May 5, 2016

சுந்தரம் எம்.எல்.ஏ

ஈரோடு மாவட்டம் பவானிசாகர்(தனி) சட்டமன்றத் தொகுதியில் கடந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுந்தரம் வெற்றி பெற்றார். அப்பொழுது அதிமுகவின் பலம் அவருக்குத் துணையாக இருந்தது. வெற்றி பெரிய பிரச்சினையாக இல்லை. இந்த முறையும் ம.ந.கூட்டணி சார்பில் சுந்தரம்தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். களத்தில் இறங்கி சுழன்று கொண்டிருக்கிறார்.

அவருடன் தனிப்பட்ட அறிமுகம் எதுவுமில்லை. ஆனால் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். கடந்த வாரம் கூட பவானிசாகரின் தொகுதிக்குட்பட்ட சில ஊர்களுக்குச் சென்று வரும் வாய்ப்புக் கிடைத்தது. தொகுதிக்குள் அவரைப் பற்றி நல்லவிதமாகச் சொல்கிறார்கள். எந்தவிதமான பந்தாவும் காட்டிக் கொள்ளாத பண்பாளர் என்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் என்றால் ஒரு மிடுக்கோடு இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளற்றவர் என்றும் எல்லோரையும் போலவேதான் தானும் என்கிற அகம்பாவமற்ற மனிதர் என்ற முத்திரையை வாங்கி வைத்திருக்கிறார். 

கட்சி சாராத மனிதர்களிடம் இத்தகைய நல்ல பெயரைச் சம்பாதித்து வைத்திருப்பது பெரிய காரியம். ‘இறங்கி வேலை செய்யறாரு’ என்கிறார்கள்.  வங்கிக் கடன் வேண்டும் என்று எந்த மாணவன் கேட்டாலும் வங்கிகளில் போராடி வாங்கித் தந்துவிடுவாராம். பவானிசாகரையும் சத்தியமங்கலத்தையும் தாண்டி அவர் பெயர் பெரிய அளவில் பிரபலம் ஆகவில்லை என்றாலும் உள்ளூருக்குள் இப்படித்தான் பாராட்டுகிறார்கள். எம்.எல்.ஏக்கள் அலுவலகத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ச.ம.உக்களில் ஒருவர். அரசு கட்டிக் கொடுத்த அலுவலங்ளைத் தவிர பவானிசாகர், கடம்பூர் போன்ற உட்பகுதிகளில் வாடகைக்குக் கட்டிடம் பிடித்து அலுவலகம் அமைத்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? சம்பளம் முழுவதையும் கட்சிக்குக் கொடுத்துவிட்டு கட்சி கொடுக்கிற நிதியில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த சுந்தரம் தொகுதி முழுக்கவும் பத்து இருபது பேர்களைத் திரட்டி அவர்களை மக்களுக்கான பணியைச் செய்யும் பகுதி நேர ஊழியர்களாக மாற்றியிருக்கிறார். 


பழங்குடியினக் குழந்தைகளுக்கான கல்விக்காகவும், அந்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் ஏதாவதொரு காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தார். கடந்த ஐந்தாண்டுகளாக மட்டுமில்லாமல் அதற்கு முன்பிலிருந்தே அவர் களப்பணியாளர்தான். உள்ளூரில் அந்த வகையில் ஏற்கனவே பரிச்சயமானவர். சத்தியமங்கலத்தை புலிகள் சரணாலயம் என்று அறிவித்து காலங்காலமாக வாழ்ந்த பழங்குடி மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை வனத்துறை கொண்டு வந்த போது அதை எதிர்த்துக் குரல் கொடுத்தார். அந்த மக்களுக்கான வீடுகளையும் கட்டிக் கொடுத்தார். வீரப்பன் தேடுதலுக்காக வந்து இன்னமும் சத்தியமங்கலத்தின் வனப்பகுதிகளில் அடாவடியாகத் திரியும் அதிரடிப்படையினருக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பியவர் என்பதெல்லாம் சுந்தரத்தின் ப்ளஸ்.

சத்தியமங்கலத்தில் அரசுக் கல்லூரி, புதிய நகர்ப்புற மருத்துவமனை, எட்டு தொடக்கப்பள்ளிகள், அங்கன்வாடிகள், குடிநீர்த் திட்டங்கள் என்று சுந்தரத்தின் செயல்பாடுகளின் பட்டியலை வாசிக்கிறார்கள். 

தொகுதிக்குள் அதிமுக சிதறிக் கிடக்கிறது; திமுக வேட்பாளர் பரிச்சயமில்லாதவர் என்பதெல்லாம் சுந்தரத்துக்கு சாதகம் என்றாலும் வெற்றி பெறுகிற அளவுக்கு தம் கட்டுவாரா என்று பார்க்க வேண்டும். 

சுந்தரத்தின் மீது இரண்டு குற்றச்சாட்டுகளும் உண்டு. தேர்தல் முடிந்தவுடன் ஒரு கார் வாங்கியதாகவும், ஐந்தாண்டுகளாக அதிமுகவின் அனுதாபியாக இருந்ததாகவும் சிலர் சொன்னார்கள். கார் தன்னுடையது இல்லை என்றும் வனப்பகுதிகளுக்குள் சென்று வருவதற்காக வாங்கப்பட்ட அந்தக் கார் இன்னமும் தனது நண்பரின் பெயரிலேயே இருக்கிறது என்பது சுந்தரத்தின் வாதம். ஆளுங்கட்சியாக அதிமுக இருந்த போது அவர்களை அனுசரித்துப் போவது தவறில்லை என்றுதான் நினைக்கிறேன். அந்த விதத்தில் இதைக் குற்றச்சாட்டாகச் சொல்ல முடியாது. 

இது போன்ற சிறு குற்றச்சாட்டைத் தாண்டியும் சுந்தரம் சிறந்த வேட்பாளர் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை. வனங்களும் பழங்குடிகளும் நிறைந்திருக்கும் பவானிசாகர் மாதிரியான தொகுதிகளுக்கு சுந்தரம் மாதிரியானவர்கள்தான் சரியான வேட்பாளர்கள். தொகுதிக்குள் பிரச்சினை வரும் போதெல்லாம் இடத்தில் வந்து நிற்கிற சுந்தரத்தை பவானிசாகர் தொகுதி மக்கள் எவ்வளவு தூரம் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் ஒன்று - சிறந்த வேட்பாளர் ஒருவர் முதன் முதலாகத் தேர்தலில் நின்றால் அவருக்கு முழுமையான ஆதரவைத் தர வேண்டும். ஒரு முறை வென்று அடுத்தடுத்த தேர்தல்களில் அவர் களம் காணும் போது தொகுதிக்கு வெளியில் இருப்பவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை என நினைப்பேன். கடந்த ஐந்தாண்டுகளில் அவர் செய்த வேலையும் மக்களுடனான அணுகுமுறையுமே அவரை வெற்றி பெறச் செய்துவிட வேண்டும். தோற்கிறார் என்றால் ஏதோவொரு இடத்தில் சிக்கல் என்று அர்த்தம். சுந்தரம் அவர்களுக்கு இது இரண்டாவது தேர்தல். திமுக மற்றும் அதிமுக என்ற இரண்டு யானைகளை எதிர்த்துக் களம் காண்கிறார்.

பக்கத்துத் தொகுதியான கோபிச்செட்டிபாளையத்தின் கள நிலவரம் கிட்டத்தட்ட தெளிவாக இருக்கிறது. ‘செங்கோட்டையனை ஜெயிக்கவே முடியாது’ என்கிற நிலைமை மாறி ‘சரவணன் ஜெயித்துவிடுவார்’ என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் முழுமையாக நம்ப முடியாது. இன்னமும் அவகாசம் இருக்கிறது. பட்டுவாடா, அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்ற பெரும் கண்டங்கள் இருக்கின்றன. சரவணனுக்கு இருக்கும் அதே கண்டங்கள்தான் சுந்தரத்துக்கும். சமாளித்து மேலே வந்துவிட்டால் இத்தகைய வேட்பாளர்கள் மிகச் சிறந்த முன்னுதாரணத்தை உருவாக்குவார்கள். பணமும் அதிகாரமும் மட்டுமே தேர்தலில் வெற்றியைக் கொடுத்துவிடாது என்பதைக் கட்சிகள் புரிந்து கொள்ளத் தொடங்கக் கூடும். அடுத்த தேர்தலில் பத்து சதவீதமாவது பணத்துக்கும் சாதிக்கும் முன்னுரிமை கொடுக்காமல் வேட்பாளர்களின் தகுதிகளுக்கு கட்சிகள் முன்னுரிமை கொடுக்கக் கூடும். இதைத்தானே மாற்றம் என்று சொல்வோம்?

பவானிசாகரின் கள நிலவரம்  பற்றி முழுமையாகத் தெரியவில்லை. கட்சி ரீதியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, மதிமுக, விசிக ஆகியன வலுவாக இருப்பினும் அதிமுக மற்றும் திமுகவை உடைக்கிற அளவுக்கு ஆற்றல் மிக்கதா என்று தெரியவில்லை. வேட்பு மனுத்தாக்கலின் போது சுந்தரத்துக்கு ஆதரவாக ஏகப்பட்ட மக்கள் கூடியதாகச் சொன்னார்கள். தொகுதிக்குள் அவரது பரப்புரைக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் கேள்விப்படுகிறேன். கடந்த ஐந்தாண்டுகளில் அவர் செய்த நல்ல காரியங்களின் அடிப்படையிலேயே சுந்தரம் வென்று விட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வாழ்த்துக்கள்!

எந்த வேட்பாளரையும் குருட்டுத்தனமாக ஆதரிக்கவும் வேண்டியதில்லை. முரட்டுத்தனமாக எதிர்க்கவும் வேண்டியதில்லை. சுந்தரம் பற்றிய விவரங்கள்- பாஸிடிவ், நெகடிவ் எதுவாக இருந்தாலும் விவாதிக்கலாம். விவாதங்கள் மட்டுமே திறப்புகளை உருவாக்கும்!

3 எதிர் சப்தங்கள்:

bons alias bondamani said...

//பவானிசாகரின் கள நிறுவனம்

"பவானிசாகரின் கள நிலவரம்"

ABELIA said...

உங்கள மாதிரி நாலு பேர் இருந்தா போதும்... தமிழ்நாடு முழுசும் நல்ல வேட்பாளர்கள் யாருன்னு அடையாளம் கண்டுபிடிச்சி ஓட்டுப் போட்டுடலாம்...நல்லது செய்றீங்க..! வாழ்த்துகள்!

”தளிர் சுரேஷ்” said...

எங்க பொன்னேரி தொகுதியிலே திமுக, அதிமுக வேட்பாளர்களைத் தவிர மற்றவர்கள் யாருன்னே தெரியலை! இந்த ரெண்டு பேருக்குமே ஓட்டு போட விருப்பம் இல்லாதவங்க மத்தவங்களை அறிமுகம் இல்லாததால போட தயங்கறாங்க! இதுதான் திமுக அதிமுக இரண்டு கட்சிக்கும் மாற்று தேடுகையில் ஏற்படும் நிஜம்! பெரிய கட்சிகளை எதிர்க்கும் சிறு கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை மக்களிடம் நெருங்கி பழகி களப்பணி ஆற்றச்செய்ய வேண்டும். அப்படி பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் பெரிய மாற்றங்கள் நிகழும். இல்லையேல் இந்த இரண்டு திருடர்கள் மாற்றி மாற்றி திருடவே வழி வகுக்கும்.