக்கு என்றால் உளவியல் ரீதியிலான போராட்டங்கள் மகன்களுக்கும் மகள்களுக்கும். வெளிநாடுகளில் வசிக்கும் பெரும்பாலான நண்பர்களிடம் பேசும் போது அவர்களின் அம்மா அப்பா பற்றிக் கேட்பதேயில்லை. எதையாவது கிளறிவிட்ட மாதிரி ஆகிவிடும்.
அந்த விதத்தில் உள்ளூர்களிலேயே வசிப்பவர்களைப் பார்க்கச் சந்தோஷமாக இருக்கிறது. எவ்வளவுதான் உடல்நிலைச் சிக்கல் என்றாலும் கட்டில் ஒன்றைப் போட்டு பெரியவர்களைப் படுக்க வைத்து பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் பெரிய மாற்றங்கள் எதுவுமிருப்பதில்லை. காலையிலும் மாலையிலுமாவது ஒரு முறை கவனித்துக் கொள்கிறார்கள். ‘எப்படி இருக்கு?’ என்றால் சாதாரணமாக ‘அப்படியேதான் இருக்கு’ என்கிறார்கள். எது நிகழ்ந்தாலும் தாம் அருகிலேயே இருக்கிறோம் என்கிற எண்ணம் அவர்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது.
பெரும்பாலான நகரவாசிகளுக்கு இது சாத்தியமேயில்லாத காரியம். சமீபத்தில் ஒரு நண்பரைப் பேருந்தில் சந்தித்தேன். பெங்களூர்வாசி. வழமையான கேள்விகளுக்குப் பிறகு ‘அம்மா அப்பா நல்லா இருக்காங்களா?’ என்று கேட்டதற்கு அப்பா சமீபத்தில் இறந்துவிட்டதாகச் சொன்னார். மரத்திலிருந்து இலை உதிர்ந்துவிட்டது என்கிற தொனியில் அதைச் சொன்னார். அப்பாவின் உடல் நலிவுற்றிருக்கிறது. அழைத்து வந்து பெங்களூரில் சிகிச்சை செய்திருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் சிகிச்சை பலனளிக்காது என்று தெரிந்து ஊரிலேயே கொண்டு போய் விட்டுவிட்டார்கள். ஒவ்வொரு வாரமும் ஊருக்குச் சென்று வந்ததாகச் சொன்னார். ‘இங்கேயே வெச்சிருக்கலாம்ல?’ என்றால் ‘என்ன இருந்தாலும் உள்ளூர் தண்ணியும் காத்தும்தான் அப்பாவுக்கு இஷ்டம்’ என்றார்.
பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமான மண் சார்ந்த முரண்பாடு நம் தலைமுறையில் பிரதானமாகியிருக்கிறது. அவர்கள் அங்கே வாழ விரும்புகிறார்கள். பிள்ளைகள் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள்.
அக்னி சேகர் ஹிந்தியில் எழுதிய கவிதைத் தொகுப்பை ‘என் நூறு கிராமங்களின் பெயர்களை இரவோடு இரவாக மாற்றிவிட்டனர்’ என்ற பெயரில் தமிழில் ரமேஷ் குமார் மொழி பெயர்த்திருக்கிறார். அதில் ஒரு கவிதை-
தாங்க முடியாத வெயில்
பைத்தியம் பிடித்தும்விடும் போல என் அம்மாவுக்கு
அவள் நினைவுகள் சூன்யமாயின
வேதனையின் வெப்பக் காற்று
அவள் இதயத்தில் வீசியபடி இருந்தது
டாக்டர் தன் மருந்துச் சீட்டில் எழுதினார்
சினாரின் தென்றல் படவேண்டும் என்று
என் செய்வேன் என் செய்வேன்
என்னால் வாங்கித் தர முடியாத மருந்து அது.
அக்னி சேகர் காஷ்மீரத்துக் கவிஞர். சினார் என்பது மஞ்சள் பூ கொழிக்கும் காஷ்மீர் மரம். போர்ச் சூழலின் காரணமாக அம்மா இடம் பெயர்ந்திருக்கிறாள். அவளுக்கு உடல் நிலை நசிந்து போயிருக்கிறது. மருத்துவர் சினார் மரம் இருக்கும் காஷ்மீருக்கு அழைத்துச் செல்லச் சொல்கிறார். மகன் தவிக்கிறான். இதே நிலைமைதான் நம் தலைமுறையின் பெரும்பாலான மகன்களுக்கும் மகள்களுக்கும். போருக்குப் பதிலாக வேறொரு காரணம்.
மண் சார்ந்த நம் பந்தம் நெகிழ்வானது. உள்ளூரில் எதிரிகள் நிறைந்திருக்கலாம். பொறாமை மிகுந்த மனிதர்கள் சூழ்ந்திருக்கலாம். வன்மம் நம்மைச் சுற்றி விரவியிருக்கலாம். ஆனாலும் இந்த ஊரில்தான் வாழ வேண்டும் என்கிற வைராக்கியம் எந்தப் பருவத்தில் நம்முள் வந்து ஒட்டிக் கொள்கிறது? ஏன் அந்த ஊரிலேயேதான் கிடக்க வேண்டும் என விரும்புகிறோம்? வெகு தீவிரமாக யோசித்தாலும் பதில் கிடைப்பதில்லை. அவரவர் ஊரில்தான் அவரவருக்கான சினார் மரங்கள் நிறைந்திருக்கின்றன.
எதிர்காலம், வருமானம், பிள்ளைகளின் படிப்பு என்று ஆயிரம் பிரச்சினைகள். எல்லாவற்றையும் விடவும் பூதாகரமாக தமது கடைசி பிராயத்தை உள்ளூரில் கழிக்கும் பெற்றோர்களின் கனவும் ஆசையும் வந்து நிற்கிறது. ‘அம்மா அப்பாவைவிடவுமா வேலையும் சம்பளமும்?’ என்று சாதாரணமாகக் கேட்டுவிடலாம். ஆனால் நிதர்சனத்தில் எதிர்கொள்ளவே முடியாத நடைமுறைச் சிக்கல்கள் நிறைந்த கேள்வி இது.
மேற்கு வங்க நண்பரிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தேன். ஆறுதலாக இருக்கட்டும் என்று ‘பரவாயில்ல..கடைசி நேரத்துல பக்கத்துல இருந்தீங்களே’ என்றேன். அவர் உடைந்து போயிருந்தார். முந்தின நாள்தான் தன்னை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுவிட அவரது அம்மா கேட்டாராம். இவரும் சம்மதம் சொல்லியிருக்கிறார்.
‘அங்க கூட்டிட்டு போக முடியலங்கற வருத்தம் இருக்கு’என்றார்.
இறந்த செய்தி கேள்விப்பட்டு உறவினர்கள் உடலை மேற்கு வங்கத்திற்கு எடுத்து வரச் சொல்லியிருக்கிறார்கள். குடும்பத்தில் இவருடைய ஒற்றைச் சம்பளம் மட்டும்தான். பெரும் செலவு ஆகும் என்று தெரிந்திருக்கிறது. எல்லாவற்றையும் இங்கேயே முடித்துவிட்டார்கள். ‘அங்கே போயிருந்தா எப்படியும் நூறு பேராவது கடைசி ஊர்வலத்தில் கலந்திருப்பாங்க...இங்க வெறும் அஞ்சு பேர்தான்’ என்றார். பதில் எதுவும் சொல்லவில்லை. அவருக்குள் எண்ணங்கள் கொந்தளித்துக் கிடப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மரணம் வந்து சென்ற அந்த வீடு வெறிச்சோடிக் கிடந்தது. குழந்தைகள் கிசுகிசுத்தபடியே விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவரது மனைவி சோபாவில் அமர்ந்து நாங்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தார்.
‘ஆன்மா சாந்தியடையணும்ன்னு வேண்டிக்குங்க’ என்றார்.
‘ஆன்மா சாந்தியடையணும்ன்னு வேண்டிக்குங்க’ என்றார்.
‘பையனோட நிலைமை அம்மாவுக்குத் தெரியாதா? தைரியமா இருங்க’ என்றேன். அமைதியாக தனது அம்மாவின் நிழற்படத்தை வெறித்துக் கொண்டிருந்தார். அதற்கு மேல் பேசுவதற்கு எதுவுமில்லை. ஆனால் யோசிக்க நிறைய இருந்தன. சில நிமிடங்கள் அமர்ந்திருந்துவிட்டு எழுந்து வந்துவிட்டேன்.
2 எதிர் சப்தங்கள்:
எனக்குள் தூங்கிய
என்னைக் கிளறிய பதிவு.
ம்ப்ச்.
காலத்தை கட்டிப்போட முடியாது.சுற்றமும் சூழலும் தான் காலம் எப்படி கடந்துச்செல்ல வேண்டுமென்று நிர்ணயிக்கின்றன.இன்று இது பொதுவாகிப்போன சூழல்.ஆழ்ந்த இரங்கல்.
Post a Comment