May 4, 2016

காரியத்தில் கண்

ஆடுவது அருங்கூத்தாக இருந்தாலும் காரியத்தில் கண்ணாக இருந்துவிட வேண்டும் தாண்டவக்கோனே. தேர்தல் வரும், தேர்வுகள் வரும், த்ரிஷாவுக்கு கல்யாணம் நடக்கும். வேடிக்கை பார்த்துக் கொண்டே நம் கடமையைக் கைவிட்டு விடக் கூடாது. 

2014-15 ஆம் ஆண்டுக்கான நிசப்தம் அறக்கட்டளையின் வரவு செலவுக் கணக்கு விவரங்களைத் திரட்டி பட்டயக் கணக்கரிடம் கொடுத்திருக்கிறேன். மும்பையில் வருமான வரித்துறை இணை ஆணையராக இருக்கும் திரு.முரளி அழைத்து ‘நான் ஒரு ஆடிட்டரைச் சொல்லுறேன்...போய் பாருங்க’ என்றார். ஆடிட்டர் தீபக் நிறையப் பேசினார். பயமூட்டினார். அவர் கேட்ட விவரங்களில் எழுபது முதல் எண்பது சதவீத விவரங்களை தம் கட்டித் திரட்டியாகிவிட்டது.

நன்கொடையாளர்கள்தான் தொடர்பில் வருவதில்லை என்றால் எழுபது சதவீத பயனாளிகளும் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. அதுதான் பிரச்சினை. ‘தயவு செஞ்சு ரசீதை அனுப்பி வைங்க’ என்று சொல்லித்தான் காசோலையைக் கொடுத்திருப்பேன். ஆனால் அனுப்பி வைத்திருக்கமாட்டார்கள். இப்பொழுது தேடினால் கிடைப்பதில்லை. அடுத்தடுத்த வருடங்களில் இதையெல்லாம் ஓர் ஒழுங்குமுறைக்குக் கொண்டு வராமல் தொடர்வது என்பது கண்களைக் கட்டி காட்டில் விட்ட மாதிரிதான். என் புருஷனும் கச்சேரிக்குப் போகிறான் என்று இறங்கிச் செய்யக் கூடிய வேலை இல்லை. 

பட்டயக்கணக்கர் அலுவலகத்தில் விவரங்களைக் கொடுத்திருக்கிறேன். எப்படியும் இன்னமும் இருபது கேள்விகளாகக் கேட்பார்கள் என்று நினைக்கிறேன். எல்லாவற்றையும் தொகுத்து வருமான வரித்துறையில் தாக்கல் செய்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். இனி அடுத்ததாக 2015-16 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு விவரங்களை செப்டம்பருக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கெடு விதித்திருக்கிறார்கள். அது மலை மாதிரியான வேலை. ஐநூறுக்கும் அதிகமான நன்கொடையாளர்கள். தாவு தீரப் போகிறது. அதனால் தேர்தலுக்குப் பிறகு அந்த விவரங்களைத் திரட்டுகிற வேலையை ஆரம்பிக்கலாம் என்று யோசனையாக இருக்கிறது. 

கடந்த சில நாட்களாக யாருக்கும் காசோலை அனுப்பவில்லை. ‘குறைந்தபட்சம் கடந்த ஆண்டுக்கான விவரங்களை ரெகுலரைஸ் செஞ்சுக்குங்க’ என்று பட்டயக்கணக்கர்தான் சொல்லியிருந்தார். அது சரியாகப்பட்டது. இனி எப்பொழுதும் போலத் தொடரலாம்.

சில மருத்துவ உதவிகளில் மனதைக் கொஞ்சம் இறுக்கமாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. மிகக் கொடூரமான நோய். அதிக செலவு என்றெல்லாம் சொல்லும் போது சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் பயனாளிகளின் வயது அறுபதைத் தாண்டியிருந்தால் அறக்கட்டளையிலிருந்து உதவ வேண்டியதில்லை என நினைக்கிறேன். இது சரியா தவறா என்று குழப்பமாக இருக்கிறது. உயிர் என்றால் உயிர்தான். வயதை எதற்கு பார்க்க வேண்டும் என்கிற குழப்பம்தான். ஆனால் இப்படி எல்லோருக்கும் உதவுவது சாத்தியமில்லை. நிறையக் கோரிக்கைகள் வருகின்றன. நாசூக்காக மறுத்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகள், இளம் வயதினர், குடும்பத்தில் சம்பாதிக்கக் கூடிய மனிதர்கள் என்று சில வகைப்பாடுகளில் வரக் கூடியவர்களுக்கு மட்டும் மருத்துவ உதவிகளைச் செய்யலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்வது சரியாக இருக்கும். நிசப்தம் அறக்கட்டளை மிகச் சிறியது. அதனால் நாம் நிச்சயமாகக் கை கொடுத்தே தீர வேண்டும் என்கிற சூழலில் இருப்பவர்களுக்கு மட்டும் உதவுவதுதான் சரியாக இருக்கும்.

நேற்று நண்பர் ஒரு பயனாளியைப் பரிந்துரை செய்திருந்தார். ஐம்பதைத் தாண்டிய மனிதர் அவர். அவருக்கு ஒரே பெண். அவளுக்கும் திருமணமாகிவிட்டது. இந்த மனிதர் நிறையக் குடிப்பாராம். இப்பொழுது ஈரலில் பிரச்சினை. ‘நீங்க போய்க் கேளுங்க..பணம் கொடுப்பாங்க’ என்று அவருடைய மச்சானை நம் நண்பர் அனுப்பி வைத்துவிட்டார். நேரில் பார்த்து விவரங்களைச் சொல்கிறேன் என்று மச்சான் சொன்னார். அலுவலகத்தின் முகவரி கொடுத்து வரச் சொன்ன பிறகு மேற்சொன்ன விவரங்களை எல்லாம் சொல்கிறார். எப்படி உதவ முடியும்? முடியாது என்று சொல்லவும் தயக்கம். விவரங்களை அனுப்பி வையுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். அனுப்பி வைத்துவிட்டு இனி நிச்சயமாக பத்து முதல் பதினைந்து முறையாவது அழைப்பார்கள். பதில் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். இதுதான் சங்கடம். அதனால்தான் சில விதிமுறைகளை உறுதியாகப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. அவ்வப்போது இத்தகைய பிரச்சினைகளை எழுதி நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டு ட்யூன் செய்து கொள்வது நல்லது. ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் அடுத்த முறை யாராவது வரும் போது ‘இப்படித்தான் ரூல்ஸ் இருக்கிறது’ என்று சொல்லிவிடலாம்.

இப்பொழுது அறக்கட்டளையில் இருபத்தேழு லட்ச ரூபாய் இருக்கிறது. ஜூன்,ஜூலை மாதங்கள் கல்லூரி சேர்க்கைக்கான மாதம். கல்வி உதவித் தொகைகளைச் செய்யலாம். அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கிறவர்களுக்கு மட்டும்தான் உதவி என்பதில் எந்த மாற்றமுமில்லை. ‘எங்க வீட்டில் வேலை செய்யறாங்க..அவங்க பொண்ணு ஜேப்பியார் காலேஜ்ல படிக்கிறா..ஃபீஸ் கட்ட முடியுமா?’ என்று கேட்டால் காதில் புகை வருகிறது. ஜேப்பியார் கல்லூரியில் எவ்வளவு செலவு ஆகும் என்று கூடத் தெரியாமல்தான் சேர்த்துவிட்டார்களா? எந்த நம்பிக்கையில் சேர்த்தார்கள்? சமாளித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில்தானே சேர்த்திருப்பார்கள்? இத்தகைய பரிந்துரைகளை முகத்தில் அடித்தாற்போல நிராகரிக்கலாம். தனியார் கல்லூரியில் ஒரு மாணவனுக்கு கட்டக் கூடிய தொகையை வைத்து ஐந்து அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு உதவ முடியும். 

பரிந்துரைகள் மிக அவசியமானவை. ஆனால் ஒரேயொரு முறை சுயமாக கேள்விகளைக் கேட்டுப் பார்த்துக் கொள்ளவும். ‘இவங்க சமாளிச்சுக்குவாங்களே’ என்று தோன்றினால் தயங்காமல் நீங்களே நிராகரித்துவிடுங்கள். சரியான ஆட்கள் என்றால் கட்டாயமாக உதவுவோம். அறக்கட்டளையில் இருக்கும் ஒவ்வொரு ரூபாயும் தகுதியான ஆட்களுக்கு மட்டும் போய்ச் சேரட்டும். அப்படி இல்லையென்றால் இந்த அறக்கட்டளைக்காக இவ்வளவு வேலைகளைச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அள்ளிவீசிவிட்டுப் போய்விடலாமே! 

6 எதிர் சப்தங்கள்:

Sowmya said...

Hello Manikandan,

I'm currently following u on fb.After reading all ur articles i'm wondering how ur managing this along with ur official and personal life.great job.I worked with IT firms and currently in US.since am not working, i have more free time left and just wanna help u in ur charitable trust activities.if u wish,just give me some work so that ill do it..i know it will definitely create a suspection if a stranger comes for help.But i wanna share ur work load.if u wish,give me any documentation or any followups.i'm ready to help u.

Regards
Sowmya

சேக்காளி said...

//நிறையக் குடிப்பாராம். இப்பொழுது ஈரலில் பிரச்சினை. ‘நீங்க போய்க் கேளுங்க..பணம் கொடுப்பாங்க’ என்று அவருடைய மச்சானை நம் நண்பர் அனுப்பி வைத்துவிட்டார்//
கிராஜுவிடி, ப்ராவிடண்ட் பண்டு,காப்பீடு எல்லாம் அவரு முழு நேர ஊழியரா வேல பா(ர்)த்த டாஸ்மாக் ல தான் கெடைக்கும் னு சொல்லி டாஸ்மாக் க்குக்கு அனுப்பி விடுங்க.

Vaa.Manikandan said...

நன்றி செளம்யா,

உண்மையில் அறக்கட்டளை சம்பந்தமான வேலைகளை எப்படி அடுத்தவர்களிடம் ஒப்படைப்பது என்று தெரியவில்லை. உதாரணமாக நன்கொடை அனுப்பியவர்களில் சிலர் மின்னஞ்சல் அனுப்பியிருப்பார்கள். வங்கி ஸ்டேட்மெண்ட்டை வைத்துக் கொண்டு மின்னஞ்சலில் தேடித்தான் நன்கொடையாளர்களின் விவரங்களைத் தேடி எடுக்க வேண்டியிருக்கிறது. இந்த வேலையில் யாராவது உதவுவதாக இருந்தால் vaamanikandan@gmail.com மின்னஞ்சலின் கடவுச் சொல்லைக் கொடுக்க வேண்டியிருக்கும். அது சாத்தியமில்லாதது. அதனால்தான் அத்தனை வேலையையும் நானே செய்தாக வேண்டியிருக்கிறது. தங்களின் அக்கறைக்கு நன்றி. தங்களால் எந்த வகையில் உதவ முடியும் என்று சொல்லுங்கள். நிச்சயமாக யோசிக்கலாம்.

sivaraman75 said...

நிசப்தம் தளத்திற்கென்று ஒரு தனி ஈமயில் அக்கவுண்ட் ஓபன் பண்ணிக்குங்க மணி!

Anonymous said...

Hello Mani,

I would recommend you to use https://freshdesk.com/ (Issue tracking sytem) for sharing your work with others.

Thank You
Santhanam

Unknown said...

Dear Mani, In order to simplify and channelize the process we can use Excel format. It´s a simple but effective tool. You just have to create a table and put details of beneficiaries (name, address, contact, requirement, etc.,) as well as coordinators. Moreover, you can create a code for each beneficiaries. For example, E2016xxxM/F. E-Education, 2016-year, xxx-Number, M/F- Male or Female. Likewise you can replace E with M for medical. If you like we would like to help you to create it and followup. As always we congratulate you for your great efforts Mani.