May 3, 2016

கட்டமைப்பு

சில இளைஞர்களிடம் பேசும் போது ஆச்சரியமாக இருக்கிறது. அரசியல் மாற்றத்தை உடனடியாகத் தங்களால் உருவாக்கிவிட முடியும் என்று முழுமையாக நம்புகிறார்கள். சிரித்துக் கொள்வேன். அது அவ்வளவு எளிமையான காரியமா என்ன? டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியமைத்தது போல தமிழகத்திலும் மாற்றத்தைக் ஒரே வருடத்தில் கொண்டு வந்துவிடலாம் என்பதைப் போன்ற அபத்தம் வேறொன்றும் இருக்க முடியாது. டெல்லி வேறு; தமிழ்நாடு வேறு. அப்துல்கலாமின் உதவியாளர் பொன்ராஜ் மாதிரியானவர்கள் கூட இடையிடையே புகுந்து காமெடி செய்யும் போது ‘எப்படி இவ்வளவு மேம்போக்காக யோசிக்கிறார்கள்’ என்று தோன்றும். இளைஞர்கள் களமிறங்குவது, பொன்ராஜ் மாதிரியானவர்கள் அரசியல் பேசுவதையெல்லாம் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அடிப்படையான புரிதல் இருக்க வேண்டும். தொடர்ந்து இயங்க வேண்டும் (Consistency). அருகில் இருக்கும் நான்கு பேர்கள் ஏற்றிவிடுகிறார்கள் என்பதற்காக களமிறங்கிவிட்டு பிறகு ஆர்வம் வடிந்தவுடன் காணாமல் போய்விடுவது அடுத்தடுத்து வரக் கூடியவர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.

தமிழகத்தில் ஏன் திமுகவையும் அதிமுகவையும் தவிர வேறு எந்தக் கட்சிகளும் பெரிதாகச் சோபிப்பதில்லை என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு ‘அவங்க ரெண்டு பேரும் அடுத்தவங்களை வளர விடுறதேயில்ல’ என்று பேசி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவதுதான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் அதைக் காரணமாகவே சொல்ல முடியாது. தமிழகத்தின் அரசியல் கட்டமைப்பு மிகச் சிக்கலானது. திமுக மற்றும் அதிமுக கட்சியினரின் கட்டமைப்புக்கு அருகாமையில் கூட பிற கட்சிகளால் நெருங்க முடியவில்லை என்பதுதான் மிக முக்கியமான காரணம். கிராமப்புறங்களின் அடிமட்டம் வரைக்கும் இந்த இரண்டு கட்சிகளும் மிக வலுவாக இருக்கின்றன. கிட்டத்தட்ட தமிழகத்தின் அத்தனை சிற்றூர்களிலும் இவர்களுக்கு கிளைச் செயலாளர்கள் இருக்கிறார்கள்.  இப்படியொரு பரவலான கட்டமைப்பை வேறு எந்தக் கட்சியாலும் சரியாக உருவாக்கிக் கொள்ளவே முடியவில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் இவர்கள் இருவர் மட்டுமே மாற்றி மாற்றி நாற்காலியைக் கைப்பற்றுகிறார்கள்.

உதிரியான தனிப்பட்ட மனிதர்களாலும், சிறு அரசியல் கட்சிகளாலும் தமிழக அரசியலில் ஏன் சோபிக்க முடிவதில்லை?

பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியில் கே.எல்.ராமசாமி என்பவர் சுயேட்சையாகக் களம் கண்டார். பழைய எம்.எல்.ஏ. நல்ல மனிதர். மக்களுக்காக போராடுகிறவர் என்றெல்லாம் பேசினார்கள். எனக்குத் தெரிந்து குறைந்தபட்சம் மூன்றாயிரத்திலிருந்து நான்காயிரம் பேராவது வேலை செய்தார்கள். வேலை செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் அமைப்பு ரீதியாக எந்தப் பிணைப்புமில்லாத உதிரிகள். எங்கே பார்த்தாலும் அவருடைய தென்னை மரச் சின்னத்தை வரைந்து வைத்திருந்தார்கள். தேர்தல் வந்தது. கே.எல்.ஆர் வென்றுவிடுவார் என்றார்கள். கடைசியில் வெறும் ஏழாயிரத்துச் சில்லரை வாக்குகள் வாங்கித் தோல்வியடைந்தார். 

தனிப்பட்ட செல்வாக்குடைய மனிதர்கள் தேர்தலில் சுயேட்சையாக நின்று தோற்ற வரலாறுகள் நிறைய உண்டு. வெள்ளகோவில் துரை.ராமசாமி உடனடியாக நினைவுக்கு வருகிறார். மிராஸ்தார், ஜமீன், உள்ளூரில் பெரும் செல்வாக்குடைய மனிதர் என்றார்கள். மிக மோசமாகத் தோல்வியடைந்தார். ஆர்.எம்.வீரப்பன், வாழப்பாடி ராமமூர்த்தி, திருநாவுக்கரசர் என்று அனுபவஸ்தர்கள் கூட கட்சிகளைத் தொடங்கிக் கரைந்து போனதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கையில் கொஞ்சம் காசும் வெளிமட்டத் தொடர்பும் இருந்தால் கட்சியைத் தொடங்கிவிடலாம். ஆனால் கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்த அவை மட்டுமே போதுமானதில்லை. தொடர்ந்த உழைப்பும் அணுகுமுறையும் அவசியம். இவர்களைப் போன்றவர்கள் தோல்வியடைந்ததற்கு அமைப்பு ரீதியாகக் கட்சியை பலப்படுத்த முடியவில்லை என்பது முக்கியமான காரணம். மதிமுக, தேமுதிக என்று எதிர்கால விடிவெள்ளிகளாகப் பார்க்கப்பட்ட கட்சிகள் கூட ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து உருகிக் கொண்டேதான் வந்திருக்கின்றன. 

சென்னையிலும், கோயமுத்தூரிலும், திருநெல்வேலி டவுனிலும் அமர்ந்து கொண்டு எதை வேண்டுமானாலும் யோசிக்கலாம். ஆனால் ஏளூரிலும், கொண்டயம்பாளையத்திலும், குறிச்சிக்குளத்திலும் இருக்கிற நிதர்சனம் வேறு விதமானது. இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் அரசியலுக்குள் கால் வைத்தால் வாலில் வறண்ட ஓலையைக் கட்டித் துரத்தியடிப்பார்கள். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் அரசியலில் மாற்றம் கொண்டு வருவோம் என்பதெல்லாம் நடக்காத காரியம். 

வேட்பாளர் நல்லவனோ கெட்டவனோ- தலைமை அறிவித்துவிட்டது என்பதற்காக ஒவ்வொரு கிளையிலும் வார்டுச் செயலாளர் வேலை செய்வான். தம் கட்டி பத்து வாக்குகளையாவது திரட்டிக் கொடுப்பான். அதனால்தான் திமுகவிலும் அதிமுகவிலும் எந்த வேட்பாளர் நின்றாலும் கட்சிக்கான வாக்குகள் என முப்பதாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வாக்குகள் வரை விழுகின்றன. அதற்கு மேலான வாக்குகளைத் திரட்டுவதில்தான் பிற சாமர்த்தியங்கள் எல்லாம். மற்ற வேட்பாளர்கள் எவ்வளவுதான் நல்லவன் என்றாலும் அந்தந்த வீதிக்காரனின் ஆதரவில்லாமல் கிராமப்புறங்களில் இரண்டு வாக்குகளைப் புரட்டுவதே கூட மிகப்பெரிய சாதனைதான். அதனால்தான் சுயேட்சைகளும் சிறுகட்சிகளும் பத்தாயிரம் வாக்குகளை வாங்குவதே கூட அபாரமாகப் பேசப்படுகிறது.

வாட்ஸப்பிலும், ஃபேஸ்புக்கிலும், விகடனிலும், தி இந்துவிலும் எழுதப்படுகிற செய்தி கோபி டவுன் வரைக்கும் செல்லலாமே தவிர அதைத் தாண்டி வெள்ளாளபாளையத்தை அடையாது. இந்த இடத்தில்தான் கட்சிக்காரன் அவசியமாகிறான். அவனுடைய உதவி தேவையானதாகிறது.

அரசியலில் ஆர்வமிக்க இளைஞர்கள் வெறும் தேர்தல் காலத்தில் மட்டும் உணர்ச்சிவசப்பட்டு எதையும் சாதிக்க முடியாது. கிராமப்புற கட்டமைப்புகளைப் புரிந்து அங்கேயிருக்கும் வாக்காளர்களின் மனநிலையைத் தெரிந்து கொண்டால் மட்டுமே சாத்தியம். அமைப்பு ரீதியாகத் திரளாமல் அரசியல் மாற்றங்கள் என்பதெல்லாம் கானல் நீர்தான். நினைத்தேன் கவிழ்த்தேன் என்று துரும்பைக் கூடக் கிள்ளிப் போடுவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க போன்ற கட்சிகள் பரவலான அங்கீகாரத்தைப் பெற முடியாவிட்டாலும் தத்தம் அளவில் அமைப்பு ரீதியில் வலுவாக இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அத்தகைய கட்டமைப்பை ஒரே இரவில் உருவாக்கிவிட முடிவதில்லை. தொடர்ந்த உழைப்பு அவசியம். 

நாம் தமிழர் கட்சியைப் பற்றி நிறையப் பேர் கேட்கிறார்கள். இதுதான் அவர்களின் முதல் தேர்தல். என் தனிப்பட்ட கணிப்பில் அவர்களால் இந்தத் தேர்தலில் எந்தவிதமான பெரிய சலனத்தையும் உருவாக்கிவிட முடியாது. படித்த நகர்ப்புற இளைஞர்களிடையே ஓரளவு கவனம் பெறுவார்களே தவிர வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மிகவும் பின் தங்கித்தான் இருப்பார்கள். மேற்சொன்ன அதே காரணம்தான் - கிராமப்புறங்களில் நாம் தமிழர் கட்சிக்கென்று எந்தக் கட்டமைப்பும் இல்லை. இந்தத் தேர்தலை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு சற்றேனும் வலுப்படுத்தி அடுத்தடுத்த இரண்டு மூன்று தேர்தல்களில் இதே உற்சாகத்துடன் களம் கண்டால் தமக்கான ஒரு கவனத்தை பொதுமக்களிடமிருந்து பெற முடியும். தோல்வியடைந்த பிறகும் கட்சித் தொண்டர்களின் உற்சாகத்தை வடியவிடாமல் காக்கும் திறன் வாய்ந்த தலைவராக சீமான் இருக்கும்பட்சத்தில் இது சாத்தியமாகக் கூடும்.

இளைஞர்கள் தேர்தல் சமயங்களில் மட்டும் உணர்ச்சிவசப்படுவதும் முடிவு வந்தவுடன் ‘எல்லாமே இப்படித்தான்...மோசம்’ என்று ஒதுங்கிக் கொள்வதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. செயல்படுவது என்பது இரண்டாம்பட்சம். அதற்கு முன்பாகப் புரிந்து கொள்ள நமக்கு நிறைய இருக்கின்றன. வெறும் இணையமும் சமூக ஊடகமும், அச்சு இதழ்களும் மட்டுமே நமக்கு எல்லாவற்றையும் புரியச் செய்வதில்லை. புரிந்து கொண்டதாக நினைத்தால் அது மடத்தனம். களத்தில் இறங்கினால் மட்டுமேதான் சாத்தியம். தேர்தல்கள் என்பவை நம் பகுதியை நாம் முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருகின்றன. இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் குள்ளப்பநாய்க்கனூருக்கும், அத்தியப்பகவுண்டன் புதூருக்கும் எதற்காகச் செல்லப் போகிறோம்? அப்படி நம் பகுதியில் இருக்கும் சிற்றூர்களின் அமைப்பையும் தேவைகளையும் புரிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டு அரசியல் குறித்து எப்படிப் பேச முடியும்? அரசியல் என்பது எப்பொழுதும் செயல்பாட்டிற்கானது மட்டுமில்லை. தேர்தலில் நின்று வெல்வது மட்டுமே அரசியல் இல்லை. அது புரிந்து கொள்ளுதலுக்குமானதுதான். It starts at micro level.

7 எதிர் சப்தங்கள்:

MS ஆனந்தம் said...

மிகச்சரியான கருத்துக்கள்.. இளைஞர்கள் பலர், ஈசல் போல ஒரே தேர்தலில் துவங்கி ஒரே தேர்தலில் காணாமல் போகின்றனர்

Anonymous said...

கட்டமைப்பு என்றில்லை சிறுநகர-கிராமப்புற மக்களுடைய அன்றைய அடிப்படை தேவைகளுக்காக ஒருகாலத்தில் போராடிய கட்சிகள் காங்கிரஸ் (சுதந்திரம், சமூக போராட்டம்), திமுக (சமூக நீதி), அதிமுக (எம்ஜியார், சத்துணவு), பமக (வன்னியர் இடஒதுக்கீடு). இன்றய கட்சிகள் தேமுதிக முதற்கொண்டு யாரும் மக்களுடைய பிரச்சினைகளுக்கு போராடுவதே இல்லை (விலைவாசி, மின்சாரம், சமூகம், வளர்ச்சி). அப்படிப்பட்ட போராட்டங்களை செய்யும்போது தாமகவே மக்கள் கட்சிகளில் சேர்ந்து வாக்களிப்பார்கள்...

Unknown said...

நீங்கள் நாம் தமிழர் கட்சி வீடியோகளையோ சீமானின்
சமீபத்திய பேச்சுகளையோ சரியாக கேட்பதில்லை
என்று நினைக்கிறேன்.
வென்றால் மகிழ்சி, தோற்றால் பயிற்சி, தொடரும்
முயற்சி என்று சொல்லிதான் தேர்தலிலேயே
நிற்கிறார்கள்.
இரண்டாவதாக கட்டமைப்பு தமிழக அரசியல்
கட்சிகளான திமுக அதிமுக காங்கிஸ்.. போன்ற
கட்சிகளையே தன் சொந்த முகவரியாக கொண்ட
ஏராளமானோர் தமிழகத்தில் இருக்கிறார்கள்.
உள்ளாட்சி பதவிகள்,பார் ஏலம், நகராட்சி
கடை கக்கூஸ் ஏலம், மணல் வசூல், கோவில்
அறங்காவலர், வக்பு வாரியம்.. exct exctra..
இப்படி பல லட்சகணக்கானோருக்கு வாழ்வாதாரமாகவும்
சமூக அந்தஸ்தாகவும் இக்கட்சிகள் இருக்கிறது.
இதில்லாமல் நான் அதிமுகவுக்குதான் போடுவேன்,
திமுகவுகுதான் போடுவேன் என்று சொல்லும்
அப்பாவி தொண்டர்களின் பெருங்கூட்டம்.
இவையே இக்கட்சிகள் உயிர்போடிருக்க காரணம்.
இதை தெளிவாக புரிந்து கொண்டே சீமானும்
வென்றால் மகிழ்சி, தோற்றால் பயிற்சி, தொடரும்
முயற்சி என்று களம் காண்கிறார்.
என்னை பொருத்தவரை நான் பல தேர்தல்களை
பார்திருக்கறேன். ஒவ்வொரு தேர்தல்களிலும்
தேர்தல் காலங்களில் மக்கள் ஆதிமுக திமுக வாக
பிரிந்து என் கட்சிதான் ஜெயிக்கும் என்று மோதி
விவாதிப்பார்கள்
ஆனால் இந்த தேர்தலில் ஒரு ஆச்சரியமான
மாற்றம் கட்சி சார்பற்றவர்கள் இந்த கட்சிகளை
விமர்சிக்கும் போது கட்சிகாரர்களே அமைதியாக இருக்கிறார்கள்.நீங்கள் பெங்களூரில் இருப்பதால்
உங்களுக்கு சிலது தெரியவில்லை என நினைக்கிறேன்.
என் பெரியம்மா பேரன் என் பெரியம்மாவிடம்
நீங்கள் யார் வோட்டுக்கு காசு கொடுத்தாலும்
வாங்கிங்க ஆத்தா ஆனா வோட்டு மெழுகுவர்த்திகுதான்
போடனும்னு சொல்றான்,
இன்று இணையமும் whats up ம் கோபி டவுனுக்கு மட்டும்
வரவில்லை மணிகண்டன். வெள்ளாளபாளையத்துக்கும்
வந்து விட்டது.
நான் இந்த தேர்தலில் நாம் தமிழர் ஜெயிக்கும்னு
சொல்ல வரல. ஆனா கடந்த காலத்தின் அளவு
கோல்களை இந்த தேர்தலில் பயன்படுத்தாதீர்கள்.

புத்தி ஜீவிகளின் தற்சோர்வும், விதண்டாவாதமுமே
தற்போதைய தமிழகத்தின் பிரச்சனையாக இருக்கிறது.

நாம் தமிழர் வெல்கிறதா வீழ்கிறதா என்பதை பற்றி
ஏன் கவலை கொள்கிறீர்கள்
நாம் தமிழர் ஜெயிக்க வேண்டுமா? தோற்க வேண்டுமா
அதை சொல்லுங்கள்.

Vaa.Manikandan said...

நாம் தமிழர் வீழ்கிறதா வாழ்கிறதா என்று எங்கே பேசியிருக்கிறேன்? இந்த முறை எது நடக்கப் போகிறது என்று சொல்கிறேன். பயிற்சியாக இருக்கப் போகிறது என்றுதான் நானும் சொல்லியிருக்கிறேன்.

யூடியூப்பும், வாட்ஸப்பும், ஃபேஸ்புக்கும் சலனத்தை ஏற்படுத்தாலமே தவிர வெற்றியை நிர்ணயிக்கப் போவதில்லை. இன்னமும் காலம் ஆகும்.

கோபியில் 42 பஞ்சாயத்துகள் இருக்கின்றன, 140 காலனிகள் இருக்கின்றன. எங்கே யார் பலமாக இருக்கிறார்கள் யார் சரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் அணுக்கத்தில் இருந்து பார்த்துவிட்டுத்தான் பேசுகிறேன். என்னதான் ஆனாலும் இந்தச் சின்னம்தான் என்று உறுதியாகவும் செல்போன் வாடையே இல்லாத பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களைச் சந்தித்துவிட்டுத்தான் இதை எழுதியிருக்கிறேன். படித்தவர்கள், மேம்போக்கானவர்கள் தேர்தலில் பொருட்டே இல்லை. அடிமட்ட மக்களைப் பற்றி யோசிப்போம்.

பெங்களூரில் நான் இருப்பதாக நீங்கள் மட்டும்தான் சொல்கிறீர்கள். இதை எங்கள் வீட்டில் இருப்பவர்கள் சொன்னால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

Unknown said...

திரு மணிகண்டன் செல்போன் வாடையே இல்லாத
பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் என்று நீங்கள்
சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. கழிப்பறை
இல்லாத பல்லாயிரக்கணக்கான வீடுகள் என்று
வேண்டுமானால் சொல்லுங்கள்.
நாம் தமிழர் வீழ்கிறதா வாழ்கிறதா என்று எங்கே பேசியிருக்கிறேன்? இந்த முறை எது நடக்கப் போகிறது என்று சொல்கிறேன். பயிற்சியாக இருக்கப் போகிறது என்றுதான் நானும் சொல்லியிருக்கிறேன் என்கிறீர்கள்.
எது நடக்கப் போகிறது என்று பேசி என்ன பயன்?
அதற்குதான் டீகடை அரசியல் வாதிகள் இருக்கிறார்களே.
என்ன நடக்க வேண்டும் என்றுதான் நாம் பேச வேண்டும்.
பெருத்து நிற்கிற திராவிட பூதங்களை மேலும் வலுவடையய
வைக்கதான் உங்களை போன்றோரின் கணிப்புகள் உதவும்.
இது உற்சாகத்தோடு நிற்கிற இளைஞர்களையும்
களத்திலிருந்து வெளியேற வைக்கவும், இரு கட்சிகளையும்
மேலும் வலுபடுத்தவுமே உதவும்.
உங்களை போன்ற புத்திஜீவியாக இல்லாவிட்டாலும்
ஓரளவு அரசியல் ஞானம் இருந்தாலும் அதை கொண்டு
ஏதாவது செய்ய முடியாதா என்று இந்த வெயிலில்
பரப்புரை செய்கிற இளைஞர்களின் உற்சாகத்தை குறைப்பதாகத்
தான் உங்களை போன்றோரின் எழுத்துகள் அமையும்.
இன்று தமிழ் தேசிய அரசியலுக்கு களத்தில் இறங்கி
வேலை செய்பவர்கள் தான் தேவை.
புத்திஜீவிகள் தங்கள் எழுத்து அறிவின் மூலம் உருவாகிற
மாற்று அரசியலையும் பின்னடைய வைப்பார்கள்.
பின் அவர்களே அடுத்த ஐந்து வருடத்திற்கு தமிழர்கள்
அரசியல் விழிப்பற்றவர்கள் என்று திட்டிகொண்டிருப்பார்கள்.
யதார்தத்தை எழுதுகிறேன் என்கிறீர்கள்.
அதுதான் 50 வருடமாக நாம் பார்த்து கொண்டுதானே
இருக்கிறோம்
உங்கள் எழுத்து கொண்டு அந்த களநிலையை துளியாவது
மாற்ற முயற்சிகலாமே.

Vaa.Manikandan said...

திரு. நல்லசாமி,

மாற்றம் தேவை என்பதற்காக முதல் தேர்தலிலேயே சீமானை ஆதரிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. மேடையில் பேசுவதையும் யூடியூப்பில் பேசுவதையும் வைத்துக் கொண்டு அவரைப் பற்றிய எந்த முடிவுக்கும் வர முடியவில்லை என்பதுதான் நிஜம். அப்படி வர வேண்டிய அவசியமுமில்லை.

இன்னமும் அவகாசமிருக்கிறது. சாதியப்பிரச்சினை உள்ளிட்ட சமூகத்தில் புரையோடிக்கிற விஷயங்கள், சமூக, அரசியல் விவகாரங்களில் பேச்சோடு நில்லாமல் களத்தில் இறங்கட்டும். பிறகு பார்க்கலாம்.

நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது போல அரசியல் மாற்றம் என்பதனை மேல்மட்டத்திலிருந்து பார்ப்பதில்லை. அப்படிப் பார்ப்பதாக இருந்தால் மேடைப்பேச்சும், யூடியுப்பும், அறிக்கைகளும் போதும். மயங்கி ஆதரவைத் தெரிவித்துவிடலாம். அரசியல் சமூக மாற்றங்களை கீழேயிருந்து மேல் நோக்கிப் பார்க்க விரும்புகிறேன். அதற்கு களத்தில் செயல்பட வேண்டும். உள்ளூர் பிரச்சினைகளில் இறங்கிப் போராடுவதைப் பார்க்க வேண்டு. அந்தக் களச் செயல்பாடுகளைப் பொறுத்து ஆதரிக்கலாம்.

இன்னொரு விஷயம்- உண்மையான நோக்கத்தோடு களத்தில் இறங்கியிருக்கும் இளைஞனை தேர்தல் தோல்விகள் துளியும் அசைத்துப் பார்த்துவிடாது. அப்படியொருவன் ஓய்ந்து போகிறான் என்றால் அரசியல் என்பது அவனுக்கான களமில்லை என்று அர்த்தம். அவன் ஒதுங்குவதில் எனக்கு எந்தக் கவலையுமில்லை. அவன் ஓய்ந்துவிடக் கூடாது என்பதற்காக தொண்டையில் நரம்பு புடைக்க பேசுகிற மனிதர்களையெல்லாம் ஆதரிக்க முடியாது.

விவாதம் என்பது விரிவானதாக இருக்க வேண்டும். அதன் நோக்கம் திறப்புகளை உண்டாக்குவதாக இருக்க வேண்டும். ‘நீ திராவிடக் கட்சிகளை எதிர்த்து தமிழ் தேசியவாதிகளை ஆதரிக்க வேண்டும்’ என்று மூலையில் தள்ளிவிடுவதாக இருக்கக் கூடாது. உங்களின் நோக்கம் அப்படித்தான் இருக்கிறது.

நன்றி.

Unknown said...

தமிழ் இனத்தில் உள்ள அறிவுஜீவிகளுக்கு கமயூனிசம்
முன்நவுனத்துவம் பின்நவீனத்துவம் எல்லாம்
தெரிகிறது.
எனக்கு தெரிந்து இந்தியாவிலேயே உலக
நடப்புகள் அனைத்தையும் அறிந்தவர்கள்,
தர்கம் செய்வதில் வல்லவர்கள் தமிழர்கள் தான்.
யாரையும் விமர்சிப்பார்கள்.
ஆனால் தேர்தல் என்று மட்டும் வந்தால்
ஏதாவது ஒரு சாக்கை சொல்லி கொண்டு
நாட்டை கெடுத்த திமுக அதிமுக காங்கிஸ்
கட்சிகளை ஆதரிப்பார்கள்.