May 23, 2016

மூன்றாம் நதி- ஒலி வடிவம்

மூன்றாம் நதி நாவல் இன்று அச்சுக்குச் செல்கிறது. புத்தகம் ஒரு வாரத்தில் வெளி வந்துவிடும். மிகச் சிறிய நாவல்தான். நூறு பக்கம். சிறுகதை, கட்டுரை எழுதுவதற்கும் நாவல் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. புதினம் எழுதுவதற்கான மனநிலையும் எழுத்தும் வாய்க்கிறதா என்பதை இருநூறு முந்நூறு பக்க நாவலில் பரிசோதித்துப் பார்ப்பதை விடவும் நூறு பக்கங்களில் முயன்று பார்ப்பது சரியாக இருக்கும் எனத் தோன்றியது. ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதிய பிறகு வேணி படித்துப் பார்த்தவுடன் கரிகாலனுக்கு அனுப்பி வைப்பேன். இவர்கள் இரண்டு பேர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப சிற்சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. இருபது அத்தியாயங்களையும் முடித்த பிறகு இன்னும் சில நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன். அதுவொரு மன திருப்தி.


சந்தோஷ் நாராயணன் அட்டை வடிவமைப்பை முடித்து நேற்று அனுப்பி வைத்திருந்தார். வழக்கம் போலவே யாவரும் பதிப்பகம்தான் வெளியிடுகிறது.

‘எப்போ புத்தக வெளியீடு வைத்துக் கொள்ளலாம்?’ என்று கரிகாலன் கேட்டிருந்தார். தேர்தல் களேபரம் முடிந்து புத்தகக் கண்காட்சிக்கான களேபரேம் தொடங்குகிறது. நிறைய வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் இந்த நாவலுக்கு அப்படியொரு நிகழ்ச்சி தேவையில்லை என நினைக்கிறேன். பதிப்பாளர்களுக்கு கூடுதல் செலவுதான். இப்பொழுதெல்லாம் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பெரும்பாலும் பாராட்டித்தான் பேசுவார்கள். நம்மைப் பாராட்டும் போது அரங்குக்குள் குளுகுளுவென்றுதான் இருக்கிறது. வெளியில் வந்து யோசித்துப் பார்த்தால் பதிப்பாளரின் காசில் நாம் கிளுகிளுப்படைந்துவிட்டோம் என்றிருக்கிறது.

வெளியீடு இருந்தே தீர வேண்டுமென்றால் புத்தகக் கண்காட்சியில் சாதாரணமாக வெளியிட்டுவிடலாம். ஆனால் இந்த முறை புத்தகத்தை கூடுதலாக இன்னொரு வடிவத்திலும் வெளியிட பதிப்பாளரிடம் அனுமதி கேட்டிருக்கிறேன். ஆடியோ வடிவம். இந்த வடிவத்தை இலவசமாகவே வெளியிடலாம். ஆனால் எல்லோருக்கும் இந்த ஒலி வடிவம் புரியாது. பார்வையற்றவர்களுக்கான ஒலி வடிவம் இது.

நிசப்தம் தளத்தில் தொடர்ந்து எழுதுவதற்குக் காரணம் என்னவென்று கேட்டால் சில பெயர்கள் சட்டென்று நினைவுக்கு வந்துவிடும். அவற்றில் மிக முக்கியமானவர்கள் திருப்பதி மகேஷ், வினோத் சுப்பிரமணியன் மற்றும் அவர்களது நண்பர்கள் குழாம். இவர்கள் அத்தனை பேரும் விழியிழந்தோர். மகேஷ் ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு திருப்பதியில் வேலை தேடிக் கொண்டிருக்கிறார். வினோத் வங்கி ஒன்றில் சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். மற்ற நண்பர்களில் சிலர் வேலை தேடிக் கொண்டும் சிலர் வெவ்வேறு வேலையிலும் இருக்கிறார்கள். இவர்கள் நிறைய வாசிக்கிறவர்கள். இணையத்தில் கிடைப்பனவற்றை எல்லாம் வாசித்துவிடுகிறார்கள். அதற்கென பிரத்யோகமான மென்பொருள் வைத்திருக்கிறார்கள். அது வாசித்துக் காட்டுவதை காது கொடுத்து கேட்கிறார்கள். ஆனால் PDF வடிவில் இருக்கும் புத்தகங்களை அந்த மென்பொருள் வாசிப்பதில்லை. வேர்ட் அல்லது நோட்பேட் வடிவில்தான் இருக்க வேண்டும்.

மூன்றாம் நதி நாவலை எழுதி முடித்தவுடன் மகேஷூக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர் வாசித்துவிட்டு ‘அபிலாஷ், விநாயகமுருகன், செல்லமுத்து குப்புசாமி எழுதுகிற நாவலை எல்லாம் படிக்கணும்ன்னு ஆசை..ஆனா அது சாத்தியமேயில்லை’ என்றார். விழியிழந்தோர் வாசிப்பதற்கு தோதான வடிவங்களில் தமிழில் எந்தப் புத்தகமும் வெளிவருவதில்லை என்பதுதான் காரணம். மகேஷ் வருத்தப்பட்டார்.

‘மூன்றாம் நதியை உங்களுக்கு புரியற மாதிரியான ஒலி வடிவத்தில் மாத்திக் கொடுங்க’ என்று அவரிடமே கேட்டிருந்தேன். மகேஷ் மாற்றி அனுப்பி வைத்திருந்தார். அதை இப்பொழுது பதிவேற்றிவிடலாம்.

‘இது எல்லாருக்கும் புரியாதே சார்’ என்றார்.

‘எல்லோருக்கும் புரியற மாதிரி இருந்தா பதிப்பாளர் என்னை நடு வீதியில் விட்டு கல்லெடுத்து அடிப்பார்’ என்றேன். அத்தனை பேருக்கும் ஒலி வடிவிலேயே புத்தகத்தைக் கொடுத்துவிட்டால் பிறகு யார் வாங்குவார்கள்? ஆயிரம் பிரதிகளாவது விற்றால்தான் ராயல்டி தருவதாகச் சொல்லியிருக்கிறார். இப்படியேதான் மற்ற இரண்டு புத்தகங்களுக்கும் சொன்னார். ஆனால் இன்னமும் ஒரு பைசாவைக் கண்ணில் காட்டவில்லை. வேறு பதிப்பாளர்களாக இருந்தால் ஒரு பதிவு எழுதியாவது திட்டலாம். இவர்களே கடன் வாங்கி புத்தகம் வெளியிட்டு இலக்கியத்தை இன்ச் இன்ச்சாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சூடும் சுரணையும் வேறு நிறைய வைத்திருக்கிறார்கள். திட்டி எழுதி அவர்கள் ஏதாவது எசகுபிசகாக முடிவெடுத்துவிட்டா அந்தப் பாவமும் நம்மைத்தான் வந்து சேரும். அதனால் விட்டுவிடலாம்.

யாவரும் பதிப்பகத்தினர் உண்மையிலேயே கடன் வாங்கித்தான் புத்தகம் வெளியிடுகிறார்கள். ‘ஏதாச்சும் பணம் வேணும்ன்னா சொல்லுங்க’ என்று கேட்டால் ‘எழுத்தாளர்கள்கிட்ட காசு வாங்கினா அசிங்கம்ங்க’ என்கிறார்கள். இந்த ஒரு நல்ல குணத்துக்காகவே இவர்களிடம் எத்தனை புத்தகம் வேண்டுமானாலும் எழுதிக் கொடுத்துவிடலாம் என்று தோன்றும்.

தமிழில் விழியிழந்தோருக்கான ஒலி வடிவில் ஏதேனும் புத்தகங்கள் வந்திருக்கின்றனவா என்று தெரியவில்லை. அப்படி இல்லாதபட்சத்தில் மூன்றாம் நதிக்கு அந்தப் பெருமை கிடைக்கட்டும். தொடங்கி வைத்ததாக இருக்கட்டுமே. பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் இதை அன்பான கோரிக்கையாக பரிசீலிக்கவும்.

ஒலிவடிவத்தைக் கேட்கும் விழியிழந்தோர் நாவல் எப்படி இருக்கிறது என்பதை ஒற்றை வரியில் சொன்னால் கூட போதும். மிகுந்த சந்தோஷமடைவேன். அவர்கள் வாசிக்கிறார்கள் இவர்கள் வாசிக்கிறார்கள் என்பதைவிடவும் நீங்கள் வாசிக்கிறீர்கள் என்பதுதான் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். நெகிழ்ச்சியும் கூட. 

எழுதுவதன் ஆன்ம திருப்தியே இத்தகைய சின்னச் சின்ன சந்தோஷங்களில்தான் இருக்கிறது. இந்த திருப்திதான் தூங்கும் போது கூட எழுதுவதைப் போல கனவு காணச் செய்கிறது. அந்தக் கனவுதான் எல்லாவற்றுக்குமே அடிநாதமாக இருக்கிறது.


ஒலிவடிவில் வெளியிட அனுமதித்த பதிப்பாளர், திருப்பதி மகேஷ் , சந்தோஷ் நாராயணன், வடிவமைப்பாளர் ராசு கோபுவேல் மற்றும் நாவல் குறித்து அவ்வப்பொழுது கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்த அத்தனை பேருக்கும் நன்றி!

2 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//இவர்களே கடன் வாங்கி புத்தகம் வெளியிட்டு இலக்கியத்தை இன்ச் இன்ச்சாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்//
பஞ்சாயத்து தேர்தலுக்கு வைகோ கூட்டணி சேக்குறாமாம். போயி பா(ர்)த்துட்டு வருவோமா.வேணும்னா கொஞ்ச நேரம் இந்த சூட்ட(சூடு) முத்தூட் லேயும், சொரணைய மணப்புரத்துலேயும் பாதுகாப்பா வச்சுட்டு போயிட்டு வருவோம்.

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள்! இந்த காலகட்டத்திலும் பல பதிப்பகங்கள் கடன் வாங்கித்தான் புத்தகம் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை நினைக்கையில் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஒலிவடிவில் பார்வையிழந்தவர்களுக்கு சிறப்பு வெளியீடு செய்த யோசனை நன்று. புத்தக சந்தையில் கண்டிப்பாக காசு கொடுத்து வாங்கி வாசிக்கிறேன். நன்றி!