May 22, 2016

காசு

திருமாவளவன் பற்றி பேசும் போது ஊரில் பதறுகிறார்கள். ‘அந்த ஆளு கட்டப்பஞ்சாயத்து’ என்று சொல்கிறவர்கள் நிறைய உண்டு. ரவுடியிசம் செய்கிறார் என்பார்கள். அரசியலிலும் சினிமாவிலும் ஒரு செய்தி வெளிவரும் போது அது காட்டுத்தீ மாதிரி பரவிக் கொண்டேயிருக்கும். தானே நேரடியாக பாதிக்கப்பட்டது போல கண் காது மூக்கு வைத்து அளப்பார்கள். இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது? ஏன் பேசுகிறார்கள் என்று யோசிக்காமல் ஒரு வாயிலிருந்து இன்னொரு காதுக்குச் சென்று கொண்டேயிருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பாக சாதிய உணர்வைத் தூண்டும்படி திருமா பேசிய ஆடியோக்களும் வீடியோக்களும் இன்றைக்கும் எங்கள் ஊர் பகுதியில் வாட்ஸப்பில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. ‘இப்போ அவர் மாறிட்ட மாதிரி தெரியுதே’ என்று கூட எந்த இடத்திலும் பேச்சைத் தொடங்க முடிவதில்லை. நான்கு பேராவது எதிர்வினை புரிகிறார்கள். உள்ளூருக்குள் எதற்கு வம்பு என்று அடங்கிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. 

திருமாவின் மீதான வெறுப்பை தனிமனித வெறுப்பாக மட்டும் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதுவொரு சமூகத்தின் மீதான வெறுப்பு. ‘இன்னைக்கு அவனுக ஆளாளுக்கு வண்டியும் காரும் வாங்கிட்டாங்க’ ‘நம்மை எல்லாம் ரோட்டுல ஒரு பய மதிக்கிறதில்ல’ மாதிரியான புலம்பல்களின் வேறு வடிவம். தேர்தல் சமயத்தில் இதைத் தெளிவாக உணர முடிந்தது. கொங்கு நாட்டுக் கட்சியை தேர்தல் கூட்டணியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிற அதிமுக திமுக அபிமானிகள் விசிகவையும் புதிய தமிழகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வதில்லை. விசிக கூட்டணிக்குள் வரும்பட்சத்தில் ஆதிக்க சாதியினரின் வாக்குகள் எதிரணிக்குச் சென்றுவிடும் என்று பயப்படுகிறார்கள். அப்படியென்றால் கொங்குநாட்டுக் கட்சியைச் சேர்த்துக் கொண்டால் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகள் எதிரணிக்குச் சென்றுவிடாதா என்று கேட்டால் வேறொரு கணக்கைச் சொல்கிறார்கள்.

தொகுதியில் மொத்தம் நூற்று நாற்பது தலித் காலனிகள். முப்பதிலிருந்து முப்பத்தைந்தாயிரம் வாக்குகள் வரை சேரும். பணம் கொடுப்பதற்கு கணக்கு போடும் போதே காலனிகளைத்தான் குறி வைக்கிறார்கள். காலனிகளில் வாழும் மக்களை பணம் கொடுத்து வாங்கிவிட முடியும் என்று கணிக்கிறார்கள். அதை அப்படியே செயல்படுத்தவும் செய்கிறார்கள். அவர்களின் கணிப்பும் அச்சுபிசகாமல் சரியாக முடிகிறது. தமிழகம் முழுக்கவுமே இதுதான் நிலைமையாக இருக்கும் என்று அனுமானித்துக் கொள்ளலாம். இந்தவொரு எண்ணத்தில்தான் ஆதிக்க சாதியக் கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வரத் துடிக்கும் அரசியல்வாதிகள் தலித் கட்சிகளைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாம் என்கிறார்கள். 

அதிமுக, திமுக என்று எந்தக் குறிப்பிட்ட கட்சியை நோக்கியும் கை நீட்ட வேண்டியதில்லை. கிட்டத்தட்ட அத்தனை பெரிய கட்சிகளும் இத்தகைய மனநிலையில்தான் இருக்கின்றன.

தலித் மக்கள் மட்டுமே காசு வாங்கிக் கொண்டு வாக்களிப்பதாகவும் மற்றவர்கள் அப்படிச் செய்வதில்லை என்பதான அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. பிற சாதியினரும் இதைச் செய்கிறார்கள். ஆனால் அவற்றில் சிதறல் இருக்கின்றன. ஆனால் தலித் வாக்குகளை பெருமொத்தமாக வாங்கிவிட முடிகிறது என்கிற சூழல் நிலவுகிறது என்பதுதான் நிதர்சனம். இந்தச் சூழல் நிலவுகிற வரைக்கும் தலித் மக்களின் வாழ்க்கைத் தரம் எந்தக் காலத்திலும் உயரப் போவதில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். தேர்தலுக்குத் தேர்தல் இருநூறோ முந்நூறோ கொடுத்தால் போதும் என்கிற நிலைமையில் அந்த மக்களுக்கு வேறு அறிவு வளர்ந்துவிட வேண்டும் என்று எந்த ஆதிக்க சாதிக்காரன் நினைப்பான்?

திருமாவையும் கிருஷ்ணசாமியையும் எதிர்க்கிற கட்சிக்கு அப்பாற்பட்ட ஆட்களின் மனநிலையை இத்தகைய நூலோடுதான் சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வெறும் பண்டங்களாகவே அவர்கள் இருக்கும் வரைக்கும் பிரச்சினையில்லை. உள்ளே புகுந்து புழங்க முயற்சிக்கும் போது யார் காரணம் என்று யோசிக்கிறார்கள். திருமாவின் கட்டப்பஞ்சாயத்தில் தாங்களே அடி வாங்கியது போலப் புலம்புகிறார்கள். ‘நாங்க காலனி ஆட்களை வீட்டு வரவேற்பறை வரைக்கும் அனுமதிக்கிறோம்’ என்று தங்களை முற்போக்காளராக நினைத்துக் கொண்டு பேசுகிற மனிதர்களுக்கு தலித் தலைவர்கள் மீது இருக்கக் கூடிய வெறுப்பை வேறு எப்படிப் புரிந்து கொள்வது? ‘இவனுகதான் அமைதியா இருக்கிற சேரி ஆட்களைத் தூண்டி விடுறாங்க’ என்று பதறுகிறார்கள். 

ஆதிக்க சாதியைச் சார்ந்தவர்களிடம் இதையெல்லாம் பேச முடிவதில்லை. பேசினாலும் சரி; எழுதினாலும் சரி; கோபப்படுவார்கள். கோபப்படட்டும். ஆனால் ஆழமாக யோசித்துப் பார்த்தால் இதுதான் பிரதானமான காரணமாகத் தெரிகிறது. ஒருவேளை திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்ற தலித் தலைவர்கள் இந்த அளவுக்குக் கூட தலையெடுக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு இருப்பதைக் காட்டிலும் தலித் மக்களின் வாழ்க்கைத் தரம் மோசமாகத்தான் இருந்திருக்கும் என்று நம்ப வேண்டியிருக்கிறது. இன்றைக்கு தலித் மக்கள் மேலே வந்துவிட்டார்கள் என்று பேசுவதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதான பாவனை. சேரிகளிலும் காலனிகளிலும் புகுந்து பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்- இன்னமும் தொண்ணூறு சதவீத மக்கள் அப்படியேதான் கிடக்கிறார்கள். வீட்டில் இலவச டிவி ஓடுவதும், பைக் வைத்திருப்பதும், ஜீன்ஸ் அணிவதும் மட்டுமே முன்னேற்றம் என்று நம்பினால் அவர்கள் முன்னேறிவிட்டார்கள் என்று சொல்லலாம். ஆனால் சமூக அறிவு, அரசியல் விழிப்புணர்வு, கல்விக்கான சூழல் என்பதையெல்லாம் கணக்கில் எடுத்தால் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் வெகுவாக பின் தங்கித்தான் இருக்கிறார்கள். திருமாவும் கிருஷ்ணசாமியும் இன்னபிறரும் சலனத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அங்கே முன்னேற்றங்களுக்கான வாய்ப்புகளும் தேவைகளும் இன்னமும் நிறைய இருக்கின்றன.

தலித் அரசியல் இயக்கங்கள், தலைவர்கள் உண்மையாகவே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைக்க விரும்பினால் அவர்கள் பேச வேண்டியது சமூக மாற்றம் பற்றிய கருத்துக்களை மட்டுமில்லை. தேர்தல் அரசியல் குறித்தான மாற்றங்களையும்தான். தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற வாக்குரிமையின் வீரியத்தை அந்த மக்கள் புரிந்து கொள்ளும் வரைக்கும் அரசியல்வாதிகள் அவர்களது வாக்குகளை வெறும் பண்டங்களாகத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ‘கடைசியில காசு கொடுத்தா குத்திடுவாங்கடா’ என்று நம்புகிற ஆதிக்க சாதி அரசியல்வாதிகள் இருக்கும் வரைக்கும் சேரிகளில் எந்த மாறுதலைக் கொண்டு வந்துவிட முடியும்? தனது வாக்கின் வலிமையை ஒவ்வொரு சாமானிய மனிதனும் உணராத வரையிலும் ஜனநாயகத்தில் அவர்களின் விடிவுகாலம் வெகு தூரத்தில்தான் கிடக்கும். தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளின் பலத்தை அரசியல்வாதிகள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த மக்களுக்கு புரியவில்லை என்பதுதான் அவலம்.

இந்தவொரு புரிதலை அந்த மக்களுக்கு உருவாக்க வேண்டிய மிகப்பெரிய ஜனநாயகக் கடமை தலித் மக்களின் மேம்பாட்டுக்காக யோசிக்கக் கூடிய, பாடுபடக் கூடியவர்களின் முன்னால் இருக்கிறது. காசுக்கு வாக்குகளை விற்கும் மனநிலை இருக்கும் வரை இங்கே எந்தவொரு அரசியல் மாற்றமும் சாத்தியமேயில்லை. இதை சத்தியம் செய்து சொல்ல முடியும்!

12 எதிர் சப்தங்கள்:

என் செல்வராஜ் said...

உண்மை மணிகண்டன். தலித் வாக்குகள் ஒட்டு மொத்தமாக விலை பேசப்பட்டு மொத்த ஓட்டுக்களாய் பெரிய கட்சிகளால் வாங்கப்படுகின்றன

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தலித்களில் முன்னேறியவர்கள் கூட மற்ற ஒட்டு மொத்த தலித்களின் முன்னேற்றத்தை விரும்புவதில்லை.பொருளாதார முன்னேற்றம் ஆதிக்க சாதி மனப்பான்மையை அவர்களிடத்தும் தோற்றுவித்து விடுவதாக எனக்கு தோன்றுகிறது

சேக்காளி said...

//திருமாவின் மீதான வெறுப்பை தனிமனித வெறுப்பாக மட்டும் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதுவொரு சமூகத்தின் மீதான வெறுப்பு.//
இந்தியாவிற்கு அரசியல் சாசனம் இயற்றிய அம்பேத்கர் மீதே அப்படி ஒரு வெறுப்பு நிலவிக்கொண்டிருக்கும் போது திருமாவும் கிருஷ்ணசாமியும் எம்மாத்திரம்.
இட ஒதுக்கீட்டில் வேலை பெற்ற அனைவரும் தம் இனம் முன்னேற வேண்டும் என செயல்பட்டாலே போதும்.ஆனால் அப்படி வேலை பெற்றவர்களோ தம் சாதியை,அடையாளத்தை மறைக்க படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
//திருமாவும் கிருஷ்ணசாமியும் இன்னபிறரும் சலனத்தை உருவாக்கியிருக்கிறார்கள்//
ஆனால் அவர்களிருவராலும் கூட இணைந்து செயல்பட முடியவில்லையே.இதில் ஆதிக்க சாதியினர் மீது குறை சொல்லி என்ன செய்ய?.

”தளிர் சுரேஷ்” said...

இன்னமும் தொண்ணூறு சதவீத மக்கள் அப்படியேதான் கிடக்கிறார்கள். வீட்டில் இலவச டிவி ஓடுவதும், பைக் வைத்திருப்பதும், ஜீன்ஸ் அணிவதும் மட்டுமே முன்னேற்றம் என்று நம்பினால் அவர்கள் முன்னேறிவிட்டார்கள் என்று சொல்லலாம். ஆனால் சமூக அறிவு, அரசியல் விழிப்புணர்வு, கல்விக்கான சூழல் என்பதையெல்லாம் கணக்கில் எடுத்தால் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் வெகுவாக பின் தங்கித்தான் இருக்கிறார்கள். திருமாவும் கிருஷ்ணசாமியும் இன்னபிறரும் சலனத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அங்கே முன்னேற்றங்களுக்கான வாய்ப்புகளும் தேவைகளும் இன்னமும் நிறைய இருக்கின்றன.// நூற்றுக்கு நூறு உண்மை! பல கிராமங்களில் இதை நான் கண்டிருக்கிறேன்!

Murugan R.D. said...

திருமா நிச்சயம் அம்மக்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு கேடயம்தான், மறுப்பதற்கில்லை, ஆனால் இப்போது சாந்தமாகி விட்டார் என்பதற்காக அவர் ஆரம்பகாலகட்டங்களில் அம்மக்களை உசுப்பேற்றிவிட்ததை ஏற்றுக்கொள்ள முடியாது, தவிர அம்மக்கள் காசுக்காக ஓட்டுப்போடுவார்கள் என்பது முழுமையான நிதர்சனம் அல்ல, 2009ல் எங்கள் ஊர் அருகே உள்ள ஒரு கிராமத்தின் விசி கட்சியினர் அனைவரும் இலங்கை படுகொலையை காரணமா கொண்டு விசியின் கூட்டணி முடிவை மீறி மாற்று கூட்டணிக்கு ஓட்டுப்போட்டனர் என்பது அவர்களே என்னிடம் சொன்னது, திருமாவை அவர்களிடமிருந்து பிரிப்பதற்கு இந்த சமூகம் செய்ய வேண்டியது அவர்களையும் மற்றவர்களைப்போல சராசரி மனிதனாக நடத்துவதே, அது நகரஅளவில் ஓரளவுக்கு சாத்தியம் என்றாலும் கிராமங்களில் தற்போது சாத்தியப்படாத விசயமாகவே தோன்றுகிறது,

இனையப்பொருக்கி said...

"காசுக்கு ஓட்டு" என்று குறிப்பிடுவதற்கு பதிலாக "வாக்குக்கு கையூட்டு (லஞ்சம்)" என்று குறிப்பிடுவது பொறுத்தமாக இருக்கும்.

மகேஸ் said...

தம்பி, புலி வாலைப் புடிக்காதீங்க.

Vaa.Manikandan said...

திருமாவை தலித் மக்களிடமிருந்து ஏன் பிரிக்க வேண்டும் முருகன்? கட்டுரையின் சாராம்சத்தை தவறாக புரிந்து கொண்டீர்களோ என்று தோன்றுகிறது.

sound said...

True, very good article
Pesa thuniyatha pechu pesineergal !

Murugan R.D. said...

ஒரு தலைவனை ஒரு சாதிக்கு அடையாளப்படுத்தினால் அந்த தலைவனின் செயலைப்பொறுத்துதான் அந்த இன மக்களின் மீதான கருத்து நல்லவிதமாகவோ அல்லது எதிர்மறையாகவோ மற்றவர்களிடம் ஏற்படும், அந்தவிதத்தில் பல சாதி கட்சி தலைவர்களை முன்னிறுத்தும்போது அச்சமூகத்தையே மற்றவர்கள் புறக்கணிப்பதற்கான உணர்வு எளிதில் தோன்றிவிடும், இதற்கு உதாரணம் தேவர், ராமதாஸ், ஜான்பாண்டியன், இந்தவரிசையில் திருமாவுக்கும் நிச்சயம் இடம் உண்டு, ஆனால் அதற்கு காரணம் நிச்சயமாக மாற்று சாதியினர் அதாவது ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள ஆதிக்க சாதியினர்தான் பெரும்பாலான காரணம், அவர்கள் சாதரணமாவனோ அல்லது பதவி அந்தஸ்து, பொருளாதார பலம் பெற்றவனோ யாராயிருந்தாலும் இம்மக்களை அவர்க‌ள் நடத்தும் முறைதான் திருமாவை வீறுகொண்டெழ வைத்தது என்றால் அதற்கு நிச்சயம் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் இவரைப்பின்பற்றி இன்னும் சில உதிரி தலித்தலைவர்களும் அடு்த்தஜாதியினரின் பெண்ணை தூக்கு என்று ஆபாசமாகவும், ஆவேசமாகவும் உசுப்பேற்றி அதை நடைமுறைப்படுத்தியதும் இம்மக்களின் மீதான் மற்றவர்களின் வெறுப்புக்கு ஒரு காரணம், அதையும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும், இந்த சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தியதற்கு திருமாவும் ஒரு காரணம்தான், எனக்கே இப்ப குழப்பம் வந்துவிட்டது, ஒரு வேளை இவர்கள் திருமாவை பிரிந்துவந்துவிட்டால் அப்புறம் அவர்கள் சட்டரீதியாகவும் சமூகரீதியாகவும் ய‌ாரை அணுகி தங்கள் மீதான அடக்குமுறையை எதிர்கொள்வார்கள் என்பதும் யோசிக்க வேண்டிய விசயமே, மொத்தத்தில் அவரின் அரசியல் நிலைப்பாடு ஒரே கொள்‌கையில் உறுதியாக இருந்தால் நிச்சயம் அவர் மக்களும் அவர்களை விட்டு பிரியமாட்டார்கள், தற்போது அவர் எடுத்த அரசியல் பொருந்தாக் கூட்டணி அவரின் மீதான நல்ல அபிப்ராயத்தை அவர் சமூகமக்களிடமே சற்றே குறைத்திருக்கிறது என்று நிச்சயமாய் சொல்லலாம், அவரின் மீதான வன்முறையாளர் இமேஜ் மாறாது என்பதே நிதர்சனம், எப்படி பாமக ராமதாஸ் மேல் விழந்த இமேஜ் இப்பவரையிலும் மாறவில்லையோ அதுபோலதான் இதுவும்,

Anba said...

>>ஆதிக்க சாதியக் கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வரத் துடிக்கும் அரசியல்வாதிகள் தலித் கட்சிகளைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாம் என்கிறார்கள்..!!

மணிகண்டன் ... வி.சி.க. மற்றும் புதிய தமிழகம்தான் முறையே ம.ந.கூ மற்றும் தி.மு.க கூட்டணிக்குள் இருந்தன ... நீங்கள் ஆதிக்க சாதிய கட்சி என்று கூறும் பா.ம.க மற்றும் கொ.ம.தே.க. வைத்தான் எந்த அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லை.

krishna said...

https://youtu.be/dvdsb0dT2f8 மணிகண்டன் இதை கேட்டுள்ளீர்களா? திருமாவளவனால் அந்த சமூகத்திற்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியாது.