May 24, 2016

நட்சத்திரம்

கேபிள் டிவி வந்து பிறகு சன் டிவி வந்து வதவதவென ராஜ், விஜய் டிவியெல்லாம் வந்த போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்த என்னைப் போன்ற பொடியன் கூட்டத்துக்கு தொலைக்காட்சியில் தலையைக் காட்டிவிட வேண்டும் என்ற ஆசை துளிர்த்த சமயத்தில் ஊரில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். நடத்தினார்கள் இல்லை நடத்தினார். ஒற்றை மனிதர். முகம் நிறைய பவுடர் பூசி உதடு நிறைய சிவப்புச் சாயம் அப்பி போதாக்குறைக்கு வாய் முழுக்க ஜரிதா பீடாவைக் குதப்பிக் கொண்டு மேடையேறி எச்சிலை விழுங்கிவிட்டு ‘அன்பான மக்களே’ என்று கர கரக் குரலில் ஆரம்பித்தார். மேடைக்கு கீழாக அமர்ந்திருந்த எனக்கு அப்பொழுதே இளமை புதுமை சொர்ணமால்யாவை பீட் செய்துவிட்ட பூரிப்பு. எப்படியும் தொலைக்காட்சியில் தோன்றிவிடலாம் என்ற நம்பிக்கை துளிர்த்திருந்தது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஆட்களைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி அது. மேடையில் சன் டிவி புகழ், ராஜ் டிவி புகழ், விஜய் டிவி புகழ், எக்செட்ரா, எக்செட்ரா டிவி புகழ் என்று வரிசையாக எழுதி கீழே அந்த மனிதரின் பெயரையும் எழுதி வைத்திருந்தார்கள். அந்த மனிதருக்கு உள்ளூரில் நன்கொடையாளர்களும் கிடைத்திருந்தார்கள். நகைக்கடை, துணிக்கடை என்று திரும்பிய பக்கமெல்லாம் பதாகை வைத்திருந்தார்கள். கலந்து கொண்டவர்கள் ஆளுக்கு நூறு ரூபாய் கொடுக்க வேண்டும் என்பது முக்கியமான விதி. அப்பொழுது நூறு ரூபாய் பெருந்தொகை. அப்பாவை நம்ப வைத்து சமாளித்து வாங்கிச் செல்வதற்கு பெரும்பாடாக ஆகியிருந்தது. 

அதுவொரு திருமண மண்டபம்.  நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். பையன்களும் பெண்களும் சில மூத்தவர்களுமாக களை கட்டியிருந்தது. அத்தனை கூட்டத்திலும் எனக்கு அவளைப் பார்க்கும் போது மண்டைக்குப் பின்னால் பல்பு எரிந்தது. ஏதாவதொரு டம்மி பெயராக அவளுக்கு வைத்துக் கொள்வோம். ஜெயந்தி. அந்தக் கூட்டத்திலேயே வெகு அழகு. பார்த்தவுடன் காதல் பற்றிக் கொண்டது. அநேகமாக பள்ளிப் பருவத்தில் பற்றிய பதினோராவது காதலாக இருக்க வேண்டும். அவள் தனது குழுவோடு வந்திருந்தாள். தைய்ய தைய்ய தைய்யா தைய்யா பாடலுக்கு மேடையில் ஆடினார்கள். அத்தனை பேரையும் விட்டுவிட்டு அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் நின்றிருந்த வெள்ளியங்கிரி ‘டேய் அவ உன்னைத்தாண்டா பார்க்கிறா’ என்று ஏற்றிவிட்டான். பற்றியெரிந்த காதல் ஆளை மொத்தமாக எரித்துக் கொண்டிருந்தது. நூறு ரூபாய் போனால் தொலைகிறது இப்பேர்ப்பட்ட தேவைதையை கண்ணில் காட்டின வெற்றிலைபாக்கு பார்ட்டியை மனதார வாழ்த்தினேன்.

மதியம் எல்லோரும் சாப்பிடுவதற்காகச் சென்றார்கள். நான் வெள்ளியங்கிரியை அழைத்துக் கொண்டு அவள் பின்னால் சென்றேன். வெள்ளியங்கிரி எப்பொழுதுமே நெடுஞ்செழியன் மாதிரி அல்லது அன்பழகன் மாதிரி. உதயநிதி காலமென்றால் மகேஷ் பொய்யாமொழி மாதிரி. நாம் நினைப்பதை அவன் செய்து கொடுப்பான். ‘நீ இரு நான் வாரேன்’ என்று சென்றவன் அரை மணி நேரத்தில் வந்து ‘அவங்கப்பன் குருமந்தூர் மேட்டுல டீக்கடை வெச்சிருக்கான்..அவ தம்பி நம்ம பள்ளிக்கோடம்தான்...உனக்கு புடிச்சிருச்சுல...கவலையை உடு..அவ உனக்குத்தான்..நான் கல்யாணத்தை செஞ்சு வெக்கிறேன்’ என்கிற ரகத்தில் பேசத் தொடங்கியிருந்தான். அதன் பிறகு என்ன பேசினேன் என்ன நடந்தது என்பதெல்லாம் ஞாபகமேயில்லை. அபிராமி அபிராமி மாதிரி ஜெயந்தி ஜெயந்திதான்.

சமீபத்தில் ‘த ஸ்டார் மேக்கர்’ என்ற படத்தை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. புதுச்சேரி ஃபோட்டோகிராபர் மதுதான் இந்தப் படம் பற்றிச் சொன்னார். அவர் மாடலிங் ஃபோட்டோகிராபர். திரைத்துறை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது த ஸ்டார் மேக்கர் பற்றிய பேச்சும் வந்தது. சினிமா பாரடைசோ படத்தை இயக்கிய குய்செப்பே ட்ரோனாட்டோரே இயக்கிய படம். 1995 ஆம் ஆண்டிலேயே வெளி வந்துவிட்டது.


இரண்டாம் உலகப்போர் முடிந்த காலகட்டம் அது. படத்தின் நாயகன் மொரேலியிடம் ஒரு வண்டி இருக்கிறது. இன்றைய கேரவேனின் அன்றைய வடிவம். உள்ளுக்குள் கேமிராவிலிருந்து படுக்கை வரை அத்தனையும் வைத்திருக்கிறார். ஒவ்வொரு ஊராகச் சென்று திரைத்துறையில் நடிகராகிறவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் என்று பேசுகிறார். தான் நடிகர்களைத் தேர்ந்தெடுக்க வந்திருப்பதாகவும் ஸ்கீரீன் டெஸ்ட்டுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்று அழைக்கிறார். மக்கள் குவிகிறார்கள். ‘இந்தப்பக்கம் திரும்பு...அந்தப்பக்கம் திரும்பு..நேரா பாரு...வசனம் பேசு’ என்று அவர்களை தனது கேமிராவில் பதிவு செய்து கொள்கிறார். இதில் கலந்து கொண்டவர்கள் மொரேலிக்கு பணம் தருகிறார்கள். மெரோலி திருட்டுப்பயல் என்பது நமக்குத் தெரிந்துவிடுகிறது. ஆனால் மக்கள் நம்புகிறார்கள்.

கேமிராவின் முன்பாக அமர்ந்து உண்மையைக் கொட்டுகிறார்கள். தங்களது ஆழ்மன ஆசையை வெளிப்படுத்துகிறார்கள். இது மொரேலிக்கும் தெரிகிறது. தனது மகளை நடிகையாக்கிவிட வேண்டும் என்பதற்காக மொரேலியிடம் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள் ஒரு அம்மாக்காரி. கொள்ளையடிக்க வருகிறவர்களிடம் தன்னைப் பற்றி விளக்கி அவர்களைப் படமெடுத்து அவர்களிடமிருந்தே காசு வாங்குகிற கில்லாடியாக மொரேலி இருக்கிறார். தொடக்கத்தில் படம் சற்றே இழுவை என்றுதான் சொல்ல வேண்டும். பாதி நகர்ந்த பிறகு பியேட்டா அறிமுகமாகிறாள். நாயகி. அப்பாவிப் பெண். கிறித்துவ கன்னியாஸ்திரிகளுடன் தங்கியிருக்கிறாள். மொரேலி கேட்கும் பணம் அவளிடமில்லை. உள்ளூர் பணக்காரனிடம் கேட்கிறாள். அவளது நிர்வாணத்தைக் காட்டினால் தருவதாகச் சொல்கிறான். ஆடைகளைக் களைந்து அவன் முன்பாக நின்று பணத்தை வாங்கிக் கொண்டு மொரேலியிடம் செல்கிறாள்.

மொரேலி அடுத்த ஊருக்குக் கிளம்பும் போது அவனது வண்டிக்குள் ஏறி அமர்ந்து கொள்கிறாள். அவன் அவளைத் துரத்திவிடுகிறான். கன்னியாஸ்திரிகள் அவளை ஏற்றுக் கொள்ளாமல் துரத்தியடிக்கிறார்கள். அவள் மீண்டும் மொரேலியைத் தேடி வந்து சேரும் போது அவனைத் திருட்டுப்பயல் என்று கண்டுபிடித்து அவனிடம் ஏமாந்த காவல்துறை அதிகாரி சிறையில் தள்ளுகிறான். காதல் பிரிகிறது. அதன் பிறகு க்ளைமேக்ஸ்.

படம் யூடியூப்பிலேயே கிடைக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் பார்த்துவிடுங்கள். நல்ல படம். மொரேலிக்கும், பியேட்டாவுக்காகவுமே பார்க்கலாம். இந்தப் படத்தை வைத்து இணையத்தில் நிறைய தியரிகள் இருக்கின்றன. விமர்சனங்களும் இருக்கின்றன. இந்தப் படத்துக்கும் இதே இயக்குநரின் முந்தைய படமான சினிமா பாரடைசோவுக்குமான தொடர்புகள், காட்சியமைப்புகள், இசை, ஐம்பதுகளில் வெளிவந்த வேறொரு இயக்குநரின் படத்துடனான தொடர்புகள் என்று நிறைய வாசிக்கக் கிடைக்கிறது. அப்படிப் பிரித்து மேய்ந்து திரைப்படம் குறித்து ஆராய்ச்சி நடத்த வேண்டியதில்லை என்கிற கட்சிக்காரன் நான். அதற்கு திறமையும் போதாது. 

வெளிநாட்டு படம் பார்ப்பது என்பது அந்நாட்டின் பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றை ஒரு மிடறு பருகிக் கொள்வது போல. The starmaker படம் பார்க்கவில்லையென்றால் இத்தாலியின் சிசிலி என்ற தீவைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போவதேயில்லை. 1950களில் அந்தத் தீவின் வீடுகளும் மனிதர்களும் வாழ்முறையும் இப்பொழுது இல்லாமலிருக்கக் கூடும். அதை திரைப்படம்தான் நமக்குக் காட்டுகிறது. ஒரு வெளிநாட்டுத் திரைப்படத்தை அப்படித்தான் பார்க்கிறேன். பிடித்த படத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தால் அதைப் பற்றி அவர்கள் பேசவோ எழுதவோ கூடும். நிறையப் பேர் பார்த்திருக்கலாம். பார்க்காதவர்கள் ஒரு சிலரேனும் இருக்கக் கூடும் அல்லவா?

படத்தைப் பற்றி பேசிவிட்டு ஜெயந்தியை விட்டுவிட்டேன் பாருங்கள்- அந்த ஜரிதா பீடா பார்ட்டி எல்லோரையும் படம் எடுத்து முடித்துவிட்டு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் மற்றவர்கள் தான் அடுத்த முறை வரும் போது மீண்டும் முயற்சி செய்யவும் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். சென்னையிலிருந்து இன்றோ நாளையோ அழைப்பு வந்தவுடன் சொர்ணமால்யாவை பார்த்துவிடலாம் என்று கற்பனை சிறகு விரிந்து கொண்டேயிருந்தது. அவன் அநேகமாக The Starmaker படம் பார்த்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். பன்னாடைப் பயல். 

அவன் போனால் தொலைகிறது என்று ஜெயந்தியின் தம்பியின் மூலமாக நூல் விட்டுப் பார்த்தோம். வெள்ளியங்கிரி வெகு பக்கபலமாக இருந்தான். ஆரம்பத்தில் அவளுடைய தம்பி நன்றாகத்தான் பேசினான். திடீரென்று ஒரு நாள் வந்து ‘அண்ணா நீங்க குருமந்தூர் பக்கம் வந்தீங்கன்னா டீக்கடை பாய்லர்ல இருக்கிற சுடுதண்ணியைப் புடிச்சு மூஞ்சில ஊத்திடுவேன்னு எங்க அக்கா சொல்லுறா’ என்றான். ‘எல்லாப் பொண்ணுங்களும் அப்படித்தாண்டா சொல்லுவாங்க...ட்ரை பண்ணு’ என்றுதான் வெள்ளியங்கிரி சொன்னான். எனக்குத்தான் தீவிரவாதிகள் மீது ஆர்வமில்லாமல் போய்விட்டது. ‘எனக்கு அவ வேண்டாம்..நீ வேணும்ன்னா ட்ரை பண்ணு’ என்று சொல்லிவிட்டு ஷீபாவை சைட் அடிக்கத் தொடங்கியிருந்தேன்.

4 எதிர் சப்தங்கள்:

Umesh Srinivasan said...

அருமையான மலரும் நினைவுகள். ஸ்டார் மேக்கர் படம் பார்க்க ஆவலாக உள்ளேன், யூ ட்யூபில் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

சேக்காளி said...

//எனக்கு அவளைப் பார்க்கும் போது மண்டைக்குப் பின்னால் பல்பு எரிந்தது//
1.அப்ப எரிய ஆரம்பிச்ச பல்பு தான் இப்ப நடுமண்டையில நெலா வா ஆகிருக்கா.
2. அப்பமே பல்பு தானா.

Seeni said...

ஹா...ஹா...

venkat said...

அன்புள்ள மணிகண்டன் அவர்களுக்கு, நன்றாக எழுதுகிறீர்கள். நீங்களும், சுஜாதாவும் என்ஜினீயர்கள். நடுவில் எங்கும் , அவர் பாணியில் சொன்னால், ஜல்லியடித்தல் கிடையாது. சொல்ல வந்ததற்கு நேர் மாறாய் எடுத்து சென்று, கடைசி வரியில் புன்னகையோ, தீர்ப்போ, கருத்தோ, நறுக்கென்று சொல்லி முடித்து விடுகிறீர்கள். நிறைய எழுதுங்கள். சுஜாதாவை ரசித்தவர்களுக்கு, உங்களின் தேவை நிறைய உள்ளது. வெங்கட், ஓசூர்.